ரபேல் விமான ஊழல் : பிரான்ஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அம்பலமாக்குகிறது
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகருக்கு பிரான்ஸ் நாட்டின் ‘டஸ் ஸால்ட்’ (Dassault Aviation) நிறுவனம் ரூ. 8 கோடியே 62 லட்சம் பணம்வழங்கியது அம்பலமாகி இருக்கிறது.
டஸ்ஸால்ட் நிறுவன கணக்குகளை ஆய்வு செய்த பிரான்ஸ் ஊழல்தடுப்புப் பிரிவினர் (Agence Francaise Anticorruption - AFA) இந்த உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
2012-இல் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசானது, ரூ.41 ஆயிரத்து 212 கோடிக்கு 126 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், தான் ஆட்சிக்கு வந்ததும், 2016-இல் அந்த ஒப்பந்தத்தையே ரத்துசெய்த பிரதமர் மோடி, புதிதாக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். வெறும் 36 விமானங்களுக்கு ரூ. 58 ஆயிரம் கோடி தருவதற்கு ஒப்புக்கொண்டார்.
மன்மோகன் சிங் அரசு, 126 ரபேல்விமானங்களுக்கு பேசிய தொகையே வெறும் 41 ஆயிரம் கோடி ரூபாய்தான். அதாவது, காங்கிரஸ் அரசு ஒரு விமானத்தை ரூ. 350 கோடிக்குவாங்க ஒப்பந்தம் செய்த நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசோ, ஒரு விமானத்திற்கு ரூ. 1,670 கோடி கொடுக்கத் தயாரானது.
அதேபோல ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் கூட்டுநிறுவனமாக இருந்த - பொதுத்துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை வெளியேற்றி விட்டு, அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டது. இவை அனைத்திலும் ஊழல் நடந்திருப்பதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.
எனினும் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த ஊழல்களை வெகுசாமர்த்தியமாக மோடி அரசு அமுக்கி விட்டது. நீதிமன்றங்களிலும் மோடி அரசுக்கு சாதகமாகவே தீர்ப்புக்கள் வந்தன. டஸ்ஸால்ட் நிறுவனமும் ஒப்புக்கொண்ட 36 விமானங்களில், இதுவரை 14 ரபேல் ரக போர்விமானங் களை இந்தியாவுக்கு தயாரித்து வழங்கி விட்டது.
இந்நிலையில்தான், ரபேல் போர்விமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, இந்தியாவின் ‘டெப்ஸிஸ்சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனத் திற்கு, பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனம் 1 மில்லியன் யூரோக்களை (ரூ. 8 கோடியே 62 லட்சம்) ‘பரிசாக’ வழங்கியதை, அந்நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவான‘ஏஜென்ஸ் பிராங்காயிஸ் ஆன்டிகரப்ஷன் (AFA) கண்டுபிடித்துள்ளதாக ‘மீடியாபார்ட்’ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தலைமை கணக் குத் தணிக்கை அலுவலகத்திற்கு (CAG) இணையான இந்த பிரான்ஸ்நாட்டு நிறுவனம், 2017-ஆம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழல்முறைகேடுகளை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டதாகும். அவ்வாறு தணிக்கை செய்தபோதுதான், ‘வாடிக்கையாளர்களுக்கு பரிசு’ என்ற தலைப்பில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 925 யூரோக்கள் மதிப்பிலான லஞ்சத்தைக் கண்டுபிடித்துள் ளது. ‘டஸ்ஸால்ட்’ நிறுவனமும் அதை ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ரபேல் ஒப்பந்தத் திற்கான - டஸ்ஸால்டின் துணை ஒப்பந்தக்காரர்களில் ஒன்றாகவும் ‘டெப்ஸிஸ் சொல்யூஷன்ஸ்’ உள் ளது. இந்த நிறுவனம் மூன்று தலைமுறைகளாக விமானம் மற்றும்பாதுகாப்புத்துறை சார்ந்ததொழில்களில் இடைத்தரகர் களாக விளங்கும் குப்தா குடும்பத்தினருக்குச் சொந்தமானது.
அண்மையில், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றொருபாதுகாப்புத்துறை ஒப்பந்தத்தில், மோசடி செய்ததாக இந்திய அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்றும், அவர்தான் ரபேல் விவகாரத்தில் இடைத்தரகராக செயல் பட்டு 1 மில்லியன் யூரோக்களைப் பெற்றுள்ளார் என்று பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி இடைநிலை ஒப்பந்தத்தில் கைது செய்யப்பட்ட சுஷேன் மோகன் குப்தாவையே மறைமுகமாக ஏஎப்ஏ அமைப்புகுறிப்பிட்டுள்ளது. குப்தா, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து ரகசிய ஆவணங்களைப் பெற்று, டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- விடுதலை இராசேந்திரன்