ஆசிஃபாவை கோயில் பிரகாரத்தின்

தூணில் கட்டி வைத்து

மயக்க மருந்து கொடுத்து

உணவளிக்காமல்

வரிசையாக

வன்புணர்ச்சி செய்தவர்கள்

பிறகு ஏன் அவளது பிஞ்சுக் கால்களை

முறித்தார்கள்?

ஏன் அவளது தலையில்

கல்லைப்போட்டுக் கொன்றார்கள்?

சிறுமியாக இருந்தாலும் அவள் ஒரு பெண்

அதுவும் அழிக்கப்பட வேண்டிய

ஒரு இனத்தின் பெண்

நாடோடியாக மேய்ச்சல் நிலங்களில்

நிராதரவாக தூங்குபவள்

அவளை வேட்டையாடுவது சுலபம்

பெரும்பான்மையினால்

வெகு சுலபமாக துடைத்தழிக்கக்கூடிய

சிறுபான்மையினள்

***

இது மட்டும்தானா

அல்லது

இன்னும் காரணங்கள் இருக்கின்றனவா?

***

நம் தெய்வங்கள் எப்போதும்போல

கண்களற்றவையாக இருக்கின்றன

காதுகளற்றவையாக இருக்கின்றன

இதயமற்றவையாக இருக்கின்றன

தன் காலடியில் ஒரு சிறுமி

கூட்டாக வன்புணர்ச்சி செய்யபடும்போதும்

அவை மௌனமாக உறங்கிக் கிடக்கின்றன

ஆனால் இந்த தேசம்

இப்போது தெய்வத்தின் பெயரால்

ஆளப்படுகிறது

***

குற்றவாளிகளை விடுவிக்கும்படி

தேசியக்கொடியுடன் ஊர்வலம் போகிறார்கள்

தேச பக்தர்கள்

ஆசிஃபா ஒரு நாடோடி

அவளது இனக்குழுவின் குதிரைகளை

அவர்கள் செல்லுமிடமெல்லாம்

நேர்த்தியாக பார்த்து கொண்டதால்

அந்த இனக்குழுவின் செல்ல மகளாக இருந்தாள்

***

ஆசிஃபாவை புதைப்பதற்கு

கொலைகாரர்கள் நிலத்தை மறுத்தார்கள்

ஆசிஃபாவின் ரத்தகறை படிந்த உடலுடன்

விந்துக்கறை படிந்த உடலுடன்

நாடோடிகள் ஒரு புதை நிலம் தேடி

அந்தியின் இருளில்

வெகுதூரம் கூட்டமாக நடக்கிறர்கள்

***

வரலாற்றில் எதுவும் மாறிவிடவில்லை

நாம் எதிலிருந்தும் முன்னேறி வந்துவிடவில்லை

இனங்களை வெல்ல பெண்கள் வெல்லப்பட்டார்கள்

மதங்களை வெல்ல பெண்கள் வெல்லப்பட்டார்கள்

நாடுகளை வெல்ல பெண்கள் வெல்லப்பட்டார்கள்

நிலங்களை வெல்ல பெண்கள் வெல்லப்பட்டார்கள்

 

ஆலயங்களில் தெய்வத்தின் குரல் கேட்டதே இல்லை

இப்போது கேட்கிறது ஆசிஃபாகளின் குரல்.

Pin It