சாதித்துக் காட்டிய இணையர்: தனலட்சுமி – விஜயராகவன்

-          பல்லடம் தீபா, நாராயணமூர்த்தி, திருப்பூர் வேணி

dhanalakshmi vijayaragavanஎன்னுடைய பெயர் தனலட்சுமி.நான் கோவை மாவட்டத்தில் பிறந்தேன். என்னுடைய அப்பா இராமசாமி, அம்மா பாப்பாத்தி எங்கள் வீட்டுக்கு நான் ஒரே பெண் நான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். 1971-ல் படிப்பை முடித்தேன்.அதே வருடத்தில் எனக்கு திருமணம் நடந்தது.

உங்களுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள்?

என்னுடைய திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையவில்லை. குடும்பத்தில் பிரச்சனை காரணமாக அடிக்கடி நான் எங்கள் வீட்டுக்கு வருவதும், அங்கேயே கொஞ்சநாள் இருப்பதும் பிறகு என்னுடைய கணவர் வீட்டுக்குப் போவதுமாக இருந்தேன். 1974-ல் அவர் இறந்துவிட்டார். அவர் இறக்கும் போது நான் மூன்றுமாத கர்ப்பிணியாக இருந்தேன். அதன் பிறகு நான் என்னுடைய அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன்.அங்கேயேதான் இருந்தேன்.

தோழர் விஜயராகவனின் அறிமுகம் உங்களுக்கு எப்போது கிடைத்தது?

1988-ல் நான் பொள்ளாச்சியில் செவிலியர் பயிற்சிக்கு ழு.ழ.-ல் 3 மாத பயிற்சி எடுத்தேன். அதற்குப் பிறகு எனக்கு சித்தா பிரிவில் வேலை கிடைத்துவிட்டது. நான் appainment order -ரை எடுத்துக்கொண்டு போகும்போது அவரும் நகராட்சி மருத்துவமனையில் வேலை செய்து கொண்டு இருந்தார்.எனக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் யாரிடம் சென்று அணுகுவது என்று தெரியவில்லை. அப்பொழுது அவர்தான் எனக்கு உதவி செய்தார்.

நான் வேலையில் இருக்கும்போது எனக்கு மனரீதியான பிரச்சனைகள்,தொல்லைகள் அதிகமாக இருந்தது. எனவே நான் வேலையை விட்டுவிடலாம் என்று நினைத்தேன். அலுவலகத்திற்கு வெளியில் நின்று அழுது கொண்டு இருந்தேன். அப்போது தோழர் விஜயராகவன் வந்து இங்கு நின்று எதற்காக அழுது கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் இந்த வேலையை வேண்டாம் என்று எழுதிக்கொடுக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.

அதற்கு அவர் நீங்கள் வேலைக்கு வந்து ஒரு வாரத்தில் வேலையை விடுவதற்கு காரணம் என்ன என்று கேட்டார். இங்கு என்னால் வேலை செய்ய முடியவில்லை நிறைய பிரச்சனைகள் இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு அவர் நீங்கள் எங்கே வேலைக்கு போனாலும் இந்த மாதிரியான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். நீங்கள் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் மன உறுதியோடும், தைரியமாகவும் வேலை செய்யுங்கள் என்று சொன்னார்.

தோழர் விஜயராகவன் உங்களை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொள்கிறேன் என்று எப்போது உங்களிடம் சொன்னார்?

எனக்கு அவரைப் பிடிக்கும். ரொம்பவும் கண்ணியமாகவும், பண்புடையவராகவும் என்னிடம் பழகினார். எனக்கு நிறைய உதவிகளைச் செய்தார். அவர் என்னிடம் வந்து வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. என்னுடைய வீட்டு முகவரியை மட்டும் கேட்டார். வீட்டிற்க்கு வந்து என்னுடைய அப்பா, அம்மாவிடம் உங்களுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று சொன்னார்.

ஆனால் அப்பொழுது அவர்கள் எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. 6 மாதம் கழித்துத்தான் என்னுடைய பெற்றோர் சம்மதம் சொன்னார்கள். அப்போது என்னுடைய மகன் வந்து அம்மா நீ என்னை விட்டுட்டு போய்விடுவியா? என்று கேட்டுக்கொண்டு அழுதான். நான் திருமணம் செய்து கொண்டாலும் உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன் என்று சொன்னேன். அவனும் புரிந்துகொண்டான். அதன் பின்பு நாங்கள் இருவரும் பொள்ளாச்சி நகரத்தில் எங்கள் வாழ்க்கையைத் தொடங்கினோம்.

நீங்கள் இருவரும் இணைந்து வாழலாம் என்று முடிவு எடுத்துக் கொண்டதை உங்கள் குடும்பம் ஏற்றுக்கொண்டது. தோழர் விஜயராகவனின் குடும்பம் எப்படி எடுத்துக் கொண்டார்கள்?

விஜயராகவனின் அப்பா, அம்மா இருவரும் வந்து ரொம்பவும் கோவமாக பேசினார்கள். என்னிடம் உனக்கு அரசு வேலையே இல்லாமல் செய்துவிடுவேன். உன்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்கள். என்னுடைய மகனை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டாய் என்று பேசினார்கள். வழக்கமாகவே பெற்றோர்களின் கோபம் சரியானது தான். ஆனால் அவர்கள் திட்டியதைப் பெரிதாக நினைக்கவில்லை. 2 வருடங்கள் கழித்து என்னுடைய நடைமுறை வாழ்க்கையைக் கண்டு என்னுடைய மாமியார் நல்ல தோழியாகப் பழகினார். பின்பு தோழர் விஜயராகவனின் வீட்டுக்கு போவோம். அவர்களும் எங்கள் வீட்டிற்கு வருவார்கள்.

இன்றைய சமுதாயத்தில் திருமணம் முடிந்தபிறகு கூட்டுக்குடும்பத்தில் வாழ்வதற்கு மாற்றாக. ‘தனிக்குடித்தனம்’ என்று தனியாக வாழ்வது பெரும்பாலும் இயல்பாகி வருகிறது. 90 களில் தனிக்குடித்தனம் போக விரும்பும் பெண்கள் வில்லிகளாகத் தான் சித்தரிக்கப்பட்டார்கள். நீங்கள் அதை எப்படிக் கையாண்டீர்கள்?

ஆமாம். எந்த ஒரு கஷ்டமாக இருந்தாலும் நாம் இருவருடனே போகட்டும். நாம் தனியாக வாழ்வதுதான் சரியானதாக இருக்கும். கூட்டுக்குடும்பத்தில் இணைந்து வாழ்ந்தால் நிறைய சங்கடங்கள் வரும். உங்களுடைய தாய், தந்தைக்குக் கஷ்டப்படும் காலகட்டங்களில் நாம் அவர்களுக்கு உதவிசெய்து துணையாக இருப்போம் என்ற ஒப்பந்தத்தை நான் சொன்னேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு நாங்கள் எங்களுடைய வாழ்க்கையைத் தொடங்கினோம்.

நீங்கள் இருவரும் இணையர்களாக வாழும்போது இந்தச் சமூகம் உங்களை எப்படிப் பார்த்தது? அதுமட்டுமின்றி அவர் ஒரு கடவுள் மறுப்பாளர். நீங்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர் இதில் ஏதும் பிரச்சனை இருந்ததா?

என்னுடைய வாழ்க்கை பொள்ளாச்சியில் தொடங்கியதால் என்னுடைய உறவினர் வீடுகளுக்கு அதிகமாகப் போகவில்லை. இருப்பினும் யாராவது ஏதாவது விசேஷங்களில் என்னைப் பார்த்து திருமணம் செய்துகொண்டாயா? என்று கேட்டால் ஆமாம் செய்து கொண்டேன். நான் பொள்ளாச்சியில் இருக்கிறேன் என்று கூறிவிடுவேன். என்னுடைய உறவினர்கள் மத்தியில் எனக்குப் பெரிய எதிர்ப்பு ஒன்றும் இல்லை.

சாதி ஒழிப்பு,கடவுள் மறுப்பு பிரச்சாரங்களுக்கு அவர் போவார். அதை நான் எப்போதும் தடுத்தது இல்லை. அதேபோல் நானும் கோவில்களுக்கு போவேன். அதையும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். எந்த ஒரு விஷியத்தையும் என்னிடம் திணித்தது கிடையாது. ஆனால் நானே இப்பொழுது புரிந்துகொண்டு நிறைய கூட்டங்களுக்குப் போகிறேன். பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டு நானும் அவருடன் இணைந்து செயல்படுகிறேன்.“காட்டாறு” மாத இதழில் இருவரும் இணைந்து பணியாற்றுகிறோம்.

தோழர் விஜயராகவன்

நான் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தேன். எனக்கு 3 தம்பிகள், இரண்டு தங்கைகள்.

பெரியாரியல் கொள்கையில் ஈடுபாடு ஏற்படக்காரணம் என்ன?

நான் 1972-ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு நான் வரும்போது பொதுக் கூட்டம் அதிகம் நடக்கும் இடமான திருவள்ளுவர் திடல் என்னும் இடத்தில் திராவிடர் கழகக் கூட்டம் நடந்தது. பெங்களூர் விசாலாட்சி அம்மையார் மேடையில் பேசிக்கொண்டு இருந்தார். அவர் கருப்புநிறப் புடவையைக் கட்டி இருந்தார். மேடையில் ஒரே ஒரு பெரியவர் மட்டும் இருந்தார். அப்போது எனக்கு ஒரு துண்டறிக்கை கிடைத்தது. அந்த்த் துண்டறிக்கையில் பெரியாரின் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.

இந்தத் திராவிட சமுதாயத்தில் சாதி ஒழிய வேண்டும் என்றால் திராவிட இயக்க இளைஞர்களே நீங்கள் சாதிமறுப்புத் திருமணத்தையே செய்யுங்கள் அப்படி இல்லையென்றால் திருமணமே செய்து கொள்ளாதீர்கள்’’

என்ற வாசகமும், பக்தர்களிடம் 100 கேள்விகள் என்ற ஒரு புத்தகமும் கிடைத்தது. அதைப் படித்தேன். பள்ளியில் நான் படிக்கும்போது சாதி ஒடுக்குமுறைக்கு ஆளானேன். இதனால் எனக்கு பெரியாரின் சாதிஒழிப்புப் பிரச்சாரங்கள் சரியானதாக இருக்கும் என்று இயக்கத்தில் இணைந்து செயல்பட்டேன்.

1972-ல் இருந்து 1982 - வரை முழுநேரப்பணியாளராக தோழர் இராமகிருஷ்ணனுடன் இணைந்து செயல்பட்டேன். 1982-ல் அரசு வேலை கிடைத்தது. நன்னடத்தை காரணமாக ஒரு வருடம் மட்டும் அமைதியாக இருந்தேன். பின்பு மீண்டும் பகுத்தறிவாளர் கழகம் என்ற இயக்கத்தில் இணைந்து பணியாற்றினேன். இன்று வரை சாதி ஒழிப்புக் கொள்கையில் மாறாமல் பண்பாட்டுத் தளத்திலும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன்.

தோழர் தனலட்சுமி-யின் அறிமுகம் எப்போது கிடைத்தது?

1990-ல் பணி இடமாற்றம் காரணமாக பொள்ளாச்சியின் நகராட்சிக்கு உட்பட்ட மருத்துவமனைக்கு வருகிறேன். பெண் செவிலியர் உதவியாளராக தனலட்சுமியும் பணிநியமன ஆணையோடு வந்தார்கள். அப்போதுதான் முதன்முதலில் அறிமுகம் ஆனேன். பணி சம்பந்தமான எல்லா உதவிகளையும் செய்தேன். அதன்பிறகு தனலட்சுமி பணியில் இருக்கும்போது (கணவனை இழந்த பெண்) என்றதால் நிறைய பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருந்தது அதை நான் வெளியில் இருந்து தடுத்தேன்.

தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும் வகையில் அவர்களிடம் பேசினேன். உதவிகளைச் செய்தேன். மனிதாபிமான அடிப்படையில் தான் உதவிகளைச் செய்தேனே தவிர அவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு அப்போதைக்குக் கிடையாது.

உங்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று உங்கள் வீட்டில் பேச்சு வார்த்தை நடந்ததா?

என்னுடைய திருமணத்தைப் பற்றி எங்களுடைய வீட்டில் பேசும்போது நான் சொன்னது நான் திருமணம் செய்தால் கணவனை இழந்த பெண்ணைத்தான் திருமணம் செய்வேன். இல்லையென்றால் சாதி மறுப்புத் திருமணம்தான் செய்வேன். இந்த இரண்டுமே இல்லையென்றால் நான் திருமணமே செய்யாமல் உங்களுக்கு உதவியாக கடைசி வரைக்கும் இருந்துவிடுகிறேன் என்று சொன்னேன்.

நான் இப்படிச் சொன்னவுடன் 2 வருடம் அமைதியாக இருந்தார்கள். அந்த 2 வருட இடை வெளியில்தான் நான் தனலட்சுமியை சந்தித்தேன். என்னுடைய தங்கை வந்து என்னிடம் உங்களுக்கு பெண் பார்த்து இருக்கிறோம். நீங்கள் ஒரு முடிவைச் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். அப்போது நான் யோசித்தேன் நாம் ஏன் முதலில் தேர்ந்து எடுத்த முடிவிலிருந்து மாறாமல் இருக்கக்கூடாது என்று நினைத்து தனலட்சுமியை நாம் ஏன் வாழ்க்கைத் துணையாக ஏற்கக்கூடாது என்று முடிவு செய்தேன்.

பின்பு தனலட்சுமியிடம் வீட்டு முகவரியை மட்டும் கேட்டுக்கொண்டு அவர்களுடைய வீட்டிற்குப் போய் தனலட்சுமியின் அப்பா, அம்மாவிடம் பேசினேன். என்னைப்பற்றியும், எனது குடும்பத்தைப் பற்றியும் பேசினேன். தனலட்சுமி வேலை செய்யுமிடத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதை எல்லாம் நான் வெளியில் இருந்து தடுத்துக்கொண்டு இருக்கிறேன். இதை அதிக நாட்கள் வெளியில் இருந்து நான் செய்ய முடியாது. எனவே நான் உங்களுடைய பெண்ணை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் சம்மதித்தால் மட்டுமே என்று சொன்னேன். பின்பு அவர்களும் யோசித்தார்கள். 6 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் முடிவைச் சொன்னார்கள். பின்பு நாங்கள் இருவரும் 1993-ல் பொள்ளாச்சியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தோம்.

உங்கள் திருமணம் எந்த முறையில் நடந்தது?

பெரியாரியலை ஏற்றுக்கொண்ட நான் விதவை மறுப்பு அல்லது ஜாதி மறுப்புத் திருமணம்தான் செய்வேன் என்று உறுதியாக இருந்ததால், எங்கள் குடும்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண முயற்சிகளைத் தவிர்த்தேன். தோழர் தனலட்சுமி கணவனை இழந்து 10 வயதுக் குழந்தையோடு இருப்பதால் ஜாதி மறுப்பிலும் வருவதால், அவர்களையே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தேன்.

1990-ல் இருந்து லிவிங் டுகெதர் - ஆகச் சேர்ந்து வாழ ஆரம்பித்தோம். இந்துச் சமுதாயத்தில் திருமண முறைகள் என்று நடைமுறையில் உள்ள எந்த முறையையும் நாங்கள் கடைபிடிக்கவில்லை. கம்பேனியன் வாழ்க்கையைத் தான் தொடங்கினோம். அதற்கென தனியாக, வேறு எந்த அறிவிப்பும் செய்து கொள்ளவில்லை. பிற்காலத்தில் எங்கள் குடும்பத்தில் ஏற்றுக்கொண்டார்கள்.

நீங்கள் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்த பின்பு ஏதாவது ஒப்பந்தம் செய்து கொண்டீர்களா?

ஆமாம். தனலட்சுமியின் குடும்பம் ஏழ்மையான குடும்பம். அதனால் நீ சம்பாதிக்கும் வருமானம் அனைத்தையும் உன்னுடைய குடும்பத்திற்கே நீ செலவு செய்யலாம். ஆண் பிள்ளையைப் போல அந்தக் குடும்பத்தை நீ வழிநடத்தலாம். இதில் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நாம் இருவரும் சேர்ந்து வாழ்வதற்குத் தேவையான எல்லாச் செலவுகளையும் நானே செய்து கொள்கிறேன் என்று சொன்னேன். இப்பவரைக்கும் நான் அப்படித்தான் இருக்கிறேன். சம்பளத்தைப் பற்றி எந்த ஒரு கணக்கும் கேட்டது கிடையாது.

இன்னொரு ஒப்பந்தம் என்னவென்றால் நாங்கள் இருவரும் இணையும்போது பையன் 6-ஆம் வகுப்பு படிக்கிறான். நல்ல விவரம் தெரிகிற வயது இனி நமக்கு குழந்தைகள் வேண்டாம். இந்த ஒரு பையன் மட்டும் போதும் என்று சொன்னேன். இந்த இரண்டு நிபந்தனைகளை தனலட்சுமி-யிடம் சொன்னேன்.

நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வதற்கு உங்கள் குடும்பத்தார் ஏற்றுக்கொண்டார்களா?

ஆரம்பத்தில் ரொம்பவும் கோபமாக இருந்தாங்க. 2 வருடம் கழித்து எங்களை ஏற்றுக்கொண்டார்கள். அதன்பிறகு நாங்களும் எங்களுடைய வீட்டிற்கு போவோம். அவர்களும் எங்களுடைய வீட்டிற்கு வருவார்கள்.என்னுடைய அப்பா உடல்நிலை சரியில்லாத காலகட்டத்தில் என்னுடைய அப்பாவை தனலட்சுமி ரொம்பவும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள்.ஒரு மருமகளாக இல்லாமல் மகளைப் போல பார்த்துக்கொண்டார்.

இந்து மதத்தினரை வழிநடத்துவது மனுசாஸ்திரம். அது இந்துப்பெண்களுக்கு தந்தை வழிச்சொத்தில் அல்லது பூர்வீகச் சொத்தில் உரிமையைக் கொடுக்கவில்லை, மறுக்கிறது. பெண்விடுதலைக்குப் போராடுபவர்களின் முக்கியமான செயல், பெண்களுக்குத் தந்தைவழிச் சொத்தில் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவது ஆகும். அதுதான் மனுசாஸ்திரத்திற்கு எதிரான நடவடிக்கையும் ஆகும். பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட நீங்கள் சொத்துவிசயத்தில் எப்படி நடந்துகொண்டீர்கள்?

எங்களுக்கு நகரத்தில் மெயின் ரோட்டுப் பகுதியில் ஒரே ஒரு வீடு மட்டும் இருந்தது. என்னுடைய அப்பாவிற்கு 2 மனைவிகள். நான் எனக்குப் பிறகு 3 தம்பிகள், 2 தங்கைகள். என்னுடைய அப்பா நோய்வாய்ப்பட்ட காலங்களில் 1996-ல் உயில் எழுதி வைத்திருந்தார். அந்த உயிலில் என்னுடைய பெயரும் தம்பிகளின் பெயரும் இருந்தது. சகோதரிகளின் பெயர்கள் இல்லை.

நான் குடும்பத்தில் மூத்த மகன். பெரியாரியலை அறிந்தவன். அதனால் நான் என்னுடைய சகோதரிகளுக்கும் சொத்தில் பங்கு தரவேண்டும் என்று விவாதம் செய்தேன். அப்பா 1998-ல் இறந்துவிட்டார். அதன்பிறகு எங்களுடைய வீடு 2012-ல் விற்கப்படுகிறது. பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் 1989-ல் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திருமணம் செய்த அனைத்துப் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உள்ளது என்று சட்டமே சொல்கிறது என்று என்னுடைய பெரும் போராட்டத்திற்குப் பிறகு என்னுடைய சகோதரிகளுக்கும் சொத்தில் சரிபகுதி தரலாம் என்று தம்பிகள் ஒப்புக்கொண்டார்கள்.

ஆனாலும் என்னுடைய சித்திக்கு பங்கு கிடையாது என்று என்னுடைய தம்பிகளும் முதல் சகோதரியும் தர மறுத்தார்கள். நானும் என்னுடைய 2-வது சகோதரியும் சேர்ந்து சித்திக்கும் ஒரு பங்குதர வேண்டும் என்று சொன்னோம். எங்களுடைய வீடு 2012-ல் விற்கப்படுகிறது.அதில் ஒரு பங்கை பிரித்து எங்களுடைய சித்திக்கு பணமாகக் கொடுத்தோம். அதை நானே எடுத்துக் கொண்டுபோய் சித்தியின் வங்கிக் கணக்கில் சேமிப்புச் செய்தேன். அதில் வரும் வட்டியை மாத மாதம் வாங்கிகொள்ளுமாறும் செய்தேன்.

அது மட்டுமில்லாமல் ஒரு வீடு வாடகைக்கு விட்டுள்ளோம். அந்த வீட்டு வாடகையையும் மாத மாதம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். சொத்து பிரித்து என்னுடைய தம்பி, தங்கைகள், சித்தி இவர்களுக்கே கொடுத்துவிட்டேன். அதில் இருந்து எந்த ஒரு பங்கும் நான் வாங்கிக்கொள்ளவில்லை. என்னுடைய வருமானமே எனக்குப் போதுமானதாக இருந்தது.

உங்களுக்காக நீங்கள் சொத்து ஏதும் சேமித்து வைத்திருக்கிறீர்களா?

ஆரம்பத்தில் கொஞ்சம் இடம் வாங்கிப் போட்டு இருந்தேன். குடும்பச் சூழல் காரணமாக இடத்தை விற்றேன். ஆனால் எங்களுடைய மகன் குடும்பத்திற்குத் தேவையான வற்றை இன்றுவரை பூர்த்திசெய்து கொண்டு இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் என்று சொந்த வீடு ஏதும் வாங்கவில்லை. நாங்கள் இருவரும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். எங்கள் இருவருக்கென்று சொத்து எதுவும் சேர்க்கவில்லை.

2012-ல் தலித் அல்லாத கூட்டு இயக்கம் ஒன்று கூடியது அவர்களின் முக்கியமான கோரிக்கையில் ஒன்று பெண்களுக்கு சொத்துரிமை தரக்கூடாது என்று சொல்கிறார்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள்?

என்ன முற்போக்குச் சிந்தனை பேசினாலும் சுய சாதி பற்றுள்ளவரும், சுய மதத்தைப் பெரிதாக நினைப்பவர்களும் எந்த உரிமையையும் யாருக்கும் தரமாட்டார்கள். பெண் குழந்தைகளுக்கு பிறந்ததில் இருந்து சடங்கு, சம்பிரதாயங்கள், படிப்பு, திருமணம், பிரசவச்செலவு இவை எல்லாம் செய்து சரியாகப் போய்விட்டது என்கிறார்கள். ஆனால் ஆண்பிள்ளை வீணான செலவுகளைச் செய்து சொத்தை அழிக்கிறான். அவனுக்கு மட்டும் மீதியுள்ள சொத்தை எழுதி வைப்பதுபோல் பெண்களுக்கும் சம்மாக சொத்தை எழுதி வைக்கவேண்டும்.

புதியதமிழகம் தோழர் கிருஷ்ணசாமி அவர்களே, “நாங்க பள்ளர்கள் அல்ல மள்ளர்கள் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம்” என்று சொல்லும் அளவிற்குப் போனார்கள். கிருஷ்ணசாமி மற்றும் பிற்படுத்தப்பட்ட சுயசாதிப் பற்றுள்ள தலைவர்களும், சுயமதப் பற்றின் காரணமாகப் பேசுகின்ற வார்த்தைகளும், வைக்கிற கோரிக்கைகளையும் தலித் அல்லாத கூட்டு இயக்கத்தைச் சார்ந்தவர்களின் அந்தச் சமூகப் பெண்களே இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நான் சவால் விடுகிறேன் நீங்கள் வேண்டுமானால் ஒரு வாக்கெடுப்பு எடுங்கள், இதில் பெரியார் தான் வெற்றி பெறுவார்.

பெரியார் சொன்னதுபோல் பெண்களுக்கு சட்டப்படி சொத்துரிமை கிடைத்து விட்டது. ஆனால் முழுமையாக பெண்விடுதலை இன்னமும் கிடைக்கவில்லை ஏன்?

இந்த கேள்விக்கான பதில் பெரியார் எழுதிய விடுதலை ஏட்டில் உள்ளது(18.03.1947). பொதுவாக நம் பெண்கள் சமுதாயத்தில் தலைகீழான புரட்சி ஏற்பட்டாலே ஒழிய நாம் வேறு துறைகளில் எவ்விதமான பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்தாலும் எந்தப் பயனும் ஏற்படாது.

பெண்கள் உண்மையான மனிதப்பிறவிகளாக நடமாட வேண்டுமானால் மூன்று காரியங்கள் உடனே செய்யபடவேண்டும். முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்கள் வெளியேற்ற வேண்டும். இரண்டாவது நகை, புடவை, அலங்காரப்பேயை அவர்களிடமிருந்து விரட்ட வேண்டும். மூன்றாவது இப்போதுள்ள திருமணச் சிக்கல்களைத் துண்டுத்துண்டாக நறுக்கிவிடவேண்டும். இந்த மூன்றும் பெண்கள் வாழ்வில் சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் உருவாக்கக்கூடியவை என்ற கருத்தில்தான் பெரியார் அவ்வாறு கூறினார்.

பெரியார் சுயமரியாதை இயக்கத்தில் எத்தனையோ பெண்களை உருவாக்கினார். சுதந்திரமாகச் செயல்பட வைத்தார். ஆனால் இப்போதுள்ள இயக்கங்களிடம் பண்பாட்டு மாற்றத்திற்கான வேலைப்பாடுகள் குறைவாக இருக்கிறது. அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

பெரியாரியலை வாழ்வியலாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

பெரியாரிலைச் சார்ந்து வாழ்பவர்கள் பெரியாரின் கொள்கைகளைச் சமூகத்தில் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிற இணையர்கள் தன்னுடைய பெண்குழந்தைகளை பெரியார் காண விரும்பிய முற்போக்கான சிந்தனையில் வளர்க்கவேண்டும். பெண்ணுக்கு முழுமையான கல்வியையும், வேலைவாய்ப்பையும் சரிசமமாக பிரித்துக் கொடுத்தால் அவர்களுடைய எதிர்காலத்தை அவர்கள் நிர்ணயம் பண்ணிக்கொள்வார்கள். இதைப் பல இடங்களில் பெரியார் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்.

மிகமுக்கியமாக, தங்களது ஆண்குழந்தைகளுக்குப் பாலின சமத்துவத்தைப் பயிற்றுவிக்க வேண்டும். பெரிய போராளிகள், புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள், களப்பணியாளர்கள் வீட்டு ஆண் பிள்ளைகள் இன்னும் ஒரு சராசரி ஆணாகவே வளர்கிறார்கள். தனக்குத் தானே ஒரு காபி போட்டுக்கொள்ளவோ, தனது உடைகளைத் தானே துவைத்துக் கொள்ளவோ ஆண் பிள்ளைகள் பழக்கப்படுத்தப்படவில்லை. பெண்களை ஒரு சக உயிராக மதிக்கக் கற்றுத்தரப் படுவதில்லை. பிறகு எப்படி சமுதாயத்தில் மாற்றம் வரும்?

பெண்ணுக்கு திருமணம் என்பதை அந்தப்பெண்ணே முடிவு செய்துவிட்டு நம்மிடம் சொல்லும் நிலையை உருவாக்கித்தரவேண்டும். பெண்களை முடிவெடுக்கப் பழக்கவேண்டும். படிப்பு முடிந்தது இனி திருமணம் செய்து வைக்கலாம் என்று பெற்றோர்கள் முடிவு செய்து பிள்ளைகளிடம் சொல்லும் நிலை இருக்கக்கூடாது. இது பகுத்தறிவாளர் குடும்பங்களுக்குள் வரவேண்டும்.

பெரியார் சொல்வது மக்கள் கருத்தை திரட்டிக்கொண்டு நாம் முன்னே நடந்தால் மத, சடங்கு, சட்டங்கள் இவையெல்லாம் என் பின்னால் நெட்டிக்கொண்டு வரும். நகராட்சியில் ஒரு கவுன்சிலர் பதவியில்கூட இல்லாத பெரியார்தான் இந்திய அரசியல் சட்டத்தையே முதன்முதலில் திருத்த வைத்தார். தீவிரவாத இயக்கங்கள்கூட இதைச் செய்யவில்லை. இனிவரும் காலங்களில், பெரியாரின் கொள்கைகளை முதலில் பெரியார் இயக்கங்களில் உள்ள குடும்பங்களாவது வாழ்வியலாகப் பின்பற்றத் தொடங்கினால், இந்தச் சமூகம் கண்டிப்பாக மாறும். அதற்கான முயற்சியைத்தான் காட்டறு குழு செய்துகொண்டு இருக்கிறது.

Pin It