“நாம் யார் என்பதை உணரத் தொடங்கியுள்ளோம். நம்மால் உலகையே பாதுகாக்க முடியும். விரைவில் உலகையே வழி நடத்துவோம். இதற்காக வேதத்தை உலகெங்கும் பரப்பிட வேண்டும்” என்று ஆளுநர் வேலையிலிருந்து, வேதம் ஓதுகிறவர்களை பாதுகாக்கும் வேலையைச் செய்யத் தொடங்கி இருக்கிறார் ஆர்.என்.ரவி. சென்னை திருவல்லிக்கேணியில் பார்ப்பனர்களால் நடத்தப்பட்ட “வேத சம்மேளனம்” நிகழ்வில் பங்கேற்று அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.
உண்மையில் அவர்கள் யார் என்பதை உணர்ந்து உலகுக்குச் சொன்னவர் டாக்டர் அம்பேத்கர்தான்,
“இவர்கள் நாவிலே இராமனையும், கையிலே வாளையும் வைத்திருப்பார்கள். கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பார்கள். ஆனால், விலங்கிலும் கேவலமாக மனிதனை நடத்துவார்கள். இவர்கள் கொடிய வஞ்சனையாளர்கள்” என்கிறார் அவர்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மாநிலங்களில் எல்லாம் அக்கட்சி ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்து வருகிறது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை, அரசு நிர்வாகத்தில் தலையிட்டு அரசு கொண்டுவரும் திட்டங்களைத் தடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நிலை குலையச் செய்வது என்பதுதான்.தந்தை பெரியாரின் தீவிரமானச் சமூகநீதி சித்தாந்தத்தை கொண்டாடும் தமிழ்நாட்டில், எவ்வளவுதான் ஆளுநர் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கோப்புகளை நிறுத்திவைத்து ஆளும் திராவிட மாடல் அரசுக்கு தொந்தரவு கொடுத்தாலும் இங்கே காலூன்ற இந்துத்துவ பா.ஜ.க சித்தாந்தத்தால் காலூன்ற முடியாது.
கடவுள் படைப்புகளை உருவாக்கினார் அந்தப் படைப்புகளின் ஒவ்வொரு அங்கத்திலும் வேதங்கள் இருக்கின்றன. 1000 ஆண்டுகளுக்கு முன்பே உருவான வேதங்கள் மூலம் நித்திய அறிவைக் கொண்டு ரிஷிகள் நாட்டை வழிநடத்தி சென்று இருக்கின்றனர். நமது பாரதம் வேதங்களை தயாரிப்பாகும். வேதங்கள் தான் நம் நாட்டின் தாய் என்று பேசுகிறார் ஆளுநர்.
வேத பிராமணர்கள் வழிநடத்திய ஆட்சி நால்வர்ண அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ராம ராஜ்ஜியம், பார்ப்பனர்களின் ராஜ்ஜியமாக இருந்ததற்குச் சான்றாக சமபூகன் என்ற சூத்திரனின் தலை வெட்டப்பட்டதே சாட்சி என்கிறார் அம்பேத்கர்.
“ராமன் சம்பூகனுக்கு குறைவான தண்டனையை அளிக்கவில்லை அதனால் தான் வேதம் ஓதுகிற சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும் என்பது, வேதம் ஓதப்படுவதைக் கேட்கின்ற சூத்திரனின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்பது போன்ற கடுமையான தண்டனைகளை மனுஷ்மீது விதித்திருக்கிறது” என்றும் கூறுகிறார் அவர்.
இப்படி இருக்கும் போது பாரதம் மட்டுமின்றி உலகின் அனைத்து மக்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என வேதங்கள் சொல்லுகின்றன என்று ஆளுநர் சொல்வது முற்றிலும் பொய். அத்துடன் ராம ராஜ்யத்தை கட்டி எழுப்புவதற்காகவே நாட்டை காவிமயமாக்கும் திட்டமும், நால்வர்ண அமைப்பு முறையை பாதுகாப்பது என்பதே அவரின் நோக்கமாக இருக்கிறது.
பார்ப்பனியத்தின் அடிப்படை கோட்பாடுகள் ஆறு. ஒன்று பல்வேறு வகுப்புகளுக்கு இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்துவது. இரண்டு சூத்திரர் மற்றும் தீண்டத்தகாத மக்களை முழுமையாக நிராயுதபாணி மக்களாக ஆக்குதல். மூன்று சூத்திரர், தீண்ட தகாத மக்களுக்கு கல்வியை முற்றிலும் தடை செய்தல். நான்கு சூத்திரர் தீண்டத்தகாதவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் இருந்து முற்றிலும் தடை செய்தல். ஐந்து சூத்திரர், தீண்ட தகாதவர்கள் சொத்து வைத்திருப்பதைத் தடை செய்தல். ஆறு பெண்களை அடக்கி அடிமை நிலையில் வைத்திருத்தல். சமத்துவமற்ற ஏற்றத்தாழ்வு தான் பார்ப்பனியத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாகும் என்றும் பதிவு செய்கிறார் அம்பேத்கர்.
நாம் வேதங்களில் இருந்து பிரிந்து விட்டோம் என்றும், பாரதம் மீண்டும் எழுந்து கொண்டிருக்கிறது என்றும், அது விழித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது என்றும் சொல்லும் ஆளுநர் ஆர்.என். ரவியின் நம்பிக்கை நரேந்திர மோடியின் ஆட்சியின் மீதுதான் .
ஆரியர் என்று ஆர். எஸ். எஸ். ஆல் போற்றப்படும் ஜெர்மனியின் ஹிட்லருக்கு உலக நாடுகள் என்ன மதிப்பைத் தருகிறதோ, அதைத்தான் இவர்களுக்கும் வழங்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
- யாழ் திலீபன்