ஈரோட்டில் சாதி ஒழிப்பு கூட்டியக்கம் களமிறங்கியது

இரட்டை தம்ளர் முறையை எதிர்த்து போராட்டக் களத்தில் இறங்கிய பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து நம்பியூர் திருமண மண்டபத்தில் அருந்ததியினருக்கு இடமில்லை என்ற தீண்டாமையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றது. கழகத்தின் முயற்சியால் சாதி ஒழிப்பு முற்போக்கு அமைப்புகளின் சாதியொழிப்புக் கூட்டியக்கம் உருவாகியது. தொடர்ந்து பார்ப்பனர்கள் உருவாக்கிய பார்ப்பனியத்துக்கு பலியாகி, சாதி வெறியோடு செயல்படும் ஆதிக்கசாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சாதி ஒழிப்பு கூட்டியக்கம் களப்பணிகளில் இறங்கி வருகிறது.

சேலம் மாவட்டம் காவலாண்டியூர் கிராமத்தைச் சார்ந்த தலித் இளைஞரும், அதே கிராமத்தைச் சார்ந்த நாடார் சமூகத்தைச் சார்ந்த பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆதிக்க சாதியினர், இதை எதிர்த்து நடத்திய வன்முறை வெறியாட்டத்துக்கு வழக்கம் போல் காவல்துறையும் துணைபோனது. சாதி ஒழிப்பு கூட்டியக்கம் இதை எதிர்த்து கடந்த ஜூன் 30 ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. செய்தி விவரம்:

உச்சநீதி மன்றத்தில் 2006 ஆம் ஆண்டு லதாசிங் வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு இச்சமூகத்தில் நிலவும் சாதி நம் நாட்டில் எல்லா ஒற்றுமையையும் அழித்துவிடும். எனவே, சாதி ஒழிய வேண்டுமென்றால் சாதி மறுப்புத் திருமணங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். சாதி மறுப்புத் திருமணம் செய்யும் காதலர்களுக்கு அரசும், காவல்துறையும் பாதுகாப்புத் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளையிட்டது.

ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக சாதி ஆதிக்கவாதிகளுக்கு துணைப்போகிறது ஈரோடு காவல் துறை. சேலம் மாவட்டம் காவலாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அம்மாசை என்ற தலித் சமுதாயத்தைச் சார்ந்தவரின் மகன் கிருஷ்ணனும் அதே கிராமத்திலுள்ள மணிமேகலை என்கிற நாடார் சாதியை சார்ந்த பெண்ணும் காதலித்துள்ளனர். அவர்கள் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

காதலர்கள் திருமணம் செய்து கொள்ள சட்டரீதியாக உரிமை இருந்தும் பெண் வீட்டார்கள் கொலை வெறியுடன் அவர்களை தேடி வந்துள்ளனர். சாதி வெறி பிடித்த அந்த ஆதிக்கக் கூட்டம் ஈரோட்டில் மகளிர் சுயஉதவிக் குழு என்ற பேரில் கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட ஊழல்களுக்கு துணை புரிந்து வரும் திலகவதி என்ற பெண்ணின் உதவியுடன், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களுடன், சேர்ந்து சட்ட விரோதமாக கத்தி போன்ற ஆயுதங்களுடன் இரண்டு கார்களில் வந்து காவலாண்டியூரில் இருந்த மணமகனின் தந்தை அம்மாசையை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு வந்துள்ளனர்.

வழியில் சித்தோடு பால் பண்ணை அருகே வாகனங்களை நிறுத்தி காவலர்களை கண் சிமிட்டி ஒதுங்கியிருக்க சொல்லிவிட்டு அம்மாசையை காரிலேயே வைத்து கடுமையாக அடித்துதாக்கி, குத்திக் கொலை செய்து விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். சாதியை சொல்லி இழிவாக திட்டி அவரை கேவலப்படுத்தியிருக்கிறார்கள் அந்த சாதி வெறியர்கள். காவல்துறையின் ஒப்புதலோடு காட்டு மிராண்டித்தனம் நடத்திருக்கிறது.

அதன்பின் அம்மாசையை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கே காவலர்களும், திலகவதியும் சேர்ந்து வலுக்கட்டாயமாக அவர் வாயில் மதுவை ஊற்றி குடிக்கச் செய்து ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்திருக்கிறார்கள். மருத்துவமனையில் திலகவதி தனக்கு உயரதிகாரிகளிடம் பெரும் செல்வாக்கு உள்ளதாக சொல்லி காவலர்களையும், ஊழியர்களையும் மிரட்டியிருக்கிறார்.

இவர்களின் சித்ரவதையால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் அம்மாசை. தான் கடுமையாக தாக்கப்பட்டதை விரிவாக எடுத்துச் சொல்லியும்கூட ஒருநாள் கழித்தே காவல்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

1) காவல்துறை விசாரணை என்ற பேரில் ஒரு கட்டப் பஞ்சாயத்து பெண்மணியான திலகவதி காவலர்களுடன் சென்று மிரட்டும் அளவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

2) காவல்துறையின் பாதுகாப்பிலேயே கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தலித் அம்மாசைக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.

3) சட்டப்படியும், நியாயப்படியும், சாதி மறுப்புத் திருமணம்செய்து கொண்ட கிருஷ்ணன் - மணிமேகலைக்கு காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவேண்டும்.

4) ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலேயே பலாத்காரமாக வாயில் மதுவை ஊற்றி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அம்மாசையின் இந்த நிலைமைக்கு பின்னணியில் இருந்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

என்ற கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டியக்கப் பொறுப்பாளர் ப. இரத்தினசாமி தலைமை வகித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ஜி.வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் எஸ்.சுப்ரமணியன், மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், மக்கள் சிவில் உரிமைக் கழக பொதுச் செயலாளர் பாலமுருகன், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி பொதுக்குழு உறுப்பினர் ச.அர.மணிபாரதி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் மு.சேதுபதி, தமிழர் தேசிய இயக்கத்தைச் சார்ந்த சத்தியமூர்த்தி, சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தைச் சார்ந்த ஆ.மாரப்பனார், புரட்சிகர தொழிலாளர் விடுதலை முன்னணியைச் சார்ந்த இரணியன், ஆதித் தமிழர் பேரவையைச் சார்ந்த வீரகோபால் ஆகியோர் உரையாற்றினர்.

Pin It