“நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார்?” என்ற கேள்விக்கு மீண்டும் ஒரு அழுத்தமான பதில் ஆதிக்க சாதியினரிடமிருந்து. அம்பேத்கர் படம் அச்சிடப்பட்ட மேலாடையுடன் நந்தீஸ் மற்றும் அவரது இணையர் சுவாதி, இருவரின் சடலமும், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றிலிருந்து மீட்டெடுக்கப்பட்டதே அந்த பதில். அதன் விளைவாக எப்பொழுதும் போல் கண்டனங்கள், அறிக்கைகள், அரசியல் கட்சிகளின் மெளனங்கள், முற்போக்கு கட்சிகளின் கருத்து மோதல்கள்.
குறிப்பாக திராவிட இயக்கங் களையும், திராவிட கருத்துகளையும் குறிவைத்து விமர்சனம் செய்யும் அறிவுஜீவிகளின் போக்கு. ஆணவக் கொலைகளுக்கு எதிரான பகுத்தறிவு பண்பாட்டு தேவையை நீர்த்துப் போக செய்துவிட்டு பார்ப்பன மனோபாவத்துடன் பெரியாரியக் கருத்தியலையும் திராவிட இயக்கங்களையும் குறைகூறுவது இப்போது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு சாதியக் கொலைகளின் போதும் இந்த உரையாடல்கள் மட்டும் தங்குதடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
2014-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரை 356 சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக தேசிய குற்றப்பதிவுப் பிரிவினர் (National Crime Records Bureau – NCRB) பதிவு செய்துள்ளனர். (Hindustantimes) இன்னும் அதிகரித்துக் கொண்டே வரும் சாதி ஆணவக் கொலைகளை அடியோடு ஒழிப்பதற்கு கருத்தியல் மற்றும் பண்பாட்டு ரீதியாக அமைப்புகளும் கட்சிகளும் திரள வேண்டிய அவசியமுள்ளது என்பதைதான் இந்த சாதி கொலைப் பதிவுகள் நமக்கு உணர்த்துகிறது.
சாதியக் கட்டமைப்பை வெவ்வேறு வழிகளில் மறுஉற்பத்தி செய்து அதை இந்தச் சமூகத்தில் இன்றளவும் நீட்டித்துக் கொண்டிருக்கும் முயற்சியில் பல சமூக நிறுவனங்கள் மிக வலுவாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தச் சமூக நிறுவனங்கள்தான் பார்ப்பன மதத்தையும் சாதியக் கொள்கைகளாகிய குலத்தூய்மையையும் மற்றும் இவையனைத்தையும் உள்ளடக்கிய மனுதர்மத்துவத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன.
அதிகாரத்தையும் ஆணவத்தையும் மதத்தின் மூலமும் சாதியின் மூலமும் மறுஉற்பத்தி செய்து அதை சமூகச் சட்டங்களாக இயற்றி வாழ்வியலில் நடைமுறைப்படுத்தப்படும் போது அது மக்களின் உணர்வு நிலையில் மிக ஆழமாகப் பதியவைக்கப் படுகின்றது. சாதியக் கட்டமைப்பை உள்வாங்கிக் கொண்ட மக்களும் அந்த சாதியை மறுஉருவாக்கம் செய்து அதைத் தங்களின் வாழ்க்கைமுறையில் நடைமுறைப்படுத்தி தன்னை அந்த சாதியைக் காக்கும் ஒரு நிறுவனமாக மாற்றிக் கொள்கின்றனர்.
மனுதர்ம கலாச்சாரமும், பண்பாடும்
ஒரு வருணம் இன்னொரு வருணத்தோடு கலப்பது என்பதையும் சாதிகள் ஒன்றோடு ஒன்று கலப்பதையும் தர்மத்திற்கே ஆபத்து என்று மிகக் கடுமையாக எச்சரிக்கும் மனுதர்மம், வருணம் மாறி பிறக்கும் குழந்தைகளைக் கொண்டு புதிய சாதிப் பிரிவுகளை ஏற்படுத்தி அவர்களுக்கென பெயர்கள் இயற்றி (சண்டாளன், ஸ்வபாகன், ஷத்தா, உக்ரன் மற்றும் புர்க்கசன்) அவர்களுக்கான இருப்பிடங் களையும் தொழில்களையும் தீர்மானித்து அதை சமூகச் சட்டங்களாக நடைமுறைப்படுத்தினார்கள்.
இப்படி இழிப்பிறப்பாளர்கள் பெருகிவரும் நாடு உறுதியாக அழிந்துவிடும் என்றும் எச்சரிக்கும் மனுதருமத்தின் வருணம் மற்றும் சாதிகள் கலப்பதைத் தான் “கலியுகம்” என்று குறிப்பிடுகிறது. “நாலாம் வருணத்தவர்க்கு மேற்குலத்துப் பெண்டிரிடம் பிறந்த பிரதிலோமர்களான அயோகவன், ஷத்தா, சண்டாளன் இம்மூவரும் ஒரு தர்ம காரியத்திற்கும் தகாதவர்.” (பத்தாம் அத்தியாயம், 16, பக். 172)
ஊருக்கு வெளியில் சண்டாளர் களையும் ஸ்வபாகர்களையும் குடிய மர்த்தவும், அவர்கள் பிணங்களின் ஆடைகளை அணியவும், விழாக்களின் போது இவர்களை பார்ப்பதும், இவர்களுடன் பேசுவதும் கூடாது என்று ஒவ்வொரு சாதியினருக்குமான வாழ்வியியல் சட்டங்களை இயற்றி அதை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர். மனுதர்ம சாஸ்திரத்தின் பத்தாவது அத்தியாயத்தில் சாதிகளின் தோற்றம் மற்றும் அந்த சாதிக்குரிய தொழில் பற்றி விரிவாக கொடுக்கப் பட்டுள்ளது.
இந்த இருபத்தியோராம் நுாற்றாண்டிலும் மனு வகுத்த நீதியின் கீழ் மதம், பண்பாடு, குடும்பம், கலாச்சாரம், அறிவுசார் துறைகள், சட்டத்துறைகள், அரசு மற்றும் அரசியல் துறைகள், தகவல் தொடர்பு துறைகள், மற்றும் பல சமூக நிறுவனங் களைக் கொண்டு ஒவ்வொரு சாதிக்குமான ஆதிக்க மன நிலையையோ அல்லது அடிமை மனநிலையையோ உருவாக்கி அதை இந்தச் சமூக்தில் நிறுவனப்படுத்த முயல்கின்றனர்.
இதை அறிவியல்பூர்வமாக அனுகும் போது தான், சாதி என்பது இந்துமதப் பண்பாடாகவும் கருத்தியியல் ரீதியாகவும் ஆதிக்க சாதியினரால் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு காப்பாற்றப்படுகிறது என்பது தெளிவாகிறது. இதன் விளைவாகத்தான், இங்கே பார்ப்பனர்களே இல்லாமல் போனாலும் இடைநிலை சாதியினரின் பார்ப்பனிய மனோபாவத்தால் சாதி ஆணவம் காப்பாற்றப்படும் என்பதும் உறுதியாகிறது.
சாதியை நிலைநிறுத்தி அடிமை மனநிலையை இன்னும் அழுத்தமாக நிறுவுவதன் மூலம் மட்டுமே, ஆதிக்க சாதியினரின் ஆணவத்தையும் அவர்களின் குலத்துாய்மையையும் கட்டுடையாமல் பார்த்துக் கொள்ளமுடியும். காலம் காலமாக மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்த சாதியச் சட்டங்களை அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கருத்துகளைக் கொண்டு அந்தக் கட்டமைப்பைத் தகர்க்க முற்படும்பொழுதுதான் கொடூரமான கொலைகளின் மூலம் ஆதிக்க சாதிகள் தங்களின் சாதி ஆணவத்தை மீட்டுருவாக்கம் செய்கின்றனர்.
கிராமங்களை ஒழித்தல் வேண்டும்
இந்தியாவின் சுதந்திர அரசியல் தலைவர்கள் தங்களின் அதிகாரம் கொண்டு ஒரு சில மாற்றங்களையே செய்ய முடிந்தது. அதில் புதிய அரசியல் திட்டங்களுக்கும் புரட்சிகரமான சட்ட சாசனங்களுக்கும் மிக வலுவான எதிர்ப்பைப் பதிலாக அளித்தது இந்த கிராமங்களும், பஞ்சாயத்துகளும் தான். சாதியையும் சாதியக் கொலைகளையும் ஆதரிக்கும் சமூக நிறுவனங்களில் மிக முக்கியமான ஒன்றாக இந்த கிராம அமைப்புமுறை கருதப்படுகிறது. இங்கே கிராமம் என்பது பாரதிராஜா திரைப் படங்களில் காட்டப்படுவது போன்ற இயற்கை சூழல் கொண்ட ஒரு அழகான இடமல்ல.
மாறாக, கிராமம் என்பது சாதி வேலிகளையும் தீண்டாமைச் சுவர்களையும் சாதிக்கொரு கோவிலையும் அதனுள் பல சட்டங்களையும் கொண்டிருக்கும் ஒரு இடமே யன்றி வேறொன்றும் அல்ல. மேலும், கிராமம் என்பது பார்ப்பன மனுதர்மக் கலாச்சாரத்தை முழுவதுமாக தனதாக்கிக் கொண்ட ஒரு அமைப்பு முறையேயாகும். இதன் காரணமாகத்தான் இந்து தேசியவாதிகள் தங்களின் தனிப்பட்ட கொள்கை களாக கலாச்சார-பண்பாட்டு மீட்டெடுப்பு என்று கூறி கிராம அமைப்புமுறையை மீட்டெடுக்க முயற்சிக்கின்றனர்.
காரணம், கிராம வாழ்க்கைமுறை யென்பது மனுதர்மச் சட்டங்களை மிகக் கடுமையாகப் பின்பற்றி வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களைக் கொண்டது. கிராம அமைப்புமுறையை இப்படி அணுகும் போது மட்டும்தான், அது இரத்தமும் சதையுமாய் சாதி ஆணவத்தை உள்ளடக்கிய ஒரு முக்கிய அதிகார மையமாகச் செயல்படுகிறது என்பதை நாம் தெளிவாக்கிக் கொள்ள முடியும்.
இதற்கு உதாரணமாக காப் பஞ்சாயத்துகள், 100-க்கும் மேற்ப்பட்ட கிராமங்கள், 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இன்றும் கூட காப் ஆதிக்கம் செலுத்தும் பஞ்சாயத்துகளில் மனுதர்ம-சாதியச் சட்டம்தான் நடைமுறைப் படுத்தப்படுகிறது. அவர்கள் கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாகவும், சாதி ஆணவத்தைத் தாங்கிப் பிடிப்பவர்களாகவும் அவர்களின் பஞ்சாயத்துகளில் தலித்துகளுக்கு கெதிரான வன்கொடுமை மிகுந்து இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காப்புகளின் அதிகாரம் இருக்கும் கிராமங்களில், யாராவது சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு வெளியேறினால், அங்கிருக்கும் அனைத்து தலித் குடும்பங்களுக்கும் வரம்புமீறிய சாதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர். அத்தோடு மட்டும் இல்லாமல், ஒட்டு மொத்த கிராமத்துடனும் அவர்கள் தொடர்பற்று இருக்க வேண்டுமென்று கூறி தலித்துகளின் அத்தியாவசியத் தேவைகளை முடக்கிவிடுகின்றனர்.
இதே போல் தர்மபுரி இளவரசன்-திவ்யா சாதி மறுப்புத் திருமணத்திற்கு பிறகும் நடந்தது. வன்னியர் சாதி பஞ்சாயத்துகளின் ஆணைப்படி திவ்யாவை திருப்பி அனுப்பவில்லையென்றால் அந்த கிராமத்தில் “காலனி” வீடுகள் அகற்றப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. அதன் விளைவாக வன்னிய சாதி ஆணவக் காரர்களால் மூன்று தலித் கிராமங்கள் மிகக் கொடூரமான –வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டது.
அதே போல், மஹாராஷ்ட்ர மாநிலத்தில் கயர்லாஞ்சி என்னும் கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் நிலங் களுக்கு மத்தியில் தன்னுடைய நிலத்தை காக்க போராடிய போது, கிராம பஞ்சாயத்தின் ஆணைக்கு உட்பட்டு சுரேகா, அவருடைய கணவர் மற்றும் மூன்று பிள்ளைகள் (இரண்டு ஆண், ஒரு பெண்) என ஐவரையும் மனிதத் தன்மையே சிறிதும் அல்லாமல் அவர்களுடைய பிறப்புறுப்புகள் அறுத்தெரியப்பட்டு, பெண்கள் இருவரையும் கூட்டு கற்பழிப்பு செய்து மிகக் கொடூரமான முறையில் கிராம மக்களின் முன்னிலையில் கொலை செய்யப்பட்டனர்.
இந்தச் சாதிய பாகுபாடு பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனர் அல்லாதோருக்குமானது மட்டுமல்லாமல் அது இடைநிலை சாதிகளுக்குள்ளும் இருக்கிறது. ஆதிக்க சாதியின் ஆணவம் தலித்துகளுக்கு எதிரானவையாக இருந்தாலும், அவை பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் எதிராக இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் வெள்ளாங்குழியில் கூட்டுறவு வங்கி ஊழியராக வேலை பார்த்து கொண்டிருந்த கோனார் சாதியைச் சேர்ந்த சங்கரும் அதே பகுதியில் உள்ள தேவர் சாதியைச் சோந்த சத்யபாமா, இருவரும் காதலித்து வந்த நிலையில் சத்யபாமாவின் 16-வயது சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் (பள்ளி மாணவர்கள்) சேர்ந்து சங்கரைக் கொலை செய்தனர். நடந்த இந்த ஆணவக் கொலையின் மூலம் இந்த சாதி ஆணவமானது பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள்ளும் வேரூன்றி யிருக்கிறது என்பதை நிரூபணமாக்குகிறது.
மேற்கூறப்பட்ட சம்பவங்கள் அனைத்திலும் கிராமமும் அதன் சாதி ஆதிக்கத்தின் ஆணவ அதிகாரமும் சேர்ந்து கொண்டு எப்படி சாதியைத் வன்முறை கொண்டு கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது தெரிகிறது.
அந்த கிராம அதிகார மையத்தின் மற்றுமொரு புள்ளி தான் இந்தக் குலம். தங்களின் குல-தர்மம், மற்றும் குல-கர்மத்தைப் பின்பற்றித்தான் இந்தச் கிராமத்துச் சாதிக் குழுக்கள் இயங்கி வருகின்றனர். இந்தக் குல-தர்மம் மற்றும் குல-கர்மத்தின் மிக முக்கியமான பங்கு என்னவெனில் அவர்களுக்கே உரிய சாதி ஆணவத்தைக் கட்டிக் காப்பது என்பது தான். இன்னும் ஆழ்ந்து நோக்கினால், அந்த சாதி ஆணவம் என்பது சாதியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் பெண்ணுடல் தானே யன்றி வேறொன்றுமில்லை.
இத்தகைய மனோபாவத்தைத் தங்கு தடையின்றி வளர்த்துக் கொண்டிருப்பவை தான் இந்தக் குலதெய்வ வழிபாடுகள். குலதெய்வ வழிபாடுகளின் முக்கியத்துவம் குறித்தும் அந்த வழிபாடுகள் சாதிக்கு நிழல் கொடுக்கும் ஒரு ஆலமரமாய் வளர்ந்து வருவதை காட்டாறு வெளியிட்ட ‘அடிமைப்படுத்தும் குல தெய்வங்கள்’ என்னும் புத்தகத்தில் இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்தக் குல தெய்வங்கள் பார்ப்பனர் அல்லாத ஆனால், பார்ப்பன மனோபாவத்தை உள்ளடக்கிய அனைத்து சாதி படிநிலையினர்களின் அதிகார மையங்களாகும்.
சீர்திருத்தப்பட்ட இந்து மதக் கொள்கைகளை கொண்டு தான் காந்தி இந்தியாவின் கிராமங்களைச் சீர்திருத்து வதாகச் சொல்லி கிராமம் கிராமமாக நடைபயணம் மேற்க்கொண்டார். நகரமய மாக்கலும், பன்முகத்தன்மையும் மட்டுமே சாதியம் ஒழிக்க வழியென்று கூறி அவருக்கு எதிராகப் போர் கொடி துாக்கினார் அண்ணல் அம்பேத்கர்.
நிலபிரபுத்துவத்தையும், சாதி-தீண்டாமையையும் ஒழிக்க வேண்டுமென்றால் கிராமங்களைத் தகர்க்க வேண்டுமென்றார் தந்தை பெரியார்.
“பேதமற்ற இடம் தான் மேலான திருப்தியான இடமாகும்” என்று கூறி, கிராமங்களை ஒழித்தே ஆகவேண்டும் என்றார் தந்தை பெரியார். இதன் விளைவாகதான், பன்முக தன்மை கொண்ட நகரக் கலாச்சாரம் இந்து தேசியத்திற்கும் சாதி-அடிமை முறைக்கும் மிகுந்த சவாலாக இருக்கிறது.
ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டம்
ஒவ்வொரு வருடமும் 100-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் நடப்பதை அடிப்படையாகக் கொண்டு 2014-ஆம் ஆண்டு ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டம் மிகுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நமது அண்டை நாடான பாகிஸ்தான் பாரளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டு பாகிஸ்தான் தண்டனைச் சட்டப் பிரிவில் சேர்க்கப்பட்டது.
இந்தியாவில் சாதி ஆணவக் கொலைகளுக் கென புதியசட்டம் இயற்ற வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இங்கு சாதிய அமைப்புமுறையே சட்டமாக இருப்பதை முதலில் உணரவேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரையில் சாதி ஆணவக் கொலைகளுக் கென தனிச் சட்டங்கள் இல்லை. இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளின் கீழ் தான் கைதுகளும், தண்டனைகளும் கொடுக்கப்படுகிறது. (வழக்கு பதிவு செய்யப்பட்ட கொலைகளுக்கு மட்டுமே) கொலை தண்டனைச் சட்டத்தைக் கொண்டுதான் இன்றும் ஆணவக் கொலைகளில் கைது நடைபெறுகிறது. கொலை செய்வதற்கான காரணங்கள் பகையாகவோ அல்லது போட்டியாகவோ இருக்கலாம், அத்தகைய கொலைகள் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
ஆனால், சாதியைக் அடிப்படையாகக் கொண்டு திட்டம் தீட்டி, அந்தக் குடும்பத்தினரே சேர்ந்து சாதி மறுப்பு திருமணம் செய்த இணையர்களை மிகக் கொடூரமான முறையில் கொன்று விடுகின்றனர். இது மிக ஆழமான பாதிப்புகளை சமூகத்தில் ஏற்படுத்தி ஒட்டுமொத்த மனித ஜனநாயகத்தையே கேள்விக் குள்ளாக்குகிறது. மேலும், சாதி ஆணவக் கொலைகளுக்கு சாதியம், மதம், கலாச்சாரம், பண்பாடு என்ற மிகவும் பிற்போக்குத்தனங்களே காரண மாய் உள்ளது. அப்படியிருக்கும் போது சட்டத்தின் பார்வையில் கொலைத் தண்டனைச் சட்ட வரையறைகள் ஆணவக் கொலை களுக்குப் பொருந்தாது, எனவே சாதி ஆணவக் கொலைகளுக்கென மிகக் கடுமையான தனிச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையினால் 1979-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான அனைத்துவிதமான குற்றங்களையும் ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டமைப்பில் (The Convention on the Elimination of All Forms of Discrimination against Women – CEDAW) 1993-ஆம் ஆண்டில் இந்தியா கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. ஆணவக் கொலைகளைக் கடுமையான சட்டங்கள் கொண்டு மட்டும் அகற்றிவிடலாம் என்பது சாத்தியமேயில்லை. மேலும், இத்தகைய கொலைகளை எதிர்ப்பதில் சட்டத்திற்கு மிகுந்த வலிமை இல்லை என்பதிலும் சந்தேகமேயில்லை. அதற்கு மாறாக, சாதி ஆணவக் கொலைகளின் அடிப்படையயைத் தகர்க்கக் கற்றுக் கொண்டு சட்டத்துறையோடு சேர்ந்து சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் பண்பாடு என அனைத்து வழிகளிலும் இதை ஒழிக்கப் பாடுபட வேண்டும்.
கட்சிகள் மற்றும் அமைப்புகளின் இப்போதைய தேவை
தலித்துகளின் அரசியல் விழிப்புணர்வால் அவர்களின் கிராம அரசியல்-பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதிக்க சாதிகளின் கற்பனைகளில் கூட எண்ணிப் பார்க்காத அளவிற்கு இன்று தலித்துகளுக்கு கிடைத்துள்ள கல்வியறிவும் அரசியல் ஆதரவும் பொருளாதார மற்றும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வின் விளைவால் வந்த முன்னேற்றங் களினால் மனுதர்ம-கிராம அமைப்பு முறையில் ஏற்பட்ட ஏற்ற இறங்கங்களும்தான் இன்று நடக்கும் ஆதிக்க சாதியினரின் வெளிப்படையான சாதி அரசியலுக்கு காரணம். இதன் விளைவாக சாதிக் கட்சிகளின் பெருக்கமும் சாதி வன்முறையைத் துாண்டும் அவர்களின் மேடைப் பேச்சுகளும் அதைத் தொடர்ந்த வன்முறைகளும் இன்று வலுப் பெற்றுள்ளது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில்தான் பெரியாரிய - அம்பேத்கரிய மற்றும் இதர முற்போக்கு கட்சிகளின் மிகத் தீவிரமான செயல்பாடு தேவைப்படுகிறது. வேதங்கள், சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள் என இவை எவையுமே கற்றறியாத வெகுஜன மக்களை பண்பாட்டு ரீதியாக இந்து மதச் சட்டங்களுக்கும் சாதி அமைப்புக்கும் எதிராக ஒன்றிணைக்க வேண்டிய தேவையுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
பார்ப்பனிய எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு என பல்வேறு கொள்கைகளைத் தங்களுடையதாகக் கொண்ட அமைப்புகள் பெரியார்-அம்பேத்கர் கருத்துக்களைக் கொண்டு தங்களுடைய தொண்டர்களை இந்துமதத்தை விட்டு வெளியேற வலியுறுத்துவது என்பது இப்போதைய சூழ்நிலையில் மிக அவசியமான ஒன்று.
மற்ற தோழமைக் கட்சிகளும் ஒன்றிணைந்து பன்முகத்தன்மைக் கொண்ட நவீன நாகரீக கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்தி மக்களை யெல்லாம் அணித்திரட்டி இந்து தேசியத்திற்கும் தமிழ் தேசியக் கட்டமைப்பிற்கும் எதிராக மிக வலுவான அமைப்பாக உருவெடுத்தால் மட்டுமே இந்து-சாதி ஆணவத்தை ஒழித்துகட்ட முடியும். இந்து தேசியத்தையோ அல்லது தமிழ் தேசியத்தையோ கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்துவதன் மூலம் சாதிய மனோபாவத்தையும் அதன் ஆணவத்தையும் மறைத்துவைக்கதான் முடியுமே தவிர சாதியை ஒழிக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
கல்வித் திட்டங்கள்
உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய உயர் கல்வி அமைப்புமுறை கொண்ட நாடாகத் திகழும் இந்தியாவில் தான், பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் சேர்ந்து சாதி ஆணவக் கொலையில் ஈடுபட்டுள்ளனர். எல்லா நாடுகளிலும் இருக்கின்ற பாலியல் கல்வி முறை, மூடநம்பிக்கைகளை ஒழித்து பகுத்தறிவை வளர்க்கும் பாடத் திட்டங்கள், அறிவியலை அறிவியலாக அணுகும் பாடத்திட்டங்கள் எதுமேயில்லை இங்கு இல்லை. இதன் விளைவுதான் பள்ளி மாணவர்கள் செய்த ஆணவக் கொலை.
இவைக்களுக்கெல்லாம் மேலும் மெருகேற்றும் வகையில் பகுத்தறிவைக் கண்டு பதற்றப் பட்டு மூடநம்பிக்கைகளை மட்டுமே முழுவதுமாகக் கொண்ட பாடத்திட்டம் மற்றும் பள்ளி பாடப் புத்தகத்தில் சாதி மதத் தலைவர் களைப் பற்றிய பாடம் வைக்க வேண்டும் என்று போராடும் அரசியல் திட்டங்கள் என இந்துத் துவத்தையும், இந்து தேசியத்தையும் திணிக்கும் பாடத் திட்டங்களே இந்தியாவின் தனித் பெருமை.
அடுத்த தலைமுறையினரையும் சாதி-மத அடையாளங்களுக்குள் அடைத்து வைக்கும் இந்தப் பாடத்திட்டங்களைச் சட்டப்பபூர்வமாக எதிர்த்து, “மனிதனை மனிதனாக மாற்றும் ஒரு பகுத்தறிவுக் கருவியே கல்வி” என்பதை மனதில் கூர்ந்து பகுத்தறிவுத் திட்டங்களை செயல்முறைப் பாடாமாக வைக்க வேண்டும்.
சாதி-மதப் பெருபான்மையான கல்வியாளர்களின் அதிகாரத்தின் கீழ் இத்தகைய அடிப்படை வாதக் காட்டுமிராண்டித்தனத்தை நிலைநிறுத்தும் பாடதிட்டங்களை எதிர்த்து பேராசிரியர்களும், கல்வியாளர்களும் கல்வித் தளத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும். ஒரு பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலையில் அவர்களின் மெளனமானது, அவர்கள் ஆசிரியர் தொழிலுக்குத் தகுதியற்றவர்கள் என்பதை நிருபணமாக்குகிறது.
சாதி, தீண்டாமையைத் தன் பண்பாடாகக் கொண்டிருக்கும் ஒரு அதிகார மையமாகச் செயல்படும் பார்ப்பன இந்துமதம் தான் இந்த சாதி ஆணவத்தின் மூலவேர். அதில் “மதம் என்பது ஒரு அதிகாரத்திற்கான ஆதாரமாகவும்”, சாதி என்பது ஆணவத்தின் அடையாளமாக இன்றளவும் மிக மோசமான வன்முறைகளின் மூலமும் படுகொலைகளின் மூலமும் நிலை நிறுத்தப்படுகின்றது. “சாதியென்பது ஒரு மனநிலை” என்னும் அம்பேத்கரின் கூற்றிற்கிணங்க அந்த மனநிலையைப் பயிற்று விக்கும் இந்தச் சமூக நிறுவனங்களைத் தகர்ப்பதன் மூலம் மட்டுமே சாதியக் கொலைகளைத் தடுத்து சாதி மறுப்புத் திருமணங்களைத் தொடர்ந்து நடத்த முடியும்.
- பேராசிரியர் கிரண் குமார்