நம்மோடு இருந்த ஆளுமைக்கு நம்மோடு இருந்த தேவதைக்கு "தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை"- 07.05.2022 அன்று புகழஞ்சலி செய்து தன் மரியாதையை சமர்ப்பித்தது.

இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்க கூடாது என்பது தான் நம் விருப்பம். காலத்தின் கையில் இருக்கும் சக்கரம் எப்போது சுழலும் எப்போது அமிழும் என்று யார் அறிவார்.

அக்கா மரித்து போய் ஒரு மாதம் தாண்டி விட்டது. ஆனாலும்... அக்காவின் நினைப்பு தினம் தினம் கூடிக் கொண்டே போகிறதே தவிர குறையவில்லை. சிரித்த முகத்தில்... டீயா காபியா என்று கேட்கும் அந்த முகத்தை மறப்பது கடினமாக இருக்கிறது.

"கொஞ்சம் தரைக்கு வாப்பா... பறந்துகிட்டே இருக்காத.." என்று பெருமை பொங்க என்னை விமர்சிக்கும் அக்காவை இந்த காலம் இத்தனை சீக்கிரம் அழைத்திருக்க கூடாது. எதையும் தாங்கும் அக்காவின் இதயம் மரணத்தை மட்டும் தாங்கவில்லை.

அக்காவுக்கு எழுத தெரியும் என்பதே அவரின் வீட்டுக்கு சமீபத்தில் தான் தெரியும். குறுகிய காலகட்டத்தில் மிக பெரிய வீச்சு அவரின் மொழி. பெயரிலேயே மொழி கொண்டிருக்கும் அவருக்கு தமிழின் வளம் கூடியது சிறப்பல்ல. தமிழுக்கு அவரை சூடியது தான் தனிச்சிறப்பு. எத்தனை கவிதைகள்... அத்தனையும் விதைகள். அதுவும் புதுக்கவிதையில் இருந்து மரபுக்கு சென்று அதிலும் தன் எழுதுகோலை நாட்டிய கவிதைக்காரிக்கு இன்னும் எழுத ஏராளம் இருந்திருக்கும். இனி அவை எல்லாம் என்ன செய்யும். புதுக்கவிதை எந்தளவு முக்கியமோ அந்தளவு மரபும் முக்கியம்.... எல்லாருமே மரபை கற்றுக் கொள்ளுதல் அவசியம்... தமிழின் சுவையை ஆழமாக உணர மரபே கற்றுத்தரும் என்ற அக்காவுக்கு நம் புலம்பல்கள் எப்படியாவது கேட்டுவிட வேண்டும். சாவு மீது எனக்கிருக்கும் பயத்தை எப்போதும் போக்கும் அக்காவுக்கு வாழ்வு மீது பயம் இருந்ததில்லை.

அடுத்த நூலுக்கான வேலைகளை செய்து கொண்டிருந்த நேரம்.. இது. "சுட்டுவிரல் சொர்க்கம்" முதல் நூலில் இருந்து மிக பெரும் பாய்ச்சலை செய்யவிருந்த நேரம் இது. எல்லாவற்றையும் கவிழ்த்து விட்டு பூனை போல பார்க்கும் காலத்தை எட்டி உதைக்கிறேன். பாரதி சொன்னது தான். காலா என் காலருகே வாடா.. மொத்தமாய் உதைத்து உன்னை ஒன்றுமில்லாமல் ஆக்க வேண்டும்.

அக்காவின் கவிதைகளை நான் எப்போதும் கீழிருந்து தான் படிப்பேன். அதை அக்காவிடம் நிறைய முறை சொல்லி இருக்கிறேன். சிரித்துக் கொள்ளும். கீழிருந்து படிக்கையில் எனக்கு வேறொன்று கிடைக்கும். அது தனி வெளி.

அன்பின் வடிவம்... ஆளுமை உடமை... ஒரு பக்கம் இல்லத்தரசி.... இன்னொரு பக்கம் இலக்கியத்தில் அரசி.... அணையா சுடர்- அக்கா - கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி அவர்களுக்கு கூட்டத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய அனைத்து தோழர்களுக்கும் நன்றிகள். ஒவ்வொருவரும் அக்காவோடு கொண்ட வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். கவிதையின் வாயிலாக காலத்தின் படிக்கட்டுகளில் சக மனங்களையும் பற்றிக் கொண்ட நடந்த அக்காவின் சிந்தனை வடிவம் அலாதியானது. அளப்பரியது. அன்பெனும் நிலையே இங்கு எந்த திசைக்கும் சிறகு பூட்டும் என்பது ஒவ்வொருவரும் அவரைப் பற்றி பேசுகையில்... புரிந்தது. அப்படித்தான் தன்னை நிலை நிறுத்தி இருந்தார் என்றும்...அதே நேரம் சிறகு முழுமையாக முளைத்ததும்... பறந்தும் விட்டார் என்றும் உணர்ந்தோம்.

அன்பைத்தான்...அறிவாக... யோசனையாக... பேச்சாக... எழுத்தாக... கவிதையாக... உறவாக... கொண்டிருந்திருக்கிறார் என்ற தெளிவு இப்போது நமக்கு கிடைக்கிறது. ஓர் உயிரின் உன்னதம் அது இல்லாமல் ஆகையால் தான் முழுக்க உணர்ந்து கொள்ள முடிகிறது. அதைத்தான் பேசிய ஒவ்வொருவரும் ஊர்ஜிதம் செய்தார்கள். ஒவ்வொருவர் பார்வையிலும் ஒருவர் அவராகவே இருப்பது கடினம். அது அக்காவுக்கு வாய்த்திருக்கிறது. சிரித்த முகத்தோடு... சக மனிதர்களோடு எடுத்துக் கொள்ளும் கவனம் மென்மையானது. அந்த மென்மை அவரிடம் மேன்மையாக இருந்தது. தோழர்கள் பேச பேச... வந்த கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டேன். நண்பர் அமருக்கும்... தோழர் மகாவுக்கும் அது கன்னம் தாண்டி இயத்தையும் நிறைத்து விட்டது.

நேரடியாக அக்காவோடு பழகாத... வின்சென்ட் சார் கூட வந்திருந்து துக்கம் பகிர்ந்து கொண்டார். பேசுகையில்.. அவரோடு பழக்கம் இல்லையே தவிர அவர் கவிதைகளோடு பழக்கம் உண்டு என்று பிரார்த்தித்துக் கொண்டார். தோழர் கோமளாவின் எதார்த்தமான பேச்சு.. அவர் அக்கா மீது கொண்ட பிரமிப்பை வெளிப்படுத்தியது. பெங்களூரில் மழைக்குள் சிக்கிக் கொண்டு ரோட்டில் நிற்கையில் கூட... இணைப்பில் வந்து தன் துக்கத்தை பகிர்ந்து கொண்ட சரணுக்கு அதை செய்ய தூண்டியது எது. இன்னொரு உயிர் மீது கொண்ட மரியாதை. இப்படி ஒவ்வொருவருமே இதயத்தில் இருந்து தங்களை இம்சித்துக் கொண்டார்கள். அது தான் தேவையாகவும் இருந்தது. நம்மோடு இருந்த ஜீவனுக்கு நாம் செய்த மரியாதை தான் நாம் கூடி நம்மையே அவருக்கு சூடி பார்த்தது. அந்த முகத்தை நினைவில் கொண்டோரெல்லாம்...அந்த அன்பின் சுவடுகளை அனுபவித்தோரெல்லாம் ஓடோடி வந்து.... ஆழமாய் மௌனித்தார்கள்.

அவரவர் மரணம் அவரவர் தலையில் அமர்ந்திருக்கிறது. ஆனால் நமக்கு பிடித்தவர்களின் மரணம் நம் இதயத்தில் இருக்கிறது. மரணம் பற்றிய பேச்சே ஒரு மாதிரி கிளிசே மாதிரி தான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டாலும்... 20 வருடங்கள் ஆனாலும் என் பாட்டியின் மரணம் தினம் தினம் என்னுள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதையும் நான் நம்பித்தானே ஆக வேண்டும். அப்படிதான் அக்காவின் மரணம் தினம் தினம் நம்முள் நிகழ்கிறது. பிறந்த எல்லா உயிர்களும் ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும் என்பது தான் பிரபஞ்ச விதி. அதையும் நாம் அறிவோம். ஆனாலும்... வந்து தங்கிய இந்த சின்ன வாழ்வில்.. மனதும் மனதுமாக... அறிவும் அறிவுமாக... கண்ணும் கண்ணுமாக... உயிரும் உயிருமாக சில உறவுகள் நம்மோடு பிணைந்து விடும். அது தான்.. இந்த சின்ன வாழ்வை பெரிதாக வாழ வைக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் சிறகு முளைக்க செய்யும் வாய்ப்பு நமக்கு கவிதை எழுத வருகிறது என்பதில் வாய்த்தது. நம்மோடு நம்மை போலவே கவிதை எழுதும் மனிதர்கள் மீது இன்னும் ஒரு படி மேலே போய் நெருங்கிக் கொள்ளும் நிகழ்தலும் அதுவாகவே அமைந்து கொண்டது. அப்படி நம்மை போல நம் பார்வையில் இருந்து வேறொரு பார்வையில் இந்த வாழ்வை ரசித்த... எதிர்கொண்ட உடன் கடந்த உன்னத ஜீவன் அக்கா கிறிஸ்டி. இது ஒரு மாதிரி புலம்பல் மாதிரி தான் இருக்கும். இருக்கட்டும். முன்பே சொன்னது போல... யாருக்கு தான் சாவு வராது.. வரட்டும்.. ஒரு 80 வயதுக்கு மேல் வந்தால்.. அதில் ஒரு தீர்வு இருக்கிறது. இந்த வயதில் சொல்லாமல் கொள்ளாமல் வந்து வாரி சுருட்டிக் கொண்டு போகையில் தான்... இந்த புலம்பலும்... புத்திசாலித்தனமும் ஒன்றுக்கொன்று குமிடி புடி சண்டை போட்டு மனவெளியில் உருண்டு புரள்கிறது. ஒரே மூச்சு போனால் போச்சு என்பதை ஆழமாய் அறிந்திருந்த போதிலும்.. இன்னொரு மூச்சு அதற்கு திக்கி திணறி தவிப்பது மானுடம் கற்றுத்தந்த பேரன்பின் கிடக்கை. நெஞ்சு நெஞ்சாய் அடித்துக் கொண்டு அழுவதைத் தாண்டி மரித்தோருக்கு என்ன செய்து விட முடியும்.

மெல்லிய நீரோடையில்... தன் இதயம் நீந்துகிறது இலை. அது தான் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேயான பயணம். நெருங்கிய மரணங்கள் நமக்கு ஜென் நிலையைக் கற்றுத் தருகிறது. நெருங்கிய மரணங்கள் நமக்கு நிதானத்தை சொல்லி போகிறது. நாம் நம்பிக் கொண்டிருக்கும் நிறைய விஷயங்களை மறுபரிசீலனை செய்யும் இம்மாதிரி சம்பவங்கள் வழியே வாழ்வின் இன்னொரு பரிணாமம் நம்மை வந்தடைகிறது. இந்த வாழ்வை எதிர்கொள்ளும் மனதின் இண்டு இடுக்குகளுக்கு எல்லாம் மரணமே ஒளி பாய்ச்சுகிறது.

இல்லாமல் இரு. நான் என்பதை விட்டு நாம் என்பதை உணர். அதைத்தான் அக்காவின் மரண செய்தியாகவும் நான் உணர்கிறேன். இதோ இன்று வரை நாம் புலம்பிக் கொண்டே இருக்க காரணம் அக்காவின் அன்பு தான்.

ஒளி பொருந்திய உன்னத ஆன்மாக்களுக்கு மரணம் உடலுக்கு தானே தவிர உள்ளம் நம்மிடையே தொடர்ந்து உரையாடிக் கொண்டே தான் இருக்கும். அக்கா கூட நம்மிடையே தான் இருக்கிறார். நமது உள்ளார்ந்த துயரங்களும்... ஊடாடிய உணர்வுகளும் அவரை கண்டிப்பாக போய் சேரும். எப்போதல்லாம் அக்காவுடன் பேச வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அவரின் கவிதைகளையே படித்துக் கொள்கிறேன். அது என் கண்ணீரை துடைப்பதற்காக அல்ல. அவரின் இருத்தலை இன்னும் இன்னும் உறுதிப்படுத்த.

ஒளியாகி விட்ட அக்கா மொழியாகவும் ஆகி விட்டார். அவரைப் படிப்போம். அது தான் அவருக்கான உண்மையான புகழஞ்சலி. 

- கவிஜி

Pin It