திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் இயற்பெயர் பூண்டி ஜெயராஜ். இவர் தேவகோட்டையிலுள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணி செய்து வருகிறார். இவரது கொஞ்சோண்டு ஹைக்கூ கவிதைத் தொகுப்பு (2005), நாச்சிமுத்து குறுநாவல் (2008) ஒழுகிய வானத்தை நேற்றுதான் மாற்றினோம் (2014) ஒரு கொடந்தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம் (2016), உச்சி சூரியனில் முளைக்கும் பனை (2019) எனும் கவிதைத் தொகுப்பு நூல்களைப் படைத்துள்ளார்.
படைப்பாக்கப் பின்புலம் :
கவிஞர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் பத்தாண்டுக்கு முன்பு கொஞ்சோண்டு எனும் தலைப்பில் ஹைக்கூ கவிதைத்தொகுப்பினை வெளியிட்டார். இது பலராலும் பாராட்டப்பட்ட தொகுப்பு. ஒவ்வொரு கவிதையும் எடுத்துரைப்பில் சிறந்ததாக முன்மொழியப்பட்டது. கவிதையின் பாடுபொருள் வெளிப்படைத் தன்மையாகவும், ஆயுதம் போலத் தாக்குவதாகவும் பேராசிரியர் வின்சென்ட், யசோதை மைந்தன் மற்றும் பலர் கூறியிருக்கிறார்கள். இதில் எந்த மாற்றுக்கருத்தும் நான் உட்பட எவராலும் முன்வைக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். இச்சூழலில்தான் உத்வேகமான பல கவிதைகளைத் தமிழ்ப்பித்தன் எழுதி வந்தார். இதை ஒருசில பத்திரிகைகள் நிராகரிக்கவும் செய்தன. இதில் புதிய கோடங்கி, ஏர், தலித் முரசு, உயிர் எழுத்து முதலிய பத்திரிகைகள் கவிதைகளைப் பிரசுரம் செய்தன. ஒரு படைப்பை வெளியிடுதல் என்பது படைப்பாளி சார்ந்ததா? அல்லது படைப்பு சார்ந்ததா? எனும் கேள்விகள் எழுகின்றன. ஒடுக்கப்பட்ட சமூகச் சூழலிலிருந்து ஒரு படைப்பாளி வெளிவரும்போது படைப்பின் மய்யத்திலிருந்தே படைப்பை அவதானிக்கும் போக்கினைப் பார்க்க முடிகிறது. பொதுவெளி சார்ந்த மய்யப்பொருளில் படைப்பாக்கம் நிகழும்போது படைப்பினையும் படைப்பாளியினையும் அங்கீகரிக்க வேண்டுமென்றால், படைப்பாளி தான் சார்ந்த சமூகம், படைப்பாளி பெற்ற அனுபவம், படைப்பாளி எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல் என்பன படைப்பினுள் இழையோடுவது படைப்பின் இயல்பு. இதனைத் தமிழ்ப்பித்தன் கவிதைகளில் காண முடிகின்றது.
இன்றைய கவிதைகள் நவீனக்குணநிலையாக பூடகத்தன்மை கொண்ட கவிதைப் புனைவை நோக்கி நகர்ந்தாலும் இவரின் படைப்புகள் வெளிப்படையாக நேர்த்தியாக அமைந்துள்ளன. தமிழ்ப்பித்தன் ஓவியர் என்பதால் கவின்கலைத் தன்மை படைப்புகளில் வெளிப்பட்டுள்ளன. கவிதை, வாசிப்பு எனும் உணர்வுநிலை ஓவியப்புனைவுக்குள் கொண்டு செல்வதோடு பருப்பொருள்களின் பொருண்மைகளைக் காட்சி வழியாகப் பேசுகின்றது. குழந்தை உலகத்திற்குள் ஊடுருவி குழந்தையாக மாறும் பல கவிதைகள், குழந்தைவெளியில் பயணப்படுவது என்பது தமிழ்ப்பித்தனிடத்தில் கவிதைகளாக உருவாகியுள்ளன. தன் குழந்தைகளைப் புரியாத மனநிலை படைத்தவர்களுக்கு மத்தில் பிறரது குழந்தைகளின் மனதை எவ்வாறு புரிய முடியுமெனக் குழந்தைகளின் மேல் அக்கறையைக் காட்டுகின்றன கவிதைகள்.
குழந்தைகள் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளுதல் என்பது இயல்பாக, தன்னெழுச்சி சார்ந்ததாக ஏற்படுகின்றதாகச் சொல்லும் தமிழ்ப்பித்தன். பார்ப்பனியமய - மேல்நிலையாக்கப் பாடபேதத்தால் தொலைக்காட்சி ஊடகப் போட்டியில் வெளியேற்றப்படும் குழந்தையின் கண்ணீரைப் பற்றிப் பேசுகிறார். “குயிலிடம் கூவல் / மயிலிடம் அகவல் / காக்கையிடம் கரைதல் /கற்ற குழந்தைகள் / கண்ணீரோடு /போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர் / சுருதி சேரல / இன்னும் நன்னா கத்துண்டு வா” பிராமணர்களுக்கு மட்டுமே சங்கீத ஞானம் உண்டு என நினைக்கும் தொலைக்காட்சி நிகழ்வுகளின் வழியாக வெளியேற்றப்படும் கிராமிய மனம் படைத்த சங்கீத ஞானம் கொண்ட குழந்தைகளின் பக்கம் நின்று இக்கவிதை பேசுகிறது.
ஒடுக்கப்பட்ட வாழ்வியலும் இனவரைவும் :
தமிழ்ப்பித்தனின் கவிதைகள் ஒடுக்கப்பட்ட வாழ்வியலைப் பதிவு செய்துள்ளன. புனிதம் எனும் நிறுவனப்படுத்தப்பட்ட கருத்தியலுக்கு எதிராக எதிர்க்கருத்தியலை முன்மொழிகின்றன. கவிதைகள் அறிவார்ந்த தளத்தில் செயல்படுவதோடு அறிவுச்சமர் செய்தல் என்பது பல கவிதைகளில் காண முடிகின்றன. இது கலகக்குரலாக வெளிப்படுகிறது. பெரும்பான்மைக் கவிதைகள் நுண்மையாகவும் அதிகாரத்திற்கு எதிராகவும் செயல்படுகின்றன. பொதுப்புத்தி புறந்தள்ளும் தீட்டு - அசுத்தம் - அழுக்கு எங்களின் வாழ்வில் பினைந்துள்ளதை தமிழ்ப்பித்தன் கவிதைகள்வழி அடையாளப்படுத்துகிறார். பெண்ணுடல் சார்ந்த புரிதலைக் கவிதை பதிவு செய்துள்ளது. ஆண்பார்வையை கழுகுப் பார்வையோடு ஒப்பிடப்பட்டுள்ள விதம் ஆணாதிக்கச் சமூகத்தில் ஆணின் முகத்தைப் பிரதிபலிக்கின்றது. ஒழுகிய வானத்தை நேற்றுதான் மாற்றினோம் தொகுப்பில் உள்ள இரவு பகல் கவிதைஇ பெருவெளியாக விந்திருக்கும் வானமாக தென்னங்கிடுகால் வேயப்பட்ட வீடு இவ்வீட்டில் பீக் கூடையும் பெருச்சாலிகளும் இரவிலும் பகலிலும் உள்ள சூழலில் வாழ்வு கடந்துசெல்கிறது என்பதைக் காட்டுகிறது.
புதுப்பாடுபொருள், தலித் வாழ்வியல், புதுத்தொன்மம் என்கிற தன்மைகளில் ஒடுக்கப்பட்ட மனவெளியில் பிரவாகம் எடுக்கின்றன பல கவிதைகள். ஒடுக்கப்பட்ட வாழ்வில் தன் வீடு, தனக்கான பொது வெளி அசுத்தமானதாகவும், அசுத்தங்களால் நிரம்பி வழியும் பொதுவெளியைப் புனிதப்படுத்தவும் தன்னிலையோடு இனவரைவை திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் கவிதைகள் முன்வைக்கின்றன. பாமா, பூமணி, சோ.தர்மன், பெருமாள் முருகன், இமையம், அழகிய பெரியவன், ராஜ் கௌதமன் புனைகதைகளின் வழியாக ஒடுக்கப்பட்ட மக்களின வரைவை முன்வைப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றன. கவிதைவழியாக தலித் இனவரைவு எழுத்தாக்கத்திற்கு தமிழ்ப்பித்தன் கவிதைகள் முன்னுதாரணமாக விளங்குகின்றது. கவிதைவழி இனவரைவை அடையாளப்படுத்த முடியும் என்பதை தமிழ்ப்பித்தன் கவிதைகள் முக்கியத்துவம் பெறுவதோடு தலித் இனவாழ்வும் இனவரைவு எழுத்தாக்கங்களில் ஆதவன் தீட்சன்யா, சுகிர்தராணி இவர்களோடு தமிழ்ப்பித்தனும் அணியமாகிறார். இவர்களின் கவிதைப் படைப்பாக்கங்கள் தலித் இனவாழ்வியலுக்கான இனவரைவுக்கான கருத்தியலை முன்வைக்கின்றன. இப்படைப்பாக்கங்களில் இருந்து தமிழ்ப்பித்தன், தலித் இனவரைவை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறார்.
உறக்கம் பிடிக்கவில்லை
கனவிலும்
கையில் பீ வாடை (மேலது ,ப.14)
மனிதர்கள் செய்யும் தொழில்களில் மலமள்ளும் தொழில் பட்டியலின மக்கள்மேல் சுமத்தும் மிகவும் கொடுமையான செயலாகும். இவர்களின் வாழ்வில் அப்பிக் கொள்ளும் வாடை இடஒதுக்கீட்டாலும் கழுவிக் கொள்ள முடியாது என்றே சொல்ல வேண்டும். நனவிலும் கனவிலும் தம்மை பீ வாடை தொடர்வதால் ஒடுக்கப்பட்ட வாழ்வில் உறக்கத்தையும் இழந்து தவிக்கும் நிலையுள்ளதை இக்கவிதை காட்டுகிறது.
இடஒதுக்கீடு எனக்கு வேண்டாம்
வா..வந்து, நீயே
பீ அள்ளு. (கொஞ்சோண்டு,ப.18)
புதிய சட்ட மசோதாவில் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது பார்ப்பனிய மேலாதிக்க மனநிலையைக் காட்டுகிறது. ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டையும் உள் ஒதுக்கீட்டையும் கேள்விக்கு உட்படுத்தும் பொதுப்புத்தி மேல் சவுக்கடி கொடுக்கின்றது இக்கவிதை.
முகஞ்சுழிப்பு
மூக்கடைப்பு
முனுமுனுப்பு
குமட்டல்
உமிழ்தல்
பீ என்ற ஒற்றைச்சொல் கேட்டவுடனே
தினம் பேலுகிறவர்களுக்கெல்லாம்
மழையில் கொதகொதத்து
புழு முண்டி
தான் பேண்டதை பார்க்கவே
மனம் கூசுகிறது.
நாய்கள் திரும்பிப் பார்ப்பதில்லை
தான் பேண்டதை..
மனிதனென்றால்
ஒருமுறையாவது திரும்பிப்பார்
நெடி நுகர்,
புழுக்கள் எண்ணு
உன் குழந்தைக்காவது கழுவிவிடு
இல்லை
நீ பேண்டதை அள்ளாத
உன் கைகளை வெட்டி எறி (ஒழுகிய வானத்தை நெற்றுதான் மாற்றினோம்,பக்.22-23)
மலம் அள்ளுவதைத் தொழிலாகச் செய்யும் பட்டியலின மக்களின் வாழ்வின் அவலத்தைக் கவிதையாக்கியுள்ள விதம் எழுதப்படாதவற்றையும், முகம் சுழிக்கும் அருவருப்பாக நினைப்பதையும் எழுதத் துணிவது கழிவிரக்கத்திற்காக அல்ல விளிம்புநிலைக் கதையாடலின் வழியான கலகக்குரல் என்பதைக் காட்டுகிறது. பீ எனும் வார்த்தையை உபயோகப்படுத்தவே இடக்கரடக்கல் எனச் சொல்லத்தகாத சொல்லாக வரையறை செய்யும் இலக்கணம் உருவாக்கியுள்ளதைப் பார்க்க முடிகிறது. வெகுசனத்திற்கு மத்தியில் மலம் அள்ளுவதும் காலை முதல் மாலை வரை துப்புரவு பணிசெய்வதுமே வாழ்வாகிப் போனவர்களின் துயர வாழ்வை, இனவரைவை முன்வைப்பது தமிழ்ப்பித்தனின் கவிதையாக்கம். இவரின் கவிதைகள் தலித் கவிதைப் படைப்பாக்கத்தின் இனவரைவின் மறு ஆக்கத்திற்கான ஆதிப்புள்ளி என்றே சொல்ல வேண்டும்.
மாட்டுக்கறி விற்கிறாள்
சேரிக்கிழவி…
வீசிய அக்ரஹார எச்சில் இலையில்
குதிரைக் கறி வாடை. (மேலது,ப.13)
ஒடுக்கப்பட்ட மக்களின் உணவுப் பண்பாட்டினை நோக்கி நகர்வதோடு இக்கவிதை, பிராமணர்களும் இறைச்சி சாப்பிடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
நகரிலிருந்து கட்டியிழுத்து வந்தேன்
சேரிக்குள்
நிலா. (மேலது)
கற்புக்கரசி ?
காரித்துப்பு
மனுவின் முகத்தில்.(மேலது,ப.44)
கழுத்துப் பட்டையில் பூட்டிய ஏர்
காதுக்குள் கணக்கும் வசை
காறி முகத்தில் உழிழ்ந்த எச்சில்
வாயில் புகட்டிய சாணிப்பால் (உச்சி சூரியனில் முளைக்கும் பனை,ப.6)
சாதியக் கொடுமைகளெல்லாம் நிலத்தில் விளைந்த உழைக்கும் மக்களின் கொடுமைகள் என்பதான தன்மையில் நிலம் கவிதை அமைந்துள்ளது. நிலமற்ற ஏழைகளின் வாழ்வியலை இவரது கவிதைகள் பதிவு செய்துள்ளது. நிலம் அதிகாரத்தின் மையப் புள்ளியிலிருந்து நிலத்தின் வழியான உழைப்புச் சுரண்டலையும் நிலம் வழியான கொத்தடிமைகளையும் சாதியாதிக்கங்களையும் நிலம் கவிதை பதிவு செய்துள்ளது. ‘நிலம் என்றாலே ஒருபடி நெல்.’ என்று கூறுவது ஒருபடி நெல்லுக்காக உழைக்க வேண்டிய நிலைமை விவசாயக் கூலிகளிடத்தில் இருக்கின்றதை நிலம் எனும் கவிதை பதிவு செய்துள்ளது.
கடவுளர்களின் புனிதத்தைக் கேள்வி கேட்பதோடு தாம் செய்யும் தொழிலைக் கடவுளாக நினைத்து மோட்சம் பெறுகிறவர்கள், கழிவறை மலம் தேங்கும் குழியுள் கடவுள் தவம் செய்கிறார் என்று கூறுவதும், தன்னுடலிருந்து வெளிவரும் கழிவின் வாடையைத் தானே சகிக்க முடியாத நிலையில் எவர் எவரோ கழிவுகளைச் சுத்தம் செய்வதும், அத்தொழிலை அடுத்த தலைமுறைக்குப் பரிவர்த்தனை செய்வதுமான வாழ்வின் அவலத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும் அதிகார வர்க்க, ஆதிக்க மையத்தை வெட்டவெளிக்கு இழுத்துத் தள்ளுகிறது இவரது கவிதைகள். இவ்வுலகம் கழிவறை போல் நாறிக் கிடக்கிறது; சுத்தம் செய்ய தன்னைத் தானே முன்வருதலும் கடவுளுக்கும் மோட்ச வாழ்வு இங்கு தான் என்பதை அறிந்து கடவுளைக் கழிவறைச் சுத்தம் செய்ய அனுப்புவதாக ‘மனிதன் பிறந்த கதை’ கவிதை காட்டுகிறது.
துருவேறிய சன்னல் வழி
எட்டிப்பார்க்கும்
வேப்பங்கொழுந்தே நீ கேள்.
பித்ருக்கள் நா வரள கரைந்தும்
எழுந்து ஓடாத
அனாதைப் பிணமே நீ கேள்.
தென்னமார் கொண்டு
அரக்கித் தேய்த்துக் கழுவியும்
அகலவே அகலாத
உறைந்த உதிரநெடியே நீ கேள்.
கழிவோடை விட்டுச் சுவரேறும்
மூத்திரப் புழுவே நீ கேள்.
என் கதை
ஒரு சேரியில்…
இரவென்பது உச்சியில் பழுத்த சூரியன்
பகலென்பது அழுகையில் பழுத்த நிலா.(மேலது,ப.7)
எனும் கவிதை மறுவரைவை (Writing Others) நோக்கி நகர்வதோடு, இக்கவிதை தலித் வாழ்வின் நடப்பியலை தலித் சமூகத்தின் இடம் - காலம் - சூழலைப் பதிவு செய்துள்ளது. துருவேறிய சன்னல், அனாதைப் பிணம், துப்புரவு பணி, கழிவோடை, மூத்திரப் புழுக்கள் நிறைந்த இருப்பிடத்தில் ஈக்கள், கொசுக்கள் நிறைந்த இடத்தில் வாழ்வதான தலித் மக்கள் வாழ்க்கையைக் கவிதையாக்கம் செய்துள்ளார் தமிழ்ப்பித்தன்.
இவரது பல கவிதைகள் சூழலியல் சார்ந்து அமைவதோடு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வசிப்பிடம் சார்ந்த சூழலியலை மையப்படுத்தியுள்ளன. முதலாளித்துவச் சூழலால் எல்லோரது வாழ்வும் சூன்யமாகிக் கொண்டிருப்பதைக் கவிதை காட்டுகிறது. சிறுநீரைக் கூட குடிநீராக்கும் திட்டம் வந்துவிடும் அளவிற்கு நவீன முதலாளித்துவச் செயல்பாடுகளைக் கவிதை காட்டுகிறது. ‘புதிதாக்கு உலகை’ எனும் கவிதை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சூழலியல் சீர்கேட்டையும், புவி வெப்பமயமாதலையும், பேரினவாதச் சூழ்ச்சியால் அழிக்கப்பட்ட இனத்தின் அடையாளத்தையும் விடுதலையும் பேசுகின்றது.
நைந்து சேலையாய் நெளியும் மேகமே
உனக்கு ஒரு துளி.
பார்த்தீனியச் செடிகள் மண்டிய நிலமே
உனக்கு ஒரு துளி.
மலஜல வாடையைத் தூக்கி திரியும் காற்றே
உனக்கு ஒரு துளி.
வெறுமை வயிறாய்க் கூடு திரும்பும் பறவையே
உனக்கு ஒரு துளி.
பதுங்கி பார்க்கும் கரட்டாண்டியே
உனக்கு ஒரு துளி. (மேலது,ப.8)
எச்சில் சாராயம் எனும் இக்கவிதை, காலையில் சென்று இரவில் வீடு திரும்பும் ஒடுக்கப்பட்ட தொழிலாளியின் அருந்தும் சாராயத் துளிகளைப் படையலிட்டுத் தொடங்கும் குடியும், குடித்தனத்தையும் பதிவு செய்துள்ளது. இக்கவிதையில், கூடு திரும்பும் பறவை என்பதும் பதுங்கிப் பார்க்கும் கரட்டாண்டி என்பதுமான சொல்லாடல் இருமை எதிர்வில் அமைந்துள்ளது. பசியோடு வீடு திரும்புதல் ஒடுக்கப்பட்ட வாழ்க்கைக்குப் பொருந்திப் போகிறது; கரட்டாண்டி என்பது அதிகார வர்க்கத்தின் பஞ்சோந்தித்தனத்தைக் காட்டுகிறது.
பட்டை, கடுக்கா, நவச்சாரம்
பிசைஞ்ச விரல்கள் உருட்டுத்தடியாட்டம்
உரம்பாஞ்சி நின்னு என்ன பிரயோஜனம்
கைநாட்டுக்கும் உதவாத
கைவிரல் ரேகைகளை சுண்ணாம்புக் குழிகள் தின்ன
லெதர் ஷுக்கள்தோறும் தெரிகிறது
அழுகிய அப்பனின் குறி (உச்சி சூரியனில் முளைக்கும் பனை,ப.9)
தோல் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒவ்வொரு தந்தையின் அடையாள தேடலை நோக்கிப் பயணிக்கிறது இக்கவிதை.
கல்சுண்ணாம்பு பட்டு
பொத்துப்போன விரல்களுக்கு
வேம்பும் மஞ்சளும் சேர்த்தரைக்கும்.
உழைத்துத் துவண்டுகிடக்கும் உடலை
நாளை வேலைக்கு முகத்தில் சாராயம் அடித்து எழுப்ப வேண்டும்.(மேலது,ப.13)
ஒடுக்கப்பட்ட வாழ்க்கைக்கும் மக்களின் வாழ்வில் அடிபட்டதற்கு மருந்தாக வேம்பும், மஞ்சளும் மருந்துப் பொருளாக இருப்பதையும் கூடுதலாக வலியறியாமல் இருக்கச் சாராயம் உதவுவதாகவும் சாராயம் அருந்துதலின் மூலமாகவே அடுத்த நாளுக்கான வேலை நகர்வதாக இருக்கின்றதைப் பார்க்க முடிகிறது.
ஓவியமாகும் கவிதையாக்கம் :
இயற்கையைக் காட்சி வழியாகப் பார்ப்பதற்குக் கவிதை அடிப்படையாக இருக்கின்றது. கவிதைகள் படிமத் தன்மையைப் பெறுதல் என்பது கவிதையின் குணநிலையாகும். இயற்கையைக் கவிதைப் படைப்பாக்கம் செய்வது என்பது இயற்கையைப் பிரதி எடுப்பதாகவும் இயற்கையினை ஒளிநிழல்களின் வழியாக, தமிழ்ப்பித்தன் கவிதைகள் வார்த்தைகளால் சித்திரங்களாகுகின்றன.
இயற்கையை மேல்கீழ் அசைத்து
சிறு நொடி
வானத்தை நெளிக்கும் பறவை
உடன் கண்களையும்
கவிதையையும் நெளிக்கிறது.(மேலது,ப.58)
இயற்கையைக் கண்களின் வழியாகப் பார்த்த விதத்தினைக் கவிதையாக வடித்திருக்கிறார் தமிழ்ப்பித்தன். விண்ணுக்கும் மண்ணுக்குமான இடைவெளி என்பது பறவைகளில் வலசைக் கோடுகளாகவும், மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும், இடமிருந்து வலம் வலமிருந்து இடமும், குறுக்கும் மறுக்கும் அலைவுறும் பறவைகளின் இயங்குதலை நினைத்தால் மூச்சு வாங்கக்கூடும். விமானம் வரைந்த கோட்டினை நாம் வியப்பாக வேடிக்கை பார்க்கிறோம். இயற்கைவெளியில் பறவை பறத்தலை ரசிப்பதில்லை என்று கவிமனம் கலங்குகின்றது. முதலாளித்துவக் கோடுகள் நம்மை இணைக்கின்றன; ஓர் ஆய்தப் பறவையின் வல்லாதிக்கக் கோடுகள் நம்மை நடுங்கச் செய்கின்றன; சுரங்கக் கோடுகளுக்கும் சுங்கக் கோடுகளுக்கும் ஒருவனின் நிலம் பறிக்கப்படுகின்றன; காதலிக்காக தன் காதினை அறுத்த வான்கோ வரைந்த தூரிகைக் கோடுகள் எனக் கோடுகள் நம்மை இணைக்கின்றன என உலகமய, முதலாளித்துவக் கோட்டால் நம்மை இணைக்கப் பார்க்கிறது என்பதைக் கவிதை காட்டுகிறது.
நெறஞ்ச வெயிலை வகுடெடுத்துக் கிடக்கும் / பனையின் நிழலில் இளைப்பாறுகின்றன /வெடிப்புற்ற பாதங்கள் / ‘உச்சிச் சூரியனில் முளைக்கும் பனை’ எனும் கவிதை, பாலை நிலத்தின் வலியைப் பதிவு செய்துள்ளது. சங்க காலத்து விறலின் புனைவைக் கவிதையாக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிக்கச் சென்றால் ஆதிக்கப் பசிக்கு இரையாக்கிட நினைக்கும் வன்குடி ஆதிக்க மனோபாவத்தை ‘வலை வீசித்தான் ஆக வேண்டும்’ எனும் கவிதை பதிவு செய்துள்ளது. ஒழுகிய வானத்தை நேற்றுதான் மாற்றினோம் எனும் தொகுப்பிலுள்ள கவிதைகள் நவீன வாழ்வில் உழைக்கும் மக்கள்களின் கதைசொல்லலாக விரிந்துள்ளது. நிர்வாண நிழலில் மிதக்கும் தக்கைகள், கூடடையும் முட்டைகள், உதிர்ந்த வெயிலின் மேல் கூடுகட்டும் நதிகள், வெறிச்சோடியது எம்மை அகற்றிய நிலம், இரவின் உறக்கத்தை ஊடுருவுபவள் எனும் கவிதையாக்கம் புனைவாக்கத்தோடு கவிதைக் கதையாகவும் ஓவியப் படிமமாகவும் அமைந்துள்ளது. தமிழ்ப்பித்தன் கவிதைகள் புதுவெளிக்கான சூழலை முன்மொழிந்தாலும் தலித் சூழலியல் எனும் மாற்று வரைவை முன்வைக்கின்றன. நிலம், மொழி, பண்பாட்டு அடையாளங்களை கவிதைகளில் காணலாம் .
- ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர். 625 514