தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலர் தோழர் மு.மோகன்ராசு படுகொலைக்குப் பின்னால் எதிரிகள் எழுகின்றனர்! எதிர்கொள்ளத் துடிக்கின்றோம்!! தோள் கொடுங்கள் தோழர்களே!!! 

தோழர்களே, தோழமை இயக்கங்களே!

நமது அன்புக்குரிய தோழர் மோகன்ராசு ஈரோட்டில் கடந்த 26.1.2013 அன்று படுகொலை செய்யப்பட்டதை அறிவீர்கள். நண்பர்களுக்கிடையேயான முன்பகையால் கொலை நடந்ததென சித்தரிக்கப்படுகிறது.

இதற்கு முன்னரே ஓசூரில் தோழர் பழனி (பெரியார் திராவிடர் கழகம்) படுகொலை செய்யப்பட்டார். இதற்கும் முன்விரோதமே காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஓராண்டிற்கு முன்பு புதுக்கோட்டை முத்துக்குமார் (நாம் தமிழர் கட்சி) கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இதற்கும் பல்வேறு முன்பகைகளே காரணமாக்கப் படுகிறது. இதைப் போலவே மக்கள் வழக்குரைஞர் சங்கரசுப்புவின் மகன் வழக்குரைஞர் சதீசு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இதற்குக் காரணம் என்னவென்று கூட கூறமுடியவில்லை.

முன்பகைகளும், மனக்கசப்புகளும் கொலைகளில்தான் முடியுமென்றால் உலகில் மனிதர்கள் வாழவே முடியாது. சாதாரணமாக எந்த மக்களும் இப்படி கொலைகளில் ஈடுபடுவதில்லை. ஆனால் தமிழகத்தில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் போராளிகள், புரட்சியாளர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக கொல்லப்படுகிறார்கள்; இது தற்செயலானதல்ல.

முன்பகைகளையும், மனக்கசப்புகளையும் கொலைகளுக்கான காரணங்களாக மாற்றுகின்ற அதிகார சக்திகள் வலுவாகக் களமிறங்கியுள்ளன. இவர்களின் சதியினாலேயே முன்னணி அரசியல் தோழர்கள் கொல்லப்படுகிறார்கள்.

இப்படித்தான் நமது அன்புத்தோழர் மோகன்ராசுவும் கொல்லப்பட்டுள்ளார். தோழரின் நேர்மையான அரசியல் செயல்பாட்டால், போராட்டங்களால் அடங்கிக் கிடந்த மக்கள் எதிரிகள் இப்போது மகிழ்ச்சியோடு உலா வருகின்றனர்.

இந்நேரத்தில்தான் நாம் துடிப்போடு செயல்பட வேண்டியுள்ளது. சாதியச் சிக்கல், மீனவ மக்களின் சிக்கல், நதி நீர்ச் சிக்கல், அந்நிய முதலீடு, விவசாயச் சிக்கல், விலைவாசி உயர்வு, அணுஉலை எதிர்ப்பு, வரும் தேர்தலில் தமிழின விரோதக் காங்கிரசைக் கருவறுப்பது... என எண்ணற்ற பணிகள் நம்முன் உள்ளது. கூடவே ஈழமக்களின் விடுதலைக்குமாக நாம் தொடர்ந்து களம்காண வேண்டியுள்ளது.

ஆகவே, தோழர் மோகன்ராசு உயிரோடு இருக்கும்போதே தீர்மானித்த தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் – தமிழக மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து "தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்" எனும் ஒரே அமைப்பாக உருவெடுப்பதையும், தோழர் மோகன்ராசு நினைவேந்தலையும் 17.2.2013 ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில் ஒரே பொதுநிகழ்வாக முன்னெடுக்கின்றோம்.

சதித்தனமான படுகொலைகள் மக்கள் இயக்கங்களையும், மக்களின் விடுதலையையும் தடுத்துவிட முடியாதென எழுகின்ற எங்களுக்குத் தோள் கொடுங்கள், துணை நில்லுங்கள். நிகழ்ச்சிக்குப் பெருவாரியான அணிகளோடு திரண்டு வந்து ஈரோட்டில் குவிந்து எதிரிகளைத் திணறடியுங்கள். 

தோழமையுடன்

தோழர். மோகன்ராசு நினைவேந்தல் குழு, ஈரோடு, தமிழ்நாடு

தொடர்புக்கு - 9486641586,7373651155

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.