கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் முனைவர் த. செயராமன் எழுதிவரும் “இனவியல் : ஆரியர் - திராவிடர் - தமிழர்” என்ற ஆய்வுக் கட்டுரைத் தொடரும், ம.செந்தமிழன் எழுதிவரும் “திராவிடம்” குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் வாசகர்களின் கவனத்தைக் கூடுதலாக ஈர்த்துள்ளன.

 இவ்விருவரின் கட்டுரைகளைப் பலர் உற்சாகத்தோடு வரவேற்கிறார்கள். அதே வேளை இவற்றால் பெரியாரியல் தோழர்கள் சிலர் வருத்தமும் எரிச்சலும் அடைந்துள்ளனர்.

தமிழர் கண்ணோட்டம் எப்பொழுதுமே மாற்றுக் கருத்துகளுடனும் எதிர்க் கருத்துகளுடனும் திறனாய்வு அடிப்படையில் தர்க்கம் புரிந்து வருகிறது; இவ்வாறான தர்க்கமும் தத்துவப் போராட்டமும் வாசகர்களுக்கு அரசியல், பொருளியல், பண்பியல் துறைகளில் கருத்துத் தெளிவு வழங்கியுள்ளன. எமது கருத்தியல் வளர்ச்சிக்கும் துணை புரிந்துள்ளன.

திராவிடம் குறித்து இவ்விருவரும் எழுதி வரும் கட்டுரைகளில் உள்ள சாரமான கருத்துகள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கு ஏற்புடையவைதாம்.

இத்திறனாய்வுகள் இறுதியில் பெரியாரை மறுப்பதில்தான் போய் முடியும் என்று மேலே குறிப்பிட்ட பெரியாரியல் தோழர்கள் சிலர் கருதுகிறார்கள்.

இத்தருணத்தில், பெரியாரைத் த.தே.பொ.க. எப்படிப் பார்க்கிறது, என்பதைத் தெளிவுபடுத்தி விடுவது மிகவும் தேவையான ஒன்று.

பெரியாரை முற்றிலும் மறுக்கும் நிலைபாட்டை த.தே.பொ.க. ஒருபோதும் எடுக்கவில்லை. அதே வேளை பெரியாரின் கருத்துகள் அனைத்தையும் ஏற்கும் நிலைபாட்டையும் த.தே.பொ.க. எடுக்கவில்லை.

பெரியாரின் பார்ப்பன ஆதிக்க ஒழிப்புக் கருத்துகள் மதிப்பு மிக்கவை. சாதி ஒழிப்பு, பெண்விடுதலை போன்றவற்றில் அவருடைய கருத்துகள் சாரத்தில் முற்போக்கானவை. தமிழ்நாடு விடுதலை குறித்து அவர் அவ்வப்போது வெளிப்படுத்திய கருத்துகள் தமிழ்த் தேச விடுதலைக் கருத்துகளுக்குத் துணை செய்பவை.

அவரது கடவுள் மறுப்புப் பரப்புரைகளும் மூட நம்பக்கை எதிர்ப்புப் போராட்டங்களும் தமிழ்நாட்டில் பரந்துபட்ட மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின. பெருந்திரளான மக்களிடம் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டு சேர்த்தன.

கணிசமான மக்கள் சக்தியைத் திரட்டியிருந்த அவர், அரசுப் பதவிக்கு ஆசைப்படாமல் சமூக-அரசியல் பணியாற்றியது அரிய செயல். அதே வேளை பெரியாரிடமிருந்து நாம் மாறுபடும் நிலைபாடுகள் பல இருக்கின்றன.

பெரியாரின் இனக் கொள்கை

ஆரிய இன ஆதிக்கத்தை எதிர்ப்பதிலிருந்து பெரியாரது இன அரசியல் உருவாகிறது. எதிரியின் இனத்தை அடையாளப் படுத்தி எதிர்த்த அவர் தமக்குரிய இனத்தைச் சரியாக அடையாளம் காணவில்லை.

தமது களப் பணிக்கான இனத்தை, ஒரு சமயம் “திராவிடர்” என்றும் இன்னொரு சமயம் “தமிழர்” என்றும் மாற்றி மாற்றி அடையாளப்படுத்தினார். திராவிடர் என்று ஓர் இனம் வரலாற்றில் இருந்ததே இல்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்து வந்த மண்ணுக்குரிய மக்களை - அயல் மண்ணிலிருந்து வந்த ஆரியர், சொல்லத் தெரியாமல் சொல்லி அழைத்த பெயர் “திராவிட” என்பதாகும். தமிழம் என்பதுதான் திரமிள, திராவிட என்று ஆரியரால் திரித்து ஒலிக்கப்பட்டது என்பார் பாவாணர்.

அவ்வாறு உருவான திராவிடர் என்ற சொல் பின்னர் தமிழரிலிருந்து பிரிந்து சென்ற மற்றவர்களையும், ஒரு கட்டத்துக்குப் பிறகு தென்னாட்டுப் பார்ப்பனர் களையும் குறிக்கப் பயன்பட்ட சொல்லாயிற்று.

கால்டுவெல் தவறாக அடையாளப்படுத்திய திராவிடர் என்ற சொல்லை தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரைக் குறிக்கப் பயன்படுத்தினார் பெரியார்.

திராவிடர் என்றால் அதற்குள் பார்ப்பனர் வர மாட்டார்; தமிழர் என்றால் அதற்குள் பார்ப்பனர் வந்துவிடுவர் என்று அவராகவே ஒரு போடு போட்டார். அதற்கான வரலாற்றுச் சான்று எதையும் அவர் காட்டவில்லை. இப்பொழுது முனைவர் த. செயராமன் திராவிடர் என்ற சொல் ஒரு கட்டத்தில் தென்னாட்டுப் பார்ப்பனர்களை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதைச் சான்றுகளுடன் நிறுவி விட்டார்.

பெரியார் தழுவி நின்ற தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் தங்களை ஒரு போதும் திராவிடர் என்று கூறிக் கொண்டதில்லை. திராவிடர் என்ற கொச்சைச் சொல்லை தமிழர் மீது மட்டுமே பெரியார் திணித்தார்.

இன அரசியல் நடத்திய பெரியார் தமக்கு இனப்பற்றோ மொழிப்பற்றோ கிடையாது என்று கூறிக் கொண்டார். இக்கூற்று தன்முரண்பாடாகும். தமிழரின் இயற்கையான முகத்தில் செயற்கையான திராவிட முகமூடியை மாட்டி விட்டார். இவ்வாறான பெரியாரின் இனக்குழப்பங்கள் தமிழின உணர்ச்சி முழுமையாக வளர்ச்சி பெறுவதில் தடங்கல்களை ஏற்படுத்தின.

தேசியம்

தேசம், தேசியம் ஆகியவற்றைக் கோட்பாட்டு அளவில் கடுமையாக எதிர்த்தார் பெரியார்.

 “நாம் மாத்திரம் அல்லாமல் பல மேல்நாட்டு அறிஞர்களும் தேசியத்தின் தன்மையைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜான்சன் என்ற ஒரு மேதாவி தேசியம் (தேசாபிமானம்) என்பது வடிகட்டின அயோக்கியத்தனம் என்று - அதாவது “பிழைப்புக்கு வழியில்லாதவர்களின், கடைசியான இழி பிழைப்புக்கு மார்க்கமானது’ என்று கூறியிருக்கிறார்”

 - பெரியார் ஈ. வெ.ரா. சிந்தனைகள் - பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து, முதல் பதிப்பு vol-1 பக். 380

“நான் இந்திய சுயராஜ்யம், இந்திய தேசாபிமானம் என்பதைப் பற்றி மாத்திரம் பேசுவதாக நினைத்து விடாதீர்கள். உலகத்திலுள்ள எல்லா தேசங்களின் தேசாபிமானங்களையும் சுய ராஜ்ஜியங்களையும் கண்டும், தெரிந்தும் தான் பேசுகிறேனே யொழிய கிணற்றுத் தவளையாக இருந்தோ, வயிற்றுச் சோற்றுச் சுயநல தேச பக்தனாக இருந்தோ நான் பேசவில்லை.

... ... ... ... ...

“இனியும் யாருக்காவது இவற்றில் சந்தேகங்கள் இருக்கு மானால் இன்றைய அபிசீனியா - இத்தாலி யுத்த மேகங்களையும் இடியையும் மின்னலையும் பார்த்தால் கண்ணாடியில் முகம் தெரிவது போல் விளங்கும்”

 - மேற்படி நூல் பக். 384,385

ஆக்கிரமிப்புப் போர் தொடங்கிய இத்தாலியையும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி விடுதலை முழக்கமெழுப்பிய அபிசீனியா (எத்தியோப்பியா)வையும் சமதட்டில் வைத்துப் பெரியார் சாடுவதில் இருந்தே “தேசியம்” பற்றிய அவரின் புரிதலிலுள்ள வெறுமை புலப்பட்டு விட்டது. தேசப் பற்று என்பதையே பிழைப்புக்கு வழியில்லாதவர்களின் கடைசியான இழிபிழைப்பு என்று கொச்சைப்படுத்தும் அவரது சொற்களில் பணக்கார வர்க்க உளவியல் மட்டுமே பளிச்சிடுகிறது. தேசியம் பற்றிய அவரது இப்பார்வை ஒழுங்கு மறுப்புவாதமாகவும் ஏகாதிபத்தியவாதத்திற்கு அனுகூலமானதாகவும், இன்றைய உலகமயச் சூறையாடலுக்கு ஏற்றதாகவும் உள்ளது.

சில நேரங்களில் அவர், “வர்ணாசிரமம் இல்லாத தனி நாடு கன்னியாகுமரி மாவட்டம் அளவுக்குக் கிடைத்தால் கூட போதும், சென்னை மாவட்ட அளவுக்குக் கிடைத்தால் கூட போதும்” என்றார்.

1938ல் “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று குரல் கொடுத்தவர் அவர். விடுதலை ஏட்டின் முகப்பில் தமிழ் நாடு தமிழர்க்கே” என்ற முழக்கத்தைத் தம் இறுதிக் காலம் வரை பொறித்து வந்தார். ஆனால் கன்னியாகுமரி மாவட்ட அளவிற்கு வர்ணாசிரம தர்மம் இல்லாத தனி நாடு கிடைத்தால் போதும் என்று சொல்லியது தமிழ்த் தேசியம் பற்றிய புரிதலின்மையைக் குறிக்கிறது. தேசம், தேசியம் பற்றிய சமூக அறிவியல் பார்வை அவரிடம் இல்லாததால் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வந்தார்.

மொழிவாரி மாநிலங்கள்

மேற்கண்ட தேசமறுப்புப் பார்வை இருந்ததால், மொழிவாரி மாநிலம் கோரிய போராட்டத்தை முதலில் பெரியார் எதிர்த்தார். “தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பது, தமிழரசு, தமிழராட்சி, தமிழ் மாகாணம் என்று பேசப்படுவன எல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.” - பெரியார், விடுதலை 11.1.1947

“மொழி மாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டியுள்ளோம். மீண்டும் கூறுகிறோம். மொழிவாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர் கலந்து கொள்ள வேண்டாம்” - பெரியார், விடுதலை 21.4.1947

பிறகு 1950களின் தொடக்கத்தில் மொழிவாரி மாநிலத்தை ஆதரித்தார் பெரியார். அது மட்டுமின்றி கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆகியவற்றை இணைத்து தட்சிணப்பிரதேசம் என்ற பெயரில் ஒரு மாநிலம் அமைக்கத் தில்லி அரசு முயன்றபோது அதை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார் பெரியார்.

தேசியம், தேசிய இனம் குறித்த சரியான பார்வை இல்லாததால் மொழிவாரி மாநில அமைப்பில் முன்னுக்குப் பின் முரணான நிலைபாடுகளை எடுத்தார்.

1956 நவம்பர் 1ல் மொழி அடிப்படையில் தமிழக எல்லைகள் இறுதி செய்யப்பட்ட பின் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து மலையாளிகளையும் கன்னடர்களையும் வெளியேற்ற வேண்டும் என்றும் அறிக்கை கொடுத்தார்.

மொழி

மொழி குறித்த பெரியாரின் பார்வை மொழியியல் அறிவியலுக்கு முரணானது. ஆங்கிலத்தைப் பகுத்தறிவு மொழி என்றும் அறிவியல் மொழி என்றும் கருதி அதைப் பயிற்று மொழியாகவும் வீட்டு மொழியாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றார். தமிழ் மொழி தாய்ப்பால் போன்றது. ஆங்கிலம் புட்டிப்பால் போன்றது என்று கூறிய தமிழ் அறிஞர்களைத் “தாய்ப்பால் பைத்தியங்கள்” என்று சாடினார்.

 “தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.

.... தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டமென்ன? வேற்று மொழியை ஏற்றுக் கொள்வதால் உனக்குப் பாதகமென்ன?

... “1. தொல்காப்பியன் ஆரியக் கூலி ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கண மாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி.”

 “2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பகுத்தறிவைப் பற்றிக் கவலைப் படாமல் நீதி கூறும் முறையில் மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

 “3.கம்பன் இன்றைய அரசியல் வாதிகள், தேச பக்தர்கள் போல் அவர் படித்த தமிழறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனர்களுக்கு ஆதரவாய்ப் பயன்படுத்தித் தமிழரை இழிவு படுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகி ஆவான். முழுப் பொய்யன்”

 - தந்தை பெரியார் “தமிழும் தமிழரும்” பக்.1,5,6,7. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, மூன்றாம் பதிப்பு, 1997 (ஆகஸ்ட்)

பெரியாரின் மேற்கண்ட வரையறுப்புகள் அனைத்தும் பிழையானவை. பெரியாரியலில் நன்கு தகுதி பெற்ற முனைவர் க.நெடுஞ்செழியன் போன்ற ஆய்வாளர்களே தொல்காப்பியர் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் பெரியார் கூறியவற்றை மறுப்பர். தொல்காப்பியரும் திருவள்ளுவரும் ஆரியத்திற்கு எதிரான தமிழர் அறம், பண்பு ஆகியவற்றை நிலை நாட்டியவர்கள் ஆவர். தொல்காப்பியம் தமிழ் இலக்கணத்தின் அரண். இவ்விருவரையும் ஆரியத்தின் காவலர்கள் என்றும் தொல்காப்பியரைத் துரோகி என்றும் பெரியார் இழிவுபடுத்தியதுதான் தமிழ்த் துரோகம். கம்பர் எடுத்துக் கொண்ட பாடுபொருளை எதிர்க்கலாம். அதற்காக அவரை கூலி வாங்கிப் பிழைக்கும் தமிழ்த் துரோகி என்றும் முழுப் பொய்யன் என்றும் கூறுவது தமிழ்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று இழிவாகக் கருதும் அவரின் மனநிலையின் இன்னொரு பகுதியாகும்.

தமிழின் மொழி வளர்ச்சிக்கும் சொல் வளர்ச்சிக்கும் கம்பரின் இராமாயணச் செய்யுள்கள் துணை புரிந்துள்ளன. பெரிய புராணம் என்பது தமிழர் சமூக வரலாற்றின் பதிவாகவும் உள்ளது. இவை வலியுறுத்தும் கடவுட் கொள்கைகளையும் மதிப்பீடுகளையும் மறுப்பது தவறன்று. ஆனால் 1940களில் பெரியார் திருக்குறள் மாநாடு நடத்தியிருக்கிறார் என்பதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும் கம்ப இராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் எரித்துவிட்டால் அவற்றின் வழியாகக் கிடைக்கக் கூடிய மொழி மற்றும் வரலாற்றுச் செய்திகள் எப்படிக் கிடைக்கும்?

 அரிஸ்டாட்டிலை நவீன ஐரோப்பா தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. அந்தக் காலத்திலேயே அவர் அரிய கருத்துகளைச் சொன்னார் என்ற அளவில் பாராட்டுக்குரியவரே. ஆனால் அவர் காலத்தில் விற்று வாங்கப்பட்ட “அடிமைகள்” என்றென்றும் நிரந்தரமாக இருக்கப்போகும் ஒரு சமூகப் பிரிவினர் என்று கருதினார். “பேரறிவு மிக்க முடியாட்சியில் - பிரபுக்களின் அரசாங்கம்” என்பதுதான் அவர் கோட்பாடு. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று பேசிய திருவள்ளுவரையே பெரியார் புறக்கணிப்பது சமூகப் பரிணாம வளர்ச்சியைக் கருத்தில் கொண்ட யாரும் ஏற்க முடியாத ஒன்று.

புகழ் பெற்ற உலகக் கல்வியாளர்களும், மொழியியல் அறிஞர்களும் தாய் மொழிக் கல்வியையே வலியுறுத்துகின்றனர். கல்வி உளவியல், குழந்தை உளவியல் ஆகிய அனைத்திற்கும் எதிரான மொழிக் கொள்கையை பெரியார் கொண்டிருந்தார். ஆங்கில மொழியைக் கல்வி மொழியாகவும் வீட்டு மொழியாகவும் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் - மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தியது பெரும் தவறாகும்.

உலகில் மூத்த செம்மொழிகளுக்கெல்லாம் முந்திய முதற்பெரும் செம்மொழி தமிழ். அதை மிகத் துச்சமாகக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறியது வரலாற்று உண்மைக்கு எதிராகப் பழி தூற்றும் செயலாகும்.

1938லும் அதன் பிறகு அவ்வப்போதும் தாம் இந்தித் திணிப்பை எதிர்த்தது, தமிழ் ஆதரவுக்காக அன்று, சமஸ்கிருதமயப்பட்ட வர்ணாசிரமத் தன்மையுள்ள இந்தி மொழியை எதிர்ப்பதற்காகவும் ஆங்கிலத்தை நிலைநாட்டுவதற்காகவும் தான் என்று பெரியாரே கூறியுள்ளார். 1965ல் மாணவர்கள் தொடங்கி வைத்து, மாபெரும் மக்கள் எழுச்சியாக நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைப் பெரியார் எதிர்த்தது மட்டுமின்றி “காலித்தனம்” என்று கொச்சைப்படுத்தினார். அப்போது இந்தித் திணிப்பு ஏதும் இல்லை என்றும் அரசியலுக்காக தி.மு.க தூண்டிவிடும் போராட்டம் என்றும் கூறினார். பெரியாரின் இந்த நிலைபாடு அவரின் அன்றைய தி.மு.க. எதிர்ப்பிற்கும், காங்கிரஸ் ஆதரவிற்கும் ஏற்ற அரசியல் நிலைபாடாகும். சாரத்தில் அது தமிழ்க் காப்புப் போராட்டத்தை எதிர்த்த செயலாகும்.

மரபு

ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அவ் வரலாற்றில் காணும் சிறப்புக் கூறுகளை அந்தந்தத் தேசிய இனமும் தனது மரபுப் பெருமிதமாகக் கருதுகிறது. அவ்வாறான மரபுப் பெருமிதங்களை நிகழ்கால மக்களுக்கு ஊட்டி, உற்சாகப்படுத்தி புதிய சிறப்புகளைப் படைப்பதற்கு அந்தந்தத் தேசிய இனம் தன் மக்களை ஊக்கப்படுத்துகிறது. இந்த உலகு தழுவிய முற்போக்குப் பார்வையைப் பெரியார் எதிர்த்தார்.

காரல் மார்க்சும் எங்கெல்சும் தங்களின் செர்மானியப் பெரு மிதத்தைப் போற்றினார்கள். மார்க்சு தமது தாய்மொழியான செர்மன் மொழியில் ’மூலதனம்’ நூலை எழுதினார். அதன் முதல் பாகத்தை வெளியிடும் போது, தமது மேதைமையை ‘செர்மானிய மேதைமை’ என்று குறிப்பிட்டுப் பெருமிதப்பட்டார். அப்போது எங்கெல்சுக்கு எழுதிய மடலில் மார்க்சு கூறினார் :

“எனது நூல் போன்ற ஒரு படைப்பில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ள செய்திகளில் குறைகள் இருந்தே தீரும். எனினும் இந்நூலில் கூறப்பட்டுள்ளவற்றில் காணப்படும் இயைபுச் சீர்மை, விவரங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துக் காட்டும் அதன் கட்டமைப்பு ஆகியவை செர்மானிய மேதைமைக்குக் கிடைத்த வெற்றியாகும்.... இந்த மேதைமை தனி மனிதனுக்குச் சொந்தமான தன்று. அது தேசத்துக்குச் சொந்தமானது.” (Karl Marks, Fredrick Engels Collected works Vol. 42, Moscow, PP.231, 232.)

 பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தை வலியுறுத்திய காரல் மார்க்சு தமது செர்மானிய தேசியப் பெருமிதத்தில் பூரிப்பெய்துகிறார். இன அரசியலை முதன்மைப் படுத்திய பெரியாரோ தமிழினத்தின் மரபுப் பெருமையைக் கொச்சைப் படுத்துவதில் பூரிப்பெய்தினார். தமிழர்களின் வேரை மறுத்தார். எல்லா இன வரலாற்றிலும் முற் போக்குக் கூறுகளும் இருக்கும் - பிற்போக்குக் கூறுகளும் இருக்கும். பிற்போக்குக் கூறுகளைக் கைவிட்டு முற்போக்குக் கூறுகளை வளர்த் தெடுப்பது சமூக மாறுதல் வேண்டு வோரின் கடமையாகும்.

 தமிழ் மன்னர்கள் அனைவரும் பார்ப்பனர்களின் காலில் விழுந்து வணங்கி அவர்களின் கட்டளைக்கேற்ப செயல்பட்டனர் என்று பொத்தாம் பொதுவாகப் பெரியார் சாடுவது பிழையான வரலாற்றுப் பார்வை.

 இராசராச சோழனின் சிறந்த வரலாற்றுப் பங்களிப்புகளையும், தஞ்சைப் பெரிய கோயிலின் பொறியியல் சிறப்பையும், கலை மேன்மையையும் இன்று மறுதலிக்கும் தோழர்கள் பலருக்குப் பெரியாரின் வரலாற்று மறுப்புப் பார்வையே வழிகாட்டியாக உள்ளது.

மகா பீட்டர் என்ற முதலாம் ஜார் பேரரசனை லெனின் பாராட்டினார். அந்த ஜார் மன்னன் மேற்கு ஐரோப்பாவின் நவீன கால நாகரிக வளர்ச்சியைக் கட்டாயப்படுத்தி இரசியாவில் விரைந்து பரப்பினான் என்பதற்காகப் பாராட்டினார். மன்னர்களையும் இலக்கியப் படைப்பாளிகளையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் வைத்து மதிப்பிட வேண்டும். ஒரு சென்டி மீட்டராவது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த எந்த அளவுக்குப் பாடுபட்டார்கள் என்பதை அளவுகோலாக வைத்து அவர்களைத் திறனாய்வு செய்ய வேண்டும்.

பண்டையப் பெருமிதங்களிலிருந்து ஐரோப்பிய மறு மலர்ச்சி ஊக்கம் பெற்றதை எங்கெல்சு பின்வருமாறு கூறுகிறார்.

  “ரோமாபுரியின் இடிபாடுகளுக்கிடையே இருந்து தோண்டியெடுக்கப்பட்ட பண்டையச் சிற்பங்களும், பைசாந்தியப் பேரரசு வீழ்ந்த பிறகு, அங்கிருந்து காப்பாற்றப் பட்ட கையெழுத்துச் சுவடிகளும் மேற்கு நாடுகளைத் திகைப்பில் ஆழ்த்தின. அவை ஒரு புதிய உலகத்தை வெளிப்படுத்தின. அதன் ஒளி பொங்கும் வடிவங்களின் முன்னே, மத்திய காலத்தின் கொடுமை மிகு “பேய்கள்” மறைந்தொழிந்தன. கலைகளின் மலர்ச்சியில் கற்பனைக்கும் எட்டாத சிகரங்களை இத்தாலி எட்டிப் பிடித்தது. செவ்வியல் சிறப்புள்ள பண்டைக் காலத்தின் மறுவடிவம் போல் அது இருந்தது. அந்தச் சிகரத்தை அதன் பின்னர் அது எட்டவே இல்லை.

“இத்தாலி, பிரான்சு, செர்மனி ஆகியவற்றில் ஒரு புதிய இலக்கியம் உருப்பெற்றது. இதைச் சற்றே பின்தொடர்ந்து ஆங்கில, ஸ்பானிய மொழிகளில் செவ்வியல் இலக்கிய சகாப்தங்கள் தோன்றின.” - நூல்: இயற்கையின் இயக்கவியல் - எங்கெல்சு, முன்னுரை.

கிரேக்கம் வாழ்ந்த வரலாற்றின் இடிபாடுகளிலிருந்து ஐரோப்பாவில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது என்கிறார் எங்கெல்சு. சிந்துவெளி அகழ்வாராய்ச்சி வெளிப்படுத்திய தமிழரின் நகர நாகரிகத்தை அறிந்து உலகம் வியக்கிறது. என்றைக்காவது பெரியார் அதை வியந்து பாராட்டித் தமிழினத்திற்குப் புதிய உந்து விசை அளித்ததுண்டா? இல்லை.

அரசியல்

சமூகச் சீர்திருத்தப் போராட்டங்கள், தமிழ்நாடு விடுதலை உள்ளிட்ட அரசியலுக்கான போராட்டங்கள், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்குத் திரட்டுதல் போன்ற சமூக, அரசியல் நடவடிக்கைகளில் அன்றாடம் ஈடுபட்ட பெரியார், தமது இயக்கம் அரசியல் இயக்கம் அன்று என்று கூறிக் கொண்டது பொருத்தமில்லாதது. தேர்தலில் நிற்பது மட்டும்தான் அரசியல் என்று ஆகாது. அரசு குறித்துப் பேசும் அனைத்தும் அரசியலே.

நீதிக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தி.மு.க என இக்கட்சிகள் அனைத்துக்கும் ஒவ்வொரு காலத்தில் அரசியல் ஆதரவு, தேர்தல் வாக்குத் திரட்டல் ஆகியவற்றில் ஈடுபட்டவரே பெரியார். தமது இயக்கம் அரசியல் இயக்கம் அன்று என்று அவர் கூறியதை அவருக்குப் பிறகான பெரியாரியல் இயக்கங்கள் தங்கள் வசதிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையைக் கைவிட்டோ அல்லது கண்டுகொள்ளாமலோ நடந்துகொள்ளும் தங்களின் சந்தர்ப்பவாதத்தை மூடி மறைக்க, ‘பெரியாரின் வழியில் அரசியலற்ற சமூக இயக்கம்’ என்ற பதாகையை அவை தூக்கிப் பிடிக்கின்றன.

கருத்தியல்

இனம், தேசிய இனம், தேசம் குறித்த சமூக அறிவியல் வரையறைகளைப் புறக்கணித்ததால், இவை சார்ந்த கருத்தியல் எதையும் பெரியாரால் உருவாக்க முடியவில்லை. இவை குறித்த நிராகரிப்புக் கருத்துகளை மட்டுமே கொண்டிருந்தார்.

 பெரியாரின் தாய்மொழி கன்னடம் என்பதற்காக நாம் அவரை அயலாராகக் கருதவில்லை. 300 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்து, தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு, தமிழைக் கல்விமொழியாகவும், அலுவல் மொழியாகவும் ஏற்றுக் கொண்டு வீட்டில் தெலுங்கு, கன்னடம், உருது போன்ற மொழிகளைப் பேசும் மக்களையும் இவர்களை ஒத்த மற்றவர்களையும் நாம் அயலாராகக் கருதவில்லை. அவர்களுக்கு எல்லா உரிமைகளும் தமிழ்நாட்டில் உண்டு என்பதே நமது நிலைபாடு. ஆனால் யாராக இருந்தாலும் தமிழ்த் தேசியத்தை மறுப்பதை நாம் ஏற்க முடியாது.

இன அடிப்படையிலும் அவர் எடுத்த சில நிலைபாடுகள் அடிப்படையிலும் பெரியாரை முற்றிலுமாக நிராகரித்தவர்களின் கூற்றை மறுக்கும் நோக்கில் அவரைத் “தமிழ்த் தேசியத்தின் தந்தை” என்று ஏற்கெனவே நாம் குறிப்பிட்டிருந்தோம். 1938ல் தமிழ்நாடு தமிழர்க்கே என்று முழக்கம் கொடுத்தது, 1947 ஆகஸ்ட் 15 தமிழர்களுக்கான விடுதலை நாள் இல்லை என்று கூறியது, 1960ல் தமிழ்நாடு விடுதலை கோரி இந்திய வரைபட எரிப்புப் போராட்டம் நடத்தியது, 1973இல் சுதந்திரத் தமிழ்நாடு கோரி மாநாடும் போராட்டமும் நடத்தத் திட்டமிட்டது போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பெரியாரைத் ‘தமிழ்த் தேசியத்தின் தந்தை’ என்றோம்.

தேசிய மறுப்பு, இன மறுப்பு, தமிழ் மொழி மறுப்பு கருத்துகளையும் அவர் இடையிடையே உறுதியாகக் கூறி வந்துள்ளார். இன்றையப் பெரியாரியல் அமைப்புகள் இவ்வாறான இன, மொழி மறுப்புக் கருத்துகளை ஏந்திக் கொண்டு, இப்பொழுது வளர்ந்து வரும் தமிழ்த் தேசியத்திற்கு இடையூறு விளைவிக்கின்றன. எனவே, மேலே கூறிய எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்து, பெரியாரை நாம் முற்றிலும் நிராகரிக்கக் கூடாது என்றும், அவரது பங்களிப்புக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்றும் முடிவுக்கு வரும் அதே வேளை அவரைத் தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று கூறுவது மிகைக் கூற்று என்றும் பிழையானது என்றும் கருதுகிறோம்.

இன்றைய காலகட்டம் தமிழ்த் தேசியக் கருத்தியல் கூர்மையடைந்து வரும் காலகட்டமாகும். தேர்தலைப் புறக்கணித்து, தமிழ்த் தேச விடுதலையை முதன்மைப்படுத்தும் தமிழ்த் தேசியம் ஒரு புரட்சிகர அரசியலாகும். இந்த நிலையில் இன்றையத் தமிழ்த் தேசியத்திற்கு பெரியாரின் சிந்தனைகள் உரைகல் அன்று. அவரின் சிந்தனைகளுள் தமிழ்த் தேசியத்தை ஊக்கப்படுத்தும் கருத்துகளும் இருக்கின்றன என்பதே உண்மை.

பெரியார் சிந்தனைகளில் கழிக்க வேண்டியவற்றைக் கழித்து வளர்க்க வேண்டியவற்றை வளர்த்து அவற்றை இன்றையத் தமிழ்த் தேசியப் புரட்சி சிந்தனைக்கு ஏற்பப் பொருத்தப்படுத்தினால் அது தமிழினத்திற்கும் பயன்தரும் பெரியாரியலுக்கும் பயன்தரும். பெரியாரியல் தோழர்கள் இது பற்றி சிந்திப்பார்களாக!