கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

(03-12-2011 அன்று சென்னை லயோலாக் கல்லூரியில் நடைபெற்ற பரமக்குடி துப்பாக்கிச்சூடு பொதுவிசாரணை அறிக்கை வெளியீடு நிகழ்வில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் பேசியது)

அரங்கத்தை நிறைத்திருக்கும் உங்களுக்கும் மேடையில் உள்ளவர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பரமக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த உண்மைகளை தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் தெரிவிக்கிற வகையில் மதுரையில் நடத்தப்பட்ட பொதுவிசாரணை அறிக்கையை வெளியிடும் ‘பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கை கமிட்டி’யின் முயற்சிகளை எமது கட்சியின் சார்பாக பாராட்டுகிறேன். தாழ்த்தப்பட்டவர்கள் மீது ஒரு அரச பயங்கரத்தை சடத்திவிட்டு அதை மறைக்க சதிசெய்து வரும் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் உண்மைகளை வெளிக்கொண்டுவரும் இந்த முயற்சியை மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி மனமார பாராட்டுகிறது.

பொதுவிசாரணை அறிக்கை இந்தக் பரமக்குடியில் செப்டம்பர் 11ல் நடத்தப்பட்ட கொடூரக் குற்றம் குறித்து மத்திய புலன் விசாரணை வேண்டுமெனக் கேட்கிறது. இக்கோரிக்கையை எமது கட்சி ஆதரிக்கிறது. ஆதரித்து வலியுறுத்துகிறது.....

அதிமுக ஆட்சி ஒரு நபர் விசாரணைக் கமிஷன் ஒன்றை நியமித்திருக்கிறது. இதைக் கூட சாதாரணமாக நியமித்திடவில்லை. தலித் இயக்கங்கள், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தலுக்குப் பிறகே அறிவிக்கப்பட்டது. அந்தக் கமிஷன் ஒரு இடைக்கால அறிக்கையை அரசாங்கத்திடம் கொடுத்ததாகவும் அதன் பரிந்துரைப்படி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு மேலும் 4 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுமென்றும் அரசாங்க அறிவிப்பு கூறுகிறது.

கமிஷனது இடைக்கால அறிக்கை பத்திரிகைகளில் வெளியிடப்படவில்லை. பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அந்த அறிக்கையும் கூட ஆறு தலித்துகளை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கச் சொல்லவில்லை? ஒருவேளை அப்படி சொல்லியிருந்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஏன் முன்வரவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன. தலித்துகளின் எழுந்து வரும் கோபத்தை தணிக்க, ஆவேசத்தை மட்டப்படுத்த கமிஷனும் அரசாங்கமும் இப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளதாகவே தெரிகிறது. எனவேதான் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் கமிஷனிடமிருந்து நீதி கிடைக்காது என்று கூறுகிறோம். சிபிஅய் விசாரணை வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

பள்ளி பாடப்புத்தகங்களின் அட்டையைப் புரட்டினால் முதல் பக்கத்தில் ‘தீண்டாமை ஒரு பாவச்செயல்; தீண்டாமை ஒரு குற்றம்’ என்று அச்சடிக்கப்பட்டிருக்கிறது. பரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசினார். இது இனக் கலவரமில்லை என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி இழிவாக எழுதப்பட்டதன் தொடர்ச்சியாக பள்ளப்பச்சேரி பழனிக் குமாரின் கொலையும் அதையடுத்து சங்கிலித்தொடராக பல சம்பவங்களும் நடந்துள்ளன என்று முதலமைச்சர் கூறுகிறார்! அப்படியே அவதூறாக எழுதப்பட்டிருந்ததாகவே வைத்துக்கொள்வோம். நான் கேட்கிறேன், அதற்காக கொலைசெய்வார்களா? ஆம் என்று சொல்கிறாரா முதலமைச்சர்! முதலமைச்சரே பழனிக்குமாரின் கொலைக்கு நியாயம் கற்பிக்கிறாரே! இது எவ்வளவு பெரிய ஆபத்து?

வன்முறையாளர்கள், கலவரக்காரர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க, தங்களை பாதுகாத்துக்கொள்ள போலீஸார் சுடவேண்டியாகிவிட்டது என்று துப்பாக்கிச்சூட்டை, 6 பேர் கொலையை, முதலமைச்சர் நியாயப்படுத்துகிறார்! தலித்துகளை, தாழ்த்தப்பட்டவர்களை ‘வன்முறையாளர்கள்’, ‘கலவரக்காரர்கள்’ என்று திரும்பத் திரும்பக் கூறுகிறார். ஜான்பாண்டியன் பரமக்குடி சென்றால் கலவரம் வரும் என்கிறார். ஏன், தேவர் ஜெயந்திக்கு ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் படையெடுத்துச் செல்கிறார்களே அப்போதெல்லாம் கலவரம் வராதா? தாழ்த்தப்பட்டவர்கள் வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என்றால் பன்னீர்செல்வம் போன்றவர்கள் மகாத்மாக்களா?

சட்டமன்றம், ஜனநாயகத்தின் மாண்பு என்றெல்லாம் பேசுகிறார்கள். தலித்துகளின் வாக்குகளையும் பெற்று ஆட்சிக்குப் போனவர் சட்டப்பேரவையில் நின்று கொண்டு தலித்துகளை ஒதுக்கி வைத்துப் பேசினாரே இது தீண்டாமை இல்லையா? எனவே தீண்டாமைக் குற்றத்தின் கீழ் முதலில் விசாரிக்கப்படவேண்டியவர் முதலமைச்சர். எனவேதான் சிபிஅய் விசாரணை கோருகிறோம். நாம் அறிந்தவரை இதுவரை எந்தவொரு முதலமைச்சரும் இது போல தலித்துகளை ஒதுக்கிவைத்து, குற்றவாளிகள், கலவரக்காரர்கள் என்று குற்றம் சுமத்திப் பேசியதில்லை. இந்த சட்டமன்றத்தில் தலித்துகளுக்கு இடமில்லையா? இது மிகமிக ஆபத்தானது. இப்படி ஒரு முதலமைச்சர் ஆளும்போது எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்? பரமக்குடியில் ரத்தம் சொட்டச் சொட்ட சுட்டுக் கொன்ற கொடுங்குற்றம் போலவே தலித்துகளை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என்று ஒதுக்கிவைத்துப் பேசியதும் கொடும் வன்முறையாகும்; தீண்டாமைக்குற்றமாகும். எனவேதான், முதலமைச்சரின் சட்டப்பேரவைப் பேச்சுக்கு தாழ்த்தப்பட்ட மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கோருகிறோம். அவரது பேச்சை சட்டப்பேரவைக் குறிப்பிலிருந்து நீக்கவேண்டுமென்று மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறுகிறார்கள். இல்லை. தாழ்த்தப்பட்டவர்களின் சமத்துவப் போராளி இமானுவேல் சேகரன் கொல்லப்பட்ட அதே நாளில், செப்டம்பர் 11ல், ஆறு தாழ்த்தப்பட்டவர்களை சுட்டுக்கொன்ற சம்பவம், தலித்துகளை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்டது. தலித்துகளின் ஒற்றுமையை சிதைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது. இமானுவேல் சேகரன், தேவருக்கு இணையாக எப்படி எழுந்துவரலாம்? என்ற சாதியக் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டக் கொடூரம். தேவருக்கு போட்டியாக ‘தேசியத் தலைவன்’, ‘தெய்வத்திருமகன்’ என்று கொண்டாடுவதைப் பொறுத்துக்கொள்ளமுடியாததால் அரங்கேற்றப்பட்ட கொடூரம்! இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசாங்க விழாவாக நடத்தவேண்டும் என்ற தலித்துகளின் கோரிக்கை இனி எழக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு அரச பயங்கரவாதம்.

பரமக்குடி துப்பாக்கிச்சூடு நடந்ததும் செப்டம்பர் 19, 20 தேதிகளில், சிந்தாமணி, இளையான்குடி, பரமக்குடி பகுதிகளுக்கு எமது கட்சி சார்பில் சென்று வந்தோம். மக்களை சந்தித்தோம். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தோம். பெண்களை சந்தித்தோம். தோழர்கள் சந்திரபோஸ், சிம்சன் உள்ளிட்டவர்களை சந்தித்தோம். எமக்கு கிடைத்த தகவல்களும் ஆதாரங்களும் நடந்த வன்முறை ஒரு அரச பயங்கரவாதம் என்பது தெளிவாக்குகிறது. அதுமட்டுமல்ல, உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தனது இடுப்பில் இடுக்கி வைத்திருக்கும் சாதி ஆதிக்கவெறிக் கும்பலின் திட்டமிட்ட சதி என்பது நிரூபணமாகிறது. இது மேலிடத்து சதி என்பதுதான் உண்மை. இத்தகைய கொடூரத்துக்குப் பிறகும் கூட அந்த சாதி ஆதிக்க வெறிக்கும்பலை தனது இடுப்பிலிருந்து இறக்கிவிட முதலமைச்சர் தயாராக இல்லை. எனவே மேலிடத்து சதியை, மாநில அரசாங்கம் நியமித்திருக்கும் விசாரணைக் கமிஷன் விசாரிக்கமுடியாது. சிபிஅய் விசாரிக்கவேண்டும்.

இந்த சமயத்தில், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி ஒன்றை வலியுறுத்துகிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்களுக்கெதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் திருத்தப்படவேண்டுமென்று கோருகிறோம். தலித்துகள், பழங்குடி மக்கள்மீது அரச பயங்கரவாதம் பாய்கிறபோது எவ்வித புகாருமின்றி தானாகவே அவர்கள் (போலீஸ் அதிகாரிகள்) மீது வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் பாய்கிறவகையில் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டுமென்று கோருகிறோம். எத்தனையோ வன்முறைகள், கொடியங்குளம், தாமிரபரணி என நடந்துள்ளன. இந்த சட்டத்தின் கீழ் எந்த போலீஸ் அதிகாரியாவது தண்டிக்கப்பட்டிருக்கிறாரா? எனவேதான் இப்படியொரு சட்டத்திருத்தம் வேண்டுமென்று கோருகிறோம். இங்கு நம்முடன் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் இதை வலியுறுத்தவேண்டுமென்று கோருகிறாம்.

பரமக்குடி கடைசி சம்பவமாக இருக்க வேண்டுமென்று சொன்னார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் ரத்தம் சிந்துவது பரமக்குடியோடு முடிந்துவிட வேண்டும்; முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்று சொன்னார்கள். இதில் எமது கட்சிக்கு முழு உடன்பாடு உண்டு. அதற்கு என்ன செய்ய வேண்டும்? முதலில் தெற்கிலுள்ள தலித்துகள், வடக்கிலுள்ள தலித்துகள், கிழக்கிலுள்ள தலித்துகள், மேற்கிலுள்ள தலித்துகள் ஒரு சக்தியாக திரளவேண்டும். தலித் விரோத ஆட்சிகள் அதைக் கண்டு மிரளவேண்டும். தாழ்த்தப்பட்டோர் விரோத ஆட்சிகள் பயப்படவேண்டும். தாமிரபரணி, கொடியங்குளம், பரமக்குடி போன்றவைகளை அரங்கேற்றும் ஆட்சிகள் ஆட்டங்காணவேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்தும் செந்தில்வேலன், சந்திப் பட்டீல் போன்ற போலிஸ் அதிகாரிகளின் காக்கிச்சட்டைகள் கழற்றப்படும், அவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள் என்ற நிலை வரவேண்டும். அப்போதுதான் பரமக்குடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

சிவகாமி அவர்கள் சரியாக சொன்னதுபோல இதற்கு அரசியல் கட்சிகளின் பங்கு மிக முக்கியமானது. எங்களைப் பொருத்தவரை, தாழ்த்தப்பட்டவர்களின் சமஉரிமைக்கு, சமத்துவத்திற்கு முன்னுரிமை கொடுக்காதவர்கள் தலைவர்களே இல்லை என்று கூறுவோம். அத்தகைய கட்சிகள், கட்சிகளே இல்லை என்றுதான் கூறுவோம். தாழ்த்தப்பட்டவர்களது ஜனநாயகத்தைப் பேசாத, கட்சிகள் ஜனநாயக கட்சிகளே இல்லை. அவர்களது உரிமையை, சமத்துவத்தைப் பேசாத ஜனநாயகம், ஜனநாயகமே இல்லை. தலித்துகள் யார்? இந்த தேசத்தை உருவாக்குபவர்கள், உழைக்கும் மக்கள். வரலாற்று நாயகர்கள். எண்ணிக்கையை வைத்துப் பார்க்கிற எண்ணிக்கை அரசியல், வாக்குவங்கி அரசியலைப் புறக்கணித்தாக வேண்டும்.

இப்போது தேவை தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமை, ஒரே அரசியல் சக்தியாக திரளும் அவசியம். அந்த நிலமை எவ்வளவு சீக்கிரம் உருவாகிறதோ அவ்வளவு சீக்கிரம் பரமக்குடி, தாமிரபரணி இல்லாமல் போகும். இந்த அரங்கம், இங்கு காணப்படும் ஆவேசம், உறுதிப்பாடு இந்த திசையில் முன்னேறவேண்டும் என்று மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி விரும்புகிறது. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமைக்காக, சமத்துவத்துக்காக, உரிமைக்காக, அவர்களது ஜனநாயத்துக்காக முன்னுரிமை தருகிறது. அந்தப் போராட்டக் களத்தில் எப்போதும் முன்னணியில் நிற்கும். அதற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறது. இது உங்கள் போராட்டமல்ல, நமது போராட்டம். நாம் வெற்றி பெறுவோம்! ஆணவமிக்க ஆட்சியாளர்களை மண்டியிடச்செய்வோம் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்!!