koodankulam_kids_640

அனுப்புனர்:

“கூடங்குளம் குழந்தைகள்”
கூடங்குளம், இடிந்தகரை மற்றும்
சுற்றியுள்ள கிராமங்கள்
திருநெல்வேலி மாவட்டம்

பெறுனர்:

மாவட்ட ஆட்சித் தலைவர்
திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலி

மதிப்பிற்குரிய அய்யா: 

வணக்கம். நாங்களும் எங்கள் பெற்றோரும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக கடந்த ஓராண்டு காலமாகப் போராடி வருகிறோம்.எங்களுக்கு எந்த விதமான அடிப்படைத் தகவல்களும் தராது, எங்கள் கருத்துக்களைக் கேட்காது, எங்களுக்கு எந்த விதமான பேரிடர் பயிற்சியும் தராது, ரஷ்ய நாட்டிடம் இருந்து இழப்பீடு கூட வாங்கித் தராது இந்திய அரசு எதேச்சாதிகாரமாக இந்த அணு உலைகளை நிறுவி வருகிறது.
 
சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே, இந்திய அணுசக்தித் துறை கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கியிருப்பது, ஆச்சரியமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
 
இந்திய அரசாங்கமும், அணுசக்தித்  துறையும் இப்படி மக்களுக்கு எதிராக இயங்குவதும், சனநாயகத்தை மிதித்தழிக்க முயற்சிப்பதும், நீதிமன்றத்தை அவமதிப்பதும் இளங்குழந்தைகளான எங்களுக்கு தவறான பாடங்களைக் கற்றுத் தருகின்றன.
 
குழந்தைகளாகிய நாங்கள் இந்த கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் எங்கள் எதிர்கால நல்வாழ்வுக்கு, பாதுகாப்புக்கு, உடல் நலத்துக்கு எங்கள் பெற்றோரின் நோயற்ற வாழ்வுக்கு, தமிழகத்தின் இயற்கை ஆதாரங்களைப் பேணுவதற்கு ஏற்புடையவை அல்ல என்று உறுதியாக நினைக்கிறோம். எங்கள் உணர்வுகளைப் புறந்தள்ளி இந்த அணுமின் நிலையங்களை நிறுவக் கூடாது என்று தங்களையும், தங்கள் வழியாக மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களையும், பிரதமர் அவர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கி றோம்.
 
தங்கள் உண்மையுள்ள,
கூடங்குளம் குழந்தைகள்

Pin It