காடு மலை கடந்து அந்த அதிசயப் பூவை
நீ பறிக்கையில் தான் நிஜமாகவே
அது அதிசயப் பூவானது

*

'யக்கா கொஞ்சம் ரசம் குடேன்'
என்று நீ வருகையில் எல்லாம்
மதுவாகிப் போகிறது என் வீட்டு ரசம்

*

சிறுவயதில் நீ கொடுத்த
காதல் கடிதங்கள் தான்
என் பீரோவின் வாசனைத் திரவியங்கள்

*

நிலவில் கால் வைப்பதா கடினம்?
நிலா காயும்
உன் வாசலில் கால் வைப்பது தான் கடினம்

*

ஆற்றில் முகம் பார்க்கிறாய்
கவலையெல்லாம் பிம்பம் முந்திக் கொண்டு
காதல் சொல்லி விடுமோ என்பது தான்

*

சாலையோர பொம்மைகளிடம்
உன்னைக் காட்டி சொல்ல வேண்டும்
சேலையோர பொம்மை நீ என்று

*

மிட்டாய் தாள் பிரிக்கும்
உன் விரல்களில்
குழந்தையின் உதடுகள்

*

பூக்கள் நடுவே புகைப்படம் எடுக்கிறாய்
அது புகைப்படத்துக்குள்ளே
பூக்கள் நடுவது

- கவிஜி

Pin It