lovers 600

மணமுடிக்காத காதலர்களுக்கு....

1. 'விக்கிரமன் குரூப்' இயக்கிய தமிழ்ப் படங்களைப் பார்த்து அதுதான் காதல் என்று நினைத்து விடாதீர்கள். 'பிரேமம்' வகைப் படங்கள்தான் உங்களுக்கு முன்மாதிரி. ஒரு வாசல் மூடினால், இன்னொரு வாசல் திறக்கும்.

2. கல்யாண வாழ்க்கைக்கான முன்னோட்டம்தான் காதல் வாழ்க்கை. கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடன் அதை முழுமையாக அனுபவியுங்கள்; ஒன்றும் குடிமுழுகி விடாது.

3. காதலிக்கும்போதும் சரி, கல்யாணத்திற்குப் பின்னும் சரி - ஒருவரை ஒருவர் பிறாண்டிக் கொண்டிருப்பதை விட, ஒத்து வரவில்லை என்றால், கை குலுக்கிப் பிரிவது நல்லது.

4. ஆணை விட, பெண்ணுக்கு ஆயிரம் மடங்கு சமூக, குடும்ப அழுத்தங்கள் உள்ளன. உங்கள் காதலி பின்வாங்கினால், அதைப் புரிந்து கொள்ளுங்கள். 'அடிடா அவளை, உதைடா அவளை' என்பதெல்லாம் காட்டுவிலாங்காண்டித்தனம்.

5. காதலில் தோல்வி என்பது சுகமான வலி; திருமணத்தில் தோல்வி என்பது துயர்மிகுந்த வலி. பல முறை யோசித்த பின்பே திருமணத்திற்குச் செல்லுங்கள்.

6. சாதி, மதவாதிகளின் எதிர்ப்பு, திருமணத்திற்குப் பின்னான பொருளாதாரப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தீர யோசியுங்கள். தோள் கொடுக்க மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கத் தோழர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

பெற்றோர்களுக்கு...

• நீங்கள் அனுமதிக்கவில்லை என்றாலும், உங்கள் பிள்ளைகள் காதல் வயப்படுவார்கள். இயற்கை நியதியை உணர்ந்து அனுமதிப்பது உங்கள் மரியாதையை அவர்களிடம் உயர்த்தும்.

• சாதி, மதம் என சுற்றம் உங்களை நெருக்கும். அதற்கு செவிசாய்த்து அரிவாளைத் தூக்கினால், உங்களுக்குத் தூக்குத் தண்டனையோ, இரட்டை ஆயுள் தண்டனையோ நிச்சயம். தூண்டி விட்டவர்கள் அடுத்தவன் குடி கெடுக்கப் போய்விடுவார்கள்.

• பாலியல் குற்றங்கள் அதிகமாக நடக்கும் இந்த சமூகத்தில், பருவ வயதை அடைந்த பெண் பிள்ளைக்கு ஒரு காதலன் இருப்பது அவளுக்கு மிகப் பெரும் பாதுகாப்பு. வீடுவரை பாதுகாப்பாக அவன் வருவான்.

• 14 வயதில் பாலியல் பசி கொள்ளும் பிள்ளைகளுக்கு 25 வயதிற்கு மேல் உணவிடுவது, பெற்றோர் என்ற அதிகாரத்தில் நீங்கள் செய்யும் மிகப் பெரும் வன்முறை.

• பசி, காமம் இரண்டும் அனைத்து விலங்குகளுக்கும் பொதுவானது. ஆனால், பெற்றோர் அனுமதி இல்லாமல் காமம் கொள்ளக்கூடாது என்று சொல்வது மனித சமுதாயத்தில் மட்டுமே நடைபெறுகிற அசிங்கமான செயல். 'தாலி கட்டிய நாளன்றுதான் காம உணர்வு முகிழ்க்க வேண்டும்' என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

• இயற்கை நியதிக்கு எதிராக காமத்திற்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் விதிப்பதை விட, பிள்ளைகளுக்கு பாதுகாப்பான உடலுறவு குறித்து சொல்லிக் கொடுங்கள்.

• திருமணம் ஆன பிள்ளைக்கு துணையுடன் தனித்திருக்க தனி அறை ஒதுக்குகிற நீங்கள், காதலிக்கும் பிள்ளைக்கு ஒதுக்குவதில் என்ன கேடு வந்துவிடும்?

• பிள்ளைகளின் காதல் திருமணத்திற்கு சம்மதம் கொடுங்கள். இல்லையேல், அவர்கள் உங்களை ஏமாற்றிவிட்டு திருமணம் செய்வார்கள் அல்லது கண்ட நாய் எல்லாம் காதலர் தினத்தன்று உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும்.

- கீற்று நந்தன்