வர்க்கத் தோற்றுவாய்க்குப் பின்னரான சமூகக் கட்டமைப்புகள் பல்வேறு முரண்பட்ட செயல்களை மனித குலத்துள் தோற்றுவித்திருக்கிறது. அவற்றுள் ஒவ்வொரு சமூக பண்பாட்டுச் சூழலும், அச்சமூகக் கட்டமைப்பைத் தாங்கிப் பிடித்தே வந்துள்ளதை கலை, இலக்கியப் பண்பாட்டு சூழலியல் மிகத் தெளிவுபட விளக்கி உரைக்கின்றது. குறிப்பாக, மேற்கட்டுமான கட்டமைப்புக்குள் ஒன்றாகக் கருதப்படுகின்ற, ‘காதல்’ பற்றி உலகியல் வாதம் பல்வேறு கருத்தியலை முன் வைத்துச் செல்கின்றது; இன்றும் கூட அது தொடர்பான விவாதம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

vairamuthu oru porkalam irandu pookalஆண், பெண் கூடிக் களிப்புறும் ‘காதல்’ பற்றி தமிழிலக்கியங்கள் மட்டுமல்ல, உலக இலக்கியங்களும் அழகுறவும், உள்ளுணர்வின் வேட்கை மிகுமாறும் கூட எடுத்துரைத்தன. பண்டைக் காலந் தொட்டு இன்று வரையுமாய் இலக்கியங்களில் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படினும், காதல் சமூகத்தால் மறுக்கப்பட்டே வந்துள்ளது என்பதே நாம் கண்ட, காணும் உண்மை. இதற்குரிய காரணியாய் சமூகத்திலுள்ள வர்க்க அடிப்படையே என வாதிடுவர் சமூகவிஞ்ஞான ஆய்வாளர்கள்.

காதல்

பண்டைத் தமிழ் இலக்கியப் பதிவுகள் மிக செறிவாக, நுட்பமாக காதலை உணர்த்துகிறது. உதாரணமாக,

“யாயும் யாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்ற குறுந்தொகை பாடல் அடிகள்

நீ யாரோ? நான் யாரோ? உன் தாய், தந்தையும், என் தாய், தந்தையும் யார் யாரோ? நீயும் நானும் எவ்வகை வழியும் அறியாது, செம்மண்ணில் விழுந்து இரண்டற கலந்த நீர்போல அன்புடைய நம் இருவர் நெஞ்சமும் இரண்டற கலந்ததே” என்று காதலின் நிலையினை மிக நுட்பமாக 6 அடிகளில் சுருங்கச் சொல்லி விளக்கும் மாண்பு பழந்தமிழிடையேயுள்ள சிறப்பு.

அத்தகு இனிமை பயக்கும் காதல் பற்றி இக்காலத்து இலக்கியவாதிகள் பலரும் தமது கலை, இலக்கிய போக்கின் ஊடாக பலவாறாக எடுத்துரைத்தனர். இன்றும் எடுத்துரைக்கின்றனர்.

“காதல் காதல் காதல் ஃ காதல் போயின் ஃ சாதல் சாதல்” என்றான் நம் பாரதி.

அத்தகைய ‘காதல்’ செய்யும் இளையோரோ? “காதல் காதல் காதல் காதல் செய்யின் சாதல் சாதல்” என்று கூறும் அளவிற்கு ‘காதல்’ எனும் போக்கு மனித அழிவை இந்திய சமூகம் மிக பெருமளவில் சந்தித்து வருவதை தொடர்ச்சியாகக் கேட்டும், கண்டும் வருகின்றோம். இத்தகைய சூழலை மையமிட்டு ஒரு நிலவுடைமைச் சூழலில் காதல் எவ்வாறு வெற்றி பெற முடியும். ‘காதல்’ நிலைத்தாலும் காதலர்கள் அழிந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதை ஆசிரியர் நாவல் வழி தருகின்றார்.

நிலபிரபுக்கள், ஜமீன்தார் என்று கூறுகின்ற அதிகாரத்துவ தன்மை (தகுதி) கொண்டவர்களின் செயல்பாடுகளை வெளிபடுத்தி, சமூகத்தின் கடந்த கால வாழ்க்கையை பிரதிபலிக்கின்றார் வைரமுத்து. ஆம்! ‘ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’ என்ற புதினம் 21-ம் நூற்றாண்டிற்கு முந்தைய நிலபிரபுத்துவக் கட்டமைப்பின் உச்ச நிலையையும், அதிகாரப் போக்கையும், புறம் சார்ந்த நிலையையும், அகம் சார் கருத்தியலின் அழிவையும் அகப்புற சூழலில் நின்று மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

தமது எழுத்தாளுமையால் ஜமீன்களின் தன்மையையும், கலைக் கூத்துத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வு நிலையையும், இருவேறுபட்ட தளத்துள் இருக்கும் இவர்களுக்குள்ளான காதல். அதனால் ஏற்படும் முரண்கள், அழிவுகள் என திரைப்படத்தின் காட்சிகளைப் போல வருணனைகள் தந்து மிகச் சிறப்பாகவும், நுட்பமாகவும் வைரமுத்து எடுத்துரைக்கின்றார்.

ஜமீன் நிலத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் தன்மையுடையோராய் ஜமீன்தார்கள் இருந்தனர். அவர்கள் பேசினால் வேதம்; செயல்படுத்தினால் சட்டம்; எதிர் நின்று பேசினால் அல்ல பார்த்தாலே கொலை செய்யும் கொடுமையும் அவர்களின் காலச் சூழல்.

அவர்களின் அதிகாரப் போக்கு, அரசியல் செல்வாக்கு, பொருளாதார செல்வாக்கு அங்கு வாழும் ஒட்டுமொத்த மக்களையும் அச்சப்படவே வைத்தது. ஆக, தர்பாரும், தனித்தன்மையும், சொல்லும் சொல் வேத வாக்காகவும், பிறர் ஏவல் வழி வாழ்வதையே கடமையெனக் கொண்டும் மக்கள் வாழ்ந்தனர்.

இத்தகைய ஜமீன்தார் முறையையுடைய தமிழகத்தின் 20 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரான வர்க்க முரண்பாட்டோடு கூடிய சாதிய படிநிலைச் சூழலையும் பொருத்தி வைரமுத்து 20 ஆம் நூற்றாண்டின் மைய பகுதி நிகழ்வை மிக அழகாக பதிவு செய்திருக்கின்றார் வைரமுத்து.

அனைத்துத் தகுதிகளையும் பெற்ற முழு அதிகாரம் படைத்த ஜமீன் மகன், கலைத் துறையில் ஈடுபட்டு பிழைப்பு நடத்தும் ஓர் பெண். இருவருக்குமிடையேயான காதல், வர்க்க முரண், ஜமீன் அதிகாரப் போக்கு, கலைக் கூத்துத் தொழிலில் ஈடுபடுவோரின் நிலை, காதலின் ஈர்ப்பு, ஆழம், அதனால் விளையும் தீமைகள் என ‘காதலின் பயணம்’ அழகுற சென்று அழிவை எதிர்கொள்ளும்படியான செயலொடு கதைக்களம் முடிவுறுகிறது.

மாந்தர்கள்

1. முதன்மை மாந்தர்கள்.
 ராஜதுரை (ஜமீன்தார் மகன்)
 அம்சவள்ளி (கூத்துக்கலை பெண்)
2. துணை மாந்தர்கள்
 வெள்ளையம்மாள் (அம்சவள்ளியின் தாய்)
 ஜமீன்தார் (இராஜதுரையின் தந்தை)
 ஜெகதீஷ்வரி (ஜமீன்தார் மனைவி)
 அங்கப்பன் (அம்சவள்ளியின் மாமன்)
3. இன்ன பிற துணை, ஒரு நிலை மாந்தர்கள்

காதலைப் பற்றி நூலில் முன்னுரையில் கூறும் வைரமுத்து,

“காதலை இன்னும் இந்த மண்ணில் யாரும் சரியாகப் பார்க்கவில்லை. மொழி அதை வெறும் வார்த்தையாய்ப் பார்க்கிறது. விஞ்ஞானம் அதை வெறும் ஹார்மோன்களாய்ப் பார்க்கிறது. மதம் அதை வலக்கையில் தண்டித்துவிட்டு இடக்கையில் ஆசீர்வதிக்கிறது. தத்துவம் அதை தனக்குள் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று இன்னும் தீர்மானம் போடவில்லை. பெற்றோர் காதலை தங்களோடு முடிந்துவிட்ட சமாச்சாரமாகவே கருதுகிறார்கள். சமூகம் இன்னும் அதை ஓர் ஒழுக்கக் கேடு என்றே உறுதியாக நம்புகிறது. எனவே இந்தியாவில் காதல் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பது காதலர்கள் மீதுதான்.

அவர்கள் மட்டுமே அறிவார்கள் அது சக்தி என்று. அதன் அவஸ்தைகள் சந்தோஷங்கள் எல்லாம் எரிப்பொருள்கள்”. (பக். 55, ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்) என்கிறார். மேலும்,

காதலின் ஆசைகள் அர்த்தமில்லாதவை. ஆனால் ஆழமானவை. பைத்தியக்காரத்தனங்களே காதலின் சபையில் கௌரவிக்கப்படும் (பக். 81) என்றும் கருத்துரைக்கின்றார்.

நாவலின் கதை நகர்வு

கண்டமனூருக்கு முதன் முதலில் கூத்து நிகழ்ந்த வெள்ளையம்மாள் தன் மகள் அம்சவல்லியை அழைத்து வருகின்றாள். அவர்கள் ஜமீன்தார் வீட்டில் தங்குவது, அவர்கள் கொடுக்கும் பொருளைப் பெறுவதும் கூத்துக் கலைஞர்களின் வழக்கம். ஜமீன்தார் பொருளைத் தரும் போது அம்சவல்லி வாங்க மறுத்து, உழைப்புக்கு ஊதியம் தாருங்கள். கொடை தந்து கொச்சைப்படுத்தாதீர்கள் எனக் கூற ஜமீன் கோபம் அடைகிறான்.

இதற்கிடையில் ஜமீனின் ஒரே வாரிசு இராஜதுரை அம்சவல்லி மீது காதல் கொள்ளவும், இந்நிகழ்வு ஜமீனுக்கு தெரியவர, வேறொரு ஜமீன் பெண்ணை இராஜதுரைக்கு நிச்சயம் செய்ய, அவனோ அம்சவல்லியின் ஊருக்கே சென்று, வறுமையானாலும் காதலியோடு வாழ்கின்றான்.

இராஜதுரைக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனான போடி ஜமீன் பூபதிராஜா அவனை பழிவாங்க முடிவெடுக்கிறார். அம்சவல்லி குடும்பமோ பணம் மீது ஆசை கொண்டு அலைகின்றனர். அவள் மாமன் அங்கப்பனும் துன்பம் தருகின்றான். இதை தெரிந்து கொண்ட பூபதி, அம்சவல்லியை சீரழித்து, இராஜதுரையை கொலை செய்யவும் அடியாட்களை அனுப்புகிறான். இதே சூழலில் தமக்கு இழிவு ஏற்படுத்திய அம்சவல்லியை அழித்து விட்டு தன் மகனை அழைத்து வர கண்டமனூர் ஜமீன் ஆட்களை அனுப்பி வைக்கிறார்.

பணத்தாசைக் கொண்ட அங்கப்பனிடம் பணம் கொடுத்து அம்சவல்லியை தனியாக ஓரிடத்திற்கு வரவழைக்கிறான். அங்கு பூபதி அம்சவல்லியை தகாத பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயலுகிறான். அது கண்டு கோபம் கொண்ட இராஜதுரை துணிச்சல் கொண்டு ‘பூபதி’யை கொலை செய்துவிட, இருவரும் வேறிடம் நோக்கி ஓடுகின்றனர்.

ஒருபுறம் கண்டமனூர் ஆட்கள், மறுபுறம் போடி ஜமீன் ஆட்கள். இரு கும்பலும் இருவரையும் கொலை செய்யத் துடிக்கின்றனர். கண்டமனூர் ஆட்களில் ஒருவன் அம்சவல்லி மீது ஈட்டியை பாய்ச்சுகிறான். அதை முன்னால் நின்று இராஜதுரை தடுக்க, அவன் மீது ஈட்டி பாய்கிறது. அது கண்ட அம்சவல்லி ஈட்டியின் மீதி பகுதியினுள் தன் உடலைச் செலுத்தி தானும் இறந்துவிடுகிறாள்.

காதல் ஈர்ப்பினால் ஈருடலும் ஓருடலாய் ஈட்டியில் புகுந்து இருவருமே இறந்து போவதாக கதை முடிவடைகிறது.

இக்கதை அடிப்படையாக ஓர் மிகச்சிறந்த திரைப்படம் போன்று நகர்கிறது. ஆசிரியர் கதையின் உள்ளடக்கத்தை அமைத்து சென்றிருக்கும் விதம் மிகச் சிறப்பு. மிகச் சிறப்பான முறையில் கதை தொடக்கம், நகர்வு உச்சம் என மிக சரியாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. நிலவுடைமைச் சமூகத்தில் ஜமீன்தார்களின் நிலை, மக்களின் நிலை, கலை கூத்து நிகழ்த்துவோரின் நிலை காதல், அழிவுயென எதார்த்த நடைமுறைப் பதிவாய் உண்மையின் பிம்பமாய் உலவுகிறது இக்கதை.

கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தும் முறை, அவர்களை வருணிக்கும் போக்கு என ஒவ்வொரு எழுத்தும் சிற்பியின் கைவண்ணத்தில் இருக்கும் சிற்பங்களைப் போல. கவிதை நடையில் எதுகை, மோனையிலும் சொற்சுவை சொட்ட மிக அழகாக சுருக்கமாக எவ்வித சலிப்புமின்றி இறுதி வரை நகர்கிறது “ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்” புதினம். மிகச் சிறந்த மண் சார் பதிவாக, மானுடத் தேடலான காதலின் பிழிவாக, சமூகத்தில் எதார்த்த பிம்பமாக, நிலவுடமையின் காதல் கதையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து அவர்கள்.

 - முனைவர் பா.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306