அடிமை வாழ்க்கைக்கு அப்பால்!

periyar bookகேள்விகளுக்கு அப்பால் ஓர் உலகம் இருக்கிறது. அங்கே கலகக் குரல் கேட்பதில்லை. எல்லாம் அதன் விதிப்படி நடந்து கொண்டிருக்கிறது. பலன் பெறுவோரும் பழி சுமப்பவரும் மாற்றுச் சிந்தனைக்கு வழிவிடாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தச் செக்கு மாட்டு வாழ்க்கைக்குத் தயாராகிவிட்ட மனம் பதற்றமில்லாமல் அமைதியில் ஆழ்ந்திருக்கிறது. இப்படிச் சலனமற்ற தண்ணீரில், வீசப்பட்ட கல்லினால் எழும் அலைகளைப் போல மனத்தில் சிந்தனை அலைகளை உருவாக்கிய ஒருவர் உண்டு.

மலைகளும் பள்ளத்தாக்குகளும், காடுகளும், நீர்நிலைகளும், பிரம்மாண்டங்களும் நிறைந்த பூமிப்பந்தில் அந்தந்தக் காலத்தின் தேவைக்கு ஏற்ப அறிஞர்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களுடைய மூச்சு நின்று போனாலும் அவர்களின் சிந்தனை தலைமுறைகளைத் தாண்டி வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வாழ்ந்து வந்த சமுதாயத்தில் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்துச் சமூகத்தில் தீ மூட்டி அதில் குளிர்காயும் சூழ்ச்சிக்காரர்களின் முகமூடியைக் கிழித்துக் காட்டியவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

உணவகத்தில் வேற்றுமை, பள்ளிக்கூடங்களில் வேறுபாடு, கிணற்றில் தண்ணீர் இறைப்பதில் வித்தியாசம் பாராட்டும் இடத்திலிருந்து நாம் ஓரளவாவது வெளியில் வந்திருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் பெரியாரின் சுயமரியாதை இயக்கம்.

பெண்களுக்கானச் சொத்துரிமைச் சட்டமும் இந்த இயக்கத்தின் சாதனையே. பெண்கள் தங்களை மற்றவர் பார்வைக்காக அலங்கரித்துக் கொள்வதில் அடிமைத்தனம் வெளிப்படுகிறது எனத் துணிவுடன் குரல் கொடுத்தார்.

பெண்கள் பிரச்சினைகளைப் பெண்களே யோசிக்காத நேரத்தில் அவற்றை பிரச்சினை என்று சொல்வதற்கு ஓர் ஆணுக்கு என்ன புரிதல் இருக்க முடியும்? இவரைக் காட்டிலும் மிகச் சிறிய வயதில் இருக்கும் ஒரு பெண்ணை மணந்த இவருக்குப் பெண்ணுரிமை பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? நாட்டில் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒழுக்க முறைகள் மீது சுவர் எழுப்ப இவருக்கு யார் உரிமை வழங்கியது? பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகாது.

அப்படி ஒருவேளை பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைத்தாலும் ஆண்களால் பெண்களுக்கு விடுதலைக் கிடைக்காது என்று கருத்து கொண்ட இவரின் நூல் மட்டும் பெண் விடுதலைக்கு வழிவகுக்குமா? இவை போன்ற ஏராளமான கேள்விகளுக்கான பதிலாகத்தான் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகம் வெளிவந்தது.

ஓர் ஆணுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அது பெண்ணுக்கு இருக்கிறது என்று பெண்ணுரிமை பேசியவர். உடன்கட்டை, பெண் கல்வி மறுப்பு, வேலைக்குச் செல்லத் தடை, சொத்துரிமை இல்லாமை, தேவதாசி முறை போன்ற பெண்ணுக்கு எதிரான சமூக அவலங்களை ஒழிக்கக் குரல் கொடுத்தவர்.

தேவதாசிக்குத் தாலி கட்டுவது புரட்சி, விதவைக்குப் பூச்சூட்டுவது புரட்சி, என் கருப்பை என் உரிமை என்பது புரட்சி போன்ற புரட்சிக் கருத்துக்களைக் கொண்டவர். பிரான்சில் பிறந்த சிமோன் அம்மையாரின் ‘தி செகண்ட் செக்ஸ்’ என்ற 1949-இல் எழுதப்பட்ட நூலின் கருத்தும் 1942-இல் பெரியார் வெளியிட்ட ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலின் கருத்தும் ஒன்று போலவே இருப்பதும் இங்கே ஆழ்ந்த சிந்தனைக்குரியது!

ஒரு லட்சத்தைத் தாண்டிய பிரதிகளை, ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்ட இந்நூல் நூற்றுக்கும் குறைவான பக்கங்களுடன் எழுதப்பட்டிருந்தாலும் எடுத்துக் கொண்ட பத்துத் தலைப்புகளில் பேச வேண்டிய செய்திகளைத் தெளிவாக விளக்கிவிட்டது. எந்தப் புள்ளியில் ‘ஆண்மை’ என்ற உணர்வு அழிந்து போகிறதோ அங்கே பெண்களுக்கான விடுதலை தானாக மலர்ந்துவிடும் என்று நேர்மையுடன் பதிவு செய்யும் தந்தை பெரியார் தன்னை ‘ஆண்மை’ என்ற உணர்விலிருந்து விடுவித்துக் கொண்டவர். எனவே அவரின் இந்த நூல் பலருடைய வாசிப்புக்குள்ளாகி அடிமைத்தனத்திற்கு எதிராகத் திரும்பியிருக்கிறது.

ஒரே உலகத்தில் ஓர் இடத்தின் தட்பவெப்ப நிலை வேறு இடத்தில் இருப்பதில்லை. வண்டல் மண்ணில் விளையும் பயிர்கள் இயற்கையாகக் கரிசல் மண்ணில் விளைவதில்லை. ஓர் ஊரில் பின்பற்றப்படும் ஒழுக்கத்தைப் போல அடுத்த ஊரில் பின்பற்றுவதில்லை. ஒரு நாட்டின் சட்ட திட்டங்களும் வேறு நாட்டின் சட்டதிட்டங்களும் வித்தியாசப்படுகின்றன. ஆனால் ஒரு தனிமனிதனை அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இப்படித்தான் வாழவேண்டும் என்று நிர்பந்திப்பது எப்படிப் பொருந்தும்! இதற்குத் தீர்வு சொல்கிறார் பகுத்தறிவுப் பகலவன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு 1942-இல் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் இன்றைய தேவை என்ன என்ற கேள்விக்கு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்ணடிமைத்தனமே பதிலே அமைகிறது. பெண்களின் கருவறையில் இருந்துதானே ஆண் பிள்ளைகள் பிறக்கிறார்கள். அப்படி இருக்க பெண்களின் உணர்வைப் புரிந்து கொள்ள மறுத்து, அவர்களை அடிமைகளாக நடத்துவது ஏன் என்ற சந்தேகத்திற்குத் தோழர் அருள்மொழி, ‘‘பெண்களிடத்தில் தனக்கு விடுதலை பெற வேண்டும் என்ற விருப்பம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், அவர்களே தங்களை அடிமைகளாக நினைத்துக் கொள்ளும் நிலையில் ஆண்களின் சிந்தனையில் எப்படி மாற்றம் வரும்?’’ என்ற மறுமொழி இருக்கும்வரை இந்த நூலின் தேவை இருந்து கொண்டே இருக்கும்.

ஒரு சொல்லுக்கு இரண்டு பொருள்கள் இருக்கலாம் அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களும் இருக்கலாம். ஆனால் ஆணுக்கென்று ஒரு நீதியும் பெண்ணுக்கென்று ஒரு நீதியும் இருந்தால் அது நீதியாகுமா? அது அநீதியல்லவா? என்று சிந்திக்க வைக்கிறது இந்த எழுத்துக்கள். உதாரணமாக, ‘கற்பு’ என்ற பிற்போக்குத்தனத்தை, அடிமைத்தனத்தைப் பெண்ணுக்கு மட்டும் வற்புறுத்துவதும், அதற்கு வள்ளுவரைத் துணைக்கு வைத்துக் கொள்வதும் அறிவுக்குத் தகாத செயல். மதங்களின் பெயரால் எல்லா இழிவையும் தாங்கிக் கொண்டு வாழச் சொல்வது மனிதாபிமானத்திற்கும் ஏற்றதல்ல.

ஒரு சில இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதை முறையான வாழ்க்கை என்று பேசும் இச்சமூகம் பிழைப்புக்கு வழியில்லாமல் தன் உடலை விற்கும் அவலத்திற்குத் தள்ளப்படும் பெண்களைக் கடுமையாக விமர்சிக்கிறது. பிழைப்புக்காகப் பொய் பேசும் வியாபாரியையோ, வழக்கறிஞரையோ வேறு விதமாக விமர்சிப்பதில்லை.

மொத்தத்தில் ‘விபசாரம்’ என்ற சொல் பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் அம்புகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்தச் செயலுக்குத் துணை போகும் ஆணை வசைபாடுவதற்கு எந்தச் சொல்லும் இல்லை. சமுதாயத்தில் சமஅளவு வாழும் பெண்கள் மீது வன்முறையான சொற்பிரயோகம் சரியானதுதானா என்று மனசாட்சி உள்ள ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

காதல் என்பது அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் ஆகிய பொருள் கொண்ட சொல்லே தவிர அதைப் புனிதமாக்கிப் பூசிக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் ஒருமுறைக்கு மேல் காதல் பூக்காது என்ற இயற்கைக்கு ஒவ்வாத வியாக்கியானங்கள் தேவையில்லை என்பது ஐயாவின் தெளிவானக் கருத்து. குடும்ப வாழ்க்கையில் முழு இன்பமும் திருப்தியும் கிடைக்காத போது தனக்குப் பிடித்த இன்னொரு வாழ்க்கையைத் தேர்வு செய்துக் கொள்ளலாம். அதற்கு மாறாக, குடும்பம் – சடங்கு போன்றவற்றிற்காக வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்வது எப்படித் தீர்வாகும்.

ஓர் ஆண் தன் மனைவி உயிருடன் இருக்கும் போது வேறு ஒரு கல்யாணம் செய்து கொள்வது தவறு என்று கூச்சலிடுகிறது சமூகம். மதத்தின் பெயரால் இந்த வாதத்தை முன்வைக்கிறது என்றால் எந்த மதத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தைக் குற்றம் என்று சொல்லவில்லை.

அப்படியென்றால் முதல் மனைவியின் கதி பரிதாபத்திற்குரியதாக மாறிவிடுமே என்று இப்படிப் பரிந்து பேசுகிறது என்றால் பெண்களும் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையைத் தேடிக் கொள்ள வழி அமைத்துத் தரவேண்டும். இந்தச் சுதந்திரமும், சௌகரியமும் பெண்ணுக்கு அமைந்துவிட்டால் அப்போது அனுதாபமும் கவலையும் இருக்காது.

அதுபோல உயிர்க்கொலையைவிட உணர்வுக் கொலை கொடுமையானது என்று உணர்ந்து விதவை மறுமணத்தை ஆதரித்த பெருமையும் தந்தை பெரியாருக்கே உண்டு. இவரின் பிரச்சாரத்தின் பயனாக, பார்ப்பனர்கள் கட்டிக் காப்பாற்றிய கைம்மை கயமையை எதிர்த்து அதே சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர் கல்கி ‘கேதாரியின் தாயார்’ என்ற சிறுகதையை எழுதினார் என்றே சொல்லலாம். இப்படைப்பு விதவை கோலத்திற்கு எதிர்வினை ஆற்றுவதற்காகப் படைக்கப்பட்டது என்பதைப் படித்தவர் உணர்ந்திருப்பர்.

இன்று சொத்துரிமையும், குடும்பக் கட்டுப்பாடு சாதனங்களும் பரவலாக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை பற்றி மக்கள் யோசிக்காத ஒருநாளில் இதைச் சொல்லியிருக்கிறார். இன்றும் சில கல்வியறிவு பெறாத கிராமங்களில் சொத்துரிமையும், கர்ப்பத்தடையும் சாத்தியமாகவில்லை. அவ்வளவு ஏன் ஐயா பேசிய அந்த நாளில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி அம்மையாரும் குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் அதற்கு ஆதரவு தர மறுத்துவிட்டார் என்பது எவ்வளவு பெரிய அறியாமை!

பெரியார் தன் கொள்கைகளை வெறும் பிரச்சாரமாக இல்லாமல் அவற்றை வாழ்வில் கடைப்பிடித்துக் காட்டினார். அதற்கு எடுத்துக்காட்டாக, திராவிடர் கழகம் என்றால் மணியம்மையார் என்பது போல, சுயமரியாதை இயக்கம் என்றால் நாகம்மையார் என்பது வழக்கம். தோழர் ஈ.வெ.ரா.வாக இருந்தவர் ‘வைக்கம் வீரர்’ ஆனதற்கு நாகம்மையார் பங்கு அளப்பரியது.

அந்த அளவுக்குத் தன் இணையரின் சுதந்திரத்தைப் போற்றியவர். ஐயாவின் மறைவுக்குப் பின்னர் இயக்கத்தை எப்படியாவது தடை செய்துவிட வேண்டும் என்ற முயற்சியை முறியடித்தவர் அன்னை மணியம்மையார். ‘‘பார்ப்பன எதிர்ப்பு வேண்டாம், கடவுள் மறுப்புப் பற்றி அதிகம் வலியுறுத்த வேண்டாம்’’ என எச்சரித்த உள்துறை அமைச்சரிடம் ‘‘இந்தக் கொள்கைகளுக்காகத்தான் கட்சியே! நீங்கள் வேண்டுமானாலும் தடை செய்து கொள்ளுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்’’என்று திடமாகப் பேசியிருக்கிறார்.

விடுதலை என்பது சமனற்ற நிலையிலிருந்து சமமான நிலைக்குச் செல்வதே. மதவாத அமைப்புகள் ஆரம்பத்தில் பெண்களை இணைத்துக் கொள்ளாத போது பெண்களுடன் இயங்கும் சுயமரியாதை இயக்கங்களைப் பார்த்துப் பிழைப்புவாதத்திற்காகப் பெண்களைக் கொண்டு அமைப்பு உருவாக்கப்பட்டது என்றால் ஐயாவின் எழுத்துக்களின் வலிமை விளங்கும்.

அம்பேத்கரை இமய மலை என்றும் பெரியாரை எரிமலை என்றும் சமுதாயம் வியக்கிறது. 1970-இல் விடுதலைப் போராட்ட வீரர்களுக்காக வழங்கப்பட்ட தாமிர பட்டயத்தைப் பெரியாருக்கு வழங்கிய இந்திய அரசு 1973-இல் அஞ்சல் தலையையும் வெளியிட்டுப் போற்றியது.

இன்று உடுமலை சங்கர் மற்றும் கௌசல்யாவை இந்தத் தமிழ்நாடு மறந்திருக்காது. சாதியைக் காப்பாற்ற அநியாயமாக உடுமலைச் சங்கரைக் கொன்று கௌசல்யாவின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிய இதே மண்ணில் கௌசல்யா மறுமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கைக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டதற்குப் பின்னால் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற எழுத்துக்களின் பாதிப்பு இல்லாமல் இருக்காது.

உயர்ச் சாதி என்று கருதிக் கொள்வோர் பெண்ணடிமைத்தனத்தைப் பாதுகாக்கின்றனர் என்பதும், இன்று பெண்களுக்கான விடுதலைக் கிடைத்த போதும் காமுகர்களின் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்படும் பெண்களின் நிலைக்காக நாம் குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தையும் இந்நூல் வழி உணர்கிறோம்!

நூல் : பெண் ஏன் அடிமையானாள்?
ஆசிரியர் : தந்தை பெரியார்
நன்கொடை ரூ.40 மட்டும்
வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை

- முனைவர் சி.ஆர். மஞ்சுளா

Pin It