s ramakrishnan novel sancharamதஞ்சைப் பகுதியில் மட்டும் கொண்டாடப்படும் நாதஸ்வரக் கலைஞர்கள் நாம் பிறந்த கரிசல் வட்டாரப் பகுதியில் கொண்டாடப்படவில்லையே என்ற ஆதங்கத்துடன் விருதுநகர் மாவட்டத்தில் நாதஸ்வரக் கலைஞர்களோடு கரம்கோர்த்து பயணித்து, நாதஸ்வரத்தை மையப்படுத்தி அக்கலைஞர்களை சிறப்பிக்க எஸ்.ராமகிருஷ்ணன் உருவாக்கியதுதான் சஞ்சாரம் நாவல். விதைப்பின் விளைச்சலோ 2018-ல் சாகித்ய அகாடமி விருது.

நாவலில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வந்து சென்றாலும் முக்கியமாக பக்கிரி, ரத்தினத்தோடு நாவல் வாசிப்பவரையும் ஒரு கதாபாத்திரமாக உள்ளத்துள் உணரச் செய்து கதை நகர்த்துவதில் வெற்றி கண்டுள்ளார்.

மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்த நாவலாசிரியர், அதைச் சுற்றியுள்ள கிராமங்களையும் கதைக்காக நெடுந்தூரத்திலுள்ள ஊர்களையும், அவ்வூரின் சிறப்புக்களையும், மக்களின் நடவடிக்கைகளையும், வெளிநாட்டையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

முதல் அடி ரத்தினத்தின் பிடறியில் விழுந்தது என நாவல் தொடங்கும்போது ஆரம்பமாகிறது. முதலாவது ஊராக மூதூர், பின் தொடர்ச்சியாக அரட்டானம், அதில் மாலிக்கபூர் படையெடுப்பு, பின் நாதஸ்வரக் கலைஞர் லட்சயாவை டெல்லி பாதுஷா கில்ஜியிடம் அழைத்துச் சென்று வாசிப்பினால் எலுமிச்சை வாசனை வெளிவரும் என்பதை உணர்த்தி வடஇந்தியாவில் நாதஸ்வரம் கிடையாது என்பதை நமக்கு இந்நாவல் மூலம் புரியவைத்து கில்ஜியின் ஆட்சியையும் அருமையாக விளக்கியுள்ளார்.

பின் கரிசக்குளம், உறங்காப்பட்டி, ஒதியூர், மருதூர், அருப்புக்கோட்டை, சித்தேரி, கலிபோர்னியா, கொடுமுடி, பனங்குளம், சென்னை, லண்டன், சோலையூர், காரியாப்பட்டி, பொம்மக்காபுரம், நாரைக்குளம், திருச்சுழி, நடுக்கோட்டை கோயமுத்தூர், வேப்பங்காடு, புதுக்குடி, மதுரை பழங்காநத்தம், தொடுமாக்கல்-தென்மலை, மயில் சத்தத்தை ஞாபகப்படுத்திய மருதூருடன் சஞ்சாரப் பயணத்தை முடித்து வைத்துள்ளார்.

நாதஸ்வரக் கலைஞர்கள் உச்ச நட்சத்திரமாக திகழும்போது அவர்களின் நடவடிக்கைகளையும், அவர்களின் மனம் போகும் போக்கில் வாழ்வினை நகர்த்தும் செயல்களையும், எளிய கலைஞர்கள் தன் வாழ்வில் சந்திக்கும் இடர்பாடுகளையும், ஒவ்வொரு ஊருக்கும் நமை அழைத்துச் சென்று ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கண்முன் நிறுத்தி, நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்களை கண்டுகொள்ளாமால் கடந்து செல்லும் நமையெல்லாம் கையெடுத்து வணங்கிச் செல்ல வைத்து விட்டார்.

கரிசல் மண் காற்றில் பறப்பதை ஓர் கட்டத்தில் நம் தலைமுடியைக் கோதி தலையில் கரிசல்மண் தூசி இருக்குமோ என நமையறிமாலே தொட்டுப் பார்க்க வைத்த பாங்கு அருமை.

எளிய குடும்பத்தைச் சார்ந்தவராயினும், தன் மகளை கலிபோர்னியாக்காரன் திருமணம் செய்ததை ஏற்க மனமிருந்தும் ஊருக்கு கட்டுப்பட்டவராக வீட்டினுள் அனுமதிக்காமல் மெளனம் சாதிப்பவராக அத்தகப்பனை சித்தரித்திருப்பார்.

மது, மாது எவ்வளவு பெரிய ஆளையும் பாதாளத்துக்கு கொண்டு செல்லுமென்பதைப் பகிர்ந்து, எத்தவறு செய்தாலும் தண்டனை நிச்சயம் உண்டென்பதை பக்கிரி, ரத்தினம் இருவரும் காவல் துறைக்குப் பயந்து ஒவ்வொரிடமாக சஞ்சரிப்பதை காட்சிப்படுத்தி நாவலை முடித்து, நம்மை நாவலிலிருந்து மீள முடியாமல் தவிக்க வைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

நாவல்: சஞ்சாரம்
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
மூன்றாம் வெளியீடு: ஜனவரி 2019
பதிப்பகம் : தேசாந்திரி
விலை: ரூ.350/-

- செல்வக்குமார், இராஜபாளையம்

Pin It