எதிர் காற்று நாவலுக்குள் எதிர்காற்று நாவலுக்கு விருது கிடைத்த மாதிரி ஒரு காட்சி இருக்கும். அது தான்.. கண் முன்னால் சிறகசைக்கிறது. சௌமா விருதுகள்... இலக்கிய உலகில் எந்த இடம் என்று உணர்ந்தே இருக்கின்றோம். ஆகவே போட்டிக்கு அனுப்பும் போதே உள்ளூர எதிர் பார்ப்பு இருந்தது. ஒரு காலை வேளையில் கனவுக்குள் நுழைந்தது போல தமிழ் மணவாளன் சார் போன் பண்ணினார். செய்தி இது தான்.

"எதிர் காற்றுக்கு சௌமா விருது..."

ஆழ்ந்த அமைதியில் கண்களில் இருந்த தவிப்பை யாருக்கும் காட்டவில்லை. இதயத்தில் பொங்கிய தகிப்பை எனக்கும் காட்டவில்லை. ஜென் என இருந்தது அந்த நாள். ஏன் என நானும் கேட்கவில்லை.

எதற்கு இத்தனை உணர்ச்சி வயப்படல் என்றால்.. "எதிர்காற்று" ஒரு போராட்டம். அதில் இருக்கும் வாழ்வு எனதாகவும் இருக்கிறது. மரணத்தில் ஆரம்பித்து மன மாற்றத்தில் முடியும் நாவலின் போக்கில் அன்பும் பேரன்பும் தான் அடிநாதம். வன்மமும் குரோதமும் வரிக்கு வரி போட்டி இட்டாலும்... காதலும் கருணையும் தான் வாய் நிறைந்து நிற்கும். தத்துவமும் பால்யமும் எதிர் எதிர் நிற்கையில்.. உள்ளி மலைக்காட்டில்... உருவமலை காட்டில்... ஒரு வெள்ளந்தி சிறுவன் வேறு வழியின்றி நாயகனாக உருவெடுப்பதை எழுதும் போதே உள்ளூர ரசித்தேன். இனிக்க இனிக்க நிறைந்த தாள்களின் வழியே வீசிய எதிர் காற்றில்...கசப்புகளே கை பிடித்து அழைத்து சென்றன. அதில் வருத்தம் இல்லை. அந்த வடு தான்... இந்த படைப்பு.

மூன்று மரணங்களின் வழியே இந்த வாழ்வை புரிந்து கொள்ளும் ஒரு உச்சி மலைக்காற்று தான் இந்த எதிர்காற்று. திசைகள் எதிர் கொண்ட எல்லாமும் தான் எதிர்காற்றில் நிற்கிறது.

பிறகு அடுத்தடுத்து நண்பர்களுக்கு விஷயத்தை சொன்ன போது... அவர்களும் எதிர் காற்றில் பறக்க தொடங்கினார்கள். என் வாழ்வின் எல்லா எல்லைகளும் நண்பர்களாலே தான் தீர்மானிக்கப்படுகின்றது. தம்பிகளும்.. தங்கைகளும்.. அன்பர்களும்.. நண்பர்களும் என்று இந்த காற்றை எப்போதும் எதிர் கொள்ளும் இதயங்கள் அவர்களின்றி இந்தக் காற்றின் வேகம் கூடிக்கொண்டே போகாது. கொண்டாட்ட நாள் ஆகஸ்ட் 26 என்று முடிவானது. காத்திருப்பதில் இருக்கும் சுகம் காதலிக்கும் போது உணர்ந்தது.... அதை மறுபடியும் உணர்ந்தேன். உள்ளே சிறுவன் வெற்றி வந்து வந்து எட்டி பார்க்கிறான். வெளியே கவிஜி கம்பீரமாய் இருப்பதாக காட்டிக் கொள்கிறான். உள்ளும் புறமும் நடந்த விளையாட்டை நானே காணும் தருணம் வந்த நாளில் காலை 10 மணிக்கு சிங்காநல்லூரில் சங்கமம் என்று முடிவெடுத்திருந்தோம்.

கமல் முன்னமே வந்து காத்திருந்தான். நான் இந்த பக்கம் வந்து பேருந்து நிலையம் நுழைய நுழையவே... சரண் அந்த பக்கம் வந்து கண்களில் நுழைந்திருந்தாள். தம்பி காதலாரா வர இயலாத சூழல். வருத்தம் கொண்டு தூரத்தில் இருந்து வாழ்த்திக் கொண்டிருந்தான். சரி மணப்பாறைக்கு எந்த வழி பக்கம் என்பது தான் சிங்காநல்லூர் சித்திரத்தில் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்த ஆப்ஜெக்டுகள்.

திண்டுக்கல் தான் சிறந்த வழி என்று ஒரு யாத்ரீக நடத்துனர் நற் பயணத்தை தொடங்கி வைத்தார். சரி என்று திண்டுக்கல்லை சீனிக்கல்லாக்கி விட பேருந்தேறி அமர்ந்தோம். ம்ஹும் தேரில் அமர்ந்தோம். நினைத்தாலே இனிக்கும் சங்கதிகள் எத்தனை உண்டோ அத்தனையும் பேசினோம். அமைதி என்றால் எக்ஸ்ட்ரீம் அமைதி. பேச்சு என்றால் எக்ஸ்ட்ரீம் பேச்சு. பொதுவாகவே நாம் ஒரு எஸ்ட்ரீமிஸ்ட் என்பதால்... பேச பேச பயணம் சுலபமாக இருந்தது. நான் ஒரு கதை சொல்ல.. சரண் ஒரு கதை சொல்ல... கமல் ஒரு கதை சொல்ல... சொல்ல சொல்ல இனிக்குதுடா என்று தான் பக்கத்து பயணிகளும் சொல்லாமல் பார்த்தார்கள். இதுவரை யாருமே நீங்கள் பேசுவது தொந்தரவாக இருக்கிறது என்று எங்குமே சொன்னது இல்லை. ஒரு கட்டத்துக்கு மேல் ரசிக்கவே ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் இந்த பேருந்திலும் பேரின்பம் தான்.

திண்டுக்கல் கொஞ்சம் பழகிய கல்லாக இருக்க... மதியம் கண்களில் சூரிய கள்ளை கொட்டினாலும்... மணப்பாறை வாசம் மண்டைக்குள் அப்போதே வீச தொடங்கி விட்டது. நாங்கள் கோவையில் கிளம்பும் போதே அன்பன் விவெ திருப்பூரில் கிளம்பி விட... சரியாக திண்டுக்கல்லில் இணைத்து விட்டது பயண திட்டம். தம்பி உடையான் பயணத்துக்கு அஞ்சான். விவெ வந்த பிறகு விழிகள் சற்று ஓய்வெடுக்க ஆரம்பித்தன. வழியை அவன் பார்த்துக் கொள்வான். தயிர் சாதமும் சாம்பார் சாதமும் வயிறு நிறைக்க... மனம் நிறையும் நேரத்துக்கு தாவி ஏறினோம். திருச்சி பேருந்தில் வழி மணப்பாறை என்று மலர் பாறை உருளும் மனதுள் இனம் புரியாத அமைதி. இருந்தும் இசை உரியும் அவதி.

நடத்துனர் ரெண்டு பயில்வான் சேர்ந்த மாதிரி இருந்தார். குரல் மிரட்டியது.

நாலு பேரா.. யார் யாரு என்று கேட்கையில்... ஒரு நடத்துனரின் தோரணையில் துளியும் இல்லாத தோற்றம் நொடிகளில் சலனப்படுத்தியது. பின்னால் ரெண்டு பேர் என்று சொல்லி விட்டு.. சரணிடம்... "பாரு... யப்பா...!" என்பது போல முனங்கி சிரித்துக் கொண்டோம். அதே நேரம் எங்கள் பேச்சு தீரவே இல்லை. சாலையோரம் சற்று ஓடி அஞ்சு நிமிஷம் மூச்சிரைக்க நின்றால்... தொட்டு விட்ட மலையை ஏறவும் தொடங்கி விடலாம் போல. வழி நெடுக பேருந்தோடு... அந்த மலைகளும் குட்டி குட்டி கனவுகளோடு நகர்ந்து கொண்டிருந்ததை ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து வர்ணித்தோம். சொந்த கதை சோக கதைகளோடு இந்த மலைகளும் சேர்ந்து கொள்ள... இயல்பிலேயே உச்சி மலை மனதுக்காரன் எனக்கு சொல்லவா வேண்டும். இறங்கி ஓடி மலை மேலே ஏறி மாயமாய் மறைந்து விட்டால் என்ன..

"ஐயையோ அப்போ அவார்ட்...? என்று திட்டத்தை கை விட்டது கனவு.

எங்களுக்கு முன்னால் வலக்கப்பம் பக்கம் மூன்று பேர் அமரும் இருக்கையில் இருவர் அமர்ந்திருக்க... இருவரும் பெண்கள் என்பதால் ஒரு இளைஞன் இடம் இருந்தும் உட்காராமல் நின்று கொண்டே வந்தான். நம்ம பயில்வான் பின்னால் டிக்கெட் அடித்து விட்டு திம் திம்மென முன்னால் வந்தார். கம்பிகளே கூட நெளிந்து வழி விட்டது. அவர் நடைக்கு தகுந்தாற் போல பேருந்து நகர்ந்து கொண்டிருந்தது.

"தம்பி ஏன் நிக்கற.. கேட்டுட்டு உக்காரு.. இது தமிழ்நாடு.. வடநாடு இல்ல. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க...." என்று சொல்லி அவனை அந்த இருக்கையில் அமர வைத்தார். நொடியில் அவரின் பிம்பம் இன்னும் பெருமளவு கூடியது. சட்டென என் முகத்தில் வந்த கனிவை அவர் மீது கொட்டினேன். குரலால் மட்டும் அல்ல குணத்தாலும் மிரட்டிய பயில்வார்... மணப்பாறையில் இறக்கி விட்டு காற்று வெளியில் தூர புள்ளியாய் கரைந்து போனார்.

வெயில் வெச்சு செய்தாலும்... மணப்பாறை மலர் பாறையாக தெரிந்தது. ஆட்டோ பிடித்தோம். ஆடாமல் அரங்கம் அடைந்தோம். ஆக... நிகழ்வுக்கு வந்த முதல் ஆட்கள் என்ற பெருமையும் அடைந்தோம். படைப்பாளர்கள் அனைவருக்கும் தனித்தனியாக வைத்திருந்த பேனர்... கண்களில் வியர்வையை வார்த்தது. மனம் கனமாகி இலகுவாகும் வினோதம் உணர்கையில்... என்னோடு நானே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். சூரிய கீற்றுகள் எவ்வித திட்டமிடலும் இன்றி தலை மேல் ஒளி பாய்ச்சியது... பிரமிப்பை தந்தது. கீற்றின் தேற்றம் பற்றிய போது தெம்பு புதிதாக கூடியது.

பெரிய பள்ளி. வளாகத்தில் வெயில் உலாவ... அறிவிப்பு பெட்டியில் விருதாளர்களில் நானும் ஒருவனாக குல்லாவோடு குலாவிக் கொண்டிருக்க... ஒரு கணம் உள்ளே உடைந்தது. என் பாட்டி இருந்திருந்தா எப்பிடி இருந்திருக்கும்... அங்கயே சுத்தி போட்டு... ஆரத்தி எடுத்து... அதகளம் தான். ஆனாலும் கமலும் சரணும் விவெவும்... என்னை வித விதமாக போட்டோ எடுத்து அழகு பார்த்தார்கள். அரங்கத்தில் முதல் ஆளாக அமர்வது எப்போதுமே எனது இயல்பு. தாமதம் என் அகராதியிலேயே கிடையாது. அதை என் அவமானமாக கருதுவேன். ஒரு நிமிஷம் லேட்டா வந்த ஆட்களை கூட வெளியே நிற்க வைத்து மன்னிப்பு கடிதம் கேட்ட முன்னாள் ஹெச் ஆர்தனம் இன்னமும் உள்ளே சேர் போட்டு அமர்ந்திருக்கிறது. ஒரு மணி நேரம் கூட முன்கூட்டியே சென்று விடு. ஒரு நிமிடம் தாமதமாக செல்லாதே என்பது என் வாத வாக்கு.

மைக் டெஸ்டிங் நடந்து கொண்டிருந்தது. மெல்ல பேசி.. சிரித்து... சுற்றத்தை கவனித்துக் கொண்டிருந்தோம். மாணவ கண்மணிகள் ஆடுவதற்கு தயாராக ஒப்பனைக்குள் மிதந்து கொண்டிருந்தார்கள். கண்கள் அப்படியே அரங்கத்தை சுற்றியது.

"ஹேய்... யப்பா... எம்மாம் பெரிய ஃபேனு..."- ஆச்சரியப்பட்டோம். ராட்சச றெக்கைகளில் சத்தமின்றி சுழன்றிருக்க... போதுமான காற்று வெளியில் இருந்து வருவது போலவே வந்து கொண்டிருந்தது. சூடான காற்று இல்லை. சுகமான பாட்டு அது. ஆகாயத்தில் அமர்ந்திருந்த எதிர்காற்றுக்கு ஒரு காத்தாடி கவிதை போல ஜிவ்வென்று விளையாட்டு காட்டியது.

யாரோ என்னை நோக்கி வேகமாய் வருவது போல உணர்ந்தேன். மனம்... நம்மை நோக்கி தானா என்று யோசித்தது.. அதற்குள்ளாகவே அருகே வந்திருந்த தமிழ் மணவாளன் சார் கை குலுக்கி வரவேற்றார். அழுத்தம் நிறைந்த வரவேற்பு. முகம் முழுக்க சிரிப்பு பூத்த உறவேற்பு.

நேரம் கூட கூட கூட்டமும் கூடிக்கொண்டிருந்தது. குருமா வாசம் வேறு குடலை உருவிக் கொண்டிருந்தது. கூட்டம் விலக்கிக் கொண்டு கூட்டத்துக்கு விளக்காக வெண்ணிற மாலையாக நரை கூடினாலும்... கிழப்பருவம் தொடாத தீவிரமாக " அந்த காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்.." -க்கு சொந்தக்காரர்... ஓவிய கவிஞர்... ஐயா அமுதபாரதி அவர்கள் வந்து கொண்டிருந்தார். ஓடி சென்று கை கூப்பி கனிந்தேன்.

"ஐயா நல்லா இருக்கீங்களா...வீட்டில் எல்லாரும் சௌக்கியமா.... பிள்ளைங்க எல்லாம்....." என்று அத்தனை விசாரிப்பு. அத்தனையிலும் தமிழ் வனப்பு. பதிலுக்கு பரவசம் உணர்ந்து வந்து அமர்ந்தேன்.

நான் கூட அதே மூங்கிலை வைத்து ஒன்று எழுதி பாத்திருக்கிறேன். கிளாசிக்கை தொடக் கூடாது தான். இருந்தாலும் சிறுபிள்ளை ஆசை யாரை விடுகிறது.

"எந்தன் காட்டில்
எல்லா மூங்கிலும்
புல்லாங்குழல்"

ஐயாவோடு எனது முதல் சந்திப்பு 2014 ல் பாண்டிச்சேரியில். அவருக்கும் எனக்கும் ஒரே அறை. அவர் அவர் என்று தெரியாமல் அன்று இரவு நான் பேசின பேச்சு.. அய்யயோ... அதன் பிறகு அவர் அவர் என்று தெரிந்த பிறகு முகத்தை மூடிக்கொண்டு சிரித்தது....அவரும் சிரித்தார். அதன் பிறகு எப்போதும் அவர் என்றாலே அன்பு தான்.

விழா இனிதே தொடங்கியது. விலாவில் றெக்கை முளைக்கவும் தொடங்கியது. தேவதைகளின் ஆட்டம்... அற்புதமான தொடக்கம்.

முதல் படைப்பாளியின் பேர் சொல்லி அழைக்க.... அவர் சற்று தள்ளி இருக்க... இரண்டாம் பேர் எனது பேராக இருக்க... நான் முதலாவதாக மேடை ஏற வேண்டியதாகி விட்டது.

அப்போது என்னை முந்திக்கொண்டு ஒருவர்... "இருங்க இருங்க.. நான் மேல போயி உங்கள அழைச்சு அமர வச்சா தான் நல்லா இருக்கும்.." என்று சொல்லிக்கொண்டே கை கொடுத்து அழைத்து அமர வைத்தார். அவர் தான்.. இந்த சௌமா விருதுகளின் தூண்... கல்வியாளர்... கவிதையாளர் ஐயா ராஜரத்தினம் அவர்கள். முகம் முழுக்க சிரிப்பு. உள்ளம் முழுக்க பூரிப்பு. உற்சாகம் உடல்மொழியில். உலகன்பு உணர்மொழியில். மனம் பொங்க மௌனத்தில் புன்னகைத்தேன்.

இதுவரை இப்படி ஒரு மேடையை நான் பார்த்தது இல்லை. படைப்பாளர்களை மேடைக்கு மேல் மேடையிட்டு அமர வைத்து அழகு பார்த்தது. படைப்பாளிகள் தான் இந்த சமூகத்தின் சாட்சிகள். அவர்கள் தான் சமூக ரெப்ரெசெண்டேடிவ்ஸ். நாளைய சமூகத்துக்கு இன்றைய காலத்தை படம் பிடித்துக் காட்டும் போராளிகள். மக்களோடு மக்களாக இருந்து கொண்டே தவறுகளை சுட்டிக் காட்டி நல்லதுகளை எடுத்துக் காட்டி... என எப்போதும் ஓயாத கண்காணிப்பு கேமராக்கள் அவர்கள். படைப்பாளியைக் கொண்டாடும் சமூகமே உருப்படும்.

சௌமா அமைப்பு... உச்சி முகர்ந்து கொண்டாடியது. ராஜ கம்பீரத்தில் அமர்ந்திருந்தோம். இரண்டு வரிசையில் ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு மிடுக்கு. ராஜ கம்பீரம் அது. அது ராஜாவுக்கே வராது. படைப்பாளிக்கு தான் வரும். கண்ணார கண்டேன்.

வரவேற்புரையை மணவாளன் சார் செய்தார். உணர்ச்சி மிகுந்த பேச்சு. உள்ளம் முந்திக்கொண்டு தடுமாற... குரல் உடைய நீர் தேவைப்பட்டது. நிகழ்வு முன்னேற்பாட்டுக்கு அவர் உழைத்த களைப்பை அறிய முடிந்தது. நிகழ்வை நல்லபடியாக முடிக்க வேண்டிய அக்கறையின் நடை அவர் மேல் அங்கும் இங்கும் அலைந்த படியே இருந்தது.

அடுத்தடுத்து ஒவ்வொருவராக பேசினார்கள். கவிஞர் இளம்பிறை தனது வாழ்வில் இருந்தே வாக்கியம் அமைத்தார். திருமதி ராஜரத்தினம் அவர்கள் திடும்மென பேசும் சூழல். மிக அழகாக சிரித்துக் கொண்டே மைக்காண்டார். அவர் இதயத்தில் இருந்து பேசினார். தன் கணவரின் இதயமாகவே பேசினார். காதல் பொங்க அமர்ந்து ரசித்திருந்த ஐயா ராஜரத்தினம் அவர்களை பார்க்கும் போதே நமக்கு புன்னகை பிரகாசித்தது. ரசனையான தருண வர்ணம் அது. எல்லாரையும் பாராட்டும் ஐயாவை நாம் பாராட்ட வேண்டாமா என்று கவிஞர் கவி செல்வா செய்த அந்த மாலை மாற்று சம்பவம் தரம். கரம் கூடி கொண்டாடியது கூட்டம்.

அடுத்தடுத்து அவரவர் பாணியில் பேசி அசத்தினார்கள். மாண்பமை ஐயா திருவள்ளுவர்... பேசிய எல்லா வரியும் படைப்பாளர்களை பெருமைப் படுத்தின. எங்களுக்கும் மேலே நீங்கள்.. அதனால் தான் மேடை மேடைக்கு மேலே என்றாரே.. இதுவரை எழுதியதற்கும் இனிமேலும் எழுத போவதற்கும் பெருமை கொள்கிறேன்.

விருது வாங்கும் நேரத்திற்காக நண்பர் அமர் நெல்லையில் இதயம் துடித்திருக்க.. என் மன எல்லையில் எனக்காகவே இருக்கும் உயிர்கள் சில இசை மணக்க பூத்திருக்க...அந்த நேரமும் வந்தது...அந்தி நேர தென்றல் காற்றாக.

சட்டென கவிஞன் மனநிலை வந்து தலைக்கு மேலே தவித்தது. இப்ப குல்லாவை கழட்டணுமா... இல்ல அப்டியே தலைப்பாகை வைத்துக் கொள்ளலாமா என்ற நொடி நேர தவிப்பு. இல்லை இல்லை. தலைப்பாகைக்கு குல்லா இடைஞ்சல் செய்யும் என்று குல்லாவை கழற்றி விட்டு.. தலை கோதியபடியே மேடைக்கு முன் சென்றேன். ஒருவர் பண கவரை நீட்ட... ஒருவர் பொன்னாடை போர்த்த... ஒருவர் விருதை கொடுக்க... ஒருவர் தலைப்பாகையை தலையில் வைக்க... நொடிகளில் திக்கு முக்காட செய்து விட்டார்கள். திக்கு திசையே நம்மில் இருந்து தான் கிளம்பும் என்று யோசிக்க வைத்து விட்டார்கள். காலம் பிரீஸ் ஆகி பிறகு நகர்ந்தது. உணர்வில் முளைத்த நந்தவனம் நிலவோடு கதைக்க நேரம் கொடுக்க வேண்டும்.

இந்த தலைப்பாகை படைப்பாளிகளை இன்னும் ஒரு படி மேலே தூக்கி காட்டுவதாக நம்புகிறேன். எங்கிருந்தோ வந்த கம்பீரம்... எங்கேயோ விட்ட தமிழ்க் கொடை... எழுதுகிறவனின் நெஞ்சுறுதி என்று எல்லாமும் சேர்ந்து ஒரு குட்டி பாரதியாய் ஆனது போல... அப்படி ஒரு பிம்பம். ஒரு படைப்பாளி எதற்கு காத்திருக்கிறான். இந்த மாதிரியான அங்கீகாரத்துக்கு தான். நீ நல்ல எழுதற. இன்னும் எழுது.... எழுதி எழுதி இந்த சமூகத்துக்கு பயன்படு....என்று சொல்லும் அந்த ஒற்றை வாக்கியத்துக்கு தான்.

விருது வாங்கி வந்து அப்படியே அமர்ந்திருந்தோம். ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக்கொண்டோம். ஈகோ இல்லை. இறுமாப்பு இல்லை. இசை பட ஸ்தம்பித்தல் தான் எல்லாருக்கும். ஓரிருவரைத் தவிர எனக்கு வேறு யாரும் நேரடியான பழக்கம் இல்லை. சிலர் பெயர்கள் தெரியும். சிலர் முகங்கள் தெரியும். ஒருசேர கண்டு...புன்முறுவல்... எல்லாருக்கும் கொடுத்து எடுத்தோம்.

சரியான திட்டமிடல். நேர குறுக்கீடற்ற நிகழ்ச்சி நிரல்.. என்று அமர்க்களப் படுத்தி விட்டார்கள். Well Organised and Controlled Events. மேடையில் உதவுவதற்காக நின்ற இளைஞர்கள்... சும்மா கில்லி மாதிரி இருந்தார்கள். ஐயாவின் கண் அசைந்தால் கூட அதை புரிந்து கொண்டு அடுத்த கணம் அந்த விஷத்தை நிகழ்த்தினார்கள். அப்போதே புகைப்படம் எடுத்தார்கள். அப்போதே பிரிண்ட் போட்டு கவரில் தனி தனியாக கொடுத்தார்கள். அத்தனை துல்லியம்... அத்தனை விவேகம்... அத்தனை திட்டமிடல்... அட்டகாசம். பிரமித்து பார்த்தேன். அந்த இளைஞர்களுக்கும்... நிகழ்ச்சியை தொகுத்த தோழர்களுக்கும்.. உடன் இருந்து உதவிய அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் படைப்பாளிகள் சார்பாக வாழ்த்துகளையும் நன்றிகளையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இங்கிதம் என்பது மானுட வாழ்வில் பண்பாட்டின் ஒரு நிலை. அதை அத்தனை அற்புதமாக கடை பிடித்தார்கள். பொன்னாடையை எப்படி கொண்டு போவார்கள். விருதை எப்படி எதில் வைத்துக் கொள்வார்கள். எல்லாமே பெரிது பெரிதாக இருக்கிறது. தலைப்பாகையை தலையிலேயே வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஆக... அதற்கு ஒரு பை. அதற்குள் இனிப்பும் மணப்பாறை முறுக்கும். பையை பிரித்து அவர்களே ஒவ்வொன்றாக உள்ளே வைக்க உதவி செய்து காலுக்கு பக்கம் வைத்துக் கொள்ளுங்கள். கிளம்பும் போதும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி... அத்தனை பவ்யமாக கவனித்தார்கள். தண்ணீர் பாட்டில் சுற்றில் வந்து கொண்டே இருந்தது.

தேநீர் நேரத்தில் தேநீர்க்கு பதில் தூதுவளை ரசம்... காபிக்கு பதில் பருத்தி பால். உதடு விரிய கண்கள் இனித்தது.

விழா குறித்த நேரத்தில் முடிந்தது. நன்றியுரையில் உணர்வு பீறிட்டது. அடுத்து இரவு உணவு நேரம். இங்கும் கூட புதுமை தான். ஆம்லெட்... ஆப்பாயில்.. புல்பாயில் என்று முட்டை அயிட்டங்களை அவ்வப்போது ஹொட்டேல் மாதிரி ஆர்டர்க்கு செய்து கொடுத்து அசத்தினார்கள். ரெண்டு சின்ன தோசைகளில் இந்த பெரிய மனது ஆறி விட்டது. கூட ஆம்லெட்டுக்கு வழி செய்தது விவெவின் விழி. உணவு முடித்தோம்.. கனவு தொடர்ந்தது.

நிகழ்வை செவ்வனே நடத்தி முடித்த சௌமா இலக்கிய விருதுகள் - நிறுவனர்... பெருமைக்குரிய சௌமா ராஜரத்தினம் அவர்களுக்கும்... ஒருங்கிணைப்பாளர் பேரன்புக்குரிய தமிழ்மணவாளன் அவர்களுக்கும் உடன் இருந்து நிகழ்வை நடத்திய அனைத்து உள்ளங்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

கவிஜியை நொடியில் கவி விஜி ஆக்கி பிறகு சிரித்துக் கொண்டே கவிஜி ஆக்கிய தோழர் புனிதஜோதிக்கும் அருகே அமர்ந்து அப்போது தான் பழகினாலும் எப்போதிருந்தோ புன்னகை பூத்த முருங்கானந்தம் தோழருக்கும் "தட்டுநிலாக்க"ளை பரிசாக கொடுத்து விட்டு... வெளியேறினோம்.

"கவிஜி.... எதிர்காற்று படிச்சேன். நல்லா இருந்துச்சு" என்ற தோழர் அண்டனூர் சுரா அவர்களுக்கு நன்றிகளை அப்போதே சொன்னேன். இப்போதும் சொல்கிறேன்.

திரும்ப ஆட்டோ. திரும்ப திண்டுக்கல்லுக்கு பேருந்து. விருதுக்கு முன்னமே அத்தனை பேச்சு என்றால்... விருதுக்கு பின்... அதுவும் இப்படி ஒரு விருந்தோம்பலுக்கு பிறகு... பஸ்ஸில் யார் போனார். நாங்கள் கப்பலில் அல்லவா வந்து கொண்டிருக்கிறோம். ஹா.

திண்டுக்கல்லில் மேட்டுப்பாளையம் பேருந்து. அது கோவை போகுமா... போகாதா என்று ஒரு சிறு பட்டி மன்றம். தூங்கி கொண்டிருந்த பயணி ஒருவர்.. அது எப்படி கோயம்புத்தூர் போகாம போகும். காரைக்குடிலருந்து நான் டிக்கெட் எடுத்திருக்கேன். எப்பிடி போகாம போகும் என்று உரக்க கேட்டு விட்டு மீண்டும் தலை கவிழ்ந்து கொண்டார்.

சிரித்து விட்டோம். சத்தமாக. தித்தித்தது அந்த நேர பாவனைகள்.

பகலிலும் தூங்க மாட்டோம். இரவிலும் தூங்க மாட்டோம். எந்த பயணத்திலும் நாம் ஆந்தை தான். கமல் மட்டையாகி விட்டான். விவெ திருப்பூர் பஸ்ஸில் ஏறி விட... கோவை வரை மீண்டும் சரணும் நானும் சந்தமும் பல்லவியும் தான். பேச்சோ பேச்சு. ஆனால் குரலை குறைத்துக் கொண்டோம். வண்டு முணுமுணுப்பது போல இருந்த எங்கள் பேச்சு தாலாட்டி இருக்க வேண்டும். அருகே இருந்தவர்கள் ஒருவரும் அசையவில்லை. ஆழ்ந்த தூக்கம். பேருந்து சாலையில் வழுக்கிக் கொண்டே சும்மா தூள் கிளப்பியது. குண்டடம் தாண்டி பல்லடம் வரை தூசு கிளப்பியது. அப்போது அது பேருந்து இல்லை. மாட்டு வண்டி. வாழ்க சாலைத் துறை.

டாட்டா போட்டு சரண் மேட்டுப்பாளைய பேருந்திலேயே தொடர.. நாங்கள் சிங்கநல்லூரை திறக்க வந்தவர்கள் போல இறங்கினோம். பிறகு பைக் எடுத்தோம். பரவசம் பொங்க பறந்தோம். பொதுவாகவே நானும் கமலும் இரா பூச்சிகள். நடந்தும் செல்வோம். பைக்கிலும் செல்வோம். இரவென்றாலே குஷி தான். கல்லூரி நாட்களில் எத்தனை முறை இப்படி இரவு சாலையில் அலைந்திருப்போம்... என்று அந்த நாட்களின் கதைகள் பேசியபடியே அவனை வீட்டில் விட்டு.. நான் வீடு நோக்கினேன். இடையர்பாளைத்தில் ரெண்டு வருசமாக போடப்படாத சாலையை போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆழ்ந்த பெருமூச்சு விட்டு நகர்ந்தேன். அது சாலைத்துறைக்கு செய்த நன்றிகள். வாழ்க சாலைத் துறை.

வீடடைகையில்.... மணி 3. பிறகு நடந்த அத்தனையும் கவிக்குயிலிடம் சொல்லி விட்டு படுக்கையில் மணி 4. சீக்கிரம் விடியட்டும்.. கொண்டாட்டம் இன்னும் இருக்கிறது என்று சிரித்துக் கொண்டேன். தலைப்பாகையை 'சே' வுக்கு வைத்து பார்த்தேன். ராஜஸ்தான்காரன் மாதிரியே இருந்தான். அவனுக்கு அதே வீட்டு புத்தன் சிரிப்பு.

தலைப்பாகையை தலை தான் கழற்றி விட்டிருக்கிறது. இதயம் இன்னும் அணிந்து கொண்டு தான் இருக்கிறது. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. ஆனால் தூங்கினேன்.

- கவிஜி

Pin It