தமிழ்ச் சிறுகதை இலக்கியம் ஏறத்தாழ நூற்றாண்டு கால வரலாற்றைத் தொடவிருக்கிறது. தற்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதைத் துறையில், சிந்தனை ஆற்றல் நிறைந்த படைப்பாளிகளின் தனித்தன்மையான பார்வையினாலும் உழைப்பினாலும்  இதுவரை அது பெற்று வந்திருக்கும் மாற்றமும் வளர்ச்சியும் தமிழ் மொழிக்கு வளமும், பெருமையும் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

மேல் நாடுகளில் நிலமானிய அமைப்பு சிதையத் தொடங்கிய காலத்துத் தோன்றிய   இலக்கிய வகை புனைகதையாகும். விவசாயம் மற்றும் சிறு கைத்தொழில்களை மையமாகக் கொண்டு இயங்கிவந்த இந்தியச் சமூக அமைப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் சில மாற்றங்களுக்குட்பட்டது. நிலவுடமைச் சமூகம் மறைந்து முதலாளித்துவச் சமூகம் அறிமுகமானது. மேனாட்டாரின் புதிய நாகரிகமும், தொழில்துறைப் பொருளாதார அமைப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டன. நிலமானிய முறையின் சிறப்பம்சமான கூட்டு வாழ்க்கை சிதையத் தொடங்கியது. ஏற்கனவே, நடைமுறையில் இருந்த குலம், குடும்பம் என்ற சமூக நிறுவனங்களின் முக்கியத்துவம் குறைந்து தனிமனிதன் முக்கியமானவனானான். புதிதாகத் தோன்றிய பொருளாதார உறவுகள் புதிய சமூக உறவுகளை ஏற்படுத்தின. இப்புதிய சமூக உறவுகளைப் பிரதிபலிப்பதற்கு அப்போது வழக்கிலிருந்த இலக்கியங்கள் வலுவற்றவையாக இருந்தன.

இச்சூழ்நிலையில் பாரம்பரியக் கதைகளின் வழியாகப் புதிய இலக்கிய வகையொன்று தோற்றுவிக்கப்பட்டது. அப்புதிய இலக்கிய வகையே புனைகதையாகும். தனிமனிதன்-சமுதாயம் இரண்டிற்கும் உள்ள உறவு நிலைகளில் பிறழ்வு ஏற்படும்போது புனைகதை தோற்றம் காண்கிறது. ஏற்கனவே இருக்கின்ற சமுதாய அமைப்பிலும் மனித உறவிலும் மாற்றங்கள் உண்டாகும் போது அவை இலக்கியப் படைப்பாளர்களின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத் தாக்கம் சிறுகதை உருவாகக் கருவாக அமைகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒர் இலக்கிய வடிவமாகத் திகழ்ந்த  தமிழ்ச் சிறுகதை, அதுவரை பண்டிதர்களுக்கான இலக்கிய நடையாக இருந்த தமிழ் மொழியைப் பாமர மக்களின் பக்கம் எடுத்துச் செல்ல உதவிய ஓர் உத்தியாகவும் திகழ்ந்தது. தமிழ்ச் சிறுகதை வரலாறு பத்திரிகை வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுகிறது. நவீனச் சிந்தனை மரபும் இதழியல் கட்டமைத்த வடிவமும் சிறுகதை உருவாகக் காரணமாகக் கருதப்படுகிறது. தமிழில் இதழியல் மரபோடு சிறுகதை வடிவத்தை வடிவமைத்தவர் புதுமைப்பித்தன் ஆவார்.

சமூக, அரசியல் சிந்தனைகளைப் பரப்பப் பத்திரிகை ஒரு களமாக அமைந்தது போல இலக்கியக் கர்த்தாக்கள் தங்கள் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்ப இலக்கியத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். இதன்மூலம் சமூகத்தில் ஒரு புதிய எழுச்சியை உருவாக்கிவிடலாம் என்று நம்பினர். தமிழில் சமூக மறுமலர்ச்சி தோன்றியதன் துணை விளைவாகப் புதுவகை இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. அவற்றில் ஒன்றுதான் சிறுகதை என்னும் புதுவகைப் புனைகதை.

ஆங்கிலத்தில் முதன்முதலில் சிறுகதையைப் பற்றிய கொள்கை வகுக்க முயன்றவர் எட்கர் ஆலன்போ என்பவர் ஆவார். ‘ஒரே மூச்சில் சொல்லக்கூடிய அல்லது கேட்கக்கூடிய சுருக்கமான கதைதான் சிறுகதை’ என்கிறார் அவர். ஆங்கில இலக்கியத்தில் நாவல் தோன்றி நூறு ஆண்டுகள் கழித்து 1842-இல்  சிறுகதை தோன்றியது. தமிழ் மொழியிலும் நாவல் தோன்றி ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்குப் பின்னரே சிறுகதை தோன்றியது.

சிறுகதைக்கான மாதிரிகள் ஐரோப்பிய இலக்கியங்களிலிருந்து ஆங்கில வழியாகத் தமிழுக்குக் கிடைத்தது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் கதை சொல்லும் கலை ஆதி தமிழனின் அறிவுசார்ந்ததும், சங்கப் பாடல்களிலும், எழுதப்படாத வாய்மொழி- வசன  வடிவங்களிலும், நாட்டார் கதைகளிலும் புதைந்து கிடந்ததும்தான் என்று வாதிடுவோரும் உண்டு. இதனை மெய்ப்பிக்கும் வகையில், தமிழில் வசனத்தை இலக்கியமாகக் கையாள முடியும் என்கிற சோதனை முயற்சியைப் பதினேழாம் நூற்றாண்டிலேயே வீரமாமுனிவர் மேற்கொண்டிருக்கிறார். அந்த வகையில், விரமாமுனிவரின் ‘அவிவேக பரமர்த்த குருவின் கதை’, பின்வந்த புனைகதை எழுத்தாளர்களுக்கு  ஒரு முன்மாதிரியாக அமைந்தது. சமய மரபு சார்ந்த கதைகள் மற்றும் நாட்டார் மரபு சார்ந்த போதனைக்கதைகளும் இந்நூற்றாண்டில் வெளிவந்தன. இவை பூரணத்துவமடையாத சிறுகதை முயற்சிகளாகக் கருதப்பட்டன.

மேற்கத்திய நாடுகளிலிலிருந்து இறக்குமதியான நவீன சிறுகதை என்ற தனிவசன இலக்கிய வகையை ஒட்டித் தமிழிலும் இதே இலக்கிய வகை வளர வேண்டும் என்று வ.வே.சுப்பிரமணிய ஐயர் (1881-1925) எண்ணினார். பிற நாட்டாரின் சிறுகதைகளின் தாக்கத்தால்  தமிழில்,குளத்தங்கரை அரசமரம்’(1913) என்னும் புதுவகையான கற்பனைக் கதையை எழுதினார் வ.வே.சு. பின்னர்  இக் கற்பனைக்கதை உள்ளடக்கிய மேலும் பல கதைகளையும் சேர்த்து ‘மங்கையர்க்கரசியின் காதல்’(1917) என்ற தலைப்பில் வெளியிட்டார். இதுதான் தமிழில் வெளிவந்த முதல்  சிறுகதைத் தொகுப்பு நூலாகும்.

ஈசாப்பின் நீதிக்கதைகள் (1853), முப்பத்திரெண்டு பதுமைக் கதைகள்(1869), தமிழறியும் பெருமாள் கதை (1869), ச,ம. நடேச சாஸ்திரி தொகுத்த திராவிட பூர்வக் கதைகள்(1886) ஆகிய நூல்கள் ஐரோப்பிய மற்றும் கீழைத்தேயக் கதைகளின் மொழியாக்கம், தழுவல் மற்றும் தாக்கங்களின்  அடிப்படையில் எழுதப்பட்டவையாகும்.வ.வே.சு. ஐயருக்குப்பின் சிறுகதைகள் எழுதியவர்களுள் மகாகவி பாரதியார், மாதவையா, மணிக்கொடி எழுத்தாளர்கள்,புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன்,பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழ்ச் சிறுகதை இலக்கியம் தொடக்க காலத்தில் ‘கதை சொல்வதை’ மட்டுமே நோக்கமாகக் கொண்டு வளர்ந்தது. இப்படிக் கதை சொல்லி வளர்த்தெடுத்தவர் பி.எஸ்.ராமையா. பின்னர், சமூக அவலங்களைப் படம்பிடித்துக் காட்டும் கருவியாக அது மாறியது. சமூக மாற்றத்திற்கேற்ப மக்களைத் தயார் செய்யவும், இலக்கியத்தை ஒரு போராட்டக் கருவியாக மாற்றவும், இலக்கியத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்லவும் பலர் முயன்றனர். ‘சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மாணித்துக் காண்பிப்பது’என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்தியப் படைப்பிலக்கியங்களில் புனைவியலும்,லட்சியவாதமும்  முக்கியக் கருவாகக் கையாளப்பட்டு வந்தன. இந்நிலை சுதந்திரத்திற்குப்  பின் 1960-களில் கூட தொடர்ந்து இருந்து வந்தது. பாரதியாருக்குப் பின் தமிழ் உரைநடையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் உருவம், உள்ளடக்கம் இரண்டிலும் முன்னேற்றப் போக்கு ஏற்பட்டது. மேலும், தமிழ்ச் சிறுகதையில் ஒரு காலகட்டத்தில் மேட்டுக்குடியினரே கதைமாந்தர்களாக இடம்பெற்று வந்தனர். சிறுகதை மொழிகூட உயரிய நடையிலேயே அமைந்திருந்தது. சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள பெருவாரியான மக்களும், அவர்களுடைய மொழிநடையும்  இலக்கியப் படைப்புகளில் இடம்பெறத் தொடங்கிய நிலை பின்னரே உருவாயிற்று.

எனவே, பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ள   தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சி , தரம், திறம், உருவம்  முதலானவற்றை நமக்கு நாமே கணித்துக்கொள்ளவும் அவற்றைப் பிற மொழியினர்க்கு உணர்த்தவும் சிறுகதையின் கரு மற்றும்  மொழி நடையில் மாற்றங்களும் தேவை. இவற்றை உள்வாங்கிக் காலவாரியாகவோ, கருவரியாகவோ , வட்டார வாரியாகவோ சிறுகதைத் தொகுப்பு நூல்கள் தொடர்ந்து வெளிவர வேண்டியதும் மிகவும் அவசியம்.

அந்த வகையில், தமிழில் தஞ்சைச் சிறுகதைகள், சென்னைச் சிறுகதைகள், மதுரைச் சிறுகதைகள், நெல்லைச் சிறுகதைகள், பெங்களூர்ச் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. தில்லியைப் பின்புலமாக வைத்துப் படைப்பிலக்கியம் படைத்தவர்களுள் சிறுகதை இலக்கியத்திற்கு வளமூட்டிய படைப்புகள்- படைப்பாளிகள் கொண்ட தொகுப்பு ஒன்றை வெளிக்கொணரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தில்லியை வாழிடமாகக் கொண்டவர்களும், தில்லிக்கு வேலை நிமித்தமாக வந்துபோனவர்களுமாகிய தமிழர்கள்  தில்லியைக் களமாகவும், பின்புலமாகவும் ,  தில்லித் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுச்  சிக்கல்களைக் கருவாகவும் கொண்டு எழுதப்பட்ட  கதைகளின்  தொகுப்பு   ‘தில்லிச் சிறுகதைகள்’(தொகுப்பாசிரியர்: ச. சீனிவாசன். 2014, சென்னை: காவ்யா) என்ற தலைப்பில்நூலாக வெளிவந்துள்ளது. 

delhi short stories

இந்நூலில்,தில்லிச் சிறுகதைகள்- ஆய்வு முன்னுரை என்ற தலைப்பில் தமிழ்ச் சிறுகதை வரலாறும், தில்லி உருவான வரலாறும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தில்லிப் பின்புலத்தை வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில்,தொகுப்பாசிரியர் தமது சிறுகதைகள் தொகுப்பு அனுபவங்களையும்,தில்லி அனுபவங்களையும்  மனப்பகிர்வுகளாக இந்நூலில்  பதிவு செய்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 26 சிறுகதைகளும் அவற்றின் ஆசிரியர்களைப்பற்றிய விவரக் குறிப்புகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தில்லித் தமிழ்ச் சங்கம் இந்நூலை அறிமுகம் செய்து(13.03.2016) சிறப்பித்துள்ளது. விழாவில், டில்லியில் வாழும் கதையாசிரியர்கள் மற்றும் தொகுப்பாசிரியரைத் தில்லித் தமிழ்ச் சங்கம்   சிறப்புச் செய்து கௌரவித்தது.

தமிழ்ச் சிறுகதைகளில் பதிவாகியிருக்கும்  தில்லியின் பண்புகளை, தில்லிவாழ்த் தமிழர்களின் வாழ்வியலைத் திரட்டிக் கொடுக்கும் முயற்சி இது. பிற இந்திய மொழிகளிலும் இத்தகைய முயற்சிகள், கதைகள், தொகுப்புகள் நிச்சயம் இருக்கக் கூடும்.   இத்தகைய முயற்சிகள் இந்திய மொழிகளில் இதுவரை நடைபெறவில்லையென்றால் இனிமேலாவது மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

அனுபவங்களின் வெளிப்பாடுதான் இலக்கியம்.இலக்கியம் மனிதகுல வாழ்வனுபவங்களிலிருந்துதான் மலர்கிறது. சிறுகதைக்கும் இதர வகை இலக்கியப் படைப்புகளுக்கும் மனிதர்களும், வாழ்க்கையும்தான் ஆதார விஷயங்கள்.  இலக்கியம் வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுக்கிறது. இலக்கியம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறது, செழுமைப்படுத்துகிறது!. இத்தொகுப்பிலுள்ள பல சிறுகதைகள் பல படைப்பாளர்களால் அப்படிப் படைக்கப்பட்டவைதான். இச்சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகள் தில்லிவாழ்த் தமிழர்களின் வாழ்க்கையை, அனுபவங்களை, பண்பாடுகளை, தில்லியின் குணங்களை   வெளிப்படுத்துகின்றன.

இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைப் படைப்பாளர்களில் சிலர் இன்று நம்மோடு  இல்லை, சிலர் சென்னையிலும் சொந்த ஊர்களிலும் வாழ்கிறார்கள், டில்லியில்  வசிப்பவர்கள் சிலரே. அம்பை, இந்திரா பார்த்தசாரதி, காவேரி முதலான வாழும் எழுத்தாளர்கள் இம்முயற்சி குறித்துப் பெரிதும் பாராட்டியதுடன் தில்லி குறித்த தங்கள் சிறுகதைகளை அவர்களே தேர்ந்து தந்து உதவினர்.  

இத்தொகுப்பில், மறைந்த எழுத்தாளர்கள், வாழும் எழுத்தாளர்கள், மூத்த எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்கள், சமகால எழுத்தாளர்கள், கன்னி எழுத்தாளர்கள் என அனைத்துத் தரப்பினரின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. நகைச்சுவைக் கதை, வரலாற்றுக் கதை, சமூகக் கதை, பெண்ணியக் கதை, தலித் கதை எனப் பல வகைமாதிரிக் கதைகளைக் கொண்டதாகவும் இத்தொகுப்பு அமைகிறது. படைப்பாளர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் தில்லியின் பண்புகளைப், பின்புலங்களைப்  பதிவு செய்திருக்கின்றனர். இத்தொகுப்பிலுள்ள கதைகள்  ஒவ்வொன்றும் வேவ்வேறு நுட்பமான அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றன. இவற்றில் பல சிறுகதைகள் பல்வேறு காலகட்டங்களில் இதழ்களிலும், இலக்கிய மலர்களிலும், சிறுகதைத் தொகுப்பு நூல்களிலும் வெளிவந்தவை. ஒன்றிரண்டு கதைகள் கன்னிப் படைப்புகள்.

தில்லி மாநகரில் வாழ்ந்த , வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களின் அனுபவங்களை, நிகழ்வுகளை, சூழல்களைக் கருவாகக் கொண்டு, தில்லியைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதைகளில் பதிவாகியிருக்கும்  பண்புகள் சிலவற்றைச்   சற்று நோக்கலாம்.

டில்லியில் வசிக்கும் தமிழர் ஒருவருக்குத் தமிழ்நாட்டிலுள்ள அவரது சொந்தம் மற்றும் நண்பர்களால் ஏற்பட்ட நெருக்கடிகளை, தொந்தரவுகளை ‘சில தபால்களும் பல தொல்லைகளும்’ என்ற முதல் கதையில் நகைச்சுவை உணர்வோடு பதிவுசெய்துள்ளார் அகஸ்தியன். இது இவரின் சொந்த அனுபவமாகக் கூட இருக்கலாம்.

தில்லி போன்ற பெருநகரக் குடும்ப உறவுகள், ரகசியங்களில் ஆச்சர்யப்படுவதற்கு  ஒன்றுமில்லை என்பதை   ‘ஆச்சரியங்களுக்குக் குறைவில்லை’என்ற கதையில்  ஒரு பெண் பேராசிரியரின் தில்லி பயண அனுபவத்தினூடாக மெல்லிய நகைச்சுவையுடன் எழுதுகிறார் அசோகமித்திரன். தில்லியைக் களமாகக் கொண்டு கதைகள் எழுதிய ஆதவனின், காகித மலர்கள், என்பெயர் ராமஷேசன் ஆகிய நாவல்களிலும் இத்தகைய ஆச்சரியங்களுக்குக்  குறைவிருக்காது.

ரயிலில் பயணம் செய்த ஒருவரின் ரயில் ஸ்னேக நினைவுகளினூடே தில்லிக் குளிரின் தன்மை, இயற்கைச் சூழல்களுக்குத்  தக்கவாறு மாறும் தில்லியின் தோற்றம்,DTEAஎனப்படும் மதராஸிப் பள்ளிகள், டில்லியில் தமிழர்கள் நிலை முதலான தகவல்களை ‘அப்பர் பெர்த்’என்ற கதையில்ஆதவன் பதிவு செய்துள்ளார்.

தலைநகரின் முக்கிய இடங்களான இந்திரா ஜோதி, இந்தியா கேட், நார்த் பிளாக், சவுத்  பிளாக் ஆகியன குறித்தும் , டில்லியில் வருடம் ஒருமுறை நிகழும் சிறப்புப் பண்டிகையான  தஸரா குறித்தும், தில்லி உணவு, நொறுக்குத்தீனி வகைகள் மற்றும் தில்லியின்  பண்பாட்டுக் கூறுகளையும் ‘இந்தியா கேட்’ கதையில்  எழுதுகிறார் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி. கரோல்பாக் வீடுகளை பொந்துகள் என்று வர்ணித்திருப்பது இவருடைய அனுபவமாகவே படுகிறது. குடியிருப்பு வீடுகள்  தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போல் உள்ளது என்றும், நம்முடைய வீட்டுத் தளம் கீழ் வீட்டுக்காரருக்குக் கூரை என்றும் தில்லி அரசுக் குடியிருப்பு வீடுகள் குறித்து லக்ஷ்மி கண்ணன் தமது நாவல் ஒன்றில் எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது.

1955-இல் டில்லியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் மஞ்சள் காமாலை நோய் பரவி அதில்  பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவிய அனுபவங்களை இந்திரா பார்த்தசாரதி  தமது ‘மனிதாபிமானம்’என்ற கதையில் பிரஸ்தாபிக்கிறார். இது இக்கதை ஆசிரியரின் அனுபவமாகவே தோன்றுகிறது. டில்லியில் 1950-களில் ஆட்டோக்கள் கிடையாது, டாக்சிக்கள் மட்டும்தான்  இருந்தன என்று இந்திரா பார்த்தசாரதி  எழுதியிருப்பது நுட்பமான செய்தி.

டில்லியில் வசிக்கும் நடுத்தரக் குடும்பப் பிரஜை ஒருவர் குளிருக்காக ஒரு கோட்டு வாங்கப் பட்ட பாட்டைக் ‘கோட்டு’ என்ற தலைப்பிலான கதையில்  பதிவு செய்துள்ளார் கலாஸ்ரீ. தில்லியின் குளிர்கால  ஆரம்பக் காற்றின் சுகத்தையும், தீவிரக் குளிரின் கொடுமையையும் அனுபவித்தே இக்கதை  எழுதியிருக்க வேண்டும். வேனிற் காலத்தைவிடக் குளிர்காலம்தான் இதமாக  இருக்கும் என்று அவர்  எழுதியிருப்பதே இதற்குச் சான்று.

சேலத்திலிருந்து பிழைப்புத் தேடி ரயிலில் இலவசமாகப் பயணித்துத் தில்லியில் தஞ்சமடைந்த ஒரு ஏழைப் பெண்ணின் துயரங்களைச் ‘சேலத்துச் சீமான்’ என்ற கதையில்  விவரிக்கிறார் கஜமுகன். ஏழைகள் நேர்மையானவர்கள் என்பதை இக்கதை மெய்ப்பிக்கிறது.

பாபாகடக்சிங் மார்க்கில் உள்ள காஃபி ஹோமில் ஓய்வு பெற்ற தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடபேறும் சம்பாசணைகளில் விரிகிறது காவேரியின் ‘அப்பா உங்களுடன் ஒரு வார்த்தை.’ என்ற கதை. காஃபி ஹோம் அருகிலுள்ள எம்போரியங்களும் கதையில் இடம்பிடித்துள்ளன.

சு.சமுத்திரத்தின் ‘ஏவாத கணைகள்’ ஏசியன் கேம்ஸை ஞாபகப்படுத்துகிறது. கரோல்பாக் மெஸ்களில் சாப்பிட்ட அனுபவம் சு.சமுத்திரத்திற்கு இருந்திருக்க வேண்டும்.

தில்லியிலுள்ள தமிழ்க் கோவில் ஒன்றில் ‘ஆங்கிலத்தில் அர்ச்சனை செய்யப்படும்’ என்று போர்டு வைக்கப்பட்டிருந்ததன் விழைவுதான் சாமி முத்துவின் ‘எத்தனாவது சம்பவாமி யுகே! யுகே!’. என்ற கதை. இப்பிரச்சினையை நேர்படுத்தும் முயற்சியினூடாக நடந்த விவாதத்தில்  பிராமணர்கள் திராவிடக் கட்சிகளால் விரட்டப்பட்டு 1950-களில் வடக்கே வந்த வரலாறு ஒரு பிராமணக் கதாப் பாத்திரம் வாயிலாகவே  இக்கதையில்  பதிவு  செய்யப்பட்டிருக்கிறது. தமிழர்கள் சேரிகளில் வாழுகின்ற அவலம், சேரிமக்கள் தில்லிக்கு  வந்த சூழல் ஆகியவை, குறுகிய காலமே டில்லியில் வசித்த இக்கதை  ஆசிரியரை நெருடியிருக்க வேண்டும்.

முன்னாள் பாரதப் பெண்பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வினால் உண்டான கோரமான வடுக்களை ‘பிளாக் நம்பர்:27 திர்லோக்புரிஎன்ற கதையில்  பதிவாக்கியுள்ளார் சாருநிவேதிதா. கிழக்கு தில்லியின் தன்மைகள், குணங்கள் மற்றும் புளூ ஸ்டார் நடவடிக்கைகள் கூடக் கதையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தேசப்பிதா மீது  சுந்தாவுக்கு இருந்த பக்தியும், மரியாதையும் அவரது ‘மேரியும் மகாத்மாவும் ’என்ற கதையில்  வெளிப்படுகிறது.

‘ஒரு மயக்கத்தின் சிதைவுகள்’   என்ற கதையில் சிதைந்த நினைவுகளை அசைபோட்டுப் பார்த்துள்ளார் கதையாசிரியர் சுப்பிரமணியன். நினைவுகளினூடே கன்னாட் சர்க்கஸ்,JNU, கிரீன் பார்க், பாலம் ஏர்போர்ட் ஆகியன வந்துசெல்கின்றன.

‘பெண்கள் வருஷம்’ என்ற சிறுகதையில் சர்வதேசப் பெண்கள் வருசத்தைக் கொண்டாடியிருக்கிறார் எழுத்தாளர் சுஜாதா. பெண்ணியக் கதை வரிசையில் வைத்து  மகுடம் சூட்டப்படவேண்டிய கதை இது.

 சபல புத்தி உள்ள உயர் அதிகாரி, உயர் பாதுகாப்புள்ள சாணக்யாபுரி பகுதியிலும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை எனத் தில்லியின் துர்குணங்களையும், போலி முகங்களையும் ‘டாலி தூங்க இவர் பார்க்க’ என்ற கதையில்  உடைத்தெறிந்துள்ளார் பாலகி என்னும் கதையாசிரியர். சர்தார் பட்டேல் மார்க், சென்ட்ரல் செக்ரடேரியட்,  ரிவோலி, பாபா கடக்சிங் மார்க், வெலிங்டன், சூப்பர் பஜார், காபி ஹோம், சாந்திபாத், ஜெர்மன் எம்பசி எனப் புது தில்லியின் முக்கிய இடங்களின் வழியே நம்மைப் பயணிக்க வைக்கிறார் கதையாசிரியர். 

வேணு சித்தப்பா தில்லிக்கு ரயிலில் வந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பிய இடைப்பட்ட காலத்தில் டில்லியில் நிகழ்ந்த சம்பவங்களை‘ரயிலில் வந்து விமானத்தில் திரும்பியவன்’ என்ற கதையில்  சம்பாசணைகளின் கோர்வையாக்கியுள்ளார் பூதுகன் என்னும் கதையாசிரியர்.டில்லியில் வேணு சித்தப்பா சென்று வந்த இடங்களாகக் கன்னாட் பிளேஸ்,ITO, கரோல்பாக், நேரு ஸ்டேடியம், கோவிந்தபுரி, கால்காஜி, லஜ்பத் நகர், ஜங்க்புரா எனப் பட்டியல் நீளுகிறது. இக்கதையில் வரும் உறவினரின்  வீட்டைப் பார்த்து எலிப்பொந்து என்று எள்ளி நாகையாடிவிட்டார் வேணு சித்தப்பா .

அம்மா-மகன் இடையேயான அன்பு, பாசத்தைத் தில்லிப் பின்புலத்தில்‘அம்மா!...  அம்மா! ...’ என்ற கதையில் எழுதியிருக்கிறார் நாடக நடிகரான பூர்ணம் விசுவநாதன். கதையில் வரும் மகன் கதாப்பாத்திரம் பூர்ணம் விசுவநாதனாகக் கூட இருக்கலாம்.

டில்லியில் 89-ஆம் நம்பர் பஸ் ரூட்டில் உள்ள பேருந்து நிறுத்தங்களின் பின்னணியில் ‘லீடர்’ என்ற கதை நகர்கிறது. கதை ஆசிரியர் பொன்ராஜா கதைக்குள் இருக்கிறார் மறைவாக!.

டில்லியில் வாடகைதாரர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைத் ‘திருட்டு’ என்ற கதையில் எழுதுகிறார் கதையாசிரியர்  மாரியப்பன். களவு கொடுத்தவருக்குத்தான் அதன் நஷ்டமும், வலியும், வேதனையும் தெரியும். தில்லியில் வாடகை வீட்டில் வசித்த தமிழர் ஒருவரின்  நஷ்டப்பட்ட அனுபவம் அப்பட்டமாகப் பதிவாகியிருக்கிறது.

மருத்துவ சிகிச்சை பெற அண்டை மாநிலத்திலிருந்து தில்லிக்குப் பயணப்பட்ட ஒரு சராசரித் தந்தை – மகனின் ஆசை, நிராசைகளைப் ‘பார்வையை மீட்க’ என்ற கதையில்  விவரிக்கிறார் ராமாமணி சுந்தர். பிர்லா மந்திர், ராஜ்காட், இந்தியா கேட் அறிமுகம் வாயிலாகத் தில்லி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

டில்லியில் தமிழர்கள் IAS,IPS அதிகாரிகளாக மிளிர்வதை ‘முறையீடு’ என்ற கதையில்   பதிவு செய்துள்ளார் ராகவன் தம்பி. தில்லி போலீஸாரின் அலட்சியப் போக்கைத் தைரியமாகக் கதையில் முறையிட்டுள்ளார்.

டில்லியில் வாடகை வீட்டிலிருந்து அரசு குடியிருப்பிற்கு மாறிய ஒரு நடுத்தரத் தமிழ்த் தம்பதியினரின் அனுபவத்தை ‘அவள் ஒரு மாதிரி’யில் எழுதுகிறார் லட்சுமி ரமணன். பெண்களின் அதீத கோபத்திற்கும், சந்தேகப் புத்திக்கும்  அடிப்படைக் காரணம் கணவனா? மனைவியா? என்ற பட்டிமன்றம் நடக்கிறது கதையில். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குறைபாடு உடைய பெண்கள் அதிகம்  கோபப்படுவார்கள் என்று மருத்துவ நூலொன்றில் படித்த நினைவு. குற்ற உணர்வும், இரத்த அழுத்தமும் கோபத்தைத் தூண்டும் காரணிகள் என்பதை கதை ஆசிரியர்அறிந்திருக்கக்கூடும். ‘அவள் ஒரு மாதிரி’என்ற கதையைப் படித்த போது,தவறு செய்துவிட்டுப் பயம் மற்றும் குற்ற உணர்வினால் முன்னுக்குபின் முரணாகப் பேசும் பெண்கள் பற்றி ஆ. சிவசுப்ரமணியன் எழுதிய‘சாமியாடும் மனைவிகள்’என்ற கட்டுரை நினைவுக்கு வந்தது.

பார்வையற்ற இரு மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்க, பேச  உதவிய அனுபவத்தை ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’  கதையில் பேசுகிறார் மனிதாபிமானமிக்க ஷாஜகான் என்னும் எழுத்தாளர் . புதுமை படைக்கும் புதியவன் இவர்.

டில்லியில் வசிக்கும் வட இந்திய வடகைதாரரான பாட்டியா என்பவர்  வீட்டில் நிகழும் சம்பாசணைகளை, நிகழ்வுகளை ‘பாட்டியா வீட்டில் குழந்தைக் காட்சி’   என்ற கதையில் தி.ஜானகிராமன் விவரிக்கிறார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் முனீர்க்கா பகுதியின் இயல்புகளை ‘லவ் பேர்ட்ஸ்’ என்ற கடைசிக் கதையில் யதார்த்தமாக எடுத்துரைக்கிறார் கவிஞரும் எழுத்தாளருமான ஜோதி பெருமாள். ஒரு மாடியிலிருந்து இன்னொரு மாடிக்குத் தாவிவிடக்கூடிய அளவிற்கு நெருக்கடியான தெருக்கள், வீடுகள் நிலநடுக்கம் வந்தால் தப்பிப்பது சிரமம் என்று உற்றுநோக்கி அனுபவப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார்.

தமிழ்ச் சிறுகதை தொடர்ந்து  வளர்ந்து கொண்டிருக்கிறது. புதிய இலக்கிய வகைகளோடு போட்டியிட மேலும் வளரவேண்டியுள்ளது. தமிழ்ச் சிறுகதையில் புதிய உத்திகளும், புதிய போக்குகளும் திறமையான படைப்பாளர்களால் எடுத்தாளப்படுகின்றன. சோதனை முயற்சிகள்கூட மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் வெற்றிகளையும், நிலைப்புத் தன்மைகளையும் காலம்தான் கணிக்கும். எனினும், புதிய முயற்சிகள் தொடர வேண்டும்.

சமூகத்தின் அத்தனை அம்சங்களையும் உற்று நோக்கி, தமக்கெனத் தனித்த பார்வையோடு சிந்தித்துப் படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபடுகிற திறமையான படைப்பாளர்கள் கவனிப்புக்கு உரியவர்கள். அவர்களுடைய எழுத்துக்கள் தனித்தன்மையானவை என்னும் சிறப்பைப் பெறுகின்றன. அந்தவிதமான இருபத்தி ஆறு எழுத்தாளர்கள் எழுதிய, தில்லியைப் பின்புலமாகக் கொண்ட  குறிப்பிடத்தகுந்த சிறுகதைகள் மட்டும் இத்தொகுப்பு மூலம் அளிக்கப்பட்டிருக்கின்றன.

தில்லியைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட எல்லாச் சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுவிட்டன என்று சொல்வதற்கில்லை. தில்லியைப் பின்புலமாகக் கொண்டு கதைகள் எழுதிய கதையாசிரியர்களை முடிந்தவரை தேடிவிட்டது போலத்தான் தோன்றுகிறது. ஒரே கதையாசிரியர் தில்லிப் பின்புலத்தில் பல கதைகள் படைத்திருப்பினும் அவற்றுள் சிறந்த ஒரு கதையை மட்டுமே தேர்வுசெய்யப்பட்டுள்ளது.  சிறுகதைகள் சேகரிப்பில் ஓரிரு கதையாசிரியர்களும் அவர்கைன் கதைகளும்  விடுபட்டிருக்கவும்  வாய்ப்புள்ளது. எனினும்,தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட மட்டத்தின் வளர்ச்சி நிலையைக் மதிப்பிட உதவும் ஒரு அளவுகோலாக இத்தொகுப்பு பயன்படும்.

தில்லியிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் தமிழ் மாணவர்களுக்குப் பாடப்புத்தகமாக இச் சிறுகதைத் தொகுப்பு நூல்  பயன்படலாம். தில்லிக்கு வெளியே தமிழ்நாடு உட்படப் பிற மாநிலங்களில் தமிழ் கற்பிக்கப்படும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்குத் தில்லிப் பின்புலத்தைப் புரிந்து கொள்ளவும்  இத்தொகுப்புப் பெரிதும் பயன்படும்.

தமிழகத்தின் பிற நகரங்கள் குறித்த வட்டாரச் சிறுகதைகளைத் தொகுப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது தில்லிச் சிறுகதைகளைத் தொகுப்பது. ஒருவர் தமிழகத்தில் இருந்துகொண்டு தில்லிப் பின்புலச் சிறுகதைகளைத் தொகுக்க முயற்சிப்பது எளிமையன்று. 1940-களில் தில்லியில் குடியேறிய படைப்பாளர் ஒருவரின் சிறுகதை கூட இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இத்தொகுப்பாசிரியர் தில்லியில் வாழ்வது இதைச் சாத்தியமாக்கியுள்ளது.

‘தில்லிச் சிறுகதைகள்’ தொகுப்பிற்காகக் கதைகளை தேடி வாசித்தபோது,வாசிப்பினூடே தில்லியில் பார்த்த இடங்கள், போய்வந்த இடங்கள், கேள்விப்பட்ட இடங்கள், சுற்றிப்பார்த்த இடங்கள் எனத் தில்லி முழுக்கப் பயணித்த உணர்வு உண்டானது. மனக்கண்ணில் காட்சிகள் தோன்றி மறைந்தன! வித்தியாசமான அனுபவம்தான்!. இவ்வனுபவம்,இத்தொகுப்பிலுள்ள கதையாசிரியர்களின் பிற இலக்கியப் படைப்புகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

‘தில்லிச் சிறுகதைகள்’ எனும் இத்தொகுப்பு நூலை வாசிக்கிற இலக்கிய ஆர்வலர்களுக்கும் இதே உணர்வு ஏற்படலாம்.

முனைவர் ச.சீனிவாசன், தமிழ் இணைப்பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி, புது தில்லி- 110 021