மனித வரலாற்று வளர்ச்சியில் இருபதாம் நூற்றாண்டு குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. காரணம், வியக்கத் தகுந்த நிகழ்வுகளும், மாற்றங்களும் முன்பு எப்போதையும் விட அதிகமாக நிகழ்ந்தன. அவற்றின் பின்னணியில் மாமனிதர்கள், அளவு கடந்த கருணையுடன் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு மனித சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றி வரலாற்றை முன் நகர்த்தினார்கள்.

இரண்டு உலகப் போர்கள் ஒரே நூற்றாண்டில் தோன்றி மனித குலத்தைச் சீரழித்தன. கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். இயற்கைச் செல்வங்கள் தாறுமாறாகச் சிதைக்கப்பட்டு, உயிரினங்கள் அளவு கடந்த துன்ப துயரங்களுக்கு உள்ளாகின. முடியாட்சிக்கும், காலனி ஆட்சிக்கும், ஏகாதிபத்திய ஆளுமைக்கும் எதிராக உலகமெங்கும் மக்கள் தொடர்ந்து போராடினார்கள். பாசிச சக்திகள் கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தன. முன்பு எப்போதையும் விட வரலாறு காணாத வகையில் மக்கள் பல வகையான இழப்புக்களுக்கு உள்ளாகினர். இரு சோசலிச சமுதாயங்கள் மக்களின் அர்ப்பணிப்பு மிகுந்த புரட்சிகளின் விளைவாக உலகில் மலர்ந்தன. காலனி ஆதிக்கங்களிலிருந்து மக்கள் படிப்படியாக விடுதலை பெற்று தன்னியல்பில் வளர்ந்து வளம் பெற்றார்கள். தன்னுரிமை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயர்ந்த கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தி மனித குலத்தை உயர்த்தி அமைதியையும், மகிழ்ச்சியையும் உலகளாவிய அளவில் நிறுவ வியக்கத் தகுந்த மனிதர்கள் பரவலாகத் தோன்றினார்கள். மக்களுடைய மனங்களில் புதிய எண்ணங்கள் மலர்ந்தன.

tha pandian nelson mandelaமாமேதை லெனினும், மாவோவும் இரு வேறுபட்ட உழைக்கும் மக்களின் புரட்சிக்குத் தலைமையேற்று மனித வாழ்க்கையின் அடித்தளங்களை மாற்றி அமைக்க மக்களை வழிநடத்தினார்கள். மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸின் சமுதாய அறிவியல் கண்ணோட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்டன. மகாத்மா காந்தி போன்ற அகிம்சைப் போராட்டத் தலைவர்களும் உலகளாவிய அளவில் அங்கங்கே தோன்றினார்கள். மக்களுக்குத் தலைமை வகித்து வரலாற்றை முன்னெடுத்துச் சென்றார்கள். தன்னுரிமை பெற்ற நாடுகளில் படிப்படியான மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன.

உலகமயமாதல் என்ற புதிய சூழலால் நவீன காலனியாதிக்கம் நிறுவப்பட்டுப் பரவலாகிவரும் நிலைமையில் தேசியக் கண்ணோட்டத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் மக்களுக்காகப் போராடிய சில மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறு புதிய தலைமுறையினருக்காக வெளியிடப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.

தோழர் தா.பாண்டியன் அவர்களின் உலகளாவிய வரலாற்றுக் கண்ணோட்டத்தில், மூன்று மாமனிதர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த வாழ்க்கை அனுபவங்களும், போராட்டங்களும் தனித்தனியான வாழ்க்கை வரலாற்று ஆவணங்களாக கலை அழகுடன் வடிவமைக்கப்பட்டு தற்போது வெளிவந்துள்ளன. அவைகள்தான், நெல்சன் மண்டேலா, பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா ஆகியோர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், இயல்பான தெளிவான உணர்வு ரீதியான மொழிநடையில் வாசிப்புக்கு உகந்த விதத்தில் விறுவிறுப்புடன் அவை மூன்றுமே எழுதப்பட்டுள்ளன. அந்த மூவரின் வாழ்க்கை வரலாற்றுப் பின்னணியில், உலக வரலாற்றில் நிகழ்ந்த, மக்கள் நல்வாழ்வுக்கான போராட்டங்களின் வெற்றி தோல்விகளை இனம் காண முடிகிறது. அரசியல் விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் அவை மூன்றுமே அமைந்துள்ளன என்பதுதான் உண்மை.

அந்த மாமனிதர்கள் மூவருமே மாறுபட்ட வரலாற்றுச் சூழலில், வேறுபட்ட நாடுகளில் தோன்றி தனிப்பட்ட வகையிலான போராட்டங்களை முன்நின்று நடத்தினார்கள். ஆகவே, அந்த மூவரின் வாழ்க்கை வரலாற்றின் வாயிலாக, புதிய சூழலின் பின்னணியில் மறைந்திருக்கும் உலகளாவிய அரசியலைக் கூர்மையாக அடையாளம் காணலாம்.

கடந்த 1918 ஜூலை பதினெட்டாம் நாளன்று தென்னாப்பிரிக்காவில் டிரன்ஸ்கீய் மாநிலத்தில், உம்பாடா மாவட்டத்தில் இம்வகோ என்ற கிராமத்தில் நெல்சன் மண்டேலா பிறந்தார். அந்த மாநிலத்தின் மக்கள் தொகை முப்பத்தைந்து இலட்சம். இவருடைய தந்தை எழுதப்படிக்கத் தெரியாத காட்லா ஹென்றி.

கறுப்பு நிறத்தவரான, மண்டேலாவுக்குப் பெயர் சூட்டிய நிகழ்ச்சியை இப்படிச் சித்திரிக்கிறார் தோழர் தா.பா.அவர்கள். “குழந்தை பிறந்த பத்து நாட்களுக்குத் தந்தை தன் மனைவியையோ, குழந்தையையோ குடிசைக்குள் நுழைந்து பார்க்கக் கூடாது என்பது மரபு. எனவே பதினோராம் நாள் ஆவலுடன் வீட்டுக்குள் நுழைந்த காட்லா, தன் மகனைக் கைகளால் தூக்கி, முத்தமிட்டு ரோலிலாலா எனப் பெயர் சூட்டினார். இதுதான் பெற்றோர் சூட்டிய பெயர்.”

“சோசா மக்கள் பேசிவந்த மொழியில் ‘மரக்கிளையை ஒடித்தவன்’ என்று இதற்குப் பொருளாம். அல்லது வழக்கில் கலகத்தைத் தூண்டுகிறவன் என்று அர்த்தப்படுமாம். ‘தேடிப் பிடித்துத்தான் பெயர் வைத்திருக்கிறார் என் அப்பா’ எனக் கூறி மண்டேலா சிரிப்பது வழக்கமாம்.”

அதைத் தொடர்ந்து, “ரோலிலாலாவைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்க தாய் நோஸ்கேனி அழைத்துக் கொண்டு போனார். அங்கிருந்த வெள்ளைக்கார ஆசிரியை இவரது ரோலிலாலா என்ற பெயரை மாற்றி, தன் நாட்டு வீரர் நினைவாக நெல்சன் எனப் பெயர் சூட்டி எழுதிவிட்டார். அவர் வைத்த பெயர்தான் நெல்சன் மண்டேலா என நிலைத்துவிட்டது.” இப்படி, முக்கியமான நிகழ்ச்சிகளின் வாயிலாக இந்த வாழ்க்கை வரலாற்றைச் சுவைபடச் சொல்கிறார் ஆசிரியர்.

கிறிஸ்தவப் பள்ளியில் ஆங்கிலம், வெள்ளையர் வரலாறு மற்றும் அவர்களது கலாச்சாரம் ஆகியவை அவருக்குக் கற்பிக்கப்பட்டது. இது, அவருக்கு உலகளாவிய ஒரு பார்வையைக் கொடுத்தது. கறுப்பு மக்களின் மரபும், கலாச்சாரமும், பண்பாடும் புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலேய வாழ்க்கை முறைகள் அவருக்குக் கற்பிக்கப்பட்டன. இருந்தாலும், அவர்கள் தங்களுடைய கலாச்சாரப் பண்பாட்டையும், வாழ்க்கைச் சடங்கு முறைகளையும் பின்பற்றியே வந்தார்கள் என்பதை ஆசிரியர் விரிவாகவே விளக்குகிறார். இளம் பருவத்திற்குரிய நிகழ்ச்சிகளே மிகுந்த ஆர்வத்துடன் நெல்சன் மண்டேலா பிற்காலத்தில் குறிப்பிட்டு மகிழ்வதை நூல் முழுவதுமாகப் பரவலாகப் பதிவு செய்துள்ளார் தோழர் தா.பா.அவர்கள்.

கறுப்பு இனத்தில் பிறந்தவராக இருந்தாலும் நெல்சன் மண்டேலா தனது இயற்கையான அறிவுத் திறனால் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு கல்லூரியில் மேல் படிப்பு, சட்டப்படிப்பு ஆகியவற்றை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். ஆப்பிரிக்கக் கலாச்சாரத்திற்கும் ஐரோப்பியக் கலாச்சாரத்துக்கும் இடையில் நடந்த மோதலில் தனது கலாச்சாரத்தின் மேன்மையை உணர்ந்து அதன்படி வாழ்வதை நெல்சன் மண்டேலா விரும்பினார் என்பதை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

மாறுபட்ட பல வகையான சூழல்களின் ஊடாக நெல்சன் மண்டேலா வளர்ந்து கறுப்பு நிற மக்களின் நடுவில் மட்டுமல்லாது, உலகளாவிய மக்களின் நடுவிலும் அன்பையும், அபிமானத்தையும் பெற்று மாமனிதராக உருவான வரலாற்றைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார். ஆசிரியர், கல்வி, தொழில், காதல், அரசியல் எனப் பல வகையான படிநிலைகளினூடாக நெல்சன் மண்டேலா பயணம் செய்து ஒரு மாமனிதனாக வளர்ந்த வாழ்க்கைதான் இதில் வரலாறாக வடிவம் பெற்றுள்ளது.

நிறவெறிக்கு எதிரான அவருடைய தீவிரமான போராட்டம் அவரை நெடுங்காலச் சிறை வாசத்திற்கு உள்ளாக்கிய விவரங்களைத் தெளிவாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார். கல்விகற்று வழக்கறிஞராகத் தேர்ச்சி பெற்ற நிலையில் அந்நிய ஆட்சியின்கீழ் அடிமைப்பட்டு, ஒடுங்கியிருந்த தென்னாப்பிரிக்க கறுப்பு இன மக்கள் அனுபவித்து வந்த கொடுமைகளிலிருந்து அவர்களை விடுவிக்கப் போராடிய நெல்சன் மண்டேலாவைக் குறித்துத் தனது கருத்தை ஆசிரியர் இப்படித் தெரிவிக்கிறார்.

“இனக்குழுக்களாகப் பிரிந்து நின்று, ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட்டு அழித்து வருவதே வழக்கமாக இருந்தது. பழங்குடி மக்களை ஒத்த பழங்கால சமூகக் கட்டுப்பாடு, பழக்க வழக்கங்களால் கட்டுண்டு கிடந்தனர். இவர்களை விழிப்புறச் செய்து ஒன்று திரட்டி, ஆயுத வலிமையும், ஆதிக்க சூதுவாது நய வஞ்சக வேலைகளில் கை தேர்ந்த வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி முறியடிப்பது என்பது படிக்கச் சுவையாக இருக்கலாம். செயல் வடிவம் கொடுப்பது கடினமாக சவாலாக இருந்தது. இந்த நெடிய போராட்டக் காலத்தில் ஆப்பிரிக்கக் கம்யூனிஸ்டுக் கட்சியுடன் அவர் கொண்டிருந்த உறவும், அவர் செய்த மதிப்பீடும் இந்தியாவிலுள்ள தேசிய வாதிகட்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் நல்ல பாடமாகும்.”

கடந்த 1912-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது. நெல்சன்மண்டேலா பின்னாளில் அந்த இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு கறுப்பு இனம் மற்றும் இந்திய வம்சாவளியினர் போன்றவர்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் தன்னுடைய வாழ்நாட்களை முழுவதுமாக அர்ப்பணம் செய்தார். இருபத்தியேழு ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தார். உலக வரலாற்றில் இவர் அளவுக்கு சிறைவாசம் அனுபவித்த இன்னொரு தலைவர் இல்லை. நெல்சன் மண்டேலாவின் வெற்றியை இப்படி ஆசிரியர் சித்திரிக்கிறார்.

“27 வருடங்களுக்குப் பிறகு தனது வலது கை முஷ்டியை உயர்த்தி மண்டேலா வணக்கம் செலுத்தியவுடன் “சுதந்திர ஆப்பிரிக்கா வாழ்க!” “மண்டேலா வாழ்க!” “தென்னாப்பிரிக்கக் காங்கிரஸ் வாழ்க!” என்ற முழக்கங்கள் எழுந்தன. மண்டேலா மிக நிதானமாக, “நமது சுதந்திரப் போராட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. இன்னும் கடக்க வேண்டிய தூரம் இருக்கிறது. நான் ஒரு அதிசயப் பிறவி அல்ல. உங்களைப் போன்ற மனிதன்தான். தொண்டன்தான். நமது தென்னாப்பிரிக்காவிலுள்ள சகல மக்களுக்கும், சமமான உரிமைகள் வழங்கப்படும். காப்பாற்றப்படும் என உறுதியளிக்கிறேன்.”

“முன்னூறாண்டுக் காலம் எளிதில் ஆறாது என்பதை உணர்வேன். ஆனால், நாம் மறக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.”

அடுத்து, 1994 ஏப்ரல் 27ஆம் தேதி ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று தலைமைப் பொறுப்பை ஏற்றார். அப்போது அவர் நிகழ்த்திய உரையை இப்படி ஆசிரியர் தமிழில் பதிவு செய்கிறார்.

“இப்பொழுது, நிறம், இனம் என்ற வேறுபாடுகள் இல்லாத, தென்னாப்பிரிக்காவில் பிறந்த அனைவருக்கும் ஆளுக்கொரு வாக்கு என்ற அடிப்படையில் தேர்தல் நடத்தி அதன் தீர்ப்புப்படி ஆட்சி அமைக்கிறோம். எங்களது இந்திய, வெள்ளைச் சகோதரர்கள் எவ்வித சந்தேகமும் இன்றி, நம் தாயகத்தைப் புதுப்பித்துக் கட்ட சபதமேற்க வேண்டும். நாம், வறுமை இல்லாத வளமான, சகலரும் சமமாக வாழும் ஆப்பிரிக்காவை உருவாக்குவோம். வாருங்கள்!”

“1994-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்றுக்கொண்டார். ஐந்தாண்டுகளுக்குப் பின் 1996ல் பதவி விலகினார். 2வது முறையாக அப்பதவிக்குப் போட்டியிட வலியுறுத்திய போதும் போட்டியிட மறுத்துவிட்டார்.”

“இலட்சியங்களும், போராட்டங்களும் மிகுந்த தன் வாழ்நாளின் நெடிய பயணத்தை மண்டேலா 2013 டிசம்பர் 5-ஆந் தேதியன்று தனது 95-ஆவது வயதில் நிறைவு செய்தார்.”

உள்ளும் புறமும் ஒருங்கிணைந்த நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை வாசிப்புக்கு உகந்த வகையில் வடிவமைத்திருக்கிறார் ஆசிரியர். இதற்கு அணிந்துரை வழங்கியுள்ள திரு வா.செ.குழந்தைசாமியின் கருத்தை இங்கு பதிவு செய்வது பொருத்தமானது. “திரு.பாண்டியன் அவர்கள் நல்ல தமிழில், எளிய நடையில் ஒரு வரலாற்று இலக்கியத்தைப் படைத்தளித்திருக்கிறார்.” ‘நெல்சன் மண்டேலா’ உள்ளடக்கத்திலும், உருவத்திலும் அழகான வடிவம் பெற்றுள்ளது.

tha pandian castroஆயுத பலமும், படை பலமும், பண பலமும் கொண்ட அமெரிக்க வல்லரசை அச்ச உணர்வு எதுவும் இல்லாமல் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்துப் போராடி வரும் கியூபாவின் தலைமைப் பொறுப்பை ஏற்று வாழ்ந்து வருபவர் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்கா விதித்த அறுபது ஆண்டு காலப் பொருளாதாரத் தடைக்கு எதிராக நிலை நின்று தாய்நாட்டைக் காப்பாற்றி அதைத் தனித்தன்மையுடன் வளர்த்துவரும் இவருடைய வாழ்க்கை வரலாற்றை உணர்வு பூர்வமாக, உள்ளுணர்வு எழுச்சியுடன் வடிவமைத்திருக்கிறார் தோழர் தா.பாண்டியன் அவர்கள். மனம் நெகிழும்படியான ஒரு தமிழ்நடையில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இந்த வரலாற்று நூலை எழுதுவதற்கான காரணத்தை அவரே குறிப்பிடுகிறார்.

“தோழர் காஸ்ட்ரோவை எந்த இலக்கணச் சொற்களுக்குள்ளும் அடக்கி வருணிக்க முடியாது.

சிங்கத்தின் குகைக்குள் நுழைந்து, அதன் பிடரி மயிரைப் பிடித்து ஆட்டிய மாவீரன் என்றால் கிரேக்க இதிகாசக் கதாநாயகர்களுக்குப் பின்னர், நம் முன் நடந்து கொண்டிருப்பவர் தோழர் காஸ்ட்ரோதான். அவரது வாழ்க்கை பற்றி தமிழில் எழுதி, வளர்ந்து வரும் சந்ததிக்குக் கூறிவிட வேண்டுமென்ற ஆவல் மேலோங்கியது.”

“அதே நேரத்தில், இரட்டையராகவே நமக்கு அறிமுகமாகிவிட்ட சேகுவேராவை மறக்க முடியுமா?

எனவே, அவர்களைப் பற்றி வந்துள்ள பல நூல்களைப் படித்து, வரலாற்றில் பதிய வேண்டிய நிகழ்ச்சிகளையும் அவர்கள் வெளியிட்ட கருத்துக்களையும் தொகுத்து எழுதினேன்.”

“ஜீவா, மண்டேலா, குவேரா, காஸ்ட்ரோ என மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியது தனிமனிதத் துதிபாடும் நோக்கம் காரணம் அல்ல.

நம் நாட்டு இளைஞர் களுக்கு, இத்தகைய அரசியல் கட்சித் தலைவர்களை அறிமுகம் செய்வதே நோக்கமாகும்.”

அமைதியும், அழகும், வளமும் நிறைந்த இயற்கைச் சூழலில் அமைந்துள்ள நாடு கியூபா. அமெரிக்காவிற்கு அருகில் உள்ளது. இது எப்படியெல்லாம் படிப்படியாக அந்நிய ஆதிக்கத்திற்கு உள்ளாகியது என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டுகிறார் ஆசிரியர்.

“பாஸ்டன் துறைமுக நகரைச் சேர்ந்த யுனைட்டெட் நிறுவனம் கியூபாவில் மட்டுமல்லாது, பிரேசில், சிலி, அர்ஜென்டைனா, கௌதிமாலா எனப் பல நாடுகளில் நிலத்தை வாங்கி வாழை, கரும்பு பயிரிட்டு அவற்றை அவர்களது சொந்தக் கப்பலில் ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த பெரும் பகாசூர நிறுவனம். கியூபாவில் ஓரியண்ட் மாநிலத்தில், இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ஏக்கர் நதி நீர் பாயும் நிலப்பரப்பை வாங்கியது. 1989-இல் ஓர் ஏக்கர் மூன்று டாலர் வீதம் விலை கொடுத்து வாங்கியது.”

“பல நாடுகளிலிருந்து வேலை, பிழைக்க இடம் தேடி வந்த அகதிகளை, முதலில் அந்த நிலத்தில் இயற்கையாக வளர்ந்திருந்த பெரிய மரங்களை வெட்டி, அறுத்து ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தியது.”

“ஓரியண்ட் மாநிலத்தில் சிறு நிலச் சொந்தக்காரர்களாக இருந்த பூர்வீக கியூபா விவசாயிகள், சிறு சிறு கலவரங்களைச் செய்து வந்தனர். அவர்களை அடக்கி, ஒடுக்கி, யுனைட்டெட் புரூட் கம்பெனி, சொந்தமாக தன் செலவில் ஒரு சிறு இராணுவத்தையும், காவல் துறையையும் ஏற்படுத்திக் கொண்டது. இதுதான், முதன் முதலாக நிறுவப்பட்ட பயிற்சி பெற்ற கியூபா இராணுவம் என்று கூறலாம். ஓரியண்ட் மாநிலம் யுனைடெட் புரூட் கம்பெனியின் தனி அதிகாரத்திற்குட்பட்ட கம்பெனியின் சாம்ராஜ்யம் ஆயிற்று”

“கியூபாவின் அதிபரையும், அரசியலையும் நியமித்து இயக்கி வந்ததே இந்த பழ சர்க்கரை நிறுவனம்தான்.”

“இந்த நிறுவனத்திற்கு வயலில் இருந்து கரும்பை ஏற்றிக் கொண்டு போய் இறக்கும் வண்டி யோட்டியாக வேலை செய்து வந்தவர்தான் காஸ்ட்ரோ ரஸ் என்பவர்! இவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. இவரது மனைவியும் எழுதப் படிக்கத் தெரியாதவர்.”

இது மாதிரியான காலச் சூழலில், பாரம்பரியப் பின்னணியில் வாழ்ந்த வண்டியோட்டியான காஸ்ட்ரோ ரஸ்ஸின் பேரன்தான் பிடல் காஸ்ட்ரோ. இவரை, ஆசிரியர் சுருக்கமாகவும் தெளிவாகவும் வாசகருக்கு அறிமுகம் செய்கிறார்.

“பிடல் அலெஜாண்ட்ரோ ரஸ் 1926 ஆகஸ்டு பதிமூன்றாம் நாள் பிறந்தார். 1925-ம் ஆண்டில் தான் கியூபாவில் கம்யூனிஸ்ட்டு கட்சி நிறுவப்பட்டது. 1926-ஆம் ஆண்டில் பிறந்த பிடல் 1952-இல் கியூபாவை விடுவிக்க, பாட்டிஸ்ட்டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட ‘மயாரி’ என்றும் ‘ஓரியண்ட்’ என்றும் அழைக்கப்பட்ட பகுதியில் இருந்த மோன கடா இராணுவ முகாமைத் தாக்கினார். சரியாக தனது 26-ஆவது வயதினில் இந்தத் தாக்குதலை நிகழ்த்தினார்.

வளர்ந்து கொண்டிருக்கும் போதே தனது கல்வி மற்றும் உழைப்பின் வாயிலாகத் தன்னுடைய நாட்டு மக்கள் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறார்கள் என்பதை பிடல் அறிந்துகொண்டு அதற்கான விடிவைத் தேடும் சிந்தனையில் தன்னைப் பயிற்றுவித்துக் கொள்வதை இந்த வரலாற்று நூலில் ஆசிரியர் விரிவாகப் பதிவு செய்கிறார். கல்லூரிப் படிப்பு அவரை மேலும் மேலும் செழுமைப் படுத்தி எப்படியெல்லாம் பக்குவப்படுத்துகிறது என்பதை ஆசிரியர் தகுந்த விவரங்களுடன் தெளிவாக விளக்குகிறார்.

தொடர்ந்து பிடலின் கல்வி, காதல், அரசியல், ஈடுபாடு போராட்டம் என்றெல்லாம் தனது முழுமையான ஈடுபாட்டை வரலாற்றில் ஆசிரியர் தொகுத்திருக்கிறார். சேகுவேராவுடன் இவருக்கு ஏற்பட்ட சந்திப்பையும், நெருக்கத்தையும் வேறுபாட்டையும் தகுந்த தரவுகளோடு நம்பகத் தன்மையுடன் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். படிப்பதற்கும், புரிந்துகொள்ளுவதற்கும் உரிய வகையில் விறுவிறுப்பான, எளிமையான தமிழில் இந்த அருமையான வரலாற்றை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

இது தொடர்பாக, இதற்கு ஆய்வுரை வழங்கியுள்ள தோழர் எல்.ஜி. கீதானந்தன் அவர்களின் கருத்து மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

“தோழர் தா.பாண்டியன் பேராசிரியராக வாழ்க்கையைத் துவங்கி வழக்கறிஞராக சிறிது காலம் விளங்கி பொதுவுடைமை இயக்கத் தடம் பதித்தவர். அவ்வியக்கத்திலும், இலக்கிய வட்டத்திலும் நாவலராகவும், தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர். அரிதின் முயன்று இந்நூலை அவர் எழுதியிருப்பதை வாசகர்கள் எளிதில் உணரலாம்.”

மக்கள் விடுதலைக்காகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள தோழர் தா.பாண்டியன் இன்றைய அகில உலக அரசியல், பொருளாதார, சமுதாய நிலை சூழலில் வாழ்க்கையை உள்வாங்கிக் கொண்டு பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கையை மனம் நெகிழும்படி எழுதியுள்ளார். இதன் வாயிலாகப் புதிய அரசியல் சூழலை ஆழமாகவும், கூர்மையாகவும் ஆய்ந்து உணரலாம்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகளாவிய அளவில் பலராலும் அறியப்பட்டவர் சேகுவேரா. தனது முப்பத்தொன்பது ஆண்டுகளுக்குள்ளாக உலகின் கவனத்தை ஈர்த்த மாமனிதராக என்றென்றும் விளங்கி வருவார் என்று பலராலும் கருதப்படுகிறார் சேகுவேரா. இவரைக் குறித்து உலக மொழிகளில் கணக்கற்ற அளவில் வரலாற்று நூல்களும், ஆய்வு நூல்களும் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. இவருடைய வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் எழுத முனைந்த தோழர் தா.பாண்டியன் அவர்கள் “இன்றைய உலகின் மிகப் பெருவாரி மக்கள் சேகுவேரா என்ற மாவீரன் தன்னலமற்ற தியாகப் பிழம்பாய் வாழ்ந்து, போராடி, கொல்லப்பட்ட பின்னரும் மரணத்தை வென்ற மாவீரனாக இருப்பதாகவே, போர் தொடருவதாகவே நினைக்கப்படுகிற பெயர்தான் சேகுவேரா” என்கிறார்.

“இன்னும் பல வகையான உளவியல் (குளறுபடி) ஆய்வுகள் வடிவத்தில், ஈடுகட்ட முடியாத மாவீரனின் வாழ்க்கைக் களங்கம் ஏற்படுத்தவும் சில பேனாக்கள் மையை வீணாக்கியுள்ளன.”

“அவரது தீராத ஆஸ்துமா நோயும், தாய் தந்தையரின் மணவாழ்க்கை முறிவுமே இவரைப் போராளி ஆக்கியது என்ற அபூர்வ விஞ்ஞானக் கண்டுபிடிப்பையும் சிலர் செய்துள்ளனர். மருந்திலும் கலப்படம் செய்யும் வியாபாரிகள் இருப்பது தெரிந்தது தானே!”

“எனவே தான் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சேகுவேராவின் வாழ்க்கையை, போராட்டத்தை தமிழ் மக்களுக்கு எழுதித் தர வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அதன் விளைவே இந்நூல்,

tha pandian cheசேகுவேராவின் வாழ்க்கை தனிமனிதனின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் அல்ல. அது, 1960களில் பல நாடுகளில் நடந்த சுதந்திரப் போராட்டங்களின் பாதிப்பு. அது பல நாடுகளின் வரலாறு, இயக்கங்களின் வரலாற்றோடு இணைந்தது. பிரித்துப் பார்க்க முடியாதது.”

“எனவே, இதில் அமெரிக்காவில் மக்கள் குடியேறியது, பல மாநிலங்கள் சேர்ந்து குடியரசு ஆனது. சோவியத் அமைப்பின் தோற்றம், வளர்ச்சி, அதன் பங்கு, வியத்நாம் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் போராட்டம் என விரிகிறது. இவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது.”

மிகக் குறுகிய காலமே வாழ்ந்த சேகுவேராவின் மரபுவழிப்பட்ட பாரம்பரியப் பின்னணியில் தொடங்குகிறது. அவருடைய வரலாறு. கல்வி, காதல், சமுதாயத் தொடர்பு, உலகக் கண்ணோட்டம், அறிவியல் சார்ந்த தத்துவக் கல்வி, சமுதாய அரசியல் வாழ்க்கை விழிப்புணர்வு ‘கியூபா அரசில் அமைச்சர் பொறுப்பு’ உலகச் சுற்றுப் பயணம், கொரில்லாப் போர் எனப் பல வகையான நிலைகளின் ஊடாக சேகுவேரா வளர்ந்து ஒரு மாமனிதனாக உயர்வு பெற்ற வியப்புக்குரிய நெடும் பயணத்தை ஒரு வரலாறாக வடிவப்படுத்தியிருக்கிறார் தோழர். தா.பா. அவர்கள்.

தன்னுரிமையை வலியுறுத்தி அதன் கண்ணோட்டத்திலேயே வாழ்க்கையையும், வரலாற்றையும் புரிந்து ஊடகங்களின் வழியாக நாம் கருத்தை உருவாக்கிக் கொள்கிறோம். கல்வித்திட்டம், பொதுவாக எல்லாவித முதலாளித்துவ நாடுகளிலும் இந்த வகையான கண்ணோட்டத்தையே வளர்ப்பதால் தனி மனிதனுக்கும் அவன் வாழும் சமுதாயத்திற்கும் இடையில் ஒரு பிளவை ஏற்படுத்தி விடுகிறது. அவன் தான் வாழும் சமுதாயத்தைப் புரிந்து கொண்டு இயங்குவதில் பல சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தனிமனிதனை முதன்மைப்படுத்தும் கண்ணோட்டத்திலிருந்து மாறுபட்ட வகையில் ஒவ்வொருவரும் வாழ்க்கையை உணர்ந்து கருத்துக்களை உருவாக்க வேண்டும். வரலாறு நெடுகிலும் நாம் காணும் மாமனிதர்கள் அந்த முறையில்தான் வாழ்க்கையை மதிப்பீடு செய்தார்கள். அவர்கள்தான் வரலாற்றை முன்னெடுத்துச் சென்று மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்கிறார்கள்.

நான் அணிந்துள்ள சட்டையை நானே உருவாக்கிக் கொள்ளவில்லை. நான் உண்ணும் உணவை நானே உற்பத்தி செய்து கொள்ளவில்லை. நான் வாழும் இடத்தை நானே கட்டிக்கொண்டதில்லை. நான் கற்ற கல்வியை நானே தோற்றுவித்துக் கொள்ளவில்லை. எனக்குத் தேவைப்படும் ஒவ்வொன்றையும் நான் வாழும் சமுதாயம் தான் எனக்குக் கொடுத்துவருகிறது. எனக்காகவே உள்ள இந்தச் சமுதாயத்திற்கு நான் எந்த விதத்தில் என்னுடைய பங்களிப்பைச் செய்கிறேன்? நானும் என் உழைப்பின் வழியாக இந்தச் சமுதாயத்திற்கு எந்த வகையான பங்களிப்பைச் செலுத்த வேண்டும். என்னைக் காப்பாற்றும் இந்தச் சமுதாயத்தை நான் காப்பாற்ற வேண்டும் என்ற உள்ளுணர்வோடு அந்த மாமனிதர்களின் வரலாற்றுப் பதிவுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதன் விளைவாக, புதிய சமுதாயம் மலரும் என்பது உறுதி. இதைத்தான் மனிதர்களாகத் தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த மூன்று மாமனிதர்களும் வரலாற்றை முன்னோக்கி நகர்த்தும் மாபெரும் ஆற்றல்களாக வாழ்க்கைக்குள் என்றென்றும் இருந்து வருகிறார்கள். மக்களை வழிநடத்துகிறார்கள்.

ஆழ்ந்த ஈடுபாட்டோடு ஆய்வு செய்து நேர்மையாக எழுதப்பட்டவை இந்த வரலாற்று நூல்கள். திறந்த மனநிலையில் விருப்பு வெறுப்பு உணர்வுகளுக்கு உட்படாமல் அலங்காரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் உண்மைக்கே உரிய அடக்கத்தோடு எளிய தமிழ் நடையில் எழுதப்பட்ட இவை தனித்தன்மையானவை.

தனிமனிதனாக அரும்பி சமூக மனிதனாக வளர்ந்து வரலாற்றை முன்னெடுத்துச் சென்ற மாமனிதர்களின் வாழ்க்கைப் பதிவுகளே இந்த வரலாற்று நூல்கள்.

இது மிகை அல்ல!

நெல்சன் மண்டேலா

ஆசிரியர்: தா.பாண்டியன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B சிட்கோ, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை-600 098

விலை: ரூ. 260/-

 

பிடல் காஸ்ட்ரோ

ஆசிரியர்: தா.பாண்டியன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B சிட்கோ, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை-600 098

விலை: ரூ. 240/-

 

சே குவேரா

ஆசிரியர்: தா.பாண்டியன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B சிட்கோ, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை-600 098

விலை: ரூ. 225/-