வார்த்தையின் வலைப்பின்னலில் வாசகனைத் திணறடிக்க விடாமல் வாசகனுக்கும் கவிதைக்கும் எழுத்தின் மூலமாக செறிவான சமூக உரையாடலை ஏற்படுத்தி சாதியம், மதவாதம், ஆணாதிக்க மேலாதிக்கங்களை கட்டுடைக்கக் கூடிய கவிதை தொகுப்பாக வெளிவந்திருக்கிறது அமீர் அப்பாஸ் எழுதிய ’’இசைக்கும் நீரோக்கள்’’ கவிதை தொகுப்பு. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டிருக்கிறது.

ameer abbas book52 கவிதைத் தலைப்புகளையும், இலவச இணைப்பாக சில பக்க சிறுகவிதைகளையும் தாங்கி வந்திருக்கிறது இந்நூல். கவிதைத் தொகுப்பின் அட்டைப்படமே கவிதையின் உள்ளடக்கத்தை நமக்கு உணர்த்திவிடும்.

அமீர் அப்பாசின் பெரும்பாலான கவிதைகள் தரம்கெட்ட அரசியலை பகடி செய்பவையாகவும், முலாம் பூசப்படாத சொற்களால் காத்திரமாக எதிர்வினை செய்பவையாக இருக்கின்றன.

மக்களை நேசிக்கிற, இயற்கையை விரும்புகிற, மனிதத்தை ரசிக்கிற, காதலைக் கொண்டாடுகிற, சாதியைக் குத்திக் கிழிப்பவையாகவே அவரது கவிதைகள் வலம் வருகின்றன.காதலின் பரவசம், தனிமை, விரக்தி, சோகம், ஏக்கம், பரிவு, துரோகம், வன்மம், எழுச்சி, அதிகார அன்பு என வாழ்வின் அனைத்து அம்சங்களும் கவிதைகளில் பரவிக் கிடக்கின்றன.

‘’அன்பை மொழிபெயர்க்க முடியாமல் ஆயுதங்களைத் தூக்கிகொண்டு அலைகின்றன மதங்கள்’’

’’ஊரும் சேரியும் ஒன்றாகும் காலத்தில் நாம் மீண்டும் காதலிக்கலாம் அன்பே’’

‘’உடைக்க முடியவில்லை உள்ளத்தில் நீண்டிருக்கும் உத்தப்புரச் சுவர்கள்’’

சாதிய வன்மத்தையும், மதங்களின் பெயரல் நடக்கும் வகுப்புவாத மோதல்களையும், மேடைப் பேச்சுக்கள் உரைக்காததை இக்கவிதைகள் உலுக்கிச் செல்கின்றன.

சமூக போராளிகளை நக்சலைட்டாகவும், தீவிரவாதிகளாகவும், தேசத்துரோகிகளாகவும் சித்தரிக்கும் ஊடகத்தின் தாராளவாதப் போக்கையும், அரச பயங்கரவாதத்தையும்

‘’போராளிகள் என்பதைத் தவிர வேறோன்றும் அறிந்திடாத அவர்கள் உலகையே அச்சுறுத்திய பயங்கரவாதிகள் என்று இன்றளவும் ஊடகங்களால் நம்ப வைக்கப்படுகிறார்கள்.” என்ற கவிதையில் வெளிச்சப்படுத்துகிறார்.

நரைத்த பின் அரசியல் பிரவேசம் செய்ய வரும் திரை உலக நாயகர்களையும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கே செவிசாய்க்காத அரசியல்வாதிகள் செய்யும் ஜனநாயகப் படுகொலைகளையும்

’’சமகாலத்தின் ஜனநாயகம் போல் நாவை இழந்து தொங்குகின்றன ஆராய்ச்சி மணிகள்’’

’’அரசியல் அதிகாரத்தின் நிலையாமை குறித்து அசை போட்டு கொண்டிருக்கின்றன எருமை மாடுகள் இராஜசபை கூடிய இடத்தில்’’

என தனது எள்ளல் மிகுந்த காத்திரமான விமர்சனத்தை வைக்கிறார் அமீர் அப்பாஸ்.

’’வேதங்களின் மந்திரச் சொற்களால் சிறைவைக்கப்பட்ட உங்கள் இறைவன் எனக்கு வேண்டாம்’’

’’குருபூஜை இப்போது குருதிகள் பூஜையானது’’

’’இல்லாத சாமிக்கும், பொல்லாத சாதிக்கு எப்போதும் தேவைப்படுகிறது கட்டுப்படுத்த முடியாத வெறியூட்டும் கலவரங்கள்’’

கடவுளின் பெயரால் நாடெங்கும் பரவும் இல்லாத கடவுள் பிரச்சாரத்தை தனது கடவுள் மறுப்பு கோடாரியால் ஒரு போடு போடுகிறார். நகரவாசி, சமாதிகளாகும் வீடுகள், கிழவியும் சுருக்கு பையும் போன்ற பல கவிதைகளில் நவீனமயமான இன்றைய சூழலில் மக்கள் செருக்கு நிறைந்தும் காலாவதியான மனிதம் குறித்தும், தனிமையின் தவிப்பு குறித்தும் பதிவு செய்கிறார்.

ஏகாதிபத்தியம், பொதுவுடமை, உழைப்புச் சுரண்டல், அரசவன்முறை, ஆணாதிக்கம், செய்யாத குற்றத்திற்கு தண்டனைக்கு ஆளாகும் சாமானியர்கள் ஆகியவற்றை,

‘’அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பும் என்னிடம் அடங்கிப் போகும்படி அறிவுறுத்துகிறார் முதலாளி’

’’எனக்கான விசாரணைக்காலம் முடிவதற்குள் சிலரின் ஆயுள் தண்டனையும் முடிந்திருந்தது’’ என குரல் அற்றவர்களின் குரலாகவும் ஒலிக்கிறார் ஆசிரியர்.

’’தாலியை உருகச் செய்யும் தந்திரம் ஆண்மையின் காலாவதியாகிப்போன கம்பீரம்

பெண்கள் குடிக்கும்போது மட்டும் மதுக்குடுவையில் கரைகின்றன மதங்களும் போதனைகளும்’’

’’அம்மாவின் பேரன்பில் வளர்க்கப்படும் குழந்தைகள் இவ்வுலகை அம்மாவை போல நம்பிக்கையோடு பார்க்கிறார்கள் இவ்வுலகம் ஒரு தகப்பனின் கடுமையோடு கரிசனங்கள் ஏதுமற்று இருக்கிறது’’

ஆணாதிக்க சமூகம் நடத்திக் கொண்டிருக்கும் பத்தாம்பசலித்தனத்தை தோலுரித்துக் காட்டுகிறார் அமீர்.

’’கருத்த முலையிலிருந்து வெள்ளை தாய்ப்பாலாக பொழிகிறது மழை’’ மழையற்றுப் போனால் உலகும், உடலும் உயிர்ப்பிக்காது என்பதை உணர்த்தும் தொனி சிறப்பு.

‘’பிள்ளைகள் யாவர்க்கும் அம்மாவைப் போன்ற அபூர்வமான பெண்களின் துணை அதிர்ஷ்டவசமாகக்கூட வாய்ப்பதேயில்லை’’

என்ற கவிதையில் மனைவியிடத்தில் (தியாகம், அன்பு, கரிசனை) கொண்ட அம்மாவைத் தேடும் சராசரி ஆணைப் போல சருக்கினாலும் மற்றைய கவிதைகளில் சல்யூட் அடிக்க வைக்கிறார் அமீர் அப்பாஸ்.

சமகால அரசியலை, மக்களின் வாழ்வியல் போராட்டங்களை, இயற்கைச் சுரண்டலை, மதச்சார்பற்ற மனிதத்தை, மனிதம் போற்றும் மானுடத்தை வலியுறுத்தும் பல படைப்புகள் இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை. அவற்றில் இசைக்கும் நீரோக்களும் ஒன்று.

- மை.மாபூபீ, இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.