varalaatril brahmana neekkamஇந்த நூல் பேசும் செய்திகள் நமக்கு பல்வேறு சாளரங்களைத் திறந்து விடுகின்றது. இது வரை அறியப்படாத, ஆராயப்படாத பார்ப்பனியத்தின் இருண்ட பிரதேசங்களை அம்பலப்படுத்துகின்றது. இந்த நூலில் உள்ள ஒவ்வொரு வரியும் அதன் பேசுபொருளாலும், கருத்தாழத்தாலும் நம்மை விலகிப் போகச் செய்யாமல் கடைசிவரை கட்டிப் போட்டு விடுகின்றது. வேதங்கள் தொடங்கி சமணம், பெளத்தம், பக்தி இயக்கம், தேசிய இயக்கம் என பல்வேறு காலகட்டங்களில் பார்ப்பனியம் எவ்வாறு இந்திய சமூகத்தில் தொழில்பட்டது என்பதை ஆணித்தரமான வாதங்கள் மூலமும், அசைக்க முடியாத ஆதாரங்கள் மூலமும் அம்பலப்படுத்துகின்றது. குறிப்பாக வட இந்தியாவில் தோன்றிய பக்தி இயக்கம் பற்றிய ஆய்வு தமிழுக்குப் புதிது. தமிழ்நாட்டில் பக்தி இயக்கம் என்று சிலர் இங்கிருக்கும் தேவாரம், திருவாசகம் போன்றவற்றை சொல்லிக் கொண்டிருக்கும்போது இந்நூலில் ஆசிரியர் அதற்கான வேர்களை சித்தர் மரபில் கண்டுபிடிக்கின்றார். கடவுளையும், சாதியையும் பின்னுக்குத் தள்ளி மனிதனை முன்னிலைப்படுத்திய சித்தர் மரபை தமிழ்நாட்டில் உள்ள ஆய்வாளர்களே பக்தி இயக்கமாக கருதாத இந்தச் சூழ்நிலையில் உண்மையில் பக்தி இயக்கம் எதை முன்னிலைப்படுத்தியது என்பதை மிக விரிவாக இந்நூல் பதிவு செய்துள்ளது.

வட இந்தியாவில் தோன்றிய பக்தி இயக்கம் தன்னகத்தே பார்ப்பன எதிர்ப்பு மரபை தீவிரமாகக் கொண்டிருந்தது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பலர் தாழ்த்தப்பட்ட‌ சாதிகளில் இருந்து வந்தவர்கள். துணி தைப்பவர்கள், தச்சர்கள், குயவர்கள், தோட்டவேலை செய்பவர்கள், கடைக்காரர்கள், மழிப்பவர்கள், செருப்பு தைப்பவர்கள் என பல பேர் பக்தி இயக்கத்துக்கு பங்களிப்பு செய்துள்ளார்கள். வட இந்தியாவில் கபீர், குருநானக் போன்றவர்கள் பார்ப்பன சாதிய அமைப்புக்கு சவால்விட்டனர் என்றால் கர்நாடகாவில் அது பசுவரின் தலைமையில் வீரசைவமாக வளர்ச்சி பெற்றது. மகாராஷ்டிரத்தில் இந்தப் பணியை பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டுவரை வார்கரி இயக்கம் செய்தது. இப்படியாக வட இந்தியா ஆரம்பித்து தென் இந்தியா வரை சாதி எதிர்ப்பு இயக்கங்கள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டதையும் அதை முறியடிக்க பார்ப்பன சக்திகள் செய்த பல்வேறு சூழ்ச்சிகளையும் இந்நூல் சிறப்பான முறையில் பதிவு செய்துள்ளது.

இந்து மதத்தில் உடன்கட்டை ஏறுதல் பழக்கத்தை ஒழிக்க பாடுபட்டதாய் சொல்லப்படும் ராம்மோகன் ராய் போன்றவர்கள் எப்படி மிகத் தீவிரமான பிற்போக்குவாதிகளாகவும், ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாகவும் இருந்தார் என்பதை பல்வேறு ஆதாரங்களோடு இந்நூல் முன்வைக்கின்றது. அவர் செய்ததெல்லாம் நவீன ஐரோப்பிய சிந்தனையுடன் பழைய பார்ப்பனிய கருத்துக்களை ஒன்று சேர்த்து சொன்னதுதான். அவர் பிரிட்டிஷாருக்கு எழுதிய ஒவ்வொரு கடிதத்தையும் முடிக்கும்போது “பிரிட்டிஷாரின் மிகக் கீழ்ப்படிந்த சேவகர்” என்றே முடித்தார். மேலும் வங்காளத்தில் தோன்றிய பிரம்ம சமாஜம், மகாராஷ்டிராவில் தோன்றிய பிரார்த்தனா, தமிழ்நாட்டில் தோன்றிய வேத சமாஜம், பஞ்சாப்பிலும் வட இந்தியாவிலும் தோன்றிய ஆரிய சமாஜம் போன்றவை பார்ப்பன மதிப்புகளால் மட்டுமே வழிநடத்தப்பட்டதைப் பல்வேறு தரவுகளுடன் அம்பலப்படுத்துகின்றது இந்நூல்.

தேசியம் என்ற கருத்தியலை வலுவாக கட்டமைத்த எழுத்தாளர்கள் அனைவரும் தீவிர இந்துமத ஆதரவாளர்களாய் இருந்ததும் அவர்கள் முன்னெடுத்த தேசியம் என்பது சாதி அமைப்பை ஏற்றுக்கொண்ட, பார்ப்பன மேலாண்மையை ஏற்றுக்கொண்ட தேசியம் என்பதையும் அம்பலப்படுத்துகின்றது. இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றவர்கள் எப்படி பழைய பார்ப்பன மரபுகளை தூக்கிப் பிடித்து சனாதன இந்தியாவை கட்டமைக்க முயன்றனர் என்பதையும் இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. விவேகானந்தர் பார்ப்பனர்களைத் தவிர மற்ற சூத்திர சாதி, தீண்டபடாத மக்கள் மீது கொண்டிருந்த அருவருப்பு நிறைந்த பார்வை இன்னும் அவரைக் கொண்டாடும் பல பேருக்குத் தெரிவதில்லை, குறிப்பாக அவர்கள் கல்வி கற்பதை அவர் முற்றிலுமாக வெறுத்தார் “….. அறியாமை மிக்க, படிக்காத கீழ்ச்சாதி மக்களுக்கு, கோவணத்தோடு வயல்களில் வேலை செய்பவர்களுக்கு, ஆரிய இனமல்லாதவர்களுக்கு ஐரோப்பியர்கள் இப்போது கல்வியளிக்கிறார்கள், இது நம்மை பலவீனப்படுத்தவும் அவர்களுக்கும் பிரிட்டிஷ்காரருக்கும் ஆதாயம் அளிக்கவும் போகின்றது” என்றார். மேலும் சாதியைப் பற்றி கூறும் போது “ சாதி நம்மை ஒரு தேசமாக உயிர்ப்புடன் வைத்திருக்கிறது, அதில் பல குறைகள் இருந்தாலும், அதைவிட அதிகமாக நன்மைகள் உள்ளன” என்றார். முஸ்லிம்களைப் பற்றிய அவரது பார்வை மிகக் கீழ்த்தரமானதாகவும் அருவருப்பு ஊட்டுவதாகவும் இருந்திருக்கின்றது அதே போல ராணடே, இரவீந்திரநாத் தாகூர், திலகர் போன்ற பலரின் பார்ப்பன வெறியையும் இந்நூல் அம்பலப்படுத்துகின்றது.

மேலும் மார்க்ஸ்முல்லர், நீட்சே போன்றவர்களின் பாசிச நோக்கத்தையும், சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் மறுத்த அவர்களின் இறுகிப் போன சிந்தனைகளையும் மிக விரிவாக இந்நூல் ஆராய்கின்றது. ஆர்.எஸ்.எஸ் எப்படி பார்ப்பனர்களின் நலன்களைக் காப்பாற்ற பார்ப்பனர்களால் தொடங்கப்பட்டது என்பதை ஆராயும் நூல் அதன் அபாயகரமான சிந்தனையை அதன் அரசியல் அறிக்கையை பகிரங்கப்படுத்தி வெளிக்கொண்டு வந்திருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் யின் ரகசிய சுற்றறிக்கை எண் 411 அதன் தளபதிகளுக்கும் பிரச்சாரகர்களுக்கும் அதில் சொன்ன செய்தி, அதன் முகத்திரையை கிழித்தெறிவதாக உள்ளது. அதில் 1) அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களையும் முஸ்லிம்களையும் எதிர்த்துப் போரிட, தொண்டர்களின் எண்ணிகையை உயர்த்தும் பொருட்டு கட்சியில் பட்டியல் சாதியினரையும், பிற்பட்ட வகுப்பினரையும் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் 2) கலகங்களின் போது முஸ்லிம்கள், பட்டியல் இனத்தவர், பெண்களையும் பலர் சேர்ந்து கற்பழிக்க வேண்டும். அவர்களின் நண்பர்களையும் தெரிந்தவர்களையும் விட்டு வைக்கலாகாது. இந்த வேலை சூரத் முன்மாதிரிப்படி நடக்க வேண்டும் 3) இந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிரான எல்லா எழுத்துகளும் அழிக்கப்பட வேண்டும், தலித்துகள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள், அம்பேத்கர்வாதிகள் தேடப்படவேண்டும், அவர்களுடைய எழுத்து பொது இடங்களுக்கு செல்லக் கூடாது. இந்து எழுத்து மட்டுமே பிற்பட்ட வகுப்பினருக்கும் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களுக்கும் சேர வேண்டும் 4) பட்டியல் இனத்தவர்க்கும், பிற்பட்ட வகுப்பினருக்கும் இடையிலான பாரபட்சமான வேறுபாடுகள் ஆழமாக வேர்கொள்ளும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான உதவியை சாமியார்கள், துறவிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் 5) சமத்துவத்தை போதிக்கும் கம்யூனிஸ்ட்கள், அம்பேத்கர்வாதிகள், இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறித்துவமதப் பணியாளர்கள், அவர்களின் அண்டையினர் ஆகியோருக்கு எதிராக தீவிரமான தாக்குதல்கள் தொடங்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றது. இன்று தங்களை நடுநிலைவாதிகள் என்று கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஆதரிக்கும் அயோக்கியர்கள் நிச்சயமாக இதைப் படிக்க வேண்டும்.

புலே அவர்களைப் பற்றி மிக விரிவாக இந்நூல் ஆராய்கின்றது. அவரின் சாதி எதிர்ப்புக் கருத்துக்கள், கல்வி சிந்தனைகள், புலே எவ்வாறு சாதிவெறியர்களால் அவமானப்படுத்தப்பட்டார், அதை எப்படி அவர் எதிர்கொண்டார் போன்றவற்றை தரவுகளுடன் நிறுவுகின்றது. நவீன இந்தியாவின் மிகச் சிறந்த சாதி ஒழிப்பு போராளியான‌ புலே, பார்ப்பன புராணங்கள் எழுதப்பட்டதன் உண்மை நோக்கத்தை அம்பலப்படுத்தியது மட்டுமில்லாமல் இந்தியாவின் மீது நிகழ்ந்த ஆரிய படையெடுப்பை முதன் முதலில் நிறுவுகின்றார். சிவாஜியை சாதிக்கு எதிரானவராக அன்றே அடையாளம் காண்கின்றார் புலே. பெரியாரைப் போலவே பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, தந்தைவழியாதிக்கத்திற்கு எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு என அனைத்துக் களங்களிலும் மிகத் தீவிரமாக செயலாற்றிய களப் போராளியாக புலே இருந்துள்ளார் என்பதை இந்நூலைப் படிக்கும் போது நம்மால் தெரிந்து கொள்ள முடிகின்றது.

தேசிய இயக்க காலத்தில் நடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை வரலாற்றில் இருந்து மீள் கட்டமைப்பு செய்து அது எவ்வாறு பார்ப்பனர்கள் நடத்திய தேசிய இயக்கப் போராட்டத்திற்கு எதிர்த் திசையில் இருந்தது என்பதை விவரிக்கின்றார். வைக்கம் போராட்டம், தோல்சீலைப் போராட்டம் போன்ற போராட்டங்கள் பற்றி மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. நாராயணகுரு கே.அய்யப்பன், அய்யன்காளி போன்றோரின் சமூக பங்களிப்புகள் மிக விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது ஏன் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்களாக சேர்க்கப்பட்டார்கள், அதன் பின் இருந்த பார்ப்பன சக்திகளின் நலன் போன்றவற்றையும் தமிழகத்தில் ஏன் பார்ப்பனர் அல்லாதர் இயக்கம் தோன்றியது, பெரியாரின் சமூகப் பங்களிப்பு, அம்பேத்கரின் சமூகப் பங்களிப்பு, சாதி ஒழிப்பில் காந்தியின் மோசடி, அதற்கு நேருவின் உடந்தை, நவீன இந்தியாவில் எப்படி சாதி ரீதியாக அரசு வேலைகள், தனியார் வேலைகள் ஒதுக்கப்படுகின்றன, சாதியால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு என அனைத்தையும் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கின்றது இந்நூல். அனைத்து இடதுசாரி சிந்தனையாளர்களும் படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான நூல். இந்நூலை ‘எதிர் வெளியீடு’ வெளியிட்டு இருக்கின்றார்கள். இந்நூலை எழுதிய ப்ரஜ்ரஞ்சன் மணி அவர்களுக்கும், இந்த நூலை மிகச் சிறப்பான முறையில் மிக நேர்த்தியாக சுவை குன்றாமல் மொழி பெயர்த்த க.பூர்ணசந்திரன் அவர்களுக்கும் எத்தனை நன்றிகளைச் சொன்னாலும் அது போதாது.

கிடைக்குமிடம்

எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642002.
தொலை பேசி:04259-226012,9942511302
https://www.commonfolks.in
விலை ரூ.550

 - செ.கார்கி

Pin It