thirumavelan book 253தலித்திய சிந்தனையாளர்களாலும் வலதுசாரிகளாலும் இருமுனை தாக்குதலுக்கு ஆளாகி வரும் தந்தை பெரியார் பற்றி ப.திருமாவேலன் எழுதி ஜூலை 2018ல் வெளியாகியிருக்கும் நூல் ‘ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?’ தந்தை பெரியார் மீது வலதுசாரியினர் காரமான விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தாலும் இந்நூல் தலித் சிந்தனையாளர்கள் தந்தை பெரியார் மீது 1990களிலிருந்து வெளிப்படுத்தி வரும் விமர்சனங்களுக்கு மட்டுமே மறுப்பாக அமைந்திருக்கிறது.

முதலில் தந்தை பெரியார் மீது வைக்கும் விமர்சனங்களைத் தொகுத்துரைக்கும் நூல், பின்னர் ஒவ்வொரு விமர்சனத்தையும் பெரியாரின் எழுத்துகளிலிருந்தும் பெரியார், திராவிடர் கழகம் குறித்து பிறர் எழுதியவற்றிலிருந்தும் எடுத்துக் காட்டி மறுத்திருக்கிறது. நூலில் காட்டியிருக்கும் மேற்கோள்களும் காரணத்தை சரியாக விளக்கி விமர்சனத்தை மறுக்கும் திறமும் நூலாசிரியரின் கடுமையான உழைப்பைக் காட்டுகின்றன.

நூலாசிரியர் தலித் சிந்தனா வட்டத்தில் காத்திரமாகச் செயல்பட்டு வந்தவர், வருகிறவர்களில் குறிப்பாக தி.பெ.கமலநாதன், அன்பு பொன்னோவியம், ரவிக்குமார், சிவகாமி, மா.வேலுசாமி, பூவிழியன், கௌதம சன்னா உள்ளிட்ட பலரின் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார். தலித் சிந்தனையாளர்கள் முன்வைக்கும் விமர்சனம் 1) பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தான் தலைவரே தவிர தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அல்ல. 2) பெரியார் தலித் மக்களுக்கு போராடியவர் இல்லை. 3) பெரியார் சாதி ஒழிப்பு போராளி அல்ல 4) பெரியார் ஒரு அரசியல்வாதி 5) தலித் விரோதியான பெரியார் தமிழகத் தலித் தலைவர்களை மதிக்கவில்லை 6) பெரியார் ஆளும் அரசாங்கத்தை மட்டுமே ஆதரித்தார். 7) ஆதிக்க சக்திகளை எதிர்த்து அவர் போராடியது இல்லை. 8) இடைநிலை சாதியினரின் சாதிவெறியைக் கண்டிக்கத் தவறினார் என்பது உள்ளிட்ட விமர்சனங்களைத் தொகுத்திருக்கும் திருமாவேலன், இம்மாதிரியான விமர்சனங்களை வெளிப்படுத்துவோர் பெரியாரை ஒழுங்காகப் படிக்காதவர்கள் என்கிறார். தொடர்ந்து 1) பெரியார் கீழ்வெண்மணி கொலையைக் கண்டிக்கவில்லை 2) தலித் மக்களைக் கொச்சையாகப் பேசினார் 3) பார்ப்பனர்கள் இடத்தில் இடைநிலைச் சாதியைக் கொண்டு வந்து நிறுத்தினார் என்கிற விமர்சனத்திற்கும் போதுமான அளவில் எதிர்வினை ஆற்றி இருக்கிறார்.

பெரியார் பார்ப்பனரல்லாத அனைவருக்குமே தலைவர். தீண்டப்படாதவர்களின் முன்னேற்றம் தான் பார்ப்பனரல்லாதவர்களின் முன்னேற்றம் என்பதே அவரது தொடர் செயல்பாடாக இருந்தது எனக் குறிப்பிடும் நூலாசிரியர், இரட்டைமலை சீனிவாசனுக்கு அயோத்திதாசர் உறவுக்காரராக இருந்தும் இரட்டைமலை சீனிவாசன் ஏன் அயோத்திதாசரை குறிப்பிடவில்லை? எனக் கேட்கிறார். கேள்விக்குப் பதிலாக வேறொரு கேள்வியைத் தான் கேட்டு வைக்கிறார்.

நூலாசிரியர் தொகுத்திருக்கும் செய்திகளை மட்டும் வைத்துப் பார்க்கும்போது பெரியார், தமிழகத் தலித் தலைவர்களை விட அம்பேத்கரை அதிகமாக ஆதரித்திருக்கிறார் என்கிற முடிவுக்கு வர முடிகிறது. அயோத்திதாசரை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்பிட்டிருக்கிறார். எம்.சி.ராஜா, சுவாமி சகஜானந்தா ஆகியோர் ஒப்பீட்டளவில் அயோத்திதாசரை விட அதிகமாகவே குறிப்பிடப்படுகின்றனர். பெரியார் அயோத்திதாசரை அதிகமாக குறிப்பிடாமைக்கு அயோத்திதாசர் சடங்குகள் மீது நம்பிக்கை உடையவராக இருந்தார் என்பது காரணமாக இருக்கலாம் என்பதான நூலாசிரியரின் பதில் வலுவற்றதாக இருக்கிறது.

அயோத்திதாசர் சடங்குகள் மீது நம்பிக்கை கொண்டு இருந்ததிலும் பெளத்தத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதிலும் பெரியாரின் சித்தாந்தத்தோடு முரண்பட்டு இருந்த போதிலும், பார்ப்பன எதிர்ப்பாளராக இருந்தார் என்கிற வகையிலாவது அயோத்திதாசரைப் பற்றி பெரியார் பேசியிருக்க வேண்டும். பேசியிருப்பதான குறிப்புகள் இல்லாத நிலையில் நூலாசிரியர் ‘பெரியார் அயோத்திதாசரை மறைத்து விட்டார்’ என்பதற்கு வைக்கும் மறுப்பு பலவீனமாக இருக்கிறது.

பெரியார் தலித்துகளை சூத்திரர்களின் அங்கமாகவே கருதினார் என்பதற்கு நூலாசிரியர் தருகின்ற சான்றுகளில் ‘நீங்கள்’, ‘உங்கள்’ என்கிற சொற்கள் அதிகமாக இருக்கின்றன. சூத்திரர்களைப் பற்றிய இடங்களில் அத்தகைய சொற்பயன்பாடு இல்லை. மாறாக, சில இடங்களில் ‘நாம்’ என்கிற சொல் பயன்பாட்டைக் காணமுடிகிறது. ‘நீங்கள்’, ‘உங்கள்’, ‘நாம்’ என்னும் மூன்று விதமான சொற்களின் பயன்பாடு தலித் சிந்தனையாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போன்றே உள்ளது.

பெரியாரின் நோக்கங்களான பார்ப்பன எதிர்ப்பு, சூத்திரர்கள் மேன்மை, சாதிய இழிவை நீக்குதல் என்பனவற்றுள், இன்றைக்குக் சூத்திரர்கள் மேன்மை அடைந்திருக்கிறார்கள். பார்ப்பனர்களின் ஆதிக்கம் பெருமளவு குறைந்திருக்கிறது. ஆனாலும் சாதியக் கொடுமைகள் குறையாமல் அதிகரித்திருக்கிறது. இந்தப் புள்ளியில் இருந்துதான் பெரியார் சூத்திரர்களுக்காகவே உழைத்தார், தலித்துகளுக்காக உழைக்கவில்லை என்கிற விமர்சனத்தைத் தலித் சிந்தனையாளர்கள் எழுப்புகிறார்கள். இதற்குப் பதிலுரைக்க இந்த நூலைப் பொறுத்த மட்டில் திருமாவேலனுக்கு இன்னும் வலுவான வேறு சான்றாதாரங்கள் தேவையாக இருக்கின்றன.

- ஞா.குருசாமி

Pin It