சிந்துவெளி நாகரிகம்:

இந்தியாவின் மிகப் பண்டைய நாகரிகம் என்பது சிந்துவெளி நாகரிகம். அதன் காலம் கி.மு. 3000 - 1750. இன்றைய பாக்கிசுதான் பகுதியில் சிந்து நதியின் கரையில் மொகஞ்சதாரோ நகரமும், மேற்கு பஞ்சாபில் முன்பு ஓடிய சிந்துவின் கிளை நதியான இரவியின் கரையில் அரப்பா நகரமும் இருந்தன. இந்நகர வீடுகள் பல மாடிகளைக் கொண்டனவாகவும், சுட்ட செங்கற்கல்லின் மூலம் உறுதியாகக் கட்டப்பட்டனவாகவும் இருந்தன. வீட்டில் நேர்த்தியான குளியலறைகள், கழிப்பிடங்கள் போன்ற வசதிகள் இருந்தன. அங்கு கிடைத்த மட்பாண்டங்கள் மிகவும் தரமானவையாக இருந்தன. தங்கம், வெள்ளி நகைகள், பிற சான்றுகள் ஆகியன மறைந்து போன செல்வங்களைப் பற்றிய தடயங்களைக் காட்டின.

harappaசிந்துவின் வீட்டுமனைத் திட்டம் தனிச் சிறப்பிற்குரியது. மிகத் தொன்மையான காலத்தில் மிக நுணுக்கமும், நேர்த்தியும் கொண்ட இது போன்ற குடியிருப்பை வேறெங்கிலும் காண முடியாது. சிந்து சமவெளி நகர அமைப்பு உண்மையில் பிரமிப்பூட்டுகிறது. நேர்நேராகக் கோடுகளைக் கிழித்தாற்போல வரிசை வரிசையான தெருக்களுடன், மழைநீரை வெளியேற்றும் ஒப்பற்ற வடிகால் அமைப்பும், கழிவுநீரை வெளியேற்றும் சாக்கடைத் தொட்டிகளும் இருந்தன. இந்த நவீன காலம் வரை தோன்றிய எந்த ஒரு இந்திய நகரமும் இந்த அளவுக்கு வசதிகளைப் பெற்றிருக்கவில்லை. அளவிடற்கரியதான பெருந்தானியக் களஞ்சியங்கள் அங்கு இருந்தன. பெருமளவு வணிகம் நிலவியதற்கான சான்றுகள் கிட்டியுள்ளன. இவை இந்திய வரலாற்று ஆசிரியர் டி.டி. கோசாம்பி(D.D.Kosambi) தரும் தகவல்களாகும்(1).

மொகஞ்சதாரோ நகரம் குறித்து இராகுல சாங்கிருத்தியாயன், “நாம் தற்கால இலங்காசையர் போன்ற நகரத்தின் இடிபாடுகளிடையே நின்றிருப்பதைப் போல் தோன்றுகிறது என ஒரு ஆங்கிலேயர் எழுதுவதாகவும்….நகரம் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது, பாதைகள் 9 முதல் 34 அடி அகலத்துடன் அரை மைல் வரை நேராக உள்ளன….. பணக்காரர்களும், வியாபாரிகளும், கைவினைஞர்களும், தொழிலாளர்களும் இருந்து வந்த பகுதிகளை அவற்றின் இடிபாடுகளைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். அதைக் காணும்போது, அது ஒரு சனநாயக முதலாளித்துவ நகரமாகத் தோன்றுகிறது” என்கிறார்(2).

மேலும், “மொகஞ்சதாரோ, அரப்பா போன்ற எத்தனையோ நகரங்களை அழித்துவிட்ட பின்னர், மாடு மேய்ப்போரான ஆரியர் வெற்றி கொண்ட சப்த சிந்து பிரதேசத்தை தமக்குள் பங்கிட்டுக் கொண்டு, அதை மேய்ச்சல் நிலமாக மாற்றி விட்டனர். பல நகரங்கள் மனித சஞ்சாரமற்றுப் போய்விட்டன. கிராமப்புறங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்களும் ஓடிப் போய் விட்டனர். எஞ்சியிருந்தவர்களை வெற்றி பெற்றவர்கள் அடிமைகளாகவோ, கூலிக்காரர்களாகவோ ஆக்கிக் கொண்டனர்" என்கிறார் அவர்(3). சான்றாக, “பாலிகில்ய சூக்தங்களில்(8-8-3) புருசுத்ர என்ற முனிவர், எனக்கு நூறு கழுதைகளும், நூறு செம்மறியாடுகளும், நூறு அடிமைகளும் தாருங்கள் என்று இந்திரனை வேண்டுகிறார்” எனவும், கன்வ கோத்திரத்தைச் சேர்ந்த கன்வ புத்திரர் என்ற முனிவருக்கு புருகுத்சரின் புத்திரர் திரசதசுயு என்னும் மன்னர் 50 அடிமைப் பெண்களை வழங்கினார் எனவும் கூறியுள்ளார்(4). ஆரியர்களின் அன்றைய சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையால் அனைவரையும் அடிமையாக்கி இருக்க முடியாது. ஒரு சிலரே அடிமையாக்கப்பட்டிருப்பர்.

13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மங்கோலியர் படையெடுப்புக்கு முன்னால் மத்திய ஆசியப் பகுதியில் பல கிராமங்களும் நகரங்களும் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தன. மாடு மேய்ப்போரான வெற்றி பெற்ற மங்கோலியருக்கு அவற்றால் பெரிய பயன் இல்லை. அதனால் அவர்கள் வயல்களையெல்லாம் மேய்ச்சல் நிலங்களாக மாற்றி விட்டனர்….. “மக்கள் வசித்த பழைய கிராமங்களில் குட்டிச் சுவர்கள்தான் இருந்தன. கிராமங்களுக்கு வெளியே மங்கோலியரின் கூடாரங்கள் இருந்தன. வயல்களில் மங்கோலியரின் கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன” என அன்று அங்கு பயணம் செய்த பயணிகள் குறிப்பிடுவதாக இராகுல சாங்கிருத்தியாயன் கூறுகிறார். மேலும் அவர், ஊர் சுற்றி ஆரியர்களும் தம் பகைவரிடம் (வடஇந்தியரிடம்) இதைவிட நன்றாக நடந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்கிறார்(5). அதன் மூலம் பண்டைய சிந்துவெளி மக்களின் கிராமங்களும், நகரங்களும் அழிக்கப்பட்டு, இந்தியா ஒரு இருண்ட காலத்தில் மூழ்கிப் போனது.

“பண்டைய சமற்கிருத வேதம்….. பகைவரைப் பற்றிக் கூறும்பொழுது, போர்க்களத்தில் மிகவும் இரக்கமற்ற முறையில் அடித்து நொறுக்கப் பட்டனரென்றும், அவர்களின் செல்வங்கள் சூறையாடப் பட்டனவென்றும், நகரங்கள் கொளுத்தப் பட்டனவென்றும் அந்நூல் விவரிக்கிறது” எனவும் “பழமைச் சிறப்புடைய ஒரு உயர்நிலை நகரப் பண்பாட்டின் மீது காட்டுமிராண்டித்தனம் கொண்ட வெற்றியால்… வரலாற்றின் திசை பலத்த தாக்குதலுக்கு இரையாகித் தேக்கமும் சீர்குலைவும் அடைந்ததைக் காண்கிறோம்” எனவும், இந்த ஆயிரங் காலத்துப் பண்பாட்டை மீண்டும் எழாதபடி நிர்மூலமாக்கிய காட்டுமிராண்டிகள் எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லவில்லை எனவும், சிந்து நாகரிக முடிவுக்கும் அதன்பின் தோன்றும் புதியதொன்றின் தொடக்கத்திற்கும் இடையே 600 ஆண்டுகால இடைவெளி இருந்தது எனவும், “இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு வளர்ச்சியின் ஆரம்பமும், கி.மு. இரண்டாவது, மூன்றாவது ஆயிரமாண்டுகளுக்குரிய இந்திய வரலாற்றைப் படைக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் கடுமையான சேதத்திற்குள்ளாயின” எனவும் கூறுகிறார் டி.டி.கோசாம்பி(6).

கி.மு. 1750இல் முடிவுற்ற சிந்துவெளி நாகரிகத்துக்குப் பின் 600 ஆண்டுகள் கழித்துத்தான் புதிய நாகரிகம் தோன்றுவதாகவும், இந்திய வரலாற்றைப் படைக்கக் கூடிய வாய்ப்பு கடுமையான சேதத்திற்கு உள்ளானதாகவும் அவர் கருதுகிறார். ஆனால் உண்மையில் 1000 ஆண்டு காலம் கழித்துத்தான் புதிய நாகரிகம் தோன்றுகிறது.

இந்திய ஆரிய இனக் குழுவும் பூசாரி வகுப்பும்:

பழங்குடி நிலையில் இருந்த ஆரியர்களின் தாக்குதல் குறித்து, “ஆரியர் தாக்குதல் நடத்திச் சென்ற பிறகு, அந்த இடங்கள் அளவுக்கு அதிகமாகவே சின்னாபின்னப் படுத்தப்பட்டன. அதன் பின்னர் மனித சமூகமும் வரலாறும் அங்கு மீண்டும் தோன்றக் கூடுமானால் அவை முற்றிலும் மாறுபட்ட நிலையில்தான் முடியும்” எனக் கூறுகிறார் கோசாம்பி(7).

மத்திய ஆசியாவிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் உலகின் பல இடங்களில் குடியேறினார்கள். “ஆசியா மைனரில் குடியேறிய கிட்டைட்டியரும், கிரீசில் (மைசீனியன்) கிரேக்கரும், ஈரானில் ஈரானியரும் குடியேறிய காலத்தைக் கணக்கிட்டால் கி.மு. 1500க்கு முன் ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியிருக்க முடியாது எனவும், இரிக் வேதத்தை இயற்றிய மிகப் பழைய முனிவர்களின் காலம் அதற்குப் பின் 300 வருடம் கழித்துத்தான் எனவும் கூறுகிறார் இராகுல சாங்கிருத்தியாயன்(8).

இரிக் வேத சமற்கிருதத்தை விட கிட்டைட்டி-மிட்டாணி ஒப்பந்த மொழியான இந்தோ ஆரிய மொழி மிகவும் தொன்மை வாய்ந்தது என்றால் வேதப் பாடல்கள் கி.மு. 14ஆம் நூற்றாண்டிற்கு அடுத்து வந்த காலத்திற்குச் சொந்தமாகும் எனக் கூறுகிறார் இரோமிலா தாப்பர்(9). கிட்டைட்டி-மிட்டாணி ஒப்பந்தம் கி.மு. 1380இல் நடந்தது. அதில் இந்தோ ஆரிய தெய்வங்களான மித்ரா (Mitra), வருணன் (Varuna), இந்திரா (Indra), அசுவிணி தேவர்கள் Nasatya(shvins) ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்(10). கிட்டைட்டி-மிட்டாணி ஒப்பந்த மொழி, மிக வளர்ச்சி பெற்ற, அன்றே எழுத்துடைய, ஒரு பண்டைய இந்தோ ஆரிய மொழி. கி.மு. 2000 அல்லது அதற்கு முன் மத்திய ஆசியாவிலிருந்து வந்த பண்டைய ஆரிய இனக்குழு மக்கள், ஆசியா மைனர் பகுதிகளில் குடியேறி வளர்ச்சி பெற்று, நாகரிக அரசுகளை உருவாக்கிய பின் போடப்பட்ட ஒப்பந்தம் அது. ஆனால் அச்சமயத்தில் இனக்குழுக்களாக, நாடோடிகளாக ஆடு மாடுகள் மேய்த்துக் கொண்டு அதே மத்திய ஆசிய ஆரிய இனக்குழுவின் ஏதோ ஒரு கிளைப் பிரிவிலிருந்து கி.மு. 1500க்குப்பின் வடஇந்தியா வந்தவர்களின் இனக்குழு மொழிதான் சமற்கிருதம். ஆகவே வரலாற்றுக் கண்ணோட்டத்தில் கிட்டைட்டி - மிட்டாணி ஒப்பந்த மொழி மிகவும் தொன்மையானது. சமற்கிருதம் பிந்தையது. ஆகவே இரோமிலா தாப்பர் கூற்றுப்படி கி.மு. 14ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் இரிக் வேதப் பாடல்கள் பாடப்பட்டன.

மேற்கண்ட தரவுகள், கி.மு. 15 ஆம் நூற்றாண்டிற்குப்பின் வட இந்தியாவில் குடியேறிய ஆரியர்களால் கி.மு. 1200-1000 அளவில் இரிக் வேதப் பாடல்கள் பாடப்பட்டன என்பதையும், அதன்பின் கி.மு. 1000 வாக்கில் அவை தொகுக்கப்பட்டன என்பதையும் உறுதி செய்கின்றன. கி.மு. 1750 அளவிலேயே சிதைவடைந்திருந்த சிந்துவெளி நாகரிகத்தை ஆரியர்கள் அடியோடு அழித்து ஒழித்தார்கள். சிலர் அதனை ஆரியர்கள் போர் செய்து அழிக்கவில்லை எனக் கூறியபோதும், 1000 ஆண்டுகால நாகரிகம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. அதன் எச்சங்களோ, மரபுகளோ, இன்னபிற விடயங்களோ, எதுவும் இல்லாது போனது. அதன்பின் மிக நீண்ட காலத்துக்கு இந்தியா இருண்ட காலத்தில் மூழ்கியது. சிந்துவெளி நாகரிகத்துக்குப் பின் 1000 ஆண்டுகள் கழித்துத்தான் வட இந்தியாவில் நாகரிகம் தோன்றத் தொடங்கியது. இரிக் வேத கால கட்டம் என்பது அநாகரிக காலகட்டம். அதனை நாகரிக காலமாகக் கருத முடியாது.

ஆரிய இனக்குழு பாடிய வேத காலப் பாடல்களைப் போலவும், அதில் உள்ள கருத்துகளைப் போலவும் பல இனக்குழுக்கள் பாடல்களைப் பாடியுள்ளனர். அவை “சுமேரியருடைய திருமுறைகள், பாபிலோனிய புலம்பல் பாடல்கள், சீனர்களது வேள்விப் பாடல்கள், கிரேக்கர்களது இறைவேண்டல் பாடல்கள்”(11). ஆகவே வேதப் பாடல்களில் தனித்துவமான சிறப்பு ஒன்றும் இல்லை. உலகின் பெரும்பாலான நாகரிகங்களின் தொடக்கத்தில் உருவான நகர அரசுகள் நன்கு வளர்ச்சி அடைந்தபோது, அவை வளர்ச்சிக்குத் தடையாக இருந்த பழைய பூசாரி வகுப்புகளை முழுமையாக அழித்தொழித்தன. தமிழகத்திலும் நகர அரசுகள் வளர்ந்தபோது மிக நீண்ட காலத்திற்கு முன்பே பூசாரி வகுப்புகள் ஒழிக்கப்பட்டன. ஆனால் வடஇந்தியாவில் நகர அரசுகள் நன்கு வளருவதற்கு முன்பே பேரரசுகள் உருவானதால் பூசாரி வகுப்புகளை முழுவதுமாக ஒழிப்பது என்பது நடைபெறவில்லை. அதனால் அவை வலிமை பெற்று கி.மு. 185-30 வரை 2 நூற்றாண்டுகளுக்கு மகத ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டன. அதன்பின் இந்தியாவில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை வெளிநாட்டுப் படையெடுப்புகளும், உள்நாட்டுப் போர்களும் நடைபெற்று, பெரும் குழப்பம் நிலவி வந்தது. இந்தக் குழப்ப காலத்தையும் அவை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன.

வெளிநாட்டு படையெடுப்பாளர்களை இந்தியாவின் பாரம்பரியமான அரசராக மாற்றுவதற்குத் தங்களின் புனிதச் சடங்குகள் தேவையானவை போன்ற கற்பிதங்களை உருவாக்கி, ஆங்காங்கு இந்தியாவில் ஊடுருவி, அரசமைத்த வெளிநாட்டு அரசுகளின் ஆதரவை, அங்கீகாரத்தை இவை பெற்றன. சான்றாக உருத்ரதாமன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். ஆகவே கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையான 500 வருட காலகட்டத்தில் வலிமை பெற்ற பூசாரி வகுப்பு தனக்குத் தேவையான நூல்களை இயற்றியதோடு, பழையவற்றைத் தனக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டது. தனது பூசாரி வகுப்பை (பிராமண வகுப்பு) அனைவருக்கும் மேலான ஒரு வலிமை மிக்க குழுவாக ஒரு உயர் சமூக நிறுவனமாக நிலைநிறுத்திக் கொண்டது. அதற்காக மதத்தின் பெயரால் வருணங்களை, சாதியக் கட்டமைப்பாக மாற்றியமைத்தது. (கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவில் சாதியக் கட்டமைப்பு இருக்கவில்லை. வருணம் எனப்படும் வகுப்புகளும், தொழில் குழுக்களும்தான் இருந்தன). இந்தக் காலகட்டத்தில்தான் பிரம்ம சூத்திரம், மீமாம்ச சூத்திரம், மனுசுமிருதி போன்ற பல பூசாரி வகுப்பு நூல்கள் அனைத்தும் இயற்றப்பட்டன என்பதோடு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள் போன்ற பழைய நூல்கள் மாற்றி அமைக்கப்பட்டன. கீதை போன்றவையும் உருவாகின. அனைத்தும் பூசாரி வகுப்பை சாதியம் முதலான பல்வேறு தளங்களில் மிக உயரத் தூக்கி நிறுத்துவதற்கான அடிப்படைக் கட்டுமானங்களாக உருவாக்கப்பட்டன.

rig vedakaala ariyargalசான்றாக பிராமணங்கள் குறித்து லெவி, “பிராமணங்களின் இறையியல் கருத்துகளைவிட, பண்பற்ற, பகுத்தறிவற்ற, ஆன்ம இழிநிலையை வெளிப்படுத்தும் வேறு ஒன்றைக் காண்பது அரிதினும் அரிது. பிராமணங்கள் கூறும் இறையியலில் ஒழுக்கப் பண்புக்கு இடமே இல்லை. என்கிறார்(12). இது குறித்து, பி.கே. கோசு, “இந்துவத்தில் ஏதாவது அருமை பெருமை இருக்குமானால் அவை இரிக் வேதத்தில் குறிப்பால் உணர்த்தப்பட்டன. அதே வேளையில் இந்துவத்தில் உள்ள அத்தனை இழிவுகளும் அருவருக்கத் தக்கவையும் பிராமணங்களில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளன”(13) என்கிறார். இந்த பிராமணங்கள் பூசாரி வகுப்பை கடவுளுக்கு நிகராக உயர்த்தும் பணியைச் செய்தன. கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரை தன்னை வலிமைப்படுத்திக் கொண்ட பூசாரி வகுப்பு அடுத்து வந்த 2 நூற்றாண்டுகளில் (குப்தர் காலத்தில்), தனது மேல் நிலையை, தனது சாதியக் கட்டமைப்பை, தனது பிராமணியச் சிந்தனைகளை, இன்ன பிறவற்றை இந்திய அரசும் மக்களும் ஏற்று அங்கீகாரம் பெற வைத்தது. ஆகவே குப்தர் காலகட்டத்தை, பிராமண வகுப்பு இந்தியாவில் தன்னை உறுதியாகக் காலூன்றி நிலைநிறுத்திக் கொண்ட கால கட்டம் எனலாம்.

இனக்குழு காலகட்டத்தின் இறுதியில் இந்த பூசாரி வகுப்பு நல்ல நிலையில் இருந்தது.(உலக நாகரிகம் முழுவதும் இனக்குழு காலத்தின் இறுதியில், நகர அரசுகளின் தொடக்கத்தில் பூசாரி வகுப்பு நல்ல நிலையில்தான் இருந்துள்ளது). ஆனால் அதன்பின் நாகரிகத்தின் தொடக்க காலமான கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் அது தனது நல்ல நிலையை இழந்து போனது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து அது அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தது. (பிற இடங்களில் பூசாரி வகுப்பு அடியோடு அழித்து ஒழிக்கப்பட்டது). கி.மு. 2 ஆம் நூற்றாண்டில், தான் ஆட்சியைப் பிடித்து ஆண்ட போதுகூட தனது மேல் நிலையை சமூக அளவில் அதனால் நிலைநிறுத்திக் கொள்ள இயலவில்லை. ஆனால் குப்தர் காலத்தில் அது தன்னை ஒரு மேல்நிலைச் சமூகமாக நிலைநிறுத்திக் கொண்டு, சாதியக் கட்டமைப்பை இந்தியா முழுவதும் கொண்டு சென்றது. இவர்களின் மொழியான சமற்கிருதம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலும் இந்தியாவில் எங்கும் ஆட்சி மொழியாகவோ, மக்கள் மொழியாகவோ இருக்கவில்லை. பாலி, பிராகிருதம், தமிழ் ஆகியன தான் இருந்தன. ஆனால் இந்த பூசாரி வகுப்பு, கி.பி. 5 ஆம் நூற்றாண்டிற்குள் அம்மக்கள் மொழிகளை அகற்றிவிட்டு, இந்தியா முழுவதும் சமற்கிருத மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. இந்தப் பூசாரி வகுப்புதான் ஆரியர்களின் இனக்குழு காலத்தை, அநாகரிக காலத்தை (கி.மு.1200-750) வேத கால நாகரிகம் எனக் கூறி வருகிறது. அது ஒரு வரலாற்றுப் புரட்டு. வரலாற்றில், வேத கால நாகரிகம் என ஒன்று இருக்கவில்லை.

கங்கைச் சமவெளி நாகரிகம் (கி.மு.750 - கி.மு.30):

பழங்குடிகள் ஒரு சிறு மக்கள் சமூகமாக இணைந்து, ஒரு இடத்தில் குடியேறி தங்களுக்கான ஒரு நகர அரசை உருவாக்கும் பொழுதுதான் நாகரிகம் உருவாகுவதாகக் கொள்ள முடியும். வட இந்தியாவில் கி.மு. 750க்குப் பின்னர்தான் சிறு சிறு பழங்குடி அரசுகள் உருவாகின்றன. அவற்றில் 16 சனபதங்கள் முக்கியமானவை எனக் கருதப்பட்டன. இந்த சனபதங்கள் என்பனவற்றில் இனக்குழு அரசுகளும், நகர அரசுகளும் இருந்தன. அவற்றுக்குள் ஏற்பட்ட போர்களில் கி.மு. 600 அளவில் ஒரு சில மட்டுமே எஞ்சி நின்றன. அவை லிச்சாவி, கோசலம், மகதம் போன்றன.

கி.மு. 550 முதல் கி.மு. 450 வரையான காலகட்டத்தில் மகதம் பிறவற்றை வென்று பேரரசாக ஆகியது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் நகரமயம் தொடங்கியது என்பதை, “வைசாலி, உச்சயினி, சிராசுவதி, இராஜ்காட், இராஜ்கார், இராசகிருகம் போன்ற இடங்களில் தோண்டிய அகழாய்வானது கி.மு. முதல் ஆயிரமாவது ஆண்டுகளின் மத்தியில் (கி.மு.500) அவை நகரமாகிக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது” எனக் கூறுகிறார் இரோமிலா தாப்பர்( Romila Thaper)(14).

இன்னொரு சான்றாக, “கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்புள்ள தட்சசீலம் ஒரு சிறு கிராமமாகவே இருந்து வந்தது” எனக் கூறுகிறார் கோசாம்பி(15). தட்சசீலம்தான் இந்தோ ஆரியர்களின் முதல் குடியிருப்பு. ஏ.எல். பாசம் (A.L.Basham), “கி.மு. 6 ஆம் நூற்றாண்டில்தான் இந்திய வரலாறு பழங்கதைகள், ஐயப்பாட்டிற்குரிய மரபுகள் ஆகியவற்றினின்றும் வெளியேறுகிறது... இந்தியாவின் உண்மை வரலாறு தோன்றுகின்ற காலமானது அறிவுத் துறையிலும், ஆன்மீகத் துறையிலும் பெருங்கிளர்ச்சி தோன்றியவொரு காலமாகவுள்ளது” எனக் குறிப்பிடுகிறார்(16). ஆகவே அவர் உண்மை வரலாறு என்பது கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாகவே கருதுகிறார். ஆகவே இத்தரவுகள் வட இந்திய நாகரிகம் என்பது கி.மு. 600 க்குப் பின்னர் கங்கைப் பகுதியில் ஏற்பட்ட நகரமயமாதலைத் தொடர்ந்து உருவாகிறது எனலாம்.

இந்திய ஆரிய இனக்குழுவும் நாகரிகமும்:

நாகரிகங்கள் என்பன நகர அரசுகளின் உருவாக்கத்தில் இருந்துதான் தொடங்குகின்றன என்பது உலகப் பொது விதியாகவும் ஒரு வரலாற்று விதியாகவும் இருப்பதை நாம் முன்பே குறிப்பிட்டுள்ளோம். இந்தியாவின், “கி.மு. 1200 லிருந்து கி.மு. 600 வரையுள்ள காலம் வேதகாலத்தின் பொற்காலம் என்று மக்களால் கருதப்படுகிறது. இது வரலாற்றுத்… திறனாய்விற்கு அப்பாற்பட்ட ஓர் அழுத்தத்தை கொடுக்கிறது” எனக் கூறுகிறார் இரோமிலா தாப்பர்(17). அவர் அக்காலகட்டத்தை ஒரு நாகரிக காலமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் சில வரலாற்று ஆசிரியர்கள் இந்தியாவின், கி.மு. 1200 முதல் கி.மு. 600 வரையான காலகட்டத்தை வேதகால நாகரிகம் எனச் சொல்லி வருகிறார்கள்.

வேத காலம் இருந்ததாகச் சொல்லப்பட்ட வடஇந்தியப் பகுதிகளில் கி.மு. 600க்கு முன்னர் எந்த நகரமும், எந்த நகர அரசும் இருக்கவில்லை என்பதை அப்பகுதிகளில் நடந்த தொல்லியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. நகர அரசுகள்தான் நாகரிகத்தின் தொடக்கம் என்பது வரலாற்றுப் பொதுவிதியாக இருக்கிறது. கி.மு. 750 க்குப் பின்னர் 16 சன பதங்கள் எனப்படும் சிறு நகர அரசுகளும், இனக்குழு அரசுகளும் உருவாகியதாகக் கருதப்படுகிறது. ஆகவே கி.மு. 1750 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கி.மு. 750 வரை எந்த நகரமும், எந்த அரசும் வட இந்தியாவில் உருவாகவில்லை. ஆகவே கி.மு. 1750 முதல் கி.மு. 750 வரையான இந்தியாவின் 1000 வருட காலத்தை அநாகரிக காலமாகவே கருத முடியும். கி.மு. 750க்குப் பின் நாகரிக காலம் தொடங்கி, கி.மு. 6 ஆம் நூற்றாண்டில்தான் நகரமயம் ஏற்படுகிறது.

இந்தியாவின் அநாகரிக காலம் (கி.மு.1750 - கி.மு.750):

கிரேக்கத்தில் கி.மு. 1500 வாக்கில் மைசீனிய நாகரிகம் உருவாகியது. மைசீனியன் நாகரிகம் கி.மு. 1200 வரை இருந்தது. அதன்பின் அது அழிந்து விட்டது. கி.மு. 1200லிருந்து கிரேக்கம் இருண்ட காலத்தில் மூழ்கியது. அதற்கு முன்பும் பின்பும் அங்கு அக்கீயர், ஐயோனியர் போன்ற பலர் குடியேறினர். கி.மு. 1100 வாக்கில் அங்கு டோரியர்கள் படையெடுத்து வந்து மீதியிருந்த அனைத்தையும் அழித்தார்கள். அதன்பின் 300 வருட காலம் மக்கள் அநாகரிக நிலையில் வாழ்ந்தார்கள். ஆக மொத்தம் 400 வருட காலம் (கி.மு.1200-800) கிரேக்கம் இருண்ட காலமாக இருந்ததாக கிரேக்க, உலக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். கி.மு. 800க்கு முன்பே ஓமரின் இலியட், ஒடிசி ஆகிய காவியங்கள் இயற்றப்பட்டன. அதே காலத்தில் கிரேக்கத்தில் வாழ்ந்த பல இனத்தவரும் ஒன்றிணைந்து கிரேக்கர்களாக ஆனார்கள். அதன்பின் கி.மு. 800வாக்கில் நகரங்கள் தோன்றிய காலமே கிரேக்க நாகரிகத்தின் தொடக்க காலமாகக் கருதப்படுகிறது. அதற்கு முற்பட்ட காலம் இருண்ட காலமாகவே கருதப்படுகிறது. இதனை இந்தியாவின் வேத காலம் எனப்படும் காலத்தோடு ஒப்பிடுவோம்.

கி.மு. 1750இல் சிந்துவெளி நாகரிகம் அழிவுக்குள்ளானது. அதற்கு பின்பு இந்தியா வந்த ஆரிய இனக்குழு மக்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களைத் தேடியே இங்கு வந்தனர். முதலில் இந்தியாவின் பஞ்சாப் பகுதியிலும், அதன் பின்னர் சிலர் மேற்கு கங்கைச் சமவெளிக்கும் இடம் பெயர்ந்தனர். அதன்பின் கிழக்கு நோக்கிய நகர்வு நடைபெற்றது. இவை அனைத்துமே மேய்ச்சல் நிலங்களுக்கான இனக்குழு கால மக்களின் நகர்வாகவே இருந்தது. இவர்களின் நகர்வு உள்ளூர் மக்களின் கிராமப் பண்பாடுகளை அழிப்பதாகவும், அவர்களை மேலாதிக்கம் செய்வதாகவும், வயல்வெளிகளை மேய்ச்சல் நிலங்களாக மாற்றுவதாகவும் தான் இருந்தது.

மிக நீண்டகாலம் கழித்து, இடையே கால்நடை வளர்ப்போடு, சிறிய அளவு வேளாண்மையும், கிராமக் குடியிருப்புகளும் தோன்றின. கி.மு. 800க்குப்பின் இரும்பு பயன்படுத்தப்பட்டு காடுகளை அழித்து பெரிய அளவிலான வேளாண்மையும், நிலையான குடியிருப்புகளும் உருவாகின. நாளடைவில் கி.மு. 750க்குப் பின் சிறு குறு நகரங்களும் வணிகமும் உருவாகின. ஆனால் கி.மு. 600 வரை நாகரிகத்தைத் தோற்றுவிக்கும் அளவிலான பெரிய நகரங்களோ, நகர அரசுகளோ உருவாகவில்லை. ஆகவே கி.மு. 1750 முதல் கி.மு. 750 வரையான வடஇந்தியாவின் ஆரிய இனக்குழு கால 1000 ஆண்டு காலத்தை, ஒரு அநாகரிக காலகட்டமாகவே கருத முடியும். அக்கால கட்டத்தை ஒரு நாகரிக காலமாகக் கருத இயலாது. ஆகவே வேதகாலம் என்ற நாகரிக காலம் வரலாற்றில் இருக்கவில்லை. அது ஒரு வரலாற்றுப் புனைவு என்பதுதான் உண்மை.

பார்வை:

1. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 98, 99.

2. இரிக் வேதகால ஆரியர்கள், இராகுல சாங்கிருத்தியாயன், தமிழில் ஏ.ஜி. எத்திராசுலு, அலைகள் வெளியீட்டகம், டிசம்பர்-2004, பக்: 16,17.

3. “ “ “ பக்: 21.

4.. “ “ “ பக்: 37,38.

5. .. “ “ “ பக்: 11.

6. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி(D.D.Kosambi), NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 100-102.

7. .. “ “ “ பக்: 136, 137

8. இரிக் வேதகால ஆரியர்கள், இராகுல சாங்கிருத்தியாயன், தமிழில் ஏ.ஜி. எத்திராசுலு, அலைகள் வெளியீட்டகம், டிசம்பர்-2004, பக்: 8.

9. முற்கால இந்தியா(Early India, - From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர்(Romila Thaper), NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 211.

10. Mitanni-Aryan, From Wikipedia.

11. பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத் கீதை, தமிழில் கே.சுப்ரமணியன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்: 84.

12, 13. “ “ “ பக்: 85, 86.

14. முற்கால இந்தியா(Early India, - From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 266.

15. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, NCBH, செப்டம்பர்-2006, தமிழாக்கம்: ஆர். எசு. நாராயணன், பக்: 166.

16. வியத்தகு இந்தியா (The Wonder That Was India), ஏ.எல். பாசம்(A.L.Basham), தமிழாக்கம்: செ.வேலாயுதபிள்ளை, மகேசுவரி பாலகிருட்டிணன், ஏப்ரல்-2015, விடியல் பதிப்பகம் பக்: 85.

17. முற்கால இந்தியா (Early India, - From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 253.

18. “ “ “ பக்: 510

கணியன் பாலன், ஈரோடு 

Pin It