நாப்கின் இலவசமாக பெண்களுக்கு வழங்குவது பற்றி ஒரு அரசியல் கட்சி சட்ட மன்ற தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது பற்றிய விவாதங்கள் முகநூலில் பரப்பரப்பாகி கொண்டிருந்தது.
டிவிட்டர், வாட்ஸ்அப் என்று பரவி இணையதளங்களில் விவாதம் அனல் பறந்துக் கொண்டு இருந்தது. இரண்டு முகாம்களாக இந்த இணைய விவாத களங்கள் பிரிந்துக் கிடந்தன!
தாளமுத்து படைப்பாளியோ, எழுத்தாளாரோ கிடையாது. ஆனாலும் முகநூலில் தனது கருத்துகளை ஆணிதரமாக எழுதபவராக கடந்த பத்தாண்டுகளில் மாறி இருந்தார். சித்திரமும் கைப்பழக்கம் என்பது உண்மைதானே!
நரை கூடி கண் மங்கி உடல் சோர்ந்து தோல் சுருங்கி நிலையில் படுத்து கிடந்தார். சிறிது கண் அயர்ந்திருப்பார். பொட்.. பொட்.. என்று யாரோ தலையில் தட்டியது போல் இருந்தது. எழுந்து உட்கார்ந்து சுற்றிலும் முற்றிலும் மலங்க மலங்க தாளமுத்து பார்த்தார்.
சிறிது தூரத்தில் அடிக்கி வைத்திருந்த புத்தக அலமாரியில் இருந்து ஓரு பெரிய புத்தகம் மட்டும் தாவி குதித்தது. அந்த புத்தகம் ஜிங்கு ஜிங்கென என்று கூத்தாடிக் கொண்டிருந்தது. கண்களை கசிக்கிக் கொண்டு இன்னும் உற்று பார்த்தார்.
அந்த புத்தகத்தில் மனுஸ்மிருதி என்று எழுதியிருந்தது. இப்பொழுது அது குதுகுலத்துடன் மேற்கத்திய, அமெரிக்க டான்ஸ்களையும் சேர்த்துக் கொண்டு கண்மண் தெரியாமல் மாறி மாறி ஆடிக் கொண்டிருந்தது.
“டேய் நாப்க்கினை பற்றி எழுதிவாயாடா”
அந்த புத்தகம் அதட்டிக் கேட்டது. அவருக்கு ஓன்றும் புரியவில்லை. அவர் இன்னும் நன்றாக கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார்.
அங்கு எதுவும் இல்லை. மாய தோற்றமா.. உண்மையா...!
தாளமுத்துக்கு வயதாகி விட்டது. அவருடைய நினைவுகளும் செயல்ஆற்றல்களும் வயதாக வயதாக மங்கிக் கொண்டு வருவது இயல்பான ஒன்றுதான்! அதன் விளைவாக கூட இது நிகழ்ந்திருக்கலாம்.
அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் பொழுது அவருக்கு எதிர்கால வாழ்க்கையை பற்றி ஒரு மலைப்பு இருந்தது. நல்ல உடல் நலத்துடன் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருந்தவரை முழுநேர ஒய்வு என்பது பயமுறுத்தியது. அதிலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்று அங்கலாய்ந்துக் கொண்டிருந்தார்.
நல்ல வேலையாக பிள்ளைகளும், பேரபிள்ளைகளால் அறிமுகப்படுத்தப்பட்ட முகநூல் இன்று அவர் உயிர் வாழ்வதற்க்கான பெருவெளியை உருவாக்கி விட்டு இருந்தது.
படைப்புகளை வாசிக்கும் ஆர்வமும், சிறிது அரசியல் வாசனையும் சேர்ந்து அவருக்கும், அவர் முகநூல் வாழ்க்கைக்கு தினம் தினம் உயிர்ப்பை தந்து கொண்டிருந்தது.
அனைவருக்கும் வெளியை மட்டுமல்ல, வாசகர்களையும் சேர்த்து வழங்கிய இணையம் அவருக்கும் ஒர் ஒரமாக அதில் இடமளித்தது. அவர் முகநூல் எழுத்தாளராக கடந்த பத்தாண்டுகளில் மெல்ல மெல்ல பரிணாமம் பெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்!
தாளமுத்து அனைத்து துறைகளிலும் நுனிபுல் மேய்ப்பவராகையால், எல்லா விவாதங்களிலும் அவரால் இயல்பாக கலந்துக் கொள்ள முடிந்தது. உரையாடல்களை நிகழ்த்த முடிந்தது. அவரது அறுபது ஆண்டுகள் வாழ்க்கை அனுபவங்கள் இந்த உரையாடல்களை பல நேரங்களில் முன் நகர்ந்தி அவருக்கு சபாஷ் வாங்கி தந்தது.
ஆனாலும், நாப்கின் இலவசமாக பெண்களுக்கு வழங்குவது பற்றி விவாதங்களில் தாளமுத்து வெறும் பார்வையாளராகவே தற்பொழுது கடந்துச் சென்று கொண்டு இருந்தார்.
ஏன்.. எதற்கு?
பெரும் பாரமாக மனதை அழுத்தி பிசைவதில் இருந்து விடுபட முடியாத தாளமுத்து எப்படி இயல்பாக உரையாட முடியும்!
ஆழ்கடல் எரிமலைகளை கக்கிக் கொண்டு இருக்கும் பொழுது, அலைகடல் மெல்லிய தென்றலை வீசிக் கொண்டுதானே இருக்கிறது.
தாளமுத்துவை பொறுத்தவரைக்கும் அது ஆழ்மனத்தினை அழுத்திக் கொண்டிருக்கும் பெரும் இரைச்சல், தொடர் உறுத்தல், தீராத பெரும் வலி!
ஒவ்வொரு முறை எழுத நினைத்து, வினையாற்ற நினைத்து இடையில் நிறுத்தப்பட்டது. அது ஏன் என்று அவருக்கு புரியவில்லை.
அந்த எழுதாத பிரச்சனை என்ன?
அம்மாவின் நாப்கின்.
நாப்கின் மாதவிடாய் நேரங்களில் பெண்கள் பயன்படுத்துவது என்று அனைவருக்கும் தெரிந்த செய்தி. எவ்வளவு தூரம், ஆழமாக இதை அறிந்து இருப்பார்கள் என்பது வேறு விசயம்!
அறுபது ஆண்டுகளுக்கு முன் நாப்கினுக்கு தூமைதுணி, தூமை கந்தை என்று தான் தமிழ் கூறும் நல்லுலகம் வைத்திருந்த பெயர். ஆரம்ப பள்ளி நாட்களில் அரசல் புரசலாக காதில் விழுந்த பெயர்.
அநேகமாக உயர்நிலை பள்ளி நாட்கள் இறுதி வரை, இழிவான சொல்லாக, திட்டுவதற்க்கான வார்த்தையாக உச்சரிக்கப்பட்ட பெயராக மட்டும்தான் தொடர்ந்துக் கொண்டு இருந்தது. அதை பற்றி ஏதும் தெரியாமல் தாளமுத்துவின் டீன் ஏஜ் கடந்து போனது.
தாளமுத்து ஏழாவது வயதில் அவனுடைய அப்பா இறந்த போது பெருங்குரல் எடுத்து அம்மா ஓ வென்று அலறி அரற்றி அழுத கோலம் எழுபது வயதிலும் அவர் கண் முன்னால் விரிகிறது.
பிணத்தை எடுக்கிற நேரத்தில் அம்மா பெருங்குரல் எடுத்து அழுதுக் கொண்டிருந்தார். பிணம் கொண்டு செல்லும் போது அம்மா தரையில் உருண்டு பிரண்டு அழுத காட்சி தாளமுத்துவுக்கு இன்னும் மனதில் பசுமையான மரத்தில் அடிக்கப்பட்ட ஆணியாய் சிக்கி வெளியேறாமல் கிடக்கிறது. பிணம் சென்ற பிறகு ஆசுவாசப்படுத்திக் கொண்டு எல்லாரும் அமைதியாக இருப்பதை அவன் அம்மா பார்த்தார்.
“பிள்ளைகள பார்த்து மனது ஆறுதல்யடையம்மா.. நீ தானேம்மா இனி எல்லா அவங்களுக்கு இருக்கே”
உற்றார் உறவினர்கள் அம்மாவிடம் திருப்பத் திருப்ப கூறிக் கொண்டு இருந்தார்கள்.
மலங்க மலங்க விழித்துக் கொண்டு தன்னுடைய மூன்று குழந்தைகளையும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருந்தார். அவர் பார்வை சில நிமிடங்கள் பிள்ளைகளில் ஒன்று அழுதும், மற்றொன்று அழுத்தும் சிரித்தும், இன்னொன்று விளையாட்டாகவும் கிடந்ததை கவனித்தது. பிள்ளைகள் மீது நிலைகுத்தி நின்ற அந்த சில நிமிடங்கள் பெருவாழ்வை கடத்தி பெருமூச்சாய் அவரிடம் இருந்து விடைபெற்று வெளியேறி விட்டது.
அதற்கு பிறகு அம்மா என்றும் எதற்கும் எப்பொழுதும் அழவே இல்லை!
அடுத்த பத்து ஆண்டுகள் அம்மாவின் உழைப்பு பிரமாண்டமானது. முன் முயற்சிகள் அசாத்தியமானவை. அனைத்தும் தனது மூன்று குழந்தைகளை கரை ஏற்றுவதற்க்காகவே இருந்தது.
அவர்களுக்கு சிறிய துண்டு நிலமும் இருந்தது. அந்த நிலத்தில் தாள்முத்துவின் அம்மா கடுமையாக உழைத்தார். மீதி நேரத்தில் மாடு மேய்த்து பால் கறந்து அதை விற்று பணமாக்கி குழந்தைகளை வளர்த்தார். எதற்கும் யாருக்கும் போய் கை ஏந்தியது கிடையாது. தன் கையே தனக்கு உதவி என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
தானும், தன் பிள்ளைகளும் எதற்கும் யாரிடமும் கை ஏந்த கூடாது என்ற வைராக்கியம் அவர் உடலில் ஊறிபோய் கிடந்தது.
தாளமுத்துதான் அந்த குடும்பத்தின் மூத்த பிள்ளை. மூத்த பிள்ளை என்பதால் அவனும் அம்மாவுடன் சேர்ந்து கண்ணும் கருத்துமாக தன்னுடைய தம்பி தங்கைகளை கவனித்துக் கொண்டான். அவன் கண்கள் முழுவதும் அம்மாவுடைய அசாத்திய உழைப்பும் தன் முனைப்பும் நிறைந்து கிடந்தது
ஓட்டு வீடும் அதை ஒட்டிய தோட்டமும் வீட்டின் பின்புறம் இருந்த புழக்கடையில் இருந்த ஆடு மாடுகள் கட்டக்கூடிய தொழுவமும் இணைந்தது அவர்களின் வசிப்பிடம்.
இரவில் வீட்டிற்குள் அம்மா தனது குழந்தைகளுடன் படுத்திருப்பார். திடீரென்று பார்த்தால் சில இரவுகளில் அம்மா வீட்டிற்குள் இருக்க மாட்டார். பதைபதைப்புடன் வீட்டை திறந்து கொண்டு தாளமுத்துவின் கண்கள் அந்த இருளில் தேடும். வராண்டாவில் அம்மா முடங்கிச் சுருண்டு படுத்துக் கிடப்பார்.
என்னவென்று தாளமுத்துக்கு அந்த சிறுவயதில் மூன்றாவது நான்காவது படிக்கும் வயதில் புரியவில்லை. அதை எந்த கல்வியும், சமூகமும் சொல்லி தரவும் இல்லை.
வலியால் அம்மாவின் உடல் லேசாக அதிர்வது அந்த இருளில் தெரியும். திருகு வலியாக அனைத்து நரம்புகளையும் பிடித்து இழுக்கும் அம்மாவின் அடி வயிற்றுவலி அவர் உடல் முழுவதும் பரவுவதை அம்மாவின் அசைவுகள் காட்டும்.
ஆனால் அன்று தாளமுத்துவுக்கு ஏதோ ஒரு வலி அம்மாவுக்குள் இருக்கிறது என்ற அளவில் தான் புரியும். காலையில் வழக்கும் போல அம்மா எழுந்து குளித்து மூழ்கி வழக்குமான பணிகளை தொடங்கி செய்துக் கொண்டிருப்பார்.
தாளமுத்துவின் கண்கள் அம்மாவை கேள்விகளால் துளைக்கும். அதற்கு “நான் பார்த்துக் கொள்கிறேன்.. கவலை படாதே.. உன் படிப்பை போய் பார்” என்று அம்மா ஒரே தீட்சண்யமான பார்வையில் பதிலை சொல்லி விட்டு சென்று விடுவார்.
அவன் எப்பொழுதும் அம்மாவையே சுற்றிக் கொண்டு இருப்பான். அவன் குட்டி உலகம் அனைத்தும் அம்மாதான்!
அடுத்த சில நாட்கள் அவன் தன் அம்மாவை கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருப்பான். எவ்வளவு அவன் வற்புறுத்திய போதும் தம்பி தங்கைகள் வற்புறுத்திய போதும் இரவுகளில் அவர்கள்கூட அம்மா அந்த சில நாட்களில் படுத்து உறங்குவது கிடையாது. பிள்ளைகள் தூங்கும் வரையில் ஏதாவது கதைகள் சொல்லி, பாடல்களைப் பாடிக் கொண்டும் இருப்பார்கள். அவர்கள் நல்லா தூங்கிவிடுவார்கள்.
இரவில் தாளமுத்து எழுந்து பார்க்கும் போது அம்மா அங்கு இருக்கமாட்டாங்க. அம்மா கதவுக்குப் பின்னால் வராண்டாவில் சுருண்டு படுத்துக் கிடப்பார். அதுவும் வெற்று தரையில் படுத்துக் கிடப்பார். தாளமுத்துவுக்கு மிகவும் சங்கடமாக, புரியாத மர்மமாகவும் இருந்தது.
வீட்டு வராண்டாவை கடந்துன் புழக்கடை தொடங்குகிறது. புழக்கடை மண் தரையில், புதர் செடிகள் மண்டிய இடங்களில் பாம்புகள், புராண்கள். தேள்கள், தவளைகள், தேரைகளும் உலவுவதாக சொல்வார்கள்.
தாளமுத்துவும் கூட பல முறைகள் பார்த்திருக்கிறான். தம்பி, தங்கை, தாளமுத்து மூவருமே சிறுநீர் கழிப்பதற்கு அம்மாவை துணைக்கு அழைத்துக் கொண்டு தான் அந்த மண்தரை வழியாக புழக்கடைக்குள் சிறிது தூரம் இரவில் செல்வது என்பது வாடிக்கை. அம்மா இல்லாவிட்டால்..!?
இப்பொழுது அவன் அம்மா மண்தரையின் தொடர்ச்சியான அந்த வராண்டாவில் சுருண்டு படுத்திருக்கிறார். மெல்லிய நிலா ஓளியில் உழைப்பில் களைத்த ஓவியமாய் அவன் அம்மா தென்படுகிறார்.
நிலா ஒளியை போலவே இந்த ஓவியம் நிமிடத்திற்கு நிமிடம் மாறியது. துடித்து, சுள்ளென்று அடிவயிற்றை கவ்வி இழுக்கும் வலிக்கு எதிர்வினையை தன்னிச்சையாக ஆற்றியது.
ஜீவ்வ்.. ஜீவ்வென்று கெண்டைகாலில் தொடங்கி மண்டைக்குள் மின்னல் வெட்டுவது போல் பரவிவதை தாளமுத்து கண்கொட்டாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். இப்படி ஓவ்வொரு வலிகளுக்கும் தகுந்தாற் போல் அவன் அம்மா உடல் அதிர்ந்தது. அதைமீறி அவன் அம்மா தூங்கிக் கொண்டு தான் இருந்தார். அந்த அளவிற்கு நாள் முழுவதும் தீராத ஓயாத தொடர் உழைப்பாக அம்மா வாழ்ந்து வந்தார் தன் பிள்ளைகளுக்காக...
இப்படி இருந்தும் காலையில் அம்மா குளித்து மூழ்கிவிட்டு புதியவளாக எப்படி தயாராகி விடுகிறார் எப்படி என்று அவனுக்கு புரியாத புதிராக அப்பொழுதெல்லாம் இருந்தது.
பள்ளிச் செல்வதற்கு குழந்தைகளுக்கு தேவையானதை தயார் செய்வதில் ஈடுபட்டாள். தன்னுடைய வலி, முடியாமையை ஒருநாளும் அவள் தனது குழந்தைகளிடம் காட்டியதும் இல்லை! யாரிடமும் சொல்லியதும் இல்லை!!
அந்த நாட்களில் அம்மா அடிக்கடி புழக்கடை மாட்டு தொழுவத்தில் இருந்தார். ஆடுகளும். மாடுகளும் கட்டியிருந்த பழைய இத்து போய்க் கொண்டிருந்த மாட்டு கொட்டகை ஒட்டைகள், தூசிதும்புகள் நிறைந்த இருண்ட இடம். அந்த இருந்த இடத்திற்கு அம்மா அடிக்கடி சென்று வருவார்.
தாளமுத்துவும் அவனை சுற்றியுள்ள நண்பர்களும் கண்ணாம் பூச்சி விளையாட, நிலா முட்டைகள் வைக்கும் விளையாட்டுக்கு புழக்கடைகள் முழுவதும் அலைவார்கள். அந்த மாட்டு தொழுவ கொட்டைகைக்குள்ளும் செல்வார்கள். இருள் அடைந்த அந்த இடம் ஒளிந்துக் கொள்ள ஏற்ற இடம்! குட்டி குட்டியாக வெளிர் மண்ணில் நிலா முட்டைகள் ஏராளமாக வைக்க அங்கு நிறைய மறைவிடங்கள் கிடந்தன.
இருள் நிறைந்த கொட்டகையின் வெளிச்சத்திற்கும், சிறுவர்கள் கைகளுக்கு எட்டாத உயரத்தில் மடிக்கப்பட்ட சிறுசிறு பழைய கந்தை துணிகள் பாழடைந்த ஓலைகளின் இடுக்குகளுக்குள் சொருகி கொண்டு இருக்கும். அந்த நாட்களில் ஒவ்வொரு முறையும் கந்தைகளை அம்மா பொக்கிஷம் போல் எடுத்து பயன்படுத்துவார். அவனுக்கு இதுவெல்லாம் என்னவென்று புரியவில்லை. புரியவும் வைக்கவில்லை!
ஒரு முறை அம்மா அந்த தூமை கந்தையை அணிந்துகொள்ளும் போது அதற்குள் மறைந்து கிடந்த ஏதோ ஒரு பூச்சி கடித்து விட்டது. அம்மாவின் உடம்பு முழுவதும் தடி தடியாக வீங்கி விட்டது. எதற்கும் கலங்காத அம்மா அன்று வலியில் கதறியது துயரத்தின் உச்சம்! அம்மாவின் வேதனையை அந்த நாள் நான்கு மடங்குகளாக கூட்டி விட்டதை மட்டும் அவன் உணர முடிந்தது!
அவனுக்குள்ளும் அந்த வேதனை பிரதிபலிக்கும் தானே..!!
அம்மா உள்ளங்கையை குவித்து கேழ்வரகு கூழை நல்லெண்ணையுடன் சேர்த்து சில நாள்கள் குடித்தார். படிப்படியாக தானாக அந்த தடுப்புகள் சரியாகி விட்டது.
இப்படியாக சில நாட்கள் அம்மா பிள்ளைகளை விட்டு ஏன் விலகி இருக்கிறார் என்று தாள்முத்துக்கு புரியவில்லை. அப்படி அந்த நாட்களில் அம்மா வீட்டிற்கு தூரமாக இருக்க ஏன் நேர்ந்தது என்று குழந்தைகளுக்கு புரியவில்லை.
வீட்டிற்கு தூரம் என்று உறவுகள் ஏன் அம்மாவை அந்த நாட்களில் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை!
ஒருமுறை கழனியில் மிளகாய் தோட்டத்தில் செடிகளின் இலைகள் முடக்கு வந்தது போன்று ஆனது.
“வீட்டுக்கு தூரமாக இருக்கிற பொம்பளை தோட்டம் பக்கம் வரலாமா” என்று பெரிசு ஒன்னு ஏசியது.
“அது என்ன சொல்லி விட்டா வருகிறது..” என்று அம்மா மெல்ல முணுமுணுத்து விட்டு அமைதியாகி விட்டார்.
ஒரு முறை அம்மா பழைய அந்த துணிக் கந்தைகளை கசக்கிக் கொண்டிருந்தார். கந்தையில் இருந்த இரத்தம் நீரோடு ஓடி சாக்கடைக்குள் கலந்துக் கொண்டு இருந்தது. இதை விளையாட்டுத் தனமாக தங்கை அருகில் சென்று அம்மா மீது சாய்ந்தாள்.
“அய்யோ இரத்தம் அய்யோ நாத்தம்” என்று கத்தினாள். பிள்ளைகள் அம்மாவின் அருகில் ஓட, அம்மா..
“வீட்டுக்குள்ள போங்கடா” என்று விரட்டி விட்டார்.
ஒரிரு ஆண்டுகளின் அந்த நாட்களில் இன்னும் வலி மிகுந்து அம்மா துடித்துக் கொண்டிருந்தார். அம்மா வலி. வேதனை, துயரத்தை அவன் உணர முடிந்தது தவிர அதற்கான காரணங்கள் பிடிபடவில்லை.
கோலி சோடாவை குடித்து அம்மா அந்த வலியை எப்படி விரட்டுகிறார் என்றும் அவனுக்கு புரியவில்லை.
இப்பொழுது கோலி சோடா வேலை செய்யவில்லை. அம்மா ஒரிரு மைல்கள் தூரத்தில் இருந்த அலோபதி மருத்துவரிடம் சென்று வர ஆரம்பித்தார். சில மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டன. மருத்துவர் அம்மாவுக்கு கர்ப்பபை வாய் புற்று நோய் வந்திருப்பதை உறுதி செய்தார். தொடர்ந்து வலிகளும், மாதவிடாய் உதர போக்கு நாட்களும் அதிகமாகும் என்று சில மாத்திரைகளை தந்தார்.
சில மாதங்களுக்கு பிறகு கர்ப்பபையை அகற்றுவதுதான் இதற்கு ஒரே தீர்வு என்றார் மருத்துவர். கர்ப்பபையை அகற்ற பெருநகரத்தில் இருக்கின்ற பெரிய ஆஸ்ப்பிடல் செல்ல வேண்டும் என்றும் சொன்னார்கள்.
அம்மாவின் பிரச்சனை இப்பொழுது மாதவிடாய் வலி, கர்ப்பபை புற்று நோய் வேதனையை விட வேறாக இருந்தது
தான் மருத்துவமனை செல்லும் போது தன் குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வார்கள் என்ற கவலை!
தனது ஏதேனும் நேர்ந்தால் தன் குழந்தைகள் கதி என்ன என்ற கேள்வி பெரிதாக அம்மாவை அரித்தெடுத்து சிதைத்தது.
மருத்துவமனைக்குச் செல்லாமல் அந்த வலியை பொறுத்துக் கொண்டு தட்டிக் கழித்துக் கொண்டே பல மாதங்களை கடத்தி விட்டார்.
புற்று நோய் எவ்வளவு நாள் தான் காத்துக் கொண்டே இருக்கும்.
அம்மாவின் வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது. அம்மா மெலிந்துக் கொண்டே இருந்தார். அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் அம்மாவை வற்புறுத்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அம்மாவின் வேதனையை சகிக்க முடியாமல் வலுகட்டாயமாக இழுத்துச் சென்றார்கள் என்பதுதான் உண்மை! தாளமுத்து எஸ்.எஸ்.எல்.சி பள்ளி இறுதி படிக்கும் ஆண்டு அது!.
அம்மா நகரத்தின் பெரிய மருத்துவமனையில் சேர்ந்தாள். அவன் ஒருமுறை உறவுகளுடன் இணைந்துச் சென்று வந்தான். மருத்துவமனையில் டாக்டர்கள் அம்மா உடம்பில் போதிய இரத்தம் இல்லாததால் உடனடியாக ஆப்பரேஷன் செய்ய முடியாது. சில நாட்கள் சென்ற பின்புதான் செய்ய முடியும் என்று சொல்லி மருத்துவமனையிலேயே அம்மாவை தங்க வைத்துவிட்டார்கள்.
பதினைந்து நாட்கள் சென்று இருக்கும். திடீரென்று பார்த்தாள் மருத்துமனையில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அம்மா தன் பிள்ளைகள் தனியாக இருப்பார்கள் என்ற கவலையில் தன் பாட்டுக்கு வீட்டுக்கு வந்துவிட்டார்.
அதிகாலையில் வந்தவள் வழக்கம் போல் வேலைகளை செய்துக் கொண்டிருந்தார். உறவினர்கள் அம்மாவை கண்டபடி திட்டினார்கள்.
“நாங்களெல்லாம் புள்ளைகளை பார்த்துக்கிட்ட மாட்டோமா”
உறவினர்களிடமும் சேர்ந்து அக்கம் பக்கத்தினரும் அம்மாவை திட்டி தீர்த்தார்கள். அதற்கு அம்மா மெளனமாகவே இருந்தார்களே தவிர எந்த பதில் சொல்லவில்லை.
இப்படியே சில மாதங்கள் சென்றன. அவருடைய கர்ப்பபை புற்றுநோய் வலியை அவரால் தாங்கிக் கொள்ள முடியாத நிலைமைக்கு தள்ளிக் கொண்டு சென்றுவிட்டது!
அம்மா தனது தெரிக்கும் விண்விண் வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இரவு முழுவதும் நரநரவென்று பல்லை கடித்துக் கொண்டு இருந்தார். கொட்ட கொட்ட விழித்து அதை கேட்டு கொண்டிருந்த தாளமுத்துவுக்கு கண்ணீர் தானாக வழிவதை நிறுத்த முடியவில்லை. அன்று அவர்கள் இருவருமே தூக்கவில்லை.
“அம்மா நீ படற வேதனய பார்க்க முடியலம்மா நீங்க உடனே ஆஸ்பிட்டல் பேயிட்டு வந்துடுங்கம்மா”
“நான் தம்பி தங்கைகளை பார்த்துக்குறேன்ம்மா... ஆஸ்பிட்டல் பேய்ட்டு வாம்மா” என வீங்கிய வற்றிப் போன கண்களுடன் அம்மாவை அவன் கெஞ்சினான். அம்மாவின் கால்களை கட்டிப் பிடித்து கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.
அம்மா மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனையை விட்டு பாதியில் ஓடியதற்க்காக மருத்துவமனை ஊழியர்கள் நன்றாக ‘அர்ச்சனை’ செய்துவிட்டுதான் சேர்த்தார்கள்..
மருத்துவமனைக்கு சென்ற அம்மா பிள்ளைகளை பார்க்க திரும்பி வரவேயில்லை.
கடைசியாக அவன் அம்மாவை பார்க்க ஆப்ரேஷன் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு சென்றிருந்தான். அவள் சிரித்துக் கொண்டே அவனுக்கு அன்று விடை கொடுத்தாள். சுண்டி இழுக்கும் அந்த வேதனை வலியுடன் இணைந்த புன்னகைதான். இன்றுவரை அம்மாவின் நினைவாக அவனுள் புதைத்து கிடக்கிறது.
மருத்துவமனையில் தந்த பெரிய ரொட்டி துண்டுடன் அம்மாவின் வாசனை நிறைந்த புடவைகள் அடங்கிய பையை சுருட்டி அவனிடம் கொடுத்தார்.
அதன் பிறகு அம்மா ஆப்பரேஷன் செய்யும் போது ஜன்னி கண்டு இறந்துவிட்டார். அம்மாவின் வெற்று உடல் தான் வீடு வந்து சேர்ந்தது. அவனும் தம்பி தங்கைகளும் அழத அழுகை கூடியிருந்த அனைவருக்கும் மன சங்கடத்தை ஏற்படுத்தியது.
தம்பி தங்கைகள் ஓ வென்று அழதுக் கொண்டு இருந்தார்கள். சுற்றும் முற்றும் அனைவரையும் ஒருமுறை பார்த்தான். அப்பா இறந்த பொழுது அம்மா அலறிய அழுகுரல் தான் இப்பொழுதும் அவன் காதில் கேட்டது.
அழுகையை அவன் நிறுத்தினான். அதன் பிறகு அவன் அழவேயில்லை. ஆம் எந்த நிலையிலும் அவனுக்கு அழுகை வந்ததே கிடையாது.
அம்மா பிள்ளை அவன்!
இதனினும் ஒரு துயரம் இருக்க போகிறாதா என்ன? கடைசியாக அவன் அம்மா சொல்லிய வார்த்தைகள் அவன் நினைவில் நிலை குத்தி நின்றது.
“டேய் நல்லா படிங்கடா. படிக்கணும் டா. டாக்டரா ஆகணும் டா நீ . தம்பீக்கு போலியோவுல கால் சரியில்லா பாரு.. அதை நீதான் குணப்படுத்தனும், அப்பா கூட மருத்துவம் சரியாக இல்லாம தான் செத்துட்டாரு. நம்ம கிராமத்தில டாக்டரே இல்லடா. நீயாவது நல்லா படிச்சிட்டு நம்ம கிராமத்துக்கே வைத்தியம் பாக்கனும்டா ..”
அம்மா அடிக்கடி பல நேரங்களில் பல ஆண்டுகளாக தாளமுத்துவிடம் கூறியதுதான்! கடைசி விடைபெறும் பொழுதும் இதைத்தான் மீண்டும் கூறினார்கள்.
அந்த வார்த்தைகள் மட்டும் தெய்வத்தின் வாக்காக அவனுள் இன்றும் அசரீரியாக அந்த குரல் அடிக்கடி அவனுக்குள் ஒலிக்கும் தெய்வ வாக்காகவே அது மாறி விட்டது!
அவனால் டாக்டராக விடவில்லை. அம்மா, அப்பா இல்லாத கிராமத்து ஏழை எப்படி டாக்டராக முடியும்?
அவனால் கம்பவுண்டராக முடிந்தது.
அரசு மருத்துவமனை கம்பவுண்டராக இருந்து தாளமுத்து மக்களுக்காக என்ன செய்ய முடியுமோ அதை சரியாகச் செய்தான். அவன் கிராமத்திற்கும் சேர்த்துதான்! அம்மாவின் வார்த்தைகளை அவனால் எவ்வளவு அதிகமாக நிறைவேற்ற முடியுமோ அதை முழுமையாக அவன் நிறைவு செய்தான்.
அம்மாவின் மாதவிடாய் சமூகச் சூழலை அவனால் காலம் செல்ல செல்ல புரிந்துக் கொள்ள முடிந்தது.. மனித உயிரி தழைத்தோங்வதற்காக உருவாக்கப்பட்ட பெண்ணின் மாதவிடாய் பிரச்சனையை இந்த சமூகம் எப்படி மிக கேவலமாக இழிவாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது.
பாரம்பரியம், பழக்கவழக்கம் பெயரில் இந்த சமூகத்தின் தத்துவங்கள் பெண்ணை, அடிமையாக, பிள்ளை பெறும் இயந்திரமாக மாற்றியது. மனிதர்களின் பிறப்பு இறப்பை பற்றி தவறான தகவல்களை அறிவியலுக்கு புறம்பான செய்திகளை மனித மனங்களில் ஆழமாக புதைத்து உள்ளது என்பதை உணர முடிந்தது. தூமை கந்தையைவிட நாற்றமடிக்கும் தத்துவ விளக்கங்களுக்கு பலியானவர்களில் ஒருவர்தான் தன் அம்மா!
அம்மா மட்டும் இல்லை என்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும்!
இந்த தத்துவங்களுக்கு புனித மூலாம் பூசி பாதுகாக்க சுயநல கும்பல்கள் அறுபது ஆண்டுகளுக்கு பிறகும் இருக்கத்தானே செய்கிறது. இல்லையென்றால் இப்போது கூட டிவிட்டர், வாட்ஸ்அப், இணையதளங்களில் எதற்கு அனல் பறக்கும் விவாதம்....
தாளமுத்துவுக்கு திருமணம் ஆகி குழந்தை குட்டிகள் ஆகிவிட்டது. குழந்தைகள் பெரியவர்களாகி விட்டார்கள். ஒரு நாள் தாளமுத்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சென்றிருந்த போது அங்கு பணி செய்யும் பெண் அவரை பார்த்துக் கேட்டார்.
“என்ன உங்க இரண்டு பசங்களும்.. காலேஜ் படிக்கிற பையனும். ப்ளஸ்டு படிக்கிற பையனும் சேர்ந்து வந்து அம்மாவுக்கும். அக்காவுக்கும் நாப்கின்களை வாங்கிக் கொண்டு போறாங்க. மளிக சாமான்கள் வாங்கிற மாதிரி, சாக்லேட் வாங்கிற மாதிரி எல்லாரும் கேட்க உரக்கச் சொல்லி கேட்டு வாங்கி போறாங்க. எந்த சங்கடமும்யில்லாமல்...” என்று சங்கடத்தோடு இழுத்தார்.
தாளமுத்து சிரித்துக் கொண்டே “இதில் என்ன இருக்கு.. இயல்பான விஷயம் தானே.. அம்மாவுக்கும் அக்காவுக்கும் அவுங்க வாங்கித் தராம வேறு யார் வாங்கித் தருவாங்க” என்றார்.
“இல்ல.. வேறு யாரும் இப்படி வாங்கிறதல்ல அதான் கேட்டேன்.”
“வேறு யாரும் வாங்கலன்ன அது அவங்க பிரச்சினை” என்றார்
“உங்க பசங்க வித்தயாசமான ஆளுங்க தான்” என்று.
இதே நிலைமை அந்த காலத்தில் தன் வீட்டில் இருந்திருந்தால், அம்மா இப்படி துன்பப்பட்டு இறந்திருக்கமாட்டார் என்று தாளமுத்துவுக்குத் தோன்றியது.
- கி.நடராசன்