“போடுங்கம்மா ஓட்டு… எதையாவது பாத்து… போடுங்கம்மா… ஓட்டு” கும்பலாக ஆப்புக் கட்சியினர் வாக்குச் சேகரிக்க ஒவ்வொரு வீடாக உள்ளே நுழைந்தார்கள். ராமலிங்கத்தின் வீட்டிற்குள்ளும் நுழைந்து அவனிடமும் வாக்கு கேட்டார்கள். அவனுடைய மனைவி சுப்புலட்சுமி இரண்டு பிள்ளைக்குத் தாய் ஆனவள்.

தலைவர் நைட்டியுன் இருந்த அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு. பல்லைக் காட்டிக் கொண்டே அவளிடம் வாக்கு கேட்டார். அவள் அந்த ஆளின் பார்வையால் கணவனின் பின்னால் ஓடிங்கினாள்.

முதலைக் கட்சிக் கும்பலாகத் தெருவெல்லாம் வாக்குச் சேகரிப்பில் இருந்தது தேர்தல் அறிக்கையைத் தெருவெல்லாம் பறக்க விட்டுச் சென்றனர். ஊரே குப்பையாய் கேடந்தது.

ராமலிங்கம் இப்பொழுது அவன் வீட்டில் வந்துச் சென்ற ஆப்பு கட்சியின் தலைவரைப் பற்றி பெருமையாக அவன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான்.

“தலைவரு ரொம்ப தங்கமான மனுஷன் மக்களை மட்டுமே சிந்திப்பாரு. அவரு பேச்சுக்காகவே நாம்ம ஓட்டு போடணும்முடி. ஆனா பணம் எவுலவு கொடுக்குறாங்கன்னு பார்ப்போம். நல்ல தொகை கொடுத்தா அவருக்கே போற்றுவோம். இல்லன மொதல கட்சிக்காரங்க நல்ல தொக குடுத்தா அவனுங்களுக்குப் போட வேண்டியதுதான்.”

‘இந்த ஆள் எல்லாம் ஒரு மனுஷனா தொடப்பகட்ட மாதிரி தலையை வைச்சு இருந்தா குப்பை மாதிரி தான் யோசிக்க தோணும்' என்று சுப்புலட்சுமி எண்ணிக் கொண்டு. தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு உள்ளே இருந்த அறைக்குத் தூங்கச் சென்றாள்.

‘நீ வெளியவே கேட' என எண்ணி தலகாணியை ஹாலுக்கு எறிந்தாள். ராமலிங்கம் திரும்பிப் பார்ப்பதற்குள் கதவை டமார் என அடைத்து விட்டுத் தூங்கச் சென்றாள்.

நாளை காலை தேர்தல் அதன் முந்தைய நாளான இன்று பணப் பட்டுவாடா படு ஜோராக நடந்துக் கொண்டிருந்தது. ஆப்பு கட்சியின் சார்பாக ஒரு வீட்டுக்கு ரூபாய் ஆயிரத்து ஐநூரு கவரில் போட்டு பாத்திரமாகப் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தார்கள்.

முதலைக் கட்சியினர் ஆயிரத்தை ஒரு கவரில் போட்டு அந்த ஊர் முழுக்க வினியோகம் செய்துகொண்டிருந்தார்கள். தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் ஆட்களே இல்லாத ஊர் வெளியில் பணப்பட்டுவாடா நடக்கிறதா என்று ஆழ்ந்து உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

பார்த்தா ராமலிங்கத்தின் வீட்டினுள் ஆப்புக் கட்சியினர் சார்பாகத் தரும் ஆயிரத்து ஐநூரு ரூபாய் கவருடன் நுழைந்தான்.

“என்னண்ணே எப்படி இருக்கீங்க? இந்தாங்க கவரப் பிடிங்க இந்த வாட்டியும் நமக்கு தான் பொடனும். அண்ணிகிட்ட சொல்லிடுங்க எண்ணா நான் வரேன்”

ராமலிங்க பார்த்தா போகும் வரை பல்லைக் காட்டுவதை நிறுத்தவே இல்லை “ஈ… ஈ…” என அவன் முன்னால் இளித்துக் கொண்டே இருந்தான்.

பார்த்தா கிளம்பியதும் அவசர அவசரமாக அந்த கவரைப் பிரித்துப் பார்த்தான். அதனுள்ளே புதிதாக அச்சடித்த மூன்று ஐநூரு ரூபாய் நோட்டுக்கள் இருந்தது. அதை எடுத்து ஒரிஜினல் தானா என்று டியூப் லைட்டின் வெளிச்சத்தில் காட்டி பார்த்தான். ஒரிஜினல் தான் என உறுதியானது. மனைவியிடம் கொடுத்தான். அவள் வாங்க மறுத்தாள். இவனே கொண்டுபோய் பீரோவில் வைத்துப் பூட்டினான்.

அவர்கள் கொடுத்துவிட்டுப் போன சில மணி நேரங்கள் கழித்து முதலை கட்சியின் சார்பாக ஆயிரம் ரூபாய் கவருடன் லோகு ராமலிங்கத்தின் வீட்டினுள் வந்தான்.

அவனையும் பல்லைக் காட்டிக்கொண்டு வரவேற்றான். “இந்தாங்க இந்த வாட்டியும் உங்க ஓட்டு நமக்குத்தான் போடணும்..” லோகு கவரை கையில் தரும் முன்பு ராமலிங்கமே பிடுங்கிக் கொண்டார்.

லோகு சென்றபின்பு “எவ்வளவு இருக்கு?” என்று ஆர்வத்துடன் கவரைப் பிரித்துப் பார்த்தான் ஆயிரம் ரூபாய், இரண்டு ஐநூரு ரூபாய்த் தாள் இருந்தன. சற்றே ஏமாற்றம் அடைந்ததை எண்ணிக் கொண்டே சோகமாய் கொண்டு போய் பீரோவில் வைத்துப் பூட்டினான்.

பரண்மனையிலே கிடந்த தேர்தல் அட்டையைத் தூசிதட்டி எடுத்தான். கொஞ்சம் தூசு கிளம்ப அவனுக்கு அச்சு அச்சு என்று தும்பல் ஏற்பட்டது.

கட்சியினர் கொடுத்த பூத் ஸ்லிப்பைக் கையில் வைத்துக்கொண்டான். தேர்தல் அட்டைக்கான பூத்துக்குச் சென்று. வெயிலையும் பொருட்படுத்தாமல், வரிசையில் நின்று. வாங்கிய காசுக்காக நேர்மையாக கூடுதலாகக் கொடுத்த கட்சிக்கே வாக்களித்தான்.

அவன் மனைவியையும் வாக்களிக்கச் சொல்லி கட்டாயப் படுத்தினான். ஆனால் அவள் அவள் விரும்பிய கட்சிக்கு வாக்களித்தாள்.

தேர்தல் முடிந்து சில வாரங்கள் கழித்து தேர்தல் முடிவுகள் வெளியாயின. குறைவாகவே பணம் பட்டுவாடா செய்த முதலை கட்சியே பெரும்பான்மையுடன் தமிழகத்தில் வெற்றி பெற்றது. ஆப்பு கட்சி படுதோல்வி அடைந்தது.

தேர்தல் முடிவுகள் ராமலிங்கத்திற்குச் சற்று ஆச்சரியமாக இருந்தது.

“பணம் நிறைய தான கொடுத்தாங்க அப்பறம் ஏன் அந்த கட்சி தோத்தது?” சிந்தித்துக் கொண்டே டிவியில் ஓடிய ரிசல்ட் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆப்பு கட்சியின் படுதோல்வியை ஓரிரு மாதங்களில் அந்த கட்சியை முழுமையாக மறந்தது. ஆப்பு கட்சியின் அமைப்பில் இருக்கும் பார்த்தா மீண்டும் ஒரு கவருடன் ராமலிங்கத்தின் வீட்டிற்குள் நுழைந்தான்.

ராமலிங்கம் பார்த்தவை பார்த்ததும் வழக்கம்போல பல்லைக் காட்டினான்.

“என்ன அண்ணே எப்படி இருக்கீங்க?” என நலம் விசாரித்தான் பார்த்தா.

“எங்களுக்கு என்னப்பா? சுகமாகத்தான் இருக்கொம் நம்ம போட்ட ஓட்டு பூரா வேஸ்டா போச்சு ஏப்பா!”

“என்ன நேன் பண்றது அந்த மிஷின்ல ஏதோ செட் பண்ணி இருக்காங்கண்ணே! விடுங்க அடுத்த வாட்டி பார்த்துக்கலாம்”

“சரி இப்ப எந்நப்பா விஷயம்!” என்று கையிலிருந்த கவரைப் பார்த்துக்கொண்டே ஆச்சீரியத்துடன் கேட்டான்.

“இந்தாங்க எண்ணே இந்தக் கவரை முதல்ல பிடிங்கச் சொல்றேன்.”

“இது என்ன கவர்.”

“அதுவா உள்ள பாருங்கண்ணே” கவரை ஆர்வமுடன் பிரித்தான் ராமலிங்கம் அதில் ரூபாய் பத்தாயிரம் இருந்தது. புறாம் இரண்டாயிரம் ரூபாய் புதிய நோட்டுக்கள்.

“இப்ப எதுக்குப்பா கவர்?” என சிரித்துக் கொண்டே ராமலிங்கம் கேட்டான்.

“அது வேற ஒன்னும் இல்லண்ணே போனவாட்டி நம்ம வீட்டுக்கு ஓட்டு கேட்டு தலைவர் வந்தப்போ அன்னிய பார்த்தாரு அவருக்கு ரொம்பப் பிடிச்சு போச்சு. அதான் கொஞ்ச நேரம் பேசிட்டு. அனுப்பி விடுவார் இந்த கவர வச்சுக்கோங்க.”

ராமலிங்கம் தலையை நிமிர்த்து பார்த்தாவை பார்த்தான்.

“நான் போகமாட்டேன்னு தாணே சொன்னேன். ராமலிங்கம் கிட்ட கவர கொடு வாங்கிகிட்டு எத வேணாலும் கொடுப்பார்ன்னு தலைவர் சொல்லிவிட்டாரு. தலைவர் வெளிய தான் காருல வெயிட் பண்றாரு அனுப்பி வையுங்கண்ணே.”

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் பக்கத்து வீட்டிலிருந்து. சுப்பிரமணி உள்ளே வந்தான். சுப்பிரமணியைப் பார்த்து பார்த்தா வணக்கம் வைத்தான்.

“எண்ணே இந்தாங்க உங்களுக்கும் ஒரு கவரு தலைவரு உங்க வீட்டுக்கும் வரேன்னு சொல்லி இருக்காரு!”

- மு.தனஞ்செழியன்

Pin It