நெடுநேரமாய் தூங்கிக் கொண்டு களைப்பில் நீட்டி சோம்பலை முறித்துக் கொண்டது டாம்மி. எப்போதும் போல வீட்டின் நுழைவாசலின் அருகில் தூங்கிக் கொள்ளும் டாம்மி, ஸ்மிருதியின் முகம் கண்ட பிறகு தான் பொழுதை துவங்கும்.

அன்று வெகுநேரமாகியும் ஸ்மிருதியின் அறைக் கதவு திறந்தபாடில்லை. தன் வலது கைக்கொண்டு தள்ளியதில் திறந்துகொண்டது.

படுக்கையை எட்டிப்பார்த்த டாம்மி ஏமாற்றத்துடன் வெளியே வந்தது.

தினமும் ஆறுமணிக்கு எழுந்துகொள்ளும் டாம்மி, ஒவ்வொருவர் அறைக்குச் சென்று குசலம் விசாரிப்பது வாடிக்கையாகிப்போனது. செல்லப்பிராணி என்பதால் குடும்ப அட்டையில் பெயர் கொள்ளாதது தான் மிச்சம். மற்றபடி சகல சௌகரியமுடன் வலம் வந்தது.

இறந்துப் போன தாய் ரோஸியின் ஐந்துகுட்டிகளில் மரணத்தின் பிடியில் சிக்காமல் உயிர்த்தரித்தது பொக்கிஷமாக பார்க்கப்பட்டது. அருண் அலுவலக பணிமுடிந்து வீடு திரும்பும்போது டாம்மியின் எச்சில் தான் முதல் குளியல்.

வாலை ஆட்டிக்கொண்டும் காதை மடித்துக் கொண்டும் கொள்ளும் பிரிவின் ஈரம் காய்ந்துக் கொள்ளாமல் வீடெங்கும் உலராமல் குளிர்ந்துகொள்ளும். பள்ளிமுடிந்து வரும் ஸ்மிருதியின் உடலை அடர்த்தியான ரோமங்கள் கொண்டு கூசிக் கொள்ளும்.

குத்துக்காலிட்டு அடுக்களையில் சினேகாவின் புலம்பல்களை கேட்டவாறு தன் பார்வையில் சமாதானம் சொல்லிக்கொள்ளும்.

இன்று போட்டவை போட்டபடியே அங்கங்கே இருந்தது. அறையெங்கும் தேடிப்பார்த்ததில் யாரும் தென்படாததால் அந்நொடி கொண்ட குரைத்தலில் பயம் கலந்த கோவம் படரவிட்டிருந்தது. திரும்பத் திரும்ப வீட்டின் அறைகளில் தேடிக்கொண்டதின் சோர்வில் வீட்டின் கூடத்தில் வாசற்கதவை பார்த்தபடி அமர்ந்துகொண்டது.

பழுப்பு நிறம் கொண்ட டாம்மி நல்ல சதைப்பிடிப்பும், சரியான உயரமும் கொண்டிருந்தது. வாரவிடுமுறைகளில் உல்லாசப்பயணம் மேற்கொள்ளும் பட்டியலில் முதல்பெயர் டாம்மி. யாருமற்ற வீடு, நாக்கை நீட்டி டாம்மி விடும் மூச்சில் இரைச்சல் கொண்டது.

முகத்தைத் தரையோடு இருமுன்னங்கால்களிடையே வைத்துக்கொண்டு கண்களில் சோகம் கவிந்துகொள்ள வாசற்கதவை பார்த்தவண்ணம் இருந்தது.

வீட்டின் வெளியில் இருக்கும் பெரிய கதவில் செவிகளை பொருத்தியவாறு பெரும் யோசனைக்குள் ஆழ்ந்து தலையை நிமிர்த்துக்கொண்டது.

நேரம் கடந்துக் கொண்டே இருந்தது. அழுகை கொள்வதாக அவ்வப்போது ஊளையிட்டுக் கொண்டது எந்த ஒரு சலனமும் அல்லாமல் அன்றைய பொழுது நகர்ந்தது.

வீட்டில் போடப்பட்டிருக்கும் பொருட்களைப் பார்த்தால் யாருக்கோ சுகமில்லாமல் மருத்துவமனைச் சென்றது தெரிகிறது. அப்படி நடந்திருந்தால் கண்டிப்பாக தகவல் சொல்லாமல் சென்றிருக்க மாட்டார்கள். பக்கத்துத் தெருவுக்கு அவசர தேவை... அதுவும் விடியற்காலை அனைவரும்... வாய்ப்பேயில்லை... தீடிரென காணாமல்... அவர்கள் வெறும் மனிதர்கள் தானே...

இப்படி தீர்க்கச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது டாம்மி, யாருக்கு தெரியும் சிந்தனை என்பது யாவர்க்கும் பொதுவானதுதானே. இங்கே தர்க்கம் கொள்ள வேண்டியதில்லை.

தீடிரென்று அடுமனையில் கேட்ட சத்தத்தில், திரும்பிக் கொண்ட டாம்மி சட்டென விரைந்தோடியது. பார்த்தவுடன் நடுங்கிப் போன பூனை ஒன்று தன் கால் இடறி விழுந்துக் கொண்ட பாத்திரத்தையும் டாம்மியையும் பார்த்துக் கொண்டது.

அலட்சியமாய் குரைக்காமல் திரும்பிக்கொண்டு டாம்மியின் செய்கையைச் சற்றும் எதிர்பார்க்காத பூனையின் கண்கள் அந்த அறையின் ஒளியில் மிளிர்ந்துக் கொண்டது.

திரும்பவும் அதே இடத்திற்கு வந்த டாம்மி கண்களை மூடிக்கொண்டது.

கதவு மெதுவாக திறந்துகொண்டதில், முதலில் வந்த ஸ்மிருதி ஏப்ரல் ஃபூல் என்று உரக்கக் கத்தினாள், அவளைத் தொடர்ந்த ஸ்னேகா மற்றும் அருண் சேர்ந்துக் கொண்டார்கள். இது தான் அவர்களுடைய இன்றைய திட்டம் முட்டாள் தினத்தில் புதிதாய் ஒருவரை ஏமாற்ற வேண்டு என்று.

வாயை திறந்துகொண்ட நிலையில் படுத்துக் கொண்ட டாம்மி எழுந்தபாடில்லை. அசைவற்றுக் கிடந்த அதன் உடல் இவர்களிடத்தில் கிலி உண்டாக்கியது.

டாம்மி... டாம்மி... உனக்கு என்ன ஆச்சு நாங்க சும்மா... விளையாண்டோம்  என்று மூவரும் பதட்டத்துடன் நெருங்கினர்.

எதிர்பாராமல் சட்டென எழுந்து கொண்ட டாம்மி தன் ஓரக்கண்ணால் சிமிட்டியபடி வாலை ஆட்டிக் கொண்டு நகர்ந்தது.

- சன்மது

Pin It