நீண்ட நெடிய பனை மரங்களின் கீற்றுகள் காற்றில் சரசரத்துக் கொண்டிருந்தன. அந்த பெரிய ஆற்றின் மறு கரையில் பாதி காய்ந்தும் மீதி பசுமையுமான கோரம் புற்கள் காற்றில் ஒரு அணிவகுப்பை போல் அசைந்தாடிக் கொண்டிருந்தன.

இவைகளைத் தாண்டி அறுவடை முடிந்த வயல் வெளியில் மீதியான தாளைச் சுற்றி முளைவிட்டிருக்கும் சிறு புற்களை மேயும் ஆடுகளும் மாடுகளும்; வரப்போரம் ஒற்றையாய் நிற்கும் சிறிய மரத்தின் முன்மாலை கோடிடும் நிழலில் தன் தடியுடன் ஒரு ஏகாந்த கரைதலில் அவைகளை மேய்க்கும் மத்தி வயது தாண்டிய முதியவர். இவைகளையெல்லாம் தாண்டி பசுமை மங்கி பாதி கருத்த நிலவரத்தில் நெடிதாய் தொடரும் மலைகளின் ஆக்ரமிப்பு.

ஒரு சிறிது நீண்ட இடைவெளிக்குப் பின் - மூன்று நண்பர்களின் காவலோடு - தான் இழந்த சொர்க்கத்தின் நிழலுக்கு அவன் வந்திருந்தான். நண்பர்கள் இவனை விட்டு சற்று தள்ளி தீர்க்கமான விழிப்புடன் அவ்வப்பொழுதான உரையடலில் விலகியிருக்க, மூன்று நான்கு பனை மரங்களில் தூக்கனான் குருவிகள் தமக்கென அமைத்த சிறகு மாளிகைகள் அந்த அந்தரத்தில் ஊஞ்சாலாடிக் கொண்டிருந்ததை அவன் கவனித்தான்.

இசைதல் நிறைந்த அன்பையும் உறுதியான காவலையும் அடையாளம் காட்டும் எளிய கூடுகள் இவனுள்ளே ஒரு ஏக்கப் பெரு மூச்சை வெளிப்படுத்தின. இப்பொழுதும் “ஓண்டெர்ஃபுல்; இஸ் ட் நாட்?” என்ற அவளின் இரசனையின் குழந்தமை விகசிப்பு அவன் காதுகளில் மெலிதாய் இசைகின்றது. சின்னச் சின்ன விஷயங்களில் அவளின் குதுகூலத்தை அருகிருந்து ரசிக்க நேர்ந்த அனுபவத்தை இப்பொழுதும் அடை காப்பதில் வலி இருந்தாலும் அது சோகமும் சுகமாகும் தருணங்கள்தான். உதிர்தலை நோக்கித்தான் மலர்களின் முகிழ்தல் - என்றாலும் பிடுங்கி கசக்கி புழுதியில் வீசியெறிய எப்படி மனம் வந்தது?

அந்த இரண்டு வருட நட்பில், உறவில், முகிழ்தலில் மூன்று நான்குமுறைதான் அவர்கள் தங்களுக்கான ஏகாந்தத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். ஊரிலிருந்து நாலு கிலோமீட்டர் தொலைவில், அவர்கள் கல்லூரிக்கு போகும் மாநில நெடுஞ்சாலையிலிருந்து சற்று உள்ளடங்கியிருந்த அவர்களின் கோகுலம்; குதூகலம், - அவள்தான் அந்த இடத்தை தேர்வு செய்திருந்தாள். “நீ இல்லன்னாலும் இந்த ஆற்றின்கரை என்னுடைய நைல் தீரம்தான். ஆனால் உன் உறவும் அருகிருப்பும் இதற்கு ஆயிரம் வண்ணங்கள் சேர்ப்பதாக உணர்கிறேன்” என்று ஒரு நாள் கவித்துவமாய் கசிந்திருந்தாள்.

எந்த வண்ணம் குறைந்து போனது அல்லது கரைந்து போனது என்று இவன் தேடிக் கொண்டிருக்கிறான்; பதில் சொல்லத்தான் அவளில்லை. பட்டாம் பூச்சியைப் போல் பறந்த நாட்களில் அவளை இழந்த துயரம், மனதின் அந்த பாரம் சற்றே இறங்கியிருக்கின்றது. ஆதலால்தான் அவளுடன் சேர்ந்திசைத்த எல்லா மணித் துளிகளின் இராகங்களையும் தேடித் தேடி அடைகாப்பதில் பிரதியெடுப்பதில் அவனால் நாட்களை நகர்த்த முடிகின்றது.

அதிர்ந்து திகைத்து உருக்குலைந்து நின்றவனை மார்போடு சேர்த்தணைத்து “நெனக்றதெல்லாம் எப்பவுமே கெடக்றதில்ல ராசா; நீ ஆம்ளப்பா – அவ இல்லன்னு சொல்லி இந்த ஏழ அம்மாவ விட்டுட்டு போய்டாத யேன் ராசா” என்று கதறி அழுத அம்மாவின் கூக்குரல்.

ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, வாசல் நிலையில் சாய்ந்த வண்ணம் வெறித்த பார்வையில் நிலைத்திருந்த தந்தை. அரங்கேறி முடிந்த ஆணவத்தின் காயம், வலி, துயரம் எல்லாம் தனக்கு மட்டுமேயல்ல என்பதை உணர்ந்த போதுதான் யோசிக்க ஆரம்பித்திருந்தான்.

குறைந்த பட்சம் நிகழ்ந்து முடிந்த அகோரத்தின் பதட்டம் தீரும் வரையிலும் வீட்டை விட்டு வெளியே செல்லாமலிருப்பதுதான் குடும்ப அமைதிக்கும் ஆறுதலுக்குமான உத்தரவாதமாகும் என்பதால் வரந்தாவின் ஜன்னலருகே பாதி தொய்ந்து போன தன் நார் கட்டிலில் கூரையே வானமாக சிறை பட்டிருந்தான்.

நிகழ்ந்து முடிந்த சமரின் அடையாளங்களாய் கைய்யிலும் இடுப்பிலும் விழுந்திருந்த இரத்தக் கீறல்களும் அவன் இயக்கத்தை முடக்கியிருந்தன. இரண்டு மூன்று நாட்களாக வீட்டில் அடுப்பெரிந்ததாக தெரியவில்லை. மூன்றாம் நாள் அடுக்களைக்கும் வரந்தாவிற்கும் மத்தியிலான, அந்த மாளிகையின் ஒரே ஒரு அறையில், தன் சேலை தலைப்புக்குள்ளேயே ஒருக்களித்து முடங்கிக் கிடந்த அம்மாவை எழுப்பி பசிப்பதாக சொன்னான்.

முப்பதே நிமிஷங்களில் சுடச் சுட சோறும் இரசமும் துவையலும் என்று வந்த அம்மாவை அமர்த்தி அவளும் தானுமாக ஒரு வழியாய் சாப்பிட்டு, அப்பாவிற்கும் தரச் சொல்லி விட்டு மறு படியும் கட்டிலில் தஞ்சமானான்.

கைவிட்டுப் போன அவள் சிதையின் தீ நாக்குகளால் சாம்பலாகி மறு நாள் நீரில் கரைந்து போய், காரியங்களை முடித்து, விதியின் மேல் பழி போட்டு, ஆசுவாசமாய், கவ்ரவம் கலையாத திருப்தியில் அவள் குடும்பம் சகஜம் திரும்ப எத்தனித்துக் கொண்டிருந்தது. என்றாலும் நீறு பூத்த நெருப்பாய் திரும்பவுமாய் வன்மம் மகனைத் தீண்டாமலிருக்க செய்ய வேண்டியது என்ன என்பதுதான் தகப்பனின் கவலை என்பது அவனுக்கு புரிந்தது.

அந்த நட்பு – தோழமையுடன் பொங்கிப் பெருகி ஆக்ரமிப்பற்ற அன்பின் பிரவாகமாய் பெருக்கெடுத்தோடும் அந்த நனைதல் – அவனுக்கு அரிதாய் கிடைத்திருந்த பொக்கிஷம். வாழ்வின் அந்த மணித்துளிகள் அர்த்தம் நிறைந்ததாயும், காலப் பெரு ஊழியில் உறைந்து நிற்பதுவுமாகவே அவன் உணர்கின்றான்.

எதிர்காலம் குறித்த சில கேள்விக் குறிகளுடன் அவன் உரையாடலைத் திருப்பிய போது அவளே ஒரு முறை சொன்னாள் – “ நிக்கக் கெடச்ச இந்த நிமிஷத்ல உயிர்ப்பா துடிப்பா இல்லாம வரப் போற நாளெயெல்லாம் தூக்கிச் சுமப்பானேன்? நாளை விடியுங்க்றதே ஒரு நம்பிக்கதானே? நல்லாவே விடியட்டும்னு அத நிறுத்திக் கட்டாம? ” என்றவள் “இல்லை உன்னை ஒரு ஆண் மகனாக தரிசிக்கவே எந்நாளும் விரும்புகிறேன்” என்பதை மட்டும் அவள் ஆங்கிலத்தில் படபடத்தது இப்பொழுதும் அவன் காதுகளில் இரைந்து கொண்டிருக்கிறது.

என்னைச் சாராதது எவருக்கும் சேராதது - என்ற அந்த தகப்பனின் மூர்க்கமான முடிவில் எஞ்சியது எது? இந்த மண்ணில் இன்னமும் குடும்பம் என்கிற கூடாரத்தை கோயிலாகக் கும்பிடுகிறார்களே? அதன் அழகிய ஒரு தேவதையை அந்த சிற்பத்தை அப்படி அவலமாய் இரத்தச் சகதியில் வீசியெறிய எப்படி மனது வந்தது? அவரின் இரத்தமில்லையா அவள்? பாசம், நேசம், உரிமை, அன்பு எல்லாமுமே கூட வற்றிப் போனாலும் ஒரு சிறு துளி மனிதமாவது இருந்திருந்தால் அந்த சின்னஞ்சிறிய சிறகை சிதைத்து சூறையாட மனம் வந்திருக்குமா? சார்ந்திருத்தலின் ஒரு அடையாளம்தான் ஜாதி என்றாலும் இப்படி வெறி பிடித்த வேட்டை நாயாய் பெற்ற தகப்பனையே ருத்ரமாக்குவதின் சூட்சுமம்?

யோசித்து யோசித்து பார்த்தால் வீடு, ஆடு, மாடு, வயல், வரப்பு என்கிற உடமை வரிசையில்தான் மனை, மனைவி, மக்களும் வருகின்றனரா? இவைகளைச் சுற்றி தன் சுயம் அரிக்கும் பெருமையில்தான் ஜாதி என்ற அந்த மயக்கும் வலை மைய்யம் கொள்கின்றது. சந்தேகமின்றி இழத்தல் வலி மிகுந்ததுதான்.

அதிலும் தன் ஆளுமையை இழத்தல் என்பது ஒருவனது சுயத்தில் ரண வலிகளை உருவாக்கினாலும், உள்ளே உறங்கிக் கிடக்கிற வன்முறை என்கிற மிருகத்தை உசுப்புவதிற்கு ஒரு காரணி வேண்டும்; அது வெறும் பெருமைகளில் விஷமாய் புரையோடிப் போயிருக்கும் இந்த சமூகத்தில் ஜாதியாய் வடிவெடுத்து நிற்கிறது.

நேசித்து, மோகித்து, பாலூட்டி, பாராட்டி, சீராட்டி பெற்றெடுத்து வளர்த்தெடுத்த தன் வித்தையே, அது வேலி தாண்டும் போது விஷமாகப் பார்க்க வைக்கிறது. விபரீத முடிவுகளைத் தன் விதியின் நியாயமாய் நிலை நிறுத்துகின்றது. அதனால்தான் பட்டப் பகலில் நட்ட நடு வீதியில் அந்த ஜாதியெனும் ஆணவத் தீ தன் எல்லாப் பெருமைகளையும் வேஷங்களையும் களைந்து நிர்வாணமாய் கோர தாண்டவத்தில் அந்த இளம் மலரை கருக்கிப் போட்டது.

ஆயுதங்களுடன் சூழ்ந்த வன்முறைக் கும்பலின் விபரீத வியூகத்தை முதலில் அவள்தான் கவனித்தாள். சட்டென்று அவன் மேல் சாய்ந்து அவனை குறியினின்றும் விலக்க எத்தனித்த அவள் கழுத்தையும் இடுப்பையும்தான் அந்த ஆயுதங்கள் அகோரமாய் தீண்டின.

முதுகில் தொங்க விட்டிருந்த பை மாத்திரம் கேடகமாக அவளைச் சுற்றிக் கொண்டு விலக்க நினத்தவனை, தாக்குதலின் தீவிரம் தாங்கமாட்டாதவளாய் அவன் மேல் சரிந்து அவனையும் நிலை தடுமாற வைத்தவள் மேலும் தொடர்ந்த வெட்டுகளையும் தன் உடலிலேயே வீறிட்ட கூக்குரலுடன் தாங்கிக் கொண்டாள்.

நிமிஷங்களில் அந்த கடை வீதி பூர்வத்தில் இனக் குழுக்களுக்கிடையே நிகழும் யுத்த களமாய் உரு மாறியிருந்தது. கடைகளின் இரும்பு சுழல் கதவங்கள் தடதடவென்ற சத்தத்துடன் இறக்கப் பட்டன. கடை வீதிக்கு வந்திருந்த தாய்மார்களும் பெண்களும் தலை விரி கோலமாக கூக்குரலிட்டுக் கொண்டு ஓட ஆரம்பித்தனர்.

தூரத்தில் ஏதோ ஒரு சைரனின் ஊளை சத்தம் மெலிதாய் ஒலிக்க, ஏழெட்டு கடைகள் தாண்டி நின்றிருந்த மாணவ நண்பர் வட்டம் அவளின் கூக்குரலை கேட்டு தங்கள் கைகளில் கிடைத்த கற்கள் கழிகளுடன் பெருங்கூச்சலுடன் தாக்கியவர்களை நெருங்கினார்கள்.

எதிராளிகள் சற்று நிதானிக்க, அருகிலிருந்த சைக்கிளை கேடகமாக்கிக் கொண்டு இவன் அவர்களை நோக்கி முன்னேற, ஒரே ஒருவன் வீசிய வெட்டு இவன் கைகளைச் சிராய்த்து சிதைக்க, இவனை கீழே விழத் தள்ளி, மறு படியும் ஒரு முறை புழுதியில் கிடந்த அவளை தாக்கி விட்டு, அந்த கும்பல் நிதானமாய் அந்த இடத்தை விட்டு காலி செய்தது.

கண் எதிரே நடந்த துவம்சத்தின் கோர அதிர்ச்சியில் அவன் சற்று அதிர்ந்து உறைந்து, பின் பதட்டத்துடன் ஓடி அவளை அவன் கைகளில் அள்ளத்தான் முடிந்தது. ஒரே ஒரு முறை விழி திறந்து தன் கைய்யால் அவன் கன்னத்தில் இரத்த முத்திரை பதித்து, நிற்கக் கிடைத்த அவளுடைய அந்த நிமிஷங்களில் சற்றே எழுந்து துடித்து அவன் கைகளிலேயே வீழ்ந்தாள்.

நிச்சயமாய் சில போராட்டங்களுக்குத் தயாராக வேண்டும் என்பதை இருவருமே உணர்ந்திருந்தனர். ஆனால் இவ்வளவு அகோரமாய் அவளை இழக்க நேரிடும் என்று நினைத்திருந்ததில்லை. இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் கேலியாகவும் கிண்டலாகவும் “ ஒரு வேள ஒன்ன பெரிய ஹீரோவாக் காட்டிக்ற சந்தர்ப்பங்கள் வர்லாம்; பயப்டாத; எங்கப்பா படிச்சவர், அரசு ஊழியர்; ஆள் வச்செல்லாம் அடிக்க மாட்டார்.

வேறு விதமா காய் நகர்த்த முயற்ச்சிக்கலாம்” என்று தன் தந்தையைக் குறித்த அவளுடைய மலையான நம்பிக்கைகளையும், மிக உயர்ந்த மதிப்பீடுகளையும் பொய்யாக்கி – இவன் கவனித்திருக்கவில்லை; பின்னால் அவனது நண்பர்கள்தான் சொன்னார்கள் – சம்பவ இடத்திலிருந்து பார்வை தெரிகிற சற்று தூரத்திலிருந்து முகத்தில் எவ்வித சலனமுமில்லாமல், பிரச்னைக்கு தீர்வு கண்டு விட்டது போன்ற திருப்தியுடன் யாரோ ஒரு கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் நிதானமாய் விலகிச் சென்றிருந்தார்.

தன் ஜாதிப் பெருமை என்கிற சுயத்தின் மேல் விழுந்த அருவருப்பான பழிக்கு இவர்கள் இருவரின் இரத்த பலிகளும்தான் பரிகாரம் என்ற தீர்மானமான முடிவுக்கு வந்திருந்ததையே, தன் வாரிசென்றும், தான் பெற்ற மகளென்றும் பாராமல் நடத்தி முடித்த அந்த சம்ஹாரம் தெரிவித்திருந்தது.

இனி வரும் நாட்களில் அந்த சமூகத்தின் எல்லா இளம் குருத்துகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை அடையாளமாய் அமைய வேண்டும் என்கிற மிக உயரிய பெருமை மிக்க நோக்கத்தோடும், பொறுப்பு மிக்க கடமை உணர்விலும்தான், தன் சொந்த மகளையே அந்த ஆணவத் தீயில் ஆகுதியாய் அர்ப்பணித்து விட்டார். இன்னும் வருடங்கள் கழித்து பூஜனைக்குரிய கன்னியாகும் உத்ரவாதம் கூட பரிசாக, தூண்டிலாக விழுந்திருக்கலாம். எதுவானால் என்ன? சாம்பலாய் கரைந்து விட்டிருந்த அந்த ஆன்மாவின் அழகு சரீரம் தாங்கியிருந்த திருநாமம் வீரலட்சுமி, இந்தியக் குற்றவியல் சட்ட கொலை வழக்குப் பிரிவு எண்களின் அடிப்படையில் மாவட்டக் குற்றவியல் அமர்வு நீதி மன்றத்தின் ஒரு வழக்குக் கட்டாக புதைந்து விட்டது.

ஸ்தூலமாய், சரீரமாய், இரத்தமும், சதையுமாய் மாத்திரம் அவளை அவனிடத்திலிருந்து பிரித்திருக்கிறார்கள். அவள் வார்த்தைகள் அவ்வப்பொழுது அவன் செவிகளில் கிசுகிசுக்கிறதே அதை என்ன செய்வார்கள்? நெஞ்சிலும், நினைவிலும் தன் ஊனிலும் உதிரத்திலும் அவள் நினைவுகளை இப்பொழுதும் சுமந்து திரிகிறானே அதையும் அவர்களால் திருட முடியுமா என்ன? நிர்மூடர்கள்.

காற்றோடு கலந்து கரைந்திருக்கும் அவள் வார்த்தைகளையும் கள்ளமில்லா கலகலவென்ற அந்த சிரிப்பொலியையும் அவர்களால் சிதைக்க முடியுமா என்ன? “பொது வெளியில் இப்படி சிரிக்காத; பாக்றவங்க என்ன நெனப்பாங்க?” என்ற அவனுடைய உரிமையான கண்டிப்புக்குக் கூட மறுபடியும் சிரித்து விட்டு “நீயெல்லாம் பேசத்தான் செய்ற; அடிப்படையில் நீயும் ஒரு பழமைவாதிதான்” என்று சீண்டுவாள்.

உடனே சற்று ஆழ்ந்த தீவிரமான தொனியில் “ஓனக்கு ஒன்னு தெரியுமா? மனசு, நம்ம மனசு அதான் சுத்தமா கறயில்லாம இருக்கனும்; அந்த தைரியம் நமக்கு இருந்தா அது போதும். யார்ட்டயும் போய் சர்டிபிக்கெட்ல்லாம் வாங்கனும்னு இல்ல” என்பாள். “ இப்ப நீதான் கெழவி மாதிரி பேசற” என்று பதிலுக்கு சீண்டியிருக்கிறான்.

வெள்ளை மனதுக்குச் சொந்தமான அவனுடைய அந்த கொள்ளை ஓவியத்தை சிவந்த ரத்தக் களறியின் வண்ணமாய் சிதைக்க எப்படி மனது வந்தது அவர்களுக்கு? துறுதுறுவென பரபரப்பான இயக்கத்தில் தன்னைச் சுற்றி எப்பொழுதும் ஒரு ஆர்ப்பாட்டமான ரசிக்கத் தகுந்த அசைவுகளுடன், ஒரு வண்ணத்துப் பூச்சியாய் தன் வசந்தம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தவளை சூறையாடி விட்டுப் போய் விட்டார்கள். எல்லாவற்றையும் தன் நெஞ்சத்திரையில் படமாக்கி சிறையிட்டிருக்கிறானே அதை என்ன செய்வார்களாம்?

புராதன சாம்ராஜ்ய மகோன்னதங்களின் சிதிலங்களே அவற்றின் மகத்துவத்தை உரக்கக் கூறுவது போல்தான், சிதைக்கப் பட்ட அவளின் காதல் வரிகளும். அது அவர்களுக்கு கறையாகவும், மற்றவர்க்கு காவியமாகவும் காலத்தில் கலந்து கரைந்து நிற்கும் என்பது புரையோடிப் போன அவர்களின் ஜாதி வெறியில் அவர்களுக்குப் புரிவதில்லை.

ஒரு அசுரனும் ஒரு இராமனும் பொருதினால் அல்லாமல் உண்மைக்கு, நீதிக்கு தனைச் சொல்ல, நிலை நிறுத்த வழியில்லை. எது உண்மை, எது நீதி என்பதும் அவன் யாருக்கு அசுரன் என்பதுவும், கள நிலவரங்களைத் தீர்மானிக்கும் காலமும் வெளியும்தானே சொல்லும். “எந்தக் குற்றங்கள் எதனாலே மாறும்; எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்?” என்கிற கேள்விகளுக்குப் பதில்தான் என்ன?

புரிதலில் முகிழ்ந்த மனதின் பரிவர்த்தனைகளை ஒரு சமூகத்தால் முழுதும் உணர்ந்து கொள்ள முடியுமா என்ன? தனி நபர் உறவுகளில் உணர்வுகளில் தலையிட விரும்பாத ஒரு சமூகத்திற்கே அது முழுச் சாத்தியம் ஆகாத போது, முழுக்க முழுக்க ஆணாதிக்கம், ஜாதிப் பெருமை என்கிற போதைகளில்

உழன்று கொண்டிருக்கும் சமூகத்திற்கு அது ஆண் பெண் உறவுகளில் அதீதமாகவும், அவலமாகவும், அசிங்கமாகவும் தெரிவதில் வியப்பொன்றுமில்லைதான்.

எல்லாம் புரிந்தாலும் வெட்டித் தீய்க்கிற அளவுக்கு வன்மத்தை வாந்தியெடுக்கும் அந்த சமூகமும், கால வெள்ளத்தை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இழுத்துச் செல்ல எத்தனிக்கும் அதன் குரூர நிர்மூடமும் காப்பாற்றியது தங்கள் மானத்தையா? மரியாதையையா? இல்லை - மதியீனத்தையா?

“நம் இருவரின் சங்கமும் நம் தேசத்தை அரிக்கும் ஜாதி என்ற ஊனுருக்கி நோய்க்கு வைக்கும் கல்லறையின் ஒரு சிறு கல்லாக இருக்காதா? ஒன்னால ஏன் அப்டியெல்லாம் உற்சாகம இருக்க முடியல? எப்ப பார் அழு மூஞ்சியாட்டம்? சரி அதெல்லாம் விடு; அங்க பாரேன், பாரேன் – எவ்ள அழகாய்?” மழை சிலிர்த்து நின்றிருந்த ஒரு மாலையில், கலைந்து செல்லும் மேகங்களின் பின் புலத்தில், வயல் வெளியின் ஊடாய் செல்லும் மின் கம்பிகளில் அணி வகுத்து அமர்ந்திருந்த சிறிய கரும் பறவைகளைப் பார்த்துத்தான் அவள் பரவசமாயிருந்தாள்.

அந்தப் பறவைகளின் பாதங்களின் கீழ் மழைத் துளிகள் ஒவ்வொன்றாய் முத்து கோர்த்து ஒன்றன் பின் ஒன்றாய் ரயில் போல் பயணித்து அழகு சேர்த்துக் கொண்டிருந்தன. சிறிய சிறிய விஷயங்களில் பரவசமாகி, பெரிய தீவீரமான களங்களை நோக்கி நம்பிக்கையோடு பயணித்தவளைத்தான் அவர்கள் முடக்கிப் போட்டு விட்டனர்.

அடுத்து என்ன என்பதில் நிதானமாய் யோசிக்க ஆரம்பித்திருந்தான். ஆபத்து இன்னமும் முற்றிலுமாய் நீங்கி விடவில்லை. எந்த நேரமும் ஒரு கொரில்லா தாக்குதல் அவன் மீதோ அல்லது முழூக் குடும்பத்தின் மீதோ அரங்கேற்றப் படலாம். எப்படி தவிர்ப்பது என்பதுதான் வெகு நிதானமான திட்டமிடலுக்கு அவனைத் திருப்பியிருந்தது.

அவன் வாழ்வின் மிகப் பெரிய இழப்பு அவனுக்குள் ஏற்படுத்தியிருக்கும் ரணம் எவ்விதத்திலும் தகப்பனையும் தாயையும் தீண்டாமலிருக்க என்ன செய்வது? எப்படி செய்வது என்பதுதான் முன் நிற்கும் முக்கியக் கேள்வி.

அரசல் புரசலாக காதில் விழுந்த செய்திகள், விழ வேண்டும் என்பதைப் போல வந்த வார்த்தைகள் அவனையும் அவன் தகப்பனையும் யோசிக்க வைத்திருந்தன. லட்சுமியின் வீர மரணம் வன்கொடுமை குற்ற சட்டப் பிரிவுகளின் கீழ் சேர்க்கப் படாததாலும், முதல் தகவல் அறிக்கையில் சூத்ரதாரி – அவள் தந்தையின் பெயர் சாமர்த்தியமாகத் தவிர்க்கப் பட்டிருந்ததாலும், சந்ததி தழைக்க, அடுத்த வாரிசு அவள் தங்கையின் அமைதியான எதிர்கால உத்ரவாதத்திற்காகவும், சமூகப் பெரியவர்களின் அறிவுறுத்தலின் படி, இவனை நோக்கிய அடுத்த குறியின் வேகம் குறைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திகளை ஊர்ஜிதம் செய்யும் முயற்சிகளிலும் அதை உத்தரவாதமாக்குவதிலும் அவனுடைய தகப்பன் முனைந்திருந்தார்.

நம்பகமான நபர்களின் தலையீட்டின் மூலம் அந்த பஞ்சாயத்து சாதகமாய் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சட்டத்தின் அனுமதியுடனும் மகனை ஊரிலிருந்து அப்புறப்படுத்தி ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புவதுதான் அமைதிக்கான தற்காலிகத் தீர்வு. வெற்றி பெற முடியாவிட்டால் வெற்றி கரமாய் பின் வாங்குவதுதான் புத்திசாலித்தனம் என்பது அவனுக்கும் புரிந்தது.

தாய், தகப்பன் உயிருக்கும் குடும்ப உடமைகள் மற்றும் சமாதானத்திற்கான உத்ரவாதம் கிடைத்தால் இரத்தக் கறை படிந்த இந்த மண்ணை உதறி விட்டு ஒரு புதிய புலம் நோக்கி புறப்பட அவனும் தயாராகிக் கொண்டிருந்தான். இந்தச் சூழல்களில்தான் இறுதியாக ஒரு முறை அவனும் அவளுமாய் தகித்திருந்த களத்தை தரிசிக்க வந்திருந்தான். மனம் வெறீரென்றிருந்தது.

அவள் அருகிருப்பது போலவும், தூரத்தில் மேகங்களுடன் கலந்திருப்பது போலவும், நீரோட்டத்தின் சலசலப்பில் அவள் நகையொலி கரைவதைப் போலவும், விழிகளில் நீர் சேர ஏங்கும் பெரு மூச்சுடன் மெளனமாய் ஒரு மயக்கமாய் கரைந்திருந்தவன் விழிகளில் தெரிந்தது - அது யார்? அவளா? அவள்தானா? அவனுடைய பிரிய கவித்துவமா? இல்லை கனவா? இல்லை பிரேமையா? அவன் நிதானிப்பதற்குள் அவள் இன்னும் தெளிவாக அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

அமர்ந்திருந்தவன் பர பரத்து எழுந்து விட்டான். படபடவென நெஞ்சு துடிக்கும் சத்தம் அவனுக்கே கேட்க, மின் கம்பிகளில் அமர்ந்திருக்கும் பறவைக் கூட்டம் ஒன்று போல் எழுந்து சிறகடித்து ஒரு பெரிய வட்டமிட்டு மறுபடியும் அமர, காற்றில் கோரம் புற்கள் ஒரு முறை அசைந்து நடனமாடி நிற்கும் போது அவனுக்குத் தெரிந்து விட்டது - நெருங்கிக் கொண்டிருப்பது அவளின் தங்கைதானென்று.

இதற்குள்ளாக நண்பர்கள் மூவரும் இவன் முன்னாக அரணாக அணிவகுக்க - சற்றே நிதானமாய் மறுபடியும் பரபரத்தான். எதுவும் சதியா? திட்டமிட்ட முஸ்தீபா? நிச்சயமாய் அவளின் பின்னாலும் சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் அவளைத் தவிர வேறு அசைவுகள் எதுவும் தென்படவில்லை. என்றாலும் ஏமாறத் தயாராயில்லை.

“அங்கயே நில்லு – என்ன வேணும்?” முகத்திலறைவது போல் நீண்டு விரிந்த அந்த கரங்களையும் கணறும் முகத்தையும், அவனுடைய காவலையும் பார்த்தவள் அப்படியே நின்று விட்டாள். சிறிது நேரம் அவளிடமிருந்து வார்த்தைகள் எதுவும் இல்லை. அவனும் நண்பர்களும் இன்னமும் அவள் மேல் ஒரு கண்; சுற்றிலும் ஒரு பார்வை என்று பரபரப்பதை பார்த்த பின்தான் அவளுக்குப் புரிந்தது.

“நான் – நான் மட்டும்தான் தனியாத்தான் வந்திருக்கேன், என்ன நம்புங்க; நான் ஒங்ககிட்ட கொஞ்சம் பேசனும்” அவன் பதட்டம் இன்னமும் அடங்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள். வெகு கராறான வார்த்தைகளில் அவனிடத்திலிருந்து பதில் வந்தது. “ஒனக்கும் எனக்கும் பேசுறதுக்கு என்ன இருக்கு? அப்டியேன்னாலும் இது அதுக்கான இடமும் இல்ல; நேரமுமில்ல. இங்கேருந்து சீக்கிரம் போய்ரு” என்றவன் திரும்பிய போது சிறிய விம்மலுடன் “ப்ளீஸ்” என்ற வார்த்தைகள் அழுகையில் கரைய ஆரம்பித்தன.

இப்பொழுது நண்பர்கள் இருவர் இவனுடைய இருபக்கமும், இன்னொருவர் இவன் பின்னாலும் என்று தங்கள் காவல் வளையத்தை மாற்றியிருந்தனர். திரும்பியவனிடம் “ ஒங்க கோபத்ல நியாயம் இருக்கு; ஆனா நான் ஏன் வந்தேன்னு கொஞ்சம் கேட்டீங்கன்னா” என்று ஆரம்பித்தவளை மறுபடியும் இரைந்து நிறுத்தினான். “என் கோபம்” என்று ஆரம்பித்தவன் “திரும்பவும் சொல்றேன், எதப் பேசவும் இது இடமும் இல்ல; நேரமும் இல்ல; கிளம்பிப் போ” என்றவனிடம் “ சரி இப்ப இல்ல; ஆனா நான் ஒங்ககிட்ட பேசியாகனும்; எப்ப? சொல்லுங்க” என்றவளின் முகத்திலிருக்கும் தீர்மானம் அவனை அசைத்தது.

இரு பக்கமும் திரும்பி நண்பர்களைப் பார்த்து விட்டு “கொஞ்ச நாள் போகட்டும். நான் ஊர்லேர்ந்து கெளம்பிருவேன். என் செல் நம்பர வச்சுக்கோ. அங்க போனதுக்கப்றம் கூப்டு; இங்க வேண்டாம்.” என்று நம்பரைச் சொன்னான். தன் துப்பட்டாவினால் முகத்தை துடைத்தவள் “தேங்க்ஸ்” சொல்லி விட்டு ஒரு முறுவலுடன் திரும்பி விறுவிறுவென பாதங்களில் மணல் தெறிக்க போய் விட்டாள்.

அவள் தூரமாய் புள்ளியாய் கரைவதை பார்த்து விட்டு கடைசியாய் ஒரு முறை தன் கால வெளியின் தரிசனத்த கலைத்து விட்டு இவனும் நண்பர்களுடன் வீடு திரும்ப எத்தனித்தான். போகும் வழியிலேயே இந்த புதுக் குழப்பத்தை சீக்கிரமாய் முடித்து விட வேண்டும் என்ற இவனுடைய உறுதியை நண்பர்களும் ஆமோதிக்க, ஒரு இறுக்கமான மெளனத்துடன் அவர்கள் நடையின் துரிதத்திலும், அவன் உள் மனதில் அவள் பேசு பொருள் என்னவாக இருக்கும் என்கிற ஒரு குறுகுறுப்பு இருக்கத்தான் செய்தது.

ஆற்றங்கரையில் அவள் தங்கையுடன் இடைபட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்ள் கழித்து, அழைத்தால் வர வேண்டும்; விசாரணைகளில் ஒத்துழைக்க வேண்டும் என்கிற காவல் துறை நிபந்தனைகளுடன், ஊரிலிருந்து மூன்று மணி நேரப் பயணமாகும் நகரில் அவன் பாதுகாப்புக்கான உத்ரவாத ஏற்பாடுகளுடைய ஒரு ஜாகைக்கு நகர்ந்திருந்தான்.

மிகச் சிறிய சந்தேகம் எதிர் தரப்புகளின் அசைவில் எழுந்தாலும் அப்பாவும் அம்மாவும் உடனே அவனுடன் வந்து இருந்து கொள்வது என்ற புரிதலுடன் அவன் மெதுவாகத் தன் இயல்பு நிலைக்கு திரும்பி தன் பாடங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தான். இரவு உறக்கங்களை அவள் தன் இரத்தம் தோய்ந்த கரங்களால் முகம் வருடி உசுப்பி கலைக்கவே செய்தாள்.

உயிருள்ளளவும் அதுவும் கடந்தும் அவளைச் சுமந்து தீருவதுதான் தங்கள் காதலின் புரிதலுக்கான உச்சமான அங்கீகாரம் என்று தீர்மானித்தால் இந்தத் தீண்டல்களுக்கும் திகில் மிகுந்த சிலிர்ப்புகளுக்கும் தயாராயிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. சோகம் கூட சுகமெனும் ஒரு யோகியின் தவமாய் தன் நாட்களை சுவீகரிக்க ஆரம்பித்திருந்தான்.

அவனுடையதும் குடும்பத்தினுடையதுமான இருத்தலின் உத்தரவாதத்திற்காகவும் உறுதியான அமைதிக்காகவும் எல்லா நடைமுறை சாத்யக்கூறுகளையும் அவன் ஒதுக்கி விடவும் தயாராயில்லை. அவளை அடைய முடியாமல் தடுத்த அந்த ஆணவ சமூகத்தின் முன் இருந்து,வாழ்ந்து காண்பிக்க வேண்டும் என்ற ஒன்றை மாத்திரம் ஒரு வெறியாக வளர்த்துக் கொண்டிருந்தான்.

அந்த புதிய வேலிகளுக்குள் வந்தமர்ந்து, அதன் இயல்பு நடப்புகளுக்குள் இயங்க ஆரம்பித்திருந்த பதினைந்து இருபது தினங்களில் அவள் அழைத்தாள். “எப்டி இருக்றீங்க?” என்று ஆரம்பித்தவளிடம் “ஓரு நிமிஷம் – நாம ரெண்டு பேரும் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்க முடியும்னு எனக்கு தோனல; அதனால என்ன விஷயம்க்றத சுருக்கமா கராறா சொல்லிற்றது நல்லது” என்று அவளை இடை மறித்தான்.

“அவ்ளவு பிஸியா?” என்றவளிடம் “நான் பிஸியா இருக்றனா? இல்ல படுத்துக்ட்ருகேனான்றது இட் ஸ் நன் ஆஃப் யுவர் பிஸினஸ்” என்று பொரிந்து தள்ளினான். “அப்பா – நான் இயல்பாத்தான் கேட்டேன்; சரி நீங்க சொன்ன படியே நான் நேரா பாய்ன்ட்டுக்கே வந்த்ர்ரேன்.

முதல்ல என்ன பேச அனுமதிச்சதுக்கு நன்றி. அக்காவுக்கு நடந்தது மிகப் பெரிய கொடுமை, குரூரம். நடந்த அசிங்கங்களுக்கும் வழக்கு என்ற பெயரில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அயோக்யத்தனங்களுக்கும் யார் பொறுப்பேற்பது? விழுந்து படிந்திருக்கிற இந்த ரத்தப் பழியை, கறையை துடைக்க அவளுடன் பிறந்து வளர்ந்தவள் என்ற உரிமையிலும், அடுத்த தலைமுறை இப்படியான அடையாளங்களுக்கும் அசிங்கங்களுக்கும் அப்பாற் பட்டது என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பிலும்தான் நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.

தொடர்ந்து இப்படியொரு அவலட்சணமான சூழ்நிலைகளுடன் இசைந்து போக எனக்கு விருப்பமில்லை. அதுனால சில முடிவுகளுக்கு வந்தேன். நிறைய யோசித்து நிதானமாகத்தான் இப்படியொரு முடிவெடுத்தேன். ஆனால் அதை செயலாக்குவதில் உங்களுக்கும் ஒரு பெரிய பங்கிருப்பதால்தான் உங்களை அணுகியிருக்கிறேன்” என்று நிறுத்தினாள்.

“விஷயம் என்னன்னு இன்னும் சொல்லல" என்றவனிடம் “வர்றேன்; கொஞ்சம் பொறுங்க” என்றவள் தொடர்ந்தாள். “ ஒரு வேளை என்னுடைய இந்த முடிவு, உங்களிடம் நான் வைக்கும் பிரேரணை கொஞ்சம் பேதமையாகவோ சிறு பிள்ளைத்தனமாகவோ இருக்கலாம். ஆனால் அவளை அழித்தொழித்ததின் மூலம் ஒரு விமோசனம் கிடைத்து விட்டதை போல் பாவிக்கிற அவர்களுடைய அந்த ஜாதி திமிருக்கும், ஆணவத்திற்கும், அந்த மெளடீகத்திற்கும் வேறு எப்படி பதில் சொல்றது – பாடம் புகட்டுறதுன்னு எனக்கு தெரியல.

இதுதான் சரியான வழின்னு எனக்கு தெரியுது. ஒரு வீரலட்சுமிய ஒழித்தால் ஓராயிரம் இல்லையென்றாலும் ஓரிருவராவது எழுந்து வருவார்கள் என்பது அந்த பைத்யங்களுக்கு தெரிய வேண்டும்; புரிய வேண்டும். அந்தக் கடமையை முதலில் நான் செய்யாமல் வேறு யார் துவங்குவது? எனவே அக்கா - அவள் உங்களில் விட்டுப் போன அந்த வெற்றிடத்தை நான் நிரப்புவது என்று தீர்மானித்து விட்டேன். புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகின்றேன்” என்று நிறுத்தினாள்.

ஓரு நீண்ட மெளனத்திற்க்குப் பின் “மிகப் பெரிய புரட்சிக்கு தயாராகிற பாவனையிலா?” என்று ஆரம்பித்தவனை அவள் மறித்தாள். “நோ .. நோ இதயெல்லாம் புரட்சியின் பட்டியலில் சேர்க்கவில்லை” என்றவள் சற்று உயர்ந்த தொனியில் “நாம ஏதாவது செய்யனும்னு ஒங்களுக்கத் தோனவேயில்லையா? அப்டின்னா உங்களுடைய காவியக் காதலைப் பத்தியே எனக்கு ஏன் சந்தேகங்கள் வரக் கூடாது? மயிரிழயில் உயிர் பிழச்ச ஒங்களப் பத்தி ஊருக்குள்ள அப்டித்தான் கதை பரப்புகிறார்கள். உங்கள் மெளனம், செயலற்ற நிலவரம் அதை ஊர்ஜிதம் செய்வதாகாதா?” என்று பரபரத்தாள்.

“நல்லது; நான் ரவுத்ரம் பழக வேண்டிய நேரம் நெருங்கியிருப்பதாக நினைக்க வில்லை. பல்வேறு நடைமுறை சிக்கல்களை நினைவில் நிறுத்தி “ஆறுவது சினம்” என்று அப்பியாசப் பட்டுக் கொண்டிருக்கிறேன். அதயல்லாம் உன்னிடம் விளக்கிச் சொல்ல அவசியமில்லேன்னுதான் நெனக்கிறேன். ஆனால் ஒன்று; அவளுக்கும் எனக்கும் முகிழ்ந்த அந்த புரிதல், அன்பு, நட்பு,அதன் ஆழம் குறித்தெல்லாம் எவருடய சர்டிபிகட்டும் எனக்குத் தேவையில்லை. இதக் கேட்டுப் புரியுங்கள் என்று நான் உரக்கச் சொல்றதுக்கு அது ஒரு தத்துவ விசாரமில்லை.

அது இரண்டு அன்பு நேயங்களுக்கிடையே முகிழ்ந்த ஆத்மார்த்தமான ஆழமும் அர்த்தமும் மிகுந்த புரிதல். சாதாரண ஜடங்களுக்கும் ஜென்மங்களுக்கும் அது புரிந்தாக வேண்டும் என்கிற கட்டாயமில்லை.சரி நேரம் போய் விட்டது; நான் வைக்கிறேன்” என்றவனிடம் “உங்கள் முடிவு?” என்று கேள்வியெழுப்பினாள். “இப்ப உடனே என்னால ஒனக்கு ஒரு பதிலோ அல்லது பதிலுக்கான விளக்கமோ தர முடியாது. நாம் இன்னுமொரு நாள் பேசலாம். நாலைந்து நாட்கள் கழித்து நீயே என்னைக் கூப்பிடலாம்” என்று முடித்தான்.

சடசடவென எல்லாம் எதிர் பார்த்த படியே சரியாய் முடியும் என்கிற நிச்சய எதிர்பார்ப்புகளோடெல்லாம் அவள் தன்னுடைய யோசனையை, பிரேரணையை அவனிடம் வைத்திருக்கவில்லை. தன்னுடைய இந்த சமர்ப்பணத்தை அவன் எப்படி எதிர் கொள்வானென்பது பற்றி மிகத் தெளிவானதொரு தீர்வுக்குள் அவள் வந்திருக்கவில்லை என்றாலும் பட்டும் படாமல் விலகி நின்று ஒரு நிர்ப்பந்தத்தின் நிமித்தமான வார்த்தைகளாய் அவனுடைய பதில் வரும் என்று எதிர் பார்த்திருக்கவில்லை. என்றாலும் அவன் இடைநிறுத்தியிருக்கிற இந்த ஐந்து தினங்கள் – பதிலை உடனே தராமல் எடுத்திருக்கிற அவகாசம் அவளுக்குள் ஒரு பக்கம் ஆறுதலையும் மறுபக்கத்தில் தீவிரிக்கும் ஒரு தவிப்பையும் பிரசவித்திருந்தது.

இப்படி ஒரு கருவை உருவாக்கி அதற்காக அடை காப்பதில் இருக்கிற வலியில், அந்த எதிர்பார்ப்பில், பரவசத்தில் ஒரு திருப்தியும் திகிலுமாய்; அதே சமயம் அந்த குறுகுறுப்பை முகத்திலோ உடல் மொழியிலோ எவரும் மோப்பம் பிடித்திடா வண்ணம் சகஜ பாவனையில் முக்காடிடுகின்ற சிரமத்துடன் அவள் உள்ளார்ந்து பரபரத்துக் கொண்டிருந்தாள்.

என்ன முயன்றும் பிள்ள முழிக்கிற முழியை அறியாமல் அரற்றும் பேதையா என்ன அந்த தாய்? அதுவும் தன் முதல் வித்தை துள்ள துடிக்க ஆணாதிக்க ஜாதி தீக்கு வாய் மூடி மெளனியாக தாரை வார்த்திருந்த அந்த தாய் இருக்கின்ற ஒன்றையாவது பாதுகாக்க எவ்வளவாய் விழிப்பாயிருப்பாள்? மூன்றாம் நாள் கேட்டே விட்டாள். “என்னடி? கால் தரயில பாவாம மோகினியாட்டம் மாதிரி பறந்துக்ட்ருக்கியே என்ன? பொழுதடஞ்சு நேரம் என்னாகுது? இன்னும் தீபமேத்தாம?”.

இரவில் அவளை அள்ளி மடியிருத்தி தலை கோதி பொங்கி பொங்கி குமுறிக் குமுறி அழுது கொண்டே “ஒரு வார்த்த சொல்லாம திடும்னு விட்டுட்டு போய்ட்டாடி. இதுக்கா – கால் தரயில பாவாம தோள்ளெயே போட்டு வளத்தவள போலீஸ் கொண்டு போய் பொட்டலமா திரும்பி தரவா தவமிருந்து பெத்து வளத்தேன்? எந்த நெனப்புக்கும் எடம் தராதம்மா; நீயாவது எனக்குன்னு இருக்கனும்மா; குலம் தழைக்கனும்மா. எதுன்னாலும் அம்மாகிட்ட தப்பாம சொல்லிடும்மா” என்று பொங்கிய அம்மாவின் மடியிலிருந்து எழுந்தாள்.

கலைந்து அவிழ்ந்திருந்த தன் முடியை பின்னால் சுற்றி கொண்டை போட்டவள் அம்மாவின் முகத்தில் விழு ந்திருந்த முடியை பின்னிழுத்து விட்டு அவள் சேலை முந்தானையாலேயே அவள் விழி துடைத்து “ அழுது புலம்பி ப்ரோயொஜனம் இல்லேம்மா; தேவயில்லாம என்னப் பத்தி எந்தப் பயமும் வேண்டாம்” என்று அன்னையை ஆசுவாசப் படுத்தியவள் “இப்டியொரு குலம் தழச்செதுக்கு? பிழச்செதுக்கு?” என்று வாய் வரை வந்த வார்த்தைகளை சிரமப் பட்டு அடக்கிக் கொண்டாள்.

இன்னும் எத்தனை நாட்கள் இப்படி நள ராஜனின் நகல்களாய் பாரம்பரிய சோகமெனும் இருள் சூழ்ந்த வனத்துக்குள் முடங்கிக் கிடக்கும் நிர்ப்பந்தத்தில்? ஒரு உயிர் துடைத்தெறியப் பட்ட துவம்சத்தில் மிஞ்சினது என்னய்யான்னு ஒரு வார்த்தையாவது கேட்க இந்த இருபது வருஷ தாம்பத்யத்தில் உரிமையே இல்லயா என்ன? நினைக்க நினைக்க உமட்டிக் கொண்டுதான் வருகின்றது. ஆனால், அம்மாவைக் குடைவது அவளுடைய கொஞ்ச நஞ்ச அமைதியையும்(?) குலைத்து விடும் என்பதால் அவளிடம் அதிகம் அரட்டவில்லை.

இரண்டு மூன்று தினங்களுக்கு ஒரு முறை அன்றாட பளுவையெல்லாம் முடித்து விட்டு, வீட்டின் ஊஞ்சல் கட்டியிருந்த மத்தி ஹாலின் ஒரு ஓரமாய் வெறும் தரையில் ஒருக்களித்து சேலைதலைப்பால் முழுத் தலையும் பாதி முகமும்மூடி மெதுவாகவும் இல்லாமல் உரத்தும் அல்லாத புழக்கத்தில் இருக்கும் ஒரு ஸ்தாயியில், வீடு முழுதும் பரவி நிரவி வீதி தாண்டும் அவளுடைய ஒப்பாரிதான், அம்மாவுக்கு சிதைக்கப்பட்ட தன் செல்ல மகளுக்காய் துக்கம் கொண்டாட அனுமதிக்கப் பட்டிருந்த ஒரே ஒரு அனுசரிப்பு.

துவக்கத்தில் அவளைச் சத்தம் போட்டு அந்த அவல ஒப்பாரியை நிறுத்திவிட வேண்டுமென்றுதான் இவள் நினைத்தாள். ஓரிரு முறை முயலவும் செய்தாள். ஆனால் சற்று நிதானமாய் யோசித்த பின்தான் இந்த பாதிக்கப் பட்ட ஒற்றை நபர் ஒப்பாரியின் பின்னால் இருக்கிற வடிகால் அவளுக்கு புரிந்தது. தன் சுய உணர்வுகளுக்கு கூட முத்திரையும் தணிக்கையுமிடப் – பட்டிருக்கிற அந்த ஆதிக்க அமைப்பில், பாதிக்கப்படும் பேதைகள் தங்களுக்குத் தாங்களே தகவமைத்துக் கொள்ளும் அந்த வழியும் இல்லையென்றால், அவர்கள் நடைப் பிணங்களாய், தன்னிலை இழந்தவர்களாய் உருமாறி விடுவார்கள் என்ற அபாயம் – அந்த பயம்தான், அங்கீகரிக்கப் பட்டிருக்கும் தனி நபர் ஒப்பாரியின் பின்னிருக்கும் உண்மையின் குரூரம் என்பது புரிந்த போது அவள் இன்னமும் அதிகமாய் தன் வீட்டின் சூழல்களுக்கு அந்நியமானாள்.

உடனடியாய் அம்மாவை இதிலிருந்து விடுவிப்பது எதிர்மறை விளைவுகளைஏற்படுத்தி விடலாம் என்ற புரிதலில் அம்மாவின் இந்த துக்கம் கொண்டாடலை அவள் பொறுத்துக் கொள்ள பழகியிருந்தாள். ஆனால் அவளின் வாரிசுகள் அழுவதற்கல்ல; திகைத்து அடங்குவதற்கல்ல; விழுவதற்கல்ல, எழும்பி நிற்கவும் தாக்குதல்களை எதிர் கொள்ளவும் தயாரயிருக்கிறவர்கள் என்பதை அம்மாவும் உறவுகளும் புரிந்து கொள்ள வேண்டும்; புரிய வைக்க வேண்டும் என்பதுதான் அவளின் நிலை மற்றும் உறுதி; அதிலிருந்து கிளர்ந்ததுதான் இந்த முடிவு. அம்பை அவள் எய்து விட்டாள். ஆட்டத்தின் அடுத்த கட்டம் என்னவாயிருக்கும் என்ற பரபரப்பில் அவள் அந்த ஐந்து நாட்களைத் தாண்டினாள்.

அவள் அழைத்த போது உடன் எடுத்தவன் “எப்டி இருக்கீங்க/” என்று கேட்டு விட்டு “ஓரு பத்து நிமிஷம் கழிச்சு நானேகூப்ட்றேன்; கொஞ்சம் காத்திருங்கள்” என்று சொல்லி இணைப்பை துண்டித்தான். திரும்பவும் திரும்பவுமான இடைவெளிகள் எதற்கான ஒத்திகை என்பது புரியாமல், தன்அறையின் இரும்பு கிரில்களிட்ட ஜன்னலின் வழியாய் மரங்களினூடாய் தூரத்தில் வான் வழியாய் கலைந்து செல்லும் மேகங்களைப் பார்த்த வண்ணம் காத்திருந்தாள். வானம் சற்றே கருத்து மழைக்கான ஒப்பனை பூண ஆரம்பித்திருந்தது.

ஒரு பதினைந்து நிமிடதாமதத்திற்கு பின் அவன் அழைத்தான். “ஸாரி – பழைய பேப்பர் எடுக்க வந்தவன், அப்படியே அறையின் தூசியயும் சுத்தம் செய்யும் மன நிலைக்கு உந்தியதால் அதை செய்து முடித்தேன். அதனால்தான் தாமதம். சொல்லுங்கள்” என்றான். முந்திய உரையாடலைக் காட்டிலும்

இயல்பாய் இருந்த அவனுடைய குரல் அவளுக்கு திருப்தியாய் இருந்தது.

“நான் அன்னக்கே சொல்லிட்டேன்; நீங்கதான் சொல்லனும்” என்றதும் சற்று நேரம் மெளனம் காத்தான். “என்ன சொல்றது? முதலில் உங்களுடைய ஒளிவு மறைவற்ற வெளிப்படையான அணுகுமுறைக்கு என் வாழ்த்துக்கள். நான் இதை எதிர் பார்த்திருக்கவில்லை.

எப்படி நீங்கள் ஒரு உறுதியான மன நிலையுடன் என்னை அணுகினீர்களோ அதே மன உறுதியுடன் என் பதிலயும் நீங்கள் எதிர் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்; விருப்பம். ஒன்னே ஒன்னத் தவிர – எங்களுக்குள்ளே முகிழ்ந்த அந்த ஆழ்ந்த புரிதலை, அன்பை, நாங்கள் ஒன்றாய்க் கழித்த அந்த மணித் துளிகளை, அந்த பரவசத்தை, தகிப்பைத் தவிர ,அந்த நினைவுகளை அடை காப்பதைத் தவிர வேறொன்றையும் துவங்கவோ தொடரவோ எனக்குப் பிரியமில்லை; அப்படி நான் யோசிக்கவுமில்லை. வேரொன்று – மன்னிக்கவும் – நீங்கன்னு இல்ல – எதுவாயிருந்தாலும் இப்பொழுது நிர்ப்பந்தமாயிருக்கும் இந்த சூன்யத்தை, வெற்றிடத்தை நிரப்புமென்றால் அந்த ஆழமான நட்பிற்குத்தான் என்ன மரியாதை? அதற்கு இப்படியொரு விலை தர முடியும்னா அந்த எளிய இனிய மலர் இரத்தச் சகதிக்குள் சம்ஹாரம் ஆனதே அதன் அவசியம்தான் என்ன? எவ்விதத்திலும் ஆவணமாக்கப் பட்டிருக்கிற ஜாதி ஆணவத் திமிருக்கு ஆகுதியாகிப் போன வீரலட்சுமியின் ஆன்மாவிற்கு, தன்னைத் தந்து தன் உணர்வுகளையும் உரிமைகளையும் நிறுத்திய அவளின் தியாகத்திற்கு எவ்விதத்திலும் உன்னுடைய முடிவு அழகு சேர்க்கும்ன்னோ மரியாதையாகும்னோ எனக்குத் தோணல.

இன்னும் சொல்லப் போனா கணன்று கொண்டிருக்கும் நீறு பூத்த நெருப்பை உன்னுடைய முடிவு மேலும் விசிறி விடுமே அல்லாமல் வேறு எந்தப் பிரயோஜனமும் இருக்காது. நான் பயப்படுவதாக நீ யோசிக்கலாம். “அஞ்சுவது அஞ்சாமை பேதமை”. இது தொடர்பாக எனக்கும் அவளுக்கும் இடையே நடந்த விவாதங்களையெல்லாம் மேற்கோள் காட்ட இப்பொழுது நேரமில்லை; ஆனால் எது நடந்து விடக் கூடாது என்று முன் உணர்வுடன் எவ்வளவோ ஜாக்கிரதையாக நாங்கள் பயணித்தும் அந்த குரூரம் நடந்தேறி விட்டது. என் கண் முன்னே நிகழ்ந்த அந்த வெறித் தாக்குதலிலிருந்து அவளைக் காப்பாற்ற முடியாமல் போன குற்ற உணர்விலிருந்து நான் விடு படவே ஒரு ஊழிக் காலம் ஆகும்.

மன்னிக்கவும் – இன்னொன்றுக்கும் வழி உண்டாக்க நான் தயாராயில்லை. ஒரு இழப்பிற்க்குப் பின் , அதனால் ஏற்பட்ட உறுத்தலுக்குப் பின் (அப்படி எதுவும் இருந்தால்) புலி புல்லைத் தின்ன தயாராகும் என்று நான் நம்பவில்லை. இன்னும் ஒரு படி மேலே போய் சொல்கிறென். இழப்பு என்று வந்தால் என்னைத்தான் குறி வைப்பார்கள் என்று நினைத்திருந்தேனே அல்லாமல், அவளையும் சேர்த்துத் தீர்க்க அவர்கள் திட்டமிட்டது தெரிந்திருந்தால் நான் வேறு முடிவுகளுக்கு வந்திருப்பேன்.

ஒரு உயிரை விட, அதுவும் சிநேகித்து பிரியம் வைத்திருந்த மலரின் இருத்தலை விட அந்த சிநேகம் பெரிதல்ல. ஒரு ஓவியத்தை சிதைக்க அனுமதித்து அதன் பிரேமையை மாத்திரம் பூஜிப்பது எவ்வளவு பெரிய குரூரம்? எப்படியும் எங்கள் பிரிதலுக்கு அவளை சம்மதிக்க வைத்து, அவள் கிட்டாமல் போனாலும், என் காதலியை இழக்க நேர்ந்தாலும், என் காதலை காதலித்து என் காலங்கள் கடந்து போயிருக்கும். எல்லாம் கை மீறிப் போய் விட்டது.

மறுபடியும் மறுபடியும் ஒரு தேவையற்ற வன்மம் தொடர்வதில் எனக்கு உடன்பாடில்லை. என்னையும் அவளையும் அசிங்கமாக்கி அவலத்திற்குள் தள்ளியிருக்கிற இந்த ஆணவத்திற்கு எதிராய் நின்று வாழ்ந்து காண்பிக்க வேண்டும். அறியாமையிலும், ஆணவத்திலும், அகந்தையிலும் அது கைய்யிலெடுத்திருக்கும் வன்மத்திற்கு மேலும் எவ்விதத்திலும் வழி கொடாமல் இதை நிகழ்த்திக் காண்பிக்க வேண்டும். உன் ஆத்திரம் எனக்கு புரிகிறது.

இந்த அறியாமை அடுத்த தலைமுறைக்கும் தொடராதிருக்க நீ எடுத்திருக்கும்முடிவு மாத்திரமே வழியல்ல. நிதானிக்க வேண்டும். உன் முடிவுக்கு சம்மதித்தால் ஜாதிகளாய் பிளவுண்டிருக்கிற இந்த சமூகத்தில் ஒரு மரியாதையின் உத்தரவாதத்தை தங்களால்தான் தர முடியும் என்கிற அவர்களின் அகந்தை வாதத்திற்கு அது உரமிடுவதாகி விடும். அதற்கும் நான் தயாராக இல்லை. அப்படியொரு கோணத்தில் நான் வீரலட்சுமியை பற்றிக் கொள்ளவில்லை என்பதற்கு சாட்சி என் மனமேயல்லாமல், வேறெதுவும் இல்லை.

காலம் நம் ரணங்களை ஆற்றும் என்றே நம்புகின்றேன். மறுபடியும் சொல்கின்றேன். இந்த யுத்தத்தில் அவளை பலியாக பறி கொடுத்து விட்டாலும், என் காதலின் மீதான காதலில் என் காலங்களை நகர்த்த முடியும் என்று நிச்சயமாய் நம்புகிறேன். இனி வீரலட்சுமியற்ற வாழ்வென்பதை சாத்யமற்ற என் முதுமை சமன் செய்து விடும் என்றே தோன்றுகின்றது.

நான் ஒரு காவிய மஜ்னுவல்ல என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். நான் ஒரு நிகழ் கால இளவரசன் ஆகவும் இடம் தர மாட்டேன் என்பதையும் அவர்களுக்கு உணர வைப்பேன். மரணம் நோக்கி அல்ல நம் வாழ்க்கைக்கான யுத்தம் – ஒரு சமரில் தோல்வியைத் தழுவியிருந்தாலும் தொடரும் இந்த யுத்தத்தை நிதானமாகவும் தீர்க்கமாகவும் நடத்திக் காண்பிக்கவே விரும்புகிறேன். புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன்”

மறு முனையில் ஒரு நீண்ட மெளனத்திற்குப் பின் ஒரு சிறிய தழு தழுப்புடன் “கிரேட்” என்றவள் “நல்லது; நீங்கள் நேரம் எடுத்தது போலவே நானும் சற்று நிதானிப்பேன். உங்களுடைய பதில்-முடிவு எனக்கு கொஞ்சம் ஏமாத்தம்தான்னாலும், உங்கள் வாதங்களின் உண்மையும் நியாயமும் புரிந்தாலும், முற்றிலுமாய் உங்கள் விளக்கங்களில் எனக்கு திருப்தியில்லை.

இது ஒரு யுத்தம்தான் என்று எதிர் கொள்ள முடிவெடுத்த பின் காலத்தையும் களங்களையும் நாம் மட்டுமே தீர்மானிக்க முடியுமா என்ன? எதிரிக்கு அதில் பங்கே இல்லை என்பது நம்மை நாமே ஏமாற்றும் பாவனை இல்லையா? எனக்கு புரியவில்லை. எது எப்படியானாலும் ஒரு சந்ததி என்னிலிருந்து உருவெடுக்கும் சந்தர்ப்பம் உருவானால் அது நிச்சயமாய் இந்த ஜாதி ஆணவ விஷத்தின் வித்தாய் வேராய் இருக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாயிருப்பேன்.

எப்படி நீங்கள் மஜ்னுவும் இளவரசனுமாய் இல்லாமல் போராடத் துணிகிறீர்களோ அப்படியே நானும் நிர்ப்பந்தமாய் கழுத்தை நீட்ட லைலாவுமல்ல, தன் மகள் துயரம் தாங்காமல் பூமாதேவியே பிளந்து ஆட்கொண்ட சீதா பிராட்டியும் அல்ல.

என்னுடைய இலக்கின் வரும் நாட்களை எப்படிக் கவ்ரவமாய் உறுதியாய் எதிர் கொள்வது என்று நிதானிப்பேன். நல்லது. பொறுமையுடன் என் வார்த்தைகளை கேட்ட அந்த அங்கீகாரத்திற்கு நன்றி. ஆல் தெ பெஸ்ட்” என்று சொல்லி முடித்தாள். பதிலுக்கு அவனும் “ஆல் தெ பெஸ்ட்” சொல்லி முடிக்க கைபேசியை சிறிது நேரம் பார்த்து விட்டு ஒரு பெரு மூச்சுடன் மேஜையில் வைத்தாள். இடி, மின்னல் என்கிற கட்டியங்களுடன் அவள் ஜன்னல்களில் மழைத் துளிகள் சீறி சிதற ஆரம்பித்திருந்தன…

- வல்லபாய்

Pin It