வழக்கம் தானே என
விட்டு விடாதீர்கள்
தூதர்களில்
ஒருவராகவும் இருக்கலாம்
கடவுள்
*
அவரவர் கொலைகளை
அவரவர்களுக்கு
பொருந்தக்கூடியவர்கள் மேல்
நிகழ்த்திப் பார்க்கிறது
உடல்களை விட்டு விட்டு
உயிர்களைக் கொல்லும்
தினசரி இயல்பு
*
நம் குழந்தைகள்
ஆசை ஆசையாய்
பொம்மைகளைப்
பார்த்துக் கொண்டிருக்க
பொம்மைக் கடை குழந்தையோ
ஆசை ஆசையாய்
மனிதர்களைப்
பார்த்துக் கொண்டிருக்கிறது
*
சிறை வளாகத்தில்
இருந்த காட்டை
பூங்காவாக
மாற்றி இருக்கிறார்கள்
மரங்களுக்கெல்லாம் மரண தண்டனை
- கவிஜி