முதல் கனவை எப்போதும்
பறித்துக் கொள்ளும்
மூர்க்கத்தை
உனக்கே
விட்டுக் கொடுக்கிறேன்
சரி என்பதை
நீயே வைத்துக் கொண்டு
எனைத் தவறாக்கும்
சாதனைக்கு பின்
அத்தனை அழகிய கண்கள்
உனக்கே சத்தியம்
நான் தேடும் வழியெல்லாம்
நீயாகி
பின் நீ மறுக்கும்
ஊராகி விடுவதுதானே
எனது சாபம்
என் பெயர் கொண்ட
சப்தங்களைப் பிடித்து முறித்து
ஒலியற்ற முகவரிக்குள்
அடைத்து துகளாக்குவது
உன் ஓவியக் கூடத்தின் வலிமை
என்றறிவேன்தான்
இருந்தும் இல்லாமல்
எல்லாரிடமும் வெற்றி பெற்று
உன்னிடம் வருவதே
உன்னிடம் தோற்கத்தானே...!
- கவிஜி