பேசும் மலை
எரிந்து அடங்கிய
உன் மௌனத்திற்குத்தான்
எவ்வளவு அடர்த்தி
என் துயரக் கணவாயின்
கங்குக்குள் ஒளிந்திருக்கும்
பொறி போல
என் மகிழ்ச்சிகளில்
வெளியேற
துடித்துக் கொண்டிருக்கும்
கண்ணீர் போல
இரண்டுக்கும் இடையில்
ஒரே அடர்த்தியின்
மொழியை இத்தனை காலம்
எப்படித்தான்
அடைகாத்து வைத்திருக்கிறாயோ?
***
மெய் பதம்
மௌனத்தின்
பிரவாகம்
ஒரு மலர் போன்றது.
காற்றின்
சிறு தொடுதலில்
விரியும்
மொட்டின்
மெய் பதம் —
“அது.”
- மாரி.கிருஷ்ணமூர்த்தி