ரயிலடி பக்கத்துல இந்தச் சந்துக்குள்ள இங்கொரு கடை இருக்கிறது இன்னைக்குத்தான் தெரிஞ்சது.
கசகசனு இருக்கு. கால் எங்க வைக்கிறதுனே தெரியல. ஈரமும் ஓதமுமா கப்படிக்குது. என்ன பண்ண... வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி... போதைனு வந்துட்டா இடவசதியெல்லாம் பார்க்க முடியுமா!
மாலை நேரத்தின் விசை சாலையெங்கும் இன்னும் முழு வீச்சில் எகிறிக் கொண்டிருந்தது. எங்கிருந்து எங்கேதான் இத்தனை வண்டிங்க போகுதோ! ரோட்டைக் கடப்பதற்குள் ரோஷம் மானம் எல்லாம் போய்விட்டது. இத்தனை கோபத்தோடு எங்கே போறானுங்க? ஏத்த முடியாத குறைக்கு ஏசிட்டுப் போறானுங்க போல!
பச்சைக்கடைக்கு அழகே பச்சைக்கலர்ல இருக்கிற கடைப் பேருக்கு... பச்சைக்கலர்லயே லைட் செட் பண்ணி வைக்கிறதுதான்.
யாரோ ரெண்டு ரசனைவாதிங்க... பேசிக்கிட்டே போறாங்க.
கடைக்கு முன்னாடி இருக்கிற குட்டிச் சுவர் மேல சிலர் உட்கார்ந்து ஓசி போதைக்குக் காத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. கசங்கிய உடலோடு, கலைந்த கவனத்தோடு... வேர்த்துப் பூத்த வாழ்வு அது! திசையற்று அமர்ந்து வெறிக்கும் பார்வைக்கு நேரடிப் பார்வை வேலைக்கு ஆகாது. கண்டும் காணாமல் கடந்து உள்ளே நுழைந்தேன்.
வழிமுகப்பில் நாலைந்து பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க... ஓரிருவர் கட்டிங் அளவுக்குப் பார்த்துக் கொண்டிருக்க... தனித்த ஒருவன் போகிற வருகிறவர்களை வெறி கொண்டு பார்த்துக்கொண்டிருந்தான். முடைநாற்றமும் பாட்டில் மூட்டை நாற்றமும் அந்த இருள் சூழ்ந்த சந்தில் என்னைச் சிதிலமடைந்த சித்திரமாகச் சில நொடிகளில் மாற்றிவிட்டன. பச்சைக்கடை உள்ளே இருக்க... சைட் டிஷ் கடை முன்னாடியே இருந்தது. நல்ல ஸ்ட்ரேட்டஜி!
"சைட் டிஷ் வாங்கிட்டுத்தான் மவனே நீ உள்ள சரக்கு வாங்கப் போகணும்..." என்ற சொல்லாத சங்கதி என் கண்களில் திகில் பரப்பியது. வழக்கம் போல ரெண்டு முட்டை வாங்கிக் கொண்டேன். கூடவே சோடா அரை லிட்டர் பாட்டில் வாங்கிக் கொண்டேன். அய்யய்யோ... இரண்டையும் பிடித்தபடி... பச்சைக்கடையில் நின்று எப்படிச் சரக்கு வாங்குவது? அதுவும் கசகசவென பல கைகள் நீளும்போது நாம் எந்தக் கையை நீட்டுவது? நாயைப் போல வாயையா நீட்ட முடியும்! ஓஹ்... தப்பு செய்துவிட்டேனே... என்ற நொடிநேர பதற்றம் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டது. எங்காவது வைக்கலாம் என்றால் அதற்கு வாய்ப்பில்லை ராஜா! நோய்களின் கூடாரமாக இருக்கும் இங்கே ஏன் வந்தேன்? காரணம் அறிந்தாலும்... காரியம் கைகூடுமா? படபடப்பு எகிறிவிட்டது. சில நொடி யோசனைக்குப் பிறகு சரி என்று சோடாவை கை இடுக்கில் வைத்து அணை கொடுத்தபடி, ஒரு கையில் முட்டைத் தொன்னையைப் பற்றிக்கொண்டு, காசு கொண்ட கையைப் பல பல கைகளோடு முட்டி மோதி கவுண்டருக்குள் நீட்டினேன்.
அங்கே நீளும் எந்தக் கைக்கும் மரியாதை கிடையாது. மட்டுமரியாதையற்ற கைமொழிகள்!
மானங்கெட்டுத்தான் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும். "டேய் பொறுடா, என்னடா அவசரம்?" என்பது போலத்தான் உள்ளே நிற்கும் மகராசர்கள் பார்ப்பார்கள். அவர்கள் ஒருபோதும் நம் முகத்தைப் பார்ப்பதில்லை; கையில் நீளும் பணத்தில் மட்டுமே கவனம் இருக்கும். எப்போதாவது வெளியே வந்து குதிக்கும் ஏளனப் பார்வையில் மகராசர்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். எது கேட்டாலும் "அது இல்லை" என்று சொல்வதற்குப் பதிலாக வாயைப் பிதுக்குவார்கள்; தலையை நோகாமல் மெல்ல ஆட்டுவார்கள். "என்னதான் இருக்கு?" என்றால் அவர்களுக்குக் கோபம் வந்துவிடும். கொலைவெறியில் சகட்டுமேனிக்குக் கத்துவார்கள். குடிகாரனுக்கு என்ன தகுதி இருக்க முடியும்... "போடா போ" என்பது போலவே பார்ப்பார்கள். உடலால் மிரட்டும் உன்னத கம்பீரம் மது விற்கும் ராசாக்களுக்கு உண்டு!
துளி மரியாதை வராது; தோளில் தெனாவெட்டு தொங்கும் அருவா போல! மூடிக்கிட்டு குடுக்கறதை வாங்கிட்டு வந்தரணும். நியாயம் தர்மம் பேசினால்... முட்டுச்சந்தில் மூச்சுமுட்ட முட்டை பரோட்டா போட்டு விடுவார்கள். தடுக்க ஒருவரும் வாரார். வேகம் எடுத்த போதை இறங்க எந்த உழைப்பு விரும்பும்?
கொடுத்த சரக்கை ஒரு வழியாக உடலைத் திருப்பியபடி கையைக் கோணித்து வாங்கிக்கொண்டு உள்ளே போனால்... அங்கே கல்லால் ஆன டேபிள் ரெண்டு மூணு இருந்தது. மேலே குப்பை போல காலி பிளாஸ்டிக் கோப்பைகளும்... முதுமை ஏறிய பாட்டில்களும்... சிறுகச் சிதறிய மிச்சங்கள்... சில துண்டு எலும்புகள்... தலை கலைந்த இலைகள் எனச் சட்டென குமட்டிக்கொண்டு வருமளவுக்கு ஒரு வறக் வறக் சொரிந்த தோற்றம்!
இருள் சூழ்ந்த வெளிச்சத்தில் அந்த பார் கோரமாய் தன் கோபத்தைக் கொஞ்சி கொஞ்சிக் காட்டிக் கொண்டிருந்தது. சத்தியமாய் எங்கும் உட்கார முடியாது. நிற்கவே முடியாத நிலையில் எங்கே எப்படி உட்காருவது? ஆனாலும் ஆனது ஆகட்டும் என்று அப்படியே நடந்து, நின்றுகொண்டே குடிக்கும் ஸ்லேபுக்கு வந்தேன். அங்கும் அப்படி இருந்தாலும்... அந்த அளவுக்கு அப்படி இல்லை; கொஞ்சம் இடம் இருந்தது. நின்றபடியே அப்பாடா என்று சரக்கைப் பார்த்தேன். அப்படியே உடலை கோணியபடியே முட்டைத் தொன்னையை ஈரமில்லாத இடம் பார்த்து வைத்தேன். "ஈக்கள் வராத நேரம் வேண்டும்..." பிரார்த்தனையைப் பொதுவாகத் திருப்பி வைத்தேன். வழியோரத்தில் ஒரு முதியவர் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தார். தானாகவே பேசிக்கொள்ளும் உடல்மொழி முனகல். ஒரு பையன் சுவரொட்டி நின்று செல்போனில் சுழன்று கொண்டிருந்தான். அவன் தலையில் கலைந்த போதை முகத்தில் திருகிக் கொண்டிருந்தது.
ஆட்கள் உள்ளே வருவதும்... வந்த வேகத்தில் குவாட்டரை திருகி வாய்க்குள் கவிழ்ப்பதும்... பிறகு ஆஅ ஆவென காரித் துப்பிக் கொண்டே நகர்வதும்... ஒரு திறந்தவெளி திடீர் திருப்பமாகவே எனக்குப் பட்டது. 'ஒவ்வே' என்ற ஒவ்வாமை வராமல் இல்லை. உள்ளிருந்து கொப்பளிக்கும் அருவருப்பை அடக்கிக் கொண்டேன். எந்த ஒரு மனிதனின் திடுதிடுப் அண்மையும் நம்மைத் திகிலடையச் செய்யும் நொடிநேரத் திரும்புதலை வழங்கியபடியே இருந்தது. இதெல்லாம் பார்த்தால் ஆகாது என்று நெகிழி கோப்பையைச் சரியாகக் குத்தவைத்து, குவாட்டரைத் திறந்து கொஞ்சமாக ஊற்றினேன். மெரூன் நிறத்தில் குட்டி மாய நதி மயக்கத்துக்குத் தயாராகிவிட்டிருந்தது. சோடாவைத் திறந்தேன்; அவசரம் பொங்கிக்கொண்டு வழிந்தது; கலந்தேன். ரம் வாசம் ரம்மியமாக இருந்தாலும்... ரம்பம் ஒன்று உள்ளே சத்தமிடுவதை நான் உணர்ந்தே இருந்தேன். யாருமே என்னைப் போல குடிக்கவில்லை. என் கண்கள் சுழன்ற பக்கமெல்லாம் வெறிகொண்டு வாயில் கவிழ்ந்தபடியே இருக்க, நான் மட்டும் மிடறு மிடறாகக் குடிப்பது ஒரு பெருங்குற்றம் போல சில கண்கள் பார்த்தன. என் முகத்தில் வியர்வை வழிந்தது. யாரோ பின்னால் வந்து நின்று மூச்சு விடுவதை உணர... படக்கென்று திரும்பினேன்.
அத்தனை அருகே ஒரு பெரியவர்... கையை நீட்டி கண்களை முட்டை மீது சிமிட்டினார். என்ன செய்கிறார் என்ற திக் முதல் நொடியில்... மறுநொடியே முட்டை வாசம் மேலோங்கி என் முகத்தை இயல்பாக்கியது. ஒரு துண்டு எடுத்துக்கொடுத்தேன். வாங்கி வாயில் போட்டபடியே நகர்ந்துவிட்டார். தள்ளாடாத நடையில் ஒரு போத்தலுக்குக் கால் முளைத்தது போல தெரிந்தார்.
சற்று பக்கவாட்டிலிருந்து மூத்திர வாசமும் சாக்கடை வாசமும் கலந்து கட்டி ஒரு புதுவித குமட்டலோடு திடீர் காற்று... எந்தச் சந்து வழியாகவோ உள்ளே நுழைந்திருக்கிறது. முட்டையில் ஈக்கள் ரெண்டு வந்து அமர்ந்து சிறகை மினுங்க அசைத்துக் கொண்டிருந்தன. "ஐயோ"வென நான் தலையைச் சிலுப்பிக் கொண்டேன். ஈக்கள் எழுந்து பறந்து முகம், தலை, மேசை என எங்கெங்கோ அலைந்து மீண்டும் மீண்டும் முட்டை மேல் வந்தபடியே இருந்தன. அதே நேரம் சொல்லிவைத்தாற்போல இன்னொரு ஆள் வந்து தண்ணி வேண்டும் என்று கேட்டார். கேட்கும் உடல்மொழியில் அப்படி ஒரு கூனிக்குறுகும் கெஞ்சல்! நான் நேர்கொண்ட பார்வையில் மூச்சிழுத்துக்கொண்டே "தண்ணி இல்ல, சோடா இருக்கு" என்றேன். "ஐயோ சூப்பர்.. இன்னும் நல்லா இருக்குமே, ஊத்துங்க ஊத்துங்க" என்று கட்டிங்கில் தவழ்ந்த பிரவுன் நிற தாலாட்டை நெகிழி போத்தலுக்குள் வைத்து தலைகுனிந்து ஒரு ராஜ மரியாதையை எனக்குத் தந்தபடியே நீட்டிக் கொண்டிருந்தார். நான் சோடாவைத் திறந்து ஊற்றினேன். டம்ளர் நிறைவது போல இருக்கும் அந்த நொடி பின்னுக்கு இழுத்துக் கொண்டு "போதும் போதும்" என்று நின்றார். கோப்பையில் நுரை பொங்கியது; அவர் கண்களில் புத்தொளி!
வேகம் கூட வெறிக்கும் விழிகளை மூடி கபகபவென சரக்கை அடித்தார். குடிக்கும் வேகத்தை மைக்ரோ நொடிகளில் கணக்கிடலாம். அவ்ளோதான் அதுக்கான நேரம். அனிச்சை செயலைப் போல வாயைத் துடைத்தபடியே என்னைக் கேட்காமலே ஒரு துண்டு முட்டையை எடுத்து வாய்க்குள் போட்டபடியே கிளம்பிவிட்டார். சிறு தள்ளாட்டம் தேவையாய் இருந்தது.
சமூகம் என்று வந்துவிட்டால் இதெல்லாம் சகஜம்தானே... என்று என் பார்வையை நீட்டிக்க விரும்பாமல் அப்படியே என் சரக்கு ததும்பலில் நிறுத்தினேன். எனக்கு இடது பக்கம் நல்ல உயரமான, நன்றாக ஆடை அணிந்திருந்த ஒருவர் தெரிந்தார். பார்க்க ரெப் (Rep) போல இருந்தார். சரக்கைச் சுவைத்தபடியே போனில் யாரிடமோ ரகசியமாய்ப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் ரகசியத்துக்கு எதிரான உடல்மொழி.
முன்பிருந்த கெட்ட வாடை கூடியபடியே இருந்தது. தலையில் மாய பாரம். அந்த நேரம் அந்த இருள் சூழ்ந்த வெளிச்சத்திலும் ஒளி கூடிய இருளை ஒதுக்குவதாக இருந்தது.
செல்போனில் நோண்டிக் கொண்டிருந்தவன்... அப்படியே என் அருகே வந்து நின்றான். நான் கவனமாகத் திரும்பிக் கொண்டேன். முன்பு அடித்திருந்த போதை தெளிந்திருக்க வேண்டும். தலையில் நெற்றிக்கண்ணோடு வெறிக்க வெறிக்கப் பார்த்தான். அவன் கை அனிச்சையாக நீண்டுவிட்டிருந்தது. நானும் அனிச்சையாகத் துண்டு முட்டையை எடுத்து நீட்டினேன். ம்ஹும்... என்று அவன் கண்கள் இடதும் வலதுமாக மறுத்தது. மடங்கிய கை மறுபடியும் நீண்டது; இந்த முறை பலமாக இருந்தது போல தெரிந்தது. நான் சோடாவை எடுத்து நீட்டுவதற்குள் மறுபடியும் தலையை ஆட்டிவிட்டு, அவன் கண்கள் சரக்கு பாட்டிலைப் பார்த்த விதம்... "ஐயோ... முதலுக்கே ஆப்பு வைப்பான் போலயே" என்றுதான் நினைக்கத் தோன்றும். ம்ஹும் என்று பட்டும் படாமல் சொல்லச் சொல்லவே திரும்பிக் கொண்டேன்.
ஒரு மாதிரி வெறிபிடித்த உடல்மொழியில்... மெலிந்த தேகத்தில் எலும்பே கத்தி போல துருத்திக் கொண்டிருந்தது. எடுத்து ஏத்திட்டா என்ன பண்ண என்று தோன்றும் தானே? சற்று தள்ளி நின்றுகொண்டேன்.
மனதுக்குள் பல எண்ணங்கள் ஓடின. இதயத்துடிப்புக்குச் சூடு கூடியிருந்தது.
இப்போது அவன் என்னைத் தாண்டிச் சென்று வாசலில் நின்றபடியே அமைதியாக, ஆனால் வெறித்து வெற்றிடம் பார்த்தபடியே நின்றான். எனக்கு இந்தப் பக்கம் இருந்தவர்... "ஏன்ட்ட கேட்டான்... இல்லங்கவும் உங்ககிட்ட கேட்கறான்" என்றபடியே பேச்சு கொடுத்தார். நான் பதிலுக்குச் சின்ன புன்னகையைச் சீக்கிரம் தந்து எடுத்துக்கொண்டேன். அதே நேரம் வாசல் பக்கம் திரும்பி அவனைப் பார்த்தும் பார்க்காதது போல பார்த்தேன்.
ஈர வழிப் பாதையில் வருவதும் போவதுமாக அந்த நேர பிஸி கூடிக்கொண்டே போனது. யார் யாரிடமோ கேட்கிறான் போல! சரக்குக் கடையில் தானமாகத் தண்ணியே தரமாட்டார்கள்; இதில் சரக்கு எப்படி தருவார்கள்? அவன் பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் எந்தக் கையும் காசு தராது. அவனும் அதை அறிவான் என்றே நம்பலாம். ஆனாலும்... அவனது வேட்கை அங்கும் இங்கும் அலைந்து தடுமாறியது.
அவன் கேட்டது சோடாவும் அல்ல... சோலி முடிந்த முட்டை துண்டும் அல்ல; அவன் சரக்கு கேட்கிறான். சிமிட்டாத கண்களை அவன் மேல் படரவிட்டேன்.
அந்தக் கெஞ்சலில் உயிரே போய்விடும் போல! நான் அவனையே பார்த்தேன். அவனோ கண்ணில் படும் பாட்டிலையெல்லாம் வெறிகொண்டு நோக்குகிறான். விட்டால் பிடுங்கிக் குடித்துவிடுவான் போல! அவன் கழுத்து தானாகவே குறுகிவிட்டிருந்தது. கைகளில் நடுக்கம்; உடலில் சுணக்கம். வெறிகொண்ட மிருகம் உடல் சுருங்கி கொலை உண்ட பிணம் போல நின்றது.
சுழன்ற கண்கள் என் பக்கம் வருகையில்... "வா" என்றேன். தள்ளாடி தடுமாறி வேகமாய் எகிறி வந்தான்.
பாவம் பரிதாபம்... என்று என்னைப் பிராண்டிய சரக்கை கொஞ்சம் அவன் வைத்திருந்த கசங்கிய நெகிழி டம்ளரில் ஊற்றினேன். சோடாவுக்கு அவன் காத்திருக்கவில்லை; அப்படியே வாய்க்குள் கவிழ்த்துவிட்டு... போக இருந்த உயிர் திரும்ப வந்தது போல சற்றே நிமிர்ந்தான். ஓர் ஏப்பம்... ஒரு பார்வை! சுருங்கியிருந்த நெற்றி விரிந்துவிட்டிருந்தது.
நான் என் சரக்கை மெல்ல ஒரு சிப் அடித்துவிட்டு, "பேர் என்ன?" என்றேன்.
கண்களைத் தூக்கி என்னைப் பார்த்தவன்... எச்சில் முழுங்கியபடியே என்னவோ சொன்னான்; ஆனால் விளங்கவில்லை. அப்படியே நின்றிருந்தான். முட்டையை எடுத்து நீட்டினேன்; வாங்கி வாய்க்குள் போட்டவன் முகம் கசந்தது போல அப்படி ஒரு பாவனை! அப்படி ஒரு பார்வை! சொக்கிய கண்களில் கலக்கம்; முகம் வியர்த்திருந்தது.
எனக்கும் கொஞ்சம் ஏறிவிட்டது என்று நினைத்திருக்க வேண்டும்... என் இடது பக்கத்தில் இருந்தவரின் பார்வை அப்படி இருந்தது.
"சொன்னேன்லங்க.. இப்படி கொடுத்துட்டீங்க" என்பது போல அந்தப் பார்வையில் ஜுவாலை கூடியிருந்தது.
குரலே வெற்றிடம் அறுக்கும் போல... அப்படி ஒரு குரல் என்னைச் சட்டென்று திரும்பச் செய்தது. எந்த அனுமதியும் இன்றி என் தலையைத் தொட்டு ஆசீர்வதித்துவிட்டு, ஒரு திருநங்கை "ம்ம்ம் குடு" என்று கொடுத்து வைத்தது போல கையைக் கோணித்துக்கொண்டு நீட்டியது. நான் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கப் பார்க்க... "இந்த கேப் உங்களுக்கு அழகா இருக்கு..." என்று கன்னம் தொட வரவும் சற்று பின்வாங்கினேன். கணநேரத் தடுமாற்றம் உணர்ந்தேன். உடனே வேகமாய் பின் பாக்கெட்டிலிருந்து ரெண்டு பத்து ரூபாய்களை எடுத்து அவசரமாய் நீட்டினேன்.
வாங்கிக்கொண்டு "நீங்களும் செமையா இருக்கீங்க..." என்று சட்டென்று வயிற்றில் ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு நகர்ந்தது நர்த்தனம். எதிர்பாராத வாசம்... மணம் என்றே சொல்லலாம்! வந்து என் முகத்தில் முட்டி மோதித் திணற அடித்த நொடிகளைச் சமநிலைப்படுத்திச் சுய ஆசுவாசம் கொள்ள சிலபல நொடிகள் பிடித்தன. பக்கத்தில் நிற்கும் அவனோ மிச்சச் சரக்கையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அவனை ஆழமாய்ப் பார்த்துவிட்டு... நானே மிச்சம் இருந்த பாட்டிலை எடுத்து நீட்டினேன். வாங்கியவன் நேரமே கொடுக்காமல் முன்னை விடவும் வேகமாய்க் கவிழ்த்தினான்.
அவனைப் பார்த்தபடியே முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டு, வேகமாய் உள்ளே சென்று இந்த முறை நிதானமாக இன்னொரு பாட்டில் வாங்கி வந்தேன்; இந்த முறை ஆஃப்.
என் நெகிழி கோப்பையில் ஊற்றிவிட்டு, அருகில் கிடந்த நெகிழியிலும் ஊற்றினேன். நான் உள்ளே போகும்போதே என்னை எட்டிப் பார்த்தவன் கணித்திருப்பானா தெரியவில்லை. ஆனால் அவன் கண்கள் என் அருகே சுழன்று கொண்டிருந்ததை நான் உணர்ந்தேன். அவன் முகத்தில் மட்டுமல்ல, யுகத்திலும் கூடுதல் வெளிச்சம்! சோடாவை ஊற்றிக் கலவை செய்யச் செய்யவே எடுத்து கடகடவென அடித்தான்.
"ரொம்ப தேங்க்ஸ்னா... ஆமா ஏன் கேப் போட்டிருக்க... வேகலையா?" என்றான். வாய்மொழியில் வழுக்கல் இருந்தாலும் முகமொழியில் ஒரு சிநேகத் ததும்பல்.
"வேகுதுதான்.. ஆனா உனக்கு மாதிரி புசுபுசுனு முடி இல்லையே..." என்றேன்.
அனிச்சையாய் தலையைக் கோதிக்கொண்டான். ஆனால் கை நிற்கவில்லை; கீழே கீழே விழுகிறது. என் தலையைச் சொட்டைத்தலை என்று நினைத்து விட்டானோ... தலையையே பார்த்தான். அவன் தலை ஆடியது.
"அடேய்.. நான் பால்டு (Bald) இல்லடா.. கொஞ்சம் அடர்த்தி கம்மி" என்று கேப்பைக் கழற்றிக் காட்டினேன். அவன் சிரிக்க முயன்றான்; சிரித்தும் இருப்பான். ஆனால் அவன் முகம் போதையில் சுருங்கி, வாயில் எச்சில் வடிந்தது கூட தெரியாமல் கண்களை இழுத்து இழுத்துத் திறந்தான். நான் அவனையே பார்த்தேன்... பார்த்துக்கொண்டே இருந்தேன்.
"ஆனது ஆச்சு, இந்தா இதையும் அடி..." என்று மீதியைப் பாட்டிலோடு கொடுக்க, வாங்கி அதையும் வெறிகொண்டு குடித்தான்; துடித்தான்.
என் செயல் வினோதமாக இருந்திருக்க வேண்டும். பக்கவாட்டு ரெப் முறைக்கிறாரா... மோகிக்கிறாரா என்று தெரியவில்லை; பார்த்தபடியே நகர்ந்துவிட்டார். என்ன ஒரு மேனேஜர் நடை!
அவனோ குடிக்கக் குடிக்க எதுக்களித்து கொஞ்சம் வாந்தியும் எடுத்துக்கொண்டான். ஆனாலும் மீண்டும் குடித்தான். என்னவோ பேசினான்; புரியவில்லை. பாட்டில் முழுக்க முடித்துவிட்டு அப்படியே சுவரோரம் சரிந்து அமர்ந்தான். கால்களை அகட்டி அமர்ந்திருந்த விதம்... எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழுவான் போல! எச்சில் வடிய தலை கவிழ்ந்துவிட்டது. ஆனால் புலம்பல் மட்டும் அவ்வப்போது வந்தபடியே இருந்தது. நான் அவனையே பார்த்தேன். வருவோர் போவோர் அப்படியே பார்த்துப் பார்த்து அனிச்சை செயல் போல அந்தப் பார்வை என் பக்கம் சேர்ந்து கொண்டே இருந்தது. நான் மெல்ல மொபைலை எடுத்துச் சிக்னல் கொடுத்தேன். அடுத்த கணம் நம் ஆட்கள் ஸ்ட்ரெச்சரோடு (Stretcher) உள்ளே வந்து அர்த்தத்தோடு என்னைப் பார்த்தார்கள்.
பக்கத்தில் இருந்தோர் வெலவெலத்துப் போனார்கள். கொலைகாரனைப் போல என்னைப் பார்த்தார்கள். சில கைகளில் இருந்த சரக்கு வேகமாய் வாய்க்குள் போனது. "எந்தப் பிரச்சனைனாலும் முதல்ல குடிச்சிருவோம்" மனநிலை அது! பாரே சற்று சலசலப்புக்கு உள்ளானது. நான் வேகம் காட்டினேன். கண்கள் போன திசையில் சரிந்து கிடந்தவனைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து அப்படியே வெளியே வேகமாய்ச் சென்றோம்.
விரிந்த கண்களில் போதை தலைகுப்புற விழுந்திருக்க வேண்டும்... வெறித்துப் பார்த்த சிலரைப் பார்க்கச் சிரிப்பாகவும் இருந்தது. சில கைகள் பாட்டிலைக் கெட்டியாகப் பற்றியபடியே சற்று பின்வாங்கின. என் பார்வை திரும்பிய பக்கமெல்லாம் என்னைப் பார்த்த கண்கள் அப்படி அப்படியே சரிந்து "நான் இல்ல, எனக்குத் தெரியாது" என்பது போல திருட்டு முழி முழித்தன. "யார் இவன், என்ன பண்றான்?" என்ற கிசுகிசுப்பும் கேட்டது.
வெளியே ஆம்புலன்ஸ் தயாராக இருந்தது. உள்ளே ஏற்றிவிட்டு, அதற்குள் பாரில் வேலை செய்வோர் வெளியே வர விஷயத்தைச் சொல்லி அமைதிப்படுத்தினோம்.
கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டிருந்த அவன் தாய்... கண்ணீர் பொங்க... ததும்பியது.
"வீட்டுலனா ஹவுஸ் ஓனர் பிரச்சனை இருக்கு... அக்கம் பக்கம் மானம் போகும் தம்பி... அதான் இங்க வெச்சே தூக்குங்கனு சொன்னேன்..."
சொல்லச் சொல்லவே விசும்பியது. கூப்பிய கைகளை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டேன். எலும்பும் தோலுமாய் இருந்த அந்தத் தாயின் உடலில் மிச்சமிருக்கும் உயிரெல்லாம் அந்தப் பையனைச் சுற்றியே! செய்வதறியாத துக்கத்தைச் சுமந்து சுமந்து நிலைகொள்ளாத தவிப்பு அந்த முகத்தில்.
"பகல் முழுக்க இங்கதான் கிடக்கறான்... பிச்சை எடுத்தாவது குடிச்சிடுறான்... ராத்திரிக்கும் வீட்டுக்கு வர்றதில்லை... வந்தாலும் விடிஞ்சும் விடியாததுமா ஓடிடுறான்... எங்களுக்கு யாரும் இல்லை தம்பி... கூலி வேலைக்குத்தான் போறேன். இவன் இப்படி உருப்படாம போயிட்டானேனுதான் கவலை..." — முகத்தை முந்தானையில் துடைத்தபடியே பார்த்த கண்களில் சற்று தெளிவு; சிறு நம்பிக்கை.
பிறகு மெல்ல தயங்கியபடியே... "அடிச்சிடலையே..." என்றது.
"அடிச்சிடலையே..." என்று முடியும் போது அந்தம்மா கண்களில் பொலபொலவென கண்ணீர் வந்துவிட்டது. அதே நேரம் சிறு புன்னகையை முகத்தில் தேக்கி வைத்த அந்த நொடி ஒரு சிறுபிள்ளையை முகத்தில் காட்டியது. ஒரு முறை அம்மா ஆகிவிட்ட எந்தப் பெண்ணும் அதன் பிறகு அம்மாவாக இருக்கவேதான் எப்போதும் விரும்புகிறாள். பையன் மீதிருக்கும் பரிவும் அன்பும் அந்த முகத்தில் வழியும் துக்கத்தில் தெரிகிறது. ஏங்கித் தவிக்கும் அந்தக் கண்கள் முழுக்க அவனே நிறைந்திருக்கிறான். அம்மான்னா சும்மாவா... அடிமனதில் என்னவோ எனக்கு அசைந்தது. "அடிச்சிடலையே" மறுபடியும் கேட்டது.
கடந்த முறை இதே போல சம்பவம் செய்கையில்... வீட்டில் எல்லோரையும் சகட்டுமேனிக்குக் கை நீட்டுகிற ஒருவன் கையை உடைச்சு தூக்கிட்டு போனோம்... அதை யாரோ சொல்லியிருப்பாங்க போல!
"ஐயோம்மா... அப்படியெல்லாம் இல்லை.. அது வேறு, இது வேறு. மறுவாழ்வு மையம் (Rehab Center) குடிக்கு அடிமையான பையனை மாற்றி உங்கள் பையனா திரும்பக் கொடுக்கும். நான் பொறுப்பு... நீங்க பயப்படாம போங்க..." என்று தோள் தொட்டு ஆறுதல்படுத்திவிட்டு, நண்பன் வண்டியில் ஏறினேன்.
வெளியே நின்ற குடிமகன்கள் அப்படி அப்படியே ஒதுங்கி வழிவிட்டார்கள். பலருக்கு போதை இறங்கியேவிட்டது! நிலைகுத்திய பார்வையில் கிசுகிசுப்பும் முறைப்பும் ஆங்காங்கே.
"இந்த மஞ்ச தொப்பிக்காரன் மேல எனக்கு முன்னமே டவுட்தான்..." — முணுமுணுத்தபடி முட்டைத் துண்டு வாங்கித் தின்ற பெருசு பச்சைக்கடையொட்டிய சந்தில் மிரண்டு ஒதுங்கியதைப் பார்த்தேன்.
கையை ஆட்டி "அடுத்து நீதான்" என்று ஜாடை செய்து நாக்கைக் கடித்தேன். பெருசு... தலையை தனக்குள் அழுத்தி வேகமாய் ஒளித்துக் கொண்டது.
நண்பன் சிரித்துவிட்டான். நானும் தான்!
- கவிஜி