வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் வந்தேன்
இன்று நானொரு பறவையாக
சிறகுகளாய் வளர்ந்து கொண்டிருந்தது
என் பூத உடலின் நிழல்
உடல் நிழலாய் இருப்பதும்
நிழல் உடலாய் இருப்பதும்
எத்தனை ரம்மியம் ?
அடடா எத்தனை ஆனந்தம் இது
எடையற்று உடையற்று
எண்ணமற்று மனமற்று
யாவும் அற்று அற்று
ஆயிரம் சங்கிலிகளால்
பூத உடலைப் போல
பிணைக்கப்படாமல்
நிழல்கள் பேசாது ஏமாற்றது
அதைப் பருந்துகள் தூக்கிச் செல்லாது
எல்லாவற்றிற்கும் மேல்
நிஜ உடல் தென்னையிலும்
எதிர் சுவரிலும்
இப்படி கோட்டோவியம் வரையாது
சுமையற்ற இலகுவில்
எவ்வி எவ்வி பறக்க முடிகிறது
மனம் போன போக்கில்
காட்டுப்பூக்கள் போல பறிக்கப்படமால்
கடவுள்களின் பயமற்று
இரகசியத்தில் மலர்ந்து கொண்டிருக்கிறேன்
நிழலாக
கடவுளை விக்கிரகமாய் தரிசிப்பதை விடவும்
எத்தனை ஆழமானது
ஆரத்தி வெளிச்சத்தில் சுவரில்
அவரை நிழலாய் தரிசிப்பது
- தங்கேஸ்