நான்
சிறையிடம் இல்லை
சிறகிடம் இருக்கிறேன்
*
வயிறு நிறைந்த பிறகும்
வாசத்தைப் பிராண்டும்
பூனை பசி
*
பறக்கும் பறவைக்கு
வானம்
மிதக்கும் மிதவை
*
மெல்லவும்
விடாது
கொடும் பசி
*
அள்ளி எடு
உள்ளங்கைத் தொட்டியில்
நீரூஞ்சல்
*
பாறையிடுக்கில்
சிருஷ்டிக்கு காத்திருக்கும்
துளி இருள்
*
பலூனையா விற்கிறான்
சிறுவன்
பால்யத்தை அல்லவா
*
சிக்னலில் கார் கண்ணாடி
துடைக்கிறவன்
என் கண்களையும் துடைக்கிறான்
*
இருட்டுக்கு றெக்கை
இருக்கிறது
அசந்திருக்கையில் காகம் காண்
*
சாலைவாசியின் கூடாரத்தை
நிறைக்கும் மழை
நிற்கத்தானே வேண்டும்
- கவிஜி