ஒரு துளி கண்ணீரில்
ஒளிந்திருக்கிறது
இந்த அடர்த்தியான வாழ்க்கை

கருணை பொங்கும் கடவுள்கள்
நம் வாழ்க்கையை
தேர்ந்த வாசகங்களால
எழுதிக் கொண்டே
செல்கிறார்கள்

எழுதியவைகளை
முகநூலில் பதிவிட்டு விட்டு
நம்மை விருப்பக்குறியிட வைக்கிறார்கள்

"அற்புதம் தலைவா "
என கருத்திடப்
பணிக்கிறார்கள்

தொலைக்காட்சிகளில் தோன்றி
வாழ்வது எப்படி என்று
வகுப்பெடுக்கிறார்கள்

பற்பசை விளம்பரங்களில் தோன்றும்
தேவதைகள் கள்ளம் கபடமற்று
சிரிப்பது எப்படி என்று
பார்வையாளர்களுக்கு
கற்றுத் தருகிறார்கள்

இடுப்புக்கு கீழே தொங்கும்
செயற்கை இழைக் கூந்தலை
தந்தச் சீப்பினால் நீவி விடுகிறார்கள்

கை தட்டத் தோன்றுகிறது
ஆனால் அசைக்க முடியவில்லை
விலங்குகளால்
பிணைக்கப்பட்டுக் கிடப்பதே
தெரியவில்லை நமக்கு

"அருமை கடவுள்களே"
எங்கள் கைவிலங்குகளை
கழற்றி விடுங்கள் என்று கத்துகிறோம்

சாவி மேலிடத்தில் இருக்கிறது
கூலிக் கடவுள்கள்
பதிலுரைக்கிறார்கள்

மேலிடத்தைப் பார்க்கிறோம்
தலைமைக் கடவுளரின்
பிரத்யேக அறையில்
இந்த பொன்னான வாசகங்கள்
பொறிக்கப்பட்டிருக்கின்றன

"தூண்டில் முள்ளில் குத்தப்பட்டவையெல்லாம்
ஆசீர்வதிக்கப்பட்ட மீன்கள்

கடல் முழுவதும் சுதந்திரமாக
சுற்றினாலும்
கடைசியில் இங்கே வந்து
சேர்ந்து விடுங்கள்
என் அன்பான மீன்களே"

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.