நீ வீசி எறிந்த
வியப்புகளைப் பார்
நட்சத்திரங்களாகி விட்டன
நீ பேசிய சொற்களை
பூச்செடி அருகே
விதைத்துக் கொண்டிருக்கிறேன்
நீ செய்த பிரார்த்தனைகளை
என்ன செய்தேனா
பார் கடவுளாக்கி
ஊர் சுற்ற விட்டிருக்கிறேன்
உன் பேரன்பைப் பற்றி சொல்லவா
வெயிலாகி
விளையாடிக் கொண்டிருக்கிறது
உன் ரகசியம் கிசுகிசுக்கிறேன்
வாசலில் திடீர் மழை
உன் முத்தங்களைப் பொறுக்கித் தான்
முற்றத்தில்
துளசி ஆக்கி இருக்கிறேன்
இலை பொறுக்கி உன்னை
சுவாசித்து வாசித்து
என் தோட்ட மூங்கில்
புல்லாங்குழல் ஆகி விட்டது
மொத்தத்தில்
உன் காதலை ஊதி உருக்கி
எழுதுகோலாக்கி விட்டேன்
அது தான்
இதோ உன்னை
எழுதிக் கொண்டேயிருக்கிறது

- கவிஜி