நன்றாக நினைவில் இருக்கிறது.

அறிவியல் நோட்டின் கடைசி பக்கத்தில் மனப்பாடமாக எழுதி வைத்திருந்தது. மதிய நேரத்தில் வகுப்பே சூழ்ந்து கொள்ள... நடுவில் அமர்ந்து உயிர் உருக பாடியது. படத்தில் தளபதிக்கு ஒரு பக்க காதல். நமக்கு இருக்கின்ற காதல் எல்லாமே இரு பக்கம் தான். ஆனாலும் காதலின் ஏக்கம் கண்களில் மிதக்க...அவரை போலவே தலையை ஆட்டி...

"அன்பில் நெஞ்சை
அள்ளித் தந்தாய்
காயங்கள் எல்லாம் பூக்களானது..."

என்று உள்ளம் உருகும். உடல் சிலிர்க்கும்.

கிறுக்கு பிடித்து பார்க்கும் அத்தனை கண்களும். சண்டைக்காரன் கூட ஜன்னல் சந்தில் நின்று பார்த்துக் கொண்டிருப்பான். எல்லா கண்களுமே சாந்தமாகும் அற்புத நேரம் அது. காதலை "பூவே உனக்காக" படத்துக்கு முன்....படத்துக்கு பின் என பிரிக்கலாம். காதலின் வடிவமே அதன் பிறகு மாறியதாக நம்புகிறேன். காதலி நன்றாக இருக்க வேண்டும்.. அவள் எங்கிருந்தாலும் என்ற பண்பாடு போகிற போக்கில் 90 களில் மீண்டும் விதைக்கப்பட்டதை உணர்கிறேன். முகத்தில் திராவகம் வீசும் இன்றைய சூழலுக்கு இன்னொரு பூவே உனக்காக அவசியம். காதல் மென்மையானது. மிக மேன்மையானது. அது கெடுத்து பார்க்காது. அது அழுது தீர்க்கும். ஒதுங்கி போகும். அன்பின் நிமித்தம் அனாதையாகவும் ஒத்துக்கும்.

மனதை நிறைத்து நிறைத்து இறைக்கும் நினைவுகள் அந்த படம் என்றால்.. இந்த பாடல்... இதயத்தை விரித்து விரித்து சுருக்கும் இம்சை.

"சின்னச் சின்ன
வார்த்தை சொன்னாய்
மௌனங்கள் கூட பாடலானது"

palani bharathiமௌனமாய் காதலிக்க.... மெல்லிய பூவில் மேகமென படற... கற்று தந்த காதல் கதை.

தளபதி போலவே பெரிய சட்டை போட்டு கையை மடக்கி விட்டு வீதிகளில் நடந்த காலம் வாழ்நாளில் மிகு நினைவு காலம். ஒவ்வொரு முறை பாடி முடிக்கையிலும் நண்பன் தெய்வா கண்களில் நீர் கோர்த்திருக்கும். அவன் காரணம் சொன்னதே இல்லை. மென் சோகம் வகுப்பில் பரவ... கொஞ்சம் காலம் பசங்க புள்ளைங்க சண்டை மறந்திருந்த காலம் அது.

" இரவுக்கு நிலவாய் நீதான் வந்தாய்
உறவுக்கு முகவரி நீதான் தந்தாய்"

இப்போதும் உயிர் உறும தான் உச்சரிக்கிறேன். அப்போது பிளிறிய அதே மெல்லுணர்வு இப்போதும் எனை மெல்லுகிறது.

"நீ தானே அன்பே என்றும்
எந்தன் ஆகாயம்
நீயின்றி போனால் இங்கே
வாழ்வே பொய்யாகும்"

ஒரு வாழ்க்கையை பொய்யாக்கும் வல்லமை பிரிந்து போகும் காதலுக்கு உண்டு. அதன் தீவிரத்தை திரி ஏற்றுவது போல சுடர் ஊற்றிய ஐயா.... பழனி பாரதி... காலத்துக்கும் காதலன். இந்த ஒரு பாட்டு போதும். பேரன்பன் அவர் என்றும் பெரும் கவிஞன் அவரென்றும் மானுடம் போற்றும். மனம் நிறைந்து தழுவிக் கொள்கிறேன்.

இசைத்த S.A ராஜ்குமார்.. அவர்களுக்கு இந்த பாடல் வரிகளை மாலையாக்கி போடலாம். அப்படியே தாலாட்டி அதில் காதலின் ஏக்கத்தை ஏற்றி நெற்றியில் படற விட்ட அற்புத கலைஞன்.

பாட்டு முழுக்க மான்டேஜ் காட்சிகள் தான்.

பாடல் பின்னால் ஒலிக்க... இளைய தளபதி அந்த புள்ள மீது கொண்ட காதலை.. காட்சி வாரியாக வாரி இறைத்திருக்கும் இயக்குனர் விக்கிரமன்... "பூவே உனக்காக" என்ற கிளாஸிக்கை தந்த காதல் சாட்சியன். இப்போதும் இன்றைய சூழலை பேசும் படம் தான். காலத்துக்கும் தேவையான நல்ல சினிமா அது. ஆதி மிருகத்தை வேரோடு பிடிங்கி எறிய... காதலே சிறந்த வழி. வெற்றி தோல்வி ஒரு கணக்கு தான். மற்றபடி அந்த அனுபவம் தான் பக்குவப்படுத்தும் மானுடம்.

அவள் செல்லும் பேருந்தில் ஓடி வந்து ஏறுவதாகட்டும்... அவள் கையால் வாங்கி தந்த டிக்கெட்டை கண்ணாடியில் ஒட்டி அழகு பார்ப்பதாகட்டும்....உணவகத்தில் பர்சில் காசில்லாமல்... சாப்பிட்டு... ஆனாலும் நான் தரேன் நான் தரேன் என்று சமாளிப்பதாகட்டும்... அவள் உதடு ஒட்டிய டிஸியூ பேப்பரை எடுத்து வைத்துக் கொள்வதாகட்டும். ஒரு... ஒரு தலை காதலின் உருக்கத்தை நெருக்கமாக நாம் அறிகிறோம். உள்ளே இருக்கும் பதற்றத்தோடு... ஆனாலும் அவளோடு அமர்ந்து சாப்பிடுகிறோம் என்ற ஆசையோடும்... இளைய தளபதி பாவமாய் சிரித்துக் கொண்டே பார்க்கும் அந்த பார்வை...நம்மை எப்போதும் இம்சிக்கும். என்ன பண்ணுவதென்று தெரியாமல் காதல் பாரம் தாங்காத அந்த சிரிப்பு... ஐயோவென இரக்கம் கூட்டும் இத்யாதிகள்.

ஒரு வேலையில்லாதவன் காதல்.. காசில்லாதவன் தடுமாற்றம் என்று கண்களை பொங்க செய்து கொண்டே இருக்கும்... காட்சி கோர்வைகள் வெட்ட வெளியில் மூச்சுக்கு ஏங்கும் புத்தம் புது பூவின் பட்ட பகல் கனவு.

பாடல் வரியா... காதலின் ஆழத்தில்.... தூண்டில் இடவும் மறந்து குளக்கரையில் சும்மா அமர வைத்து விடும். அமர்ந்தவன் நானும் என்பதால் அழுத்தமாய் சொல்கிறேன்.

"என் வாசலில்
நீ வந்ததால்
புள்ளிகள் எல்லாம் கோலமானது"

எத்தனை முறை கேட்டாலும்.. புத்தம் புது தோரணை... இவ்வரிகளில். எத்தனை முறை கேட்டமோ... அத்தனை முறையும் காதலின் தோகைகள்.

"என் வாழ்விலே
நீ வந்ததால்
எல்லைகள் எல்லாம் வாசலானது"

காதல் ரகசியமானது. ஆனால் அதை பகிரங்க படுத்திக் கொண்டே இருக்கும் மனசு. அப்படி.. ஆசையின் அஸ்திவாரம் காதலின் கட்டிடத்துக்கு ஏங்குவது... வரி வரியாய் தேம்பும்.

காற்றுக்கு கொடியிலிருந்து அந்த பக்கம் விழுந்து விட்ட... இதயம் கிழிந்த சட்டைக்கு ரோஜா பூ வைத்து தைத்து....வீடு வந்து கதவு தட்டி தருவது. கையில் பைலோடு பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் ஹீரோவை ஆட்டோவில் வரும் அவள் அழைத்து செல்வது. ஒவ்வொரு முறையும் அவள் அருகே பேச்சற்று அவளையே கண்கள் சிரிக்க பார்த்துக் கொண்டே இருப்பது என்று.... பார்த்துக் கொண்டிருக்கும் நாம் கத்துவோம்.

"ண்ணா லவ் பண்றேன்னு சொல்ண்ணா...."

"நீ ஏண்டா இவ்ளோ பீல் பண்ற.. நீ தான் லவ்வுன்னா பட்டுனு போயி சொல்லிட்டு வந்துருவியே..." என்று பங்காளி கிண்டல் பண்ணுவார்.

ஆனாலும்... பாட்டின் தாக்கம்... படத்தின் தாக்கம்... ஓகே ஆன காதலியிடம் கூட... ஒரு பக்க காதலன் போல நடந்து கொள்ள வைத்ததை எல்லாம் நினைவு படுத்துகிறது. நேற்று முதல் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன். கேவி அழ தோணும் இளைஞன் உள்ளே வந்தமர்ந்து தளபதி போலவே பாவமாய் சிரிக்கிறான்.

"
உன்னுடன் வாழும் ஓர்நாள் போதும்
காலங்கள் யாவும் காதல் வாழும்"

ஒரு நாள்... ஒரு பார்வை.. ஓர் அருகாமை.. ஒரு ஸ்பரிசம்.... ஒரு சிரிப்பு..... ஓர் அழுகை... காதலின் கோட்பாடுகள் தான் எத்தனை விசித்திரம். காதலின் அந்தாதிகள் தான் எத்தனை மௌனம்.

"நீ தந்த அன்பில் வாழ்வேன்
இங்கே எப்போதும்
வாழ்வினில் என்றும் உந்தன்
நினைவே சங்கீதம்"

அவ இப்ப காட்டற இந்த அன்பு போதும் இல்லையா. எப்பவும்..... எப்பவும் அது இதய ஒலியோடு சங்கீதமாய் இணைந்து விடும் என்பது எத்தனை..எத்தனை மகத்துவம்.

அவள் போக போகிறாள் என்று தெரியாது. ஆனாலும் அவள் நினைவோடு தான் அவன் இருக்கிறான்.

"நீங்களே இங்க சாப்பிடும் போது... நான் சாப்பிட மாட்டேனா.." என்று ஒவ்வொரு சந்திப்பிலும் அவள் அவளையே அறியாமல் நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறாள். அவன் நம்பி ஏமாறவில்லை. அந்த நம்பிக்கையையே காதலாக்கிக் கொண்டான்.

பாட்டின் முடிவில்.... அந்த மாடி வீட்டு குடிசை அருகே கைகளை கட்டிக் கொண்டு லுங்கியில்... நம்ம அண்ணா.. காதலே நிம்மதி என்பதாக...மெல்லிய புன்னகையோடு... முகம் பொங்கும் ஏக்கத்தோடு...பக்கத்தில் இருக்கும் அவள் விடுதியை பார்த்துக் கொண்டிருப்பார். சொல்லாத காதல் காலத்துக்கும் ஏக்கம். இந்த பாடலின் வழியே ஒரு காதல் சிறுகதை மிக அற்புதமாக வடிவமாகி இருக்கும். நெருங்கியும் நெருங்காலும்... உறங்கியும் உறங்காமலும்... அவளை நினைத்து... அவள் நினைவை உடுத்தி... அவள் அருகே ஒரு வழி தவறிய நாய் குட்டியாய் நிற்கையில்.... காதல் அப்பப்பா காலச்சுமை.

"இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்"

இதயங்கள் நழுவு தானே இந்த வாழ்வு. சுகமாய் வலிக்கத் தானே இந்த காதல். மாயமும் காயமும் சுகமாய் நிகழ... காதல் தவிர வேறு சிந்தனை என்ன இருக்கிறது. சிந்தனையும் பித்தனையும் சுகமாக்கும் வலிமை காதலுக்கு தானே உண்டு.

"காதல் இங்கே... அதிசய உலகம்
உள்ளங்கையில்... பூமிகள் சூழலும்"

உள்ளங்கையில்... பூமிகள்.... எனக்கு சுழல்கிறது. உங்களுக்கு.....!

- கவிஜி

Pin It