*விடை தேடும் வினாக்கள்*

இடதுகால் செருப்பை
வலதிலும்,
வலதை இடதிலும் அணிந்து கொள்கிறார்கள்...

தண்டவாளமில்லா
இரயிலை வானத்தில்
பறக்க விடுகிறார்கள்...

மயிலிறகைப் புத்தகத்தில் மறைத்து
குட்டிபோடச் செய்யும்
மந்திரம் புரிகிறார்கள்..

எனக்கு என
யார் கைநீட்டினாலும்
அப்படியே அள்ளித் தந்துவிடுகிறார்கள்...

இருக்கும் அரிசியை
எறும்புக்கு உணவாக்கி இரசித்து
நிற்கையில் தேவதைகளாகிறார்கள்..

தாலாட்டுகையில்
பொம்மையோடு சேர்ந்து
உறங்கிப் போகிறது இரவும்...

கபடமற்ற
மனதோடு
காண்கிறவர்களைச்
சிரிக்க வைக்கும்
இவர்களைத்தான்.,

பின்னாளில்
நீதிக்கு எதிராய் நிற்பவர்களாக
இனம்காட்டிச்
சிரிக்கிறது
சமூகம்...

ஆமாம்
அநீதியை எங்குதான்
கற்றார்கள்
இப்பிள்ளைகள்???

- கார்த்திகா

Pin It