ஊர்த்தலைவர் ஆகவிரும்பும்
யாராக இருப்பினும்
வரகூர் நாராயணசாமி
வரலாற்றைப் படிக்கனும்! - ஊர்
பதவிதனைத் தேடாமல்
பகட்டுதனை நாடாமல்
பகைவருக்கும் ஓடாமல்
மக்கள்பணி செய்தவர்! - ஊர்
பதவியிவரைத் தேடிவர
பகைவருமே பணிந்துவர
நேர்வழியில் தலைவராகி
ஊர்உயர உழைத்தவர்! - ஊர்
ஊரினிலே தீவிபத்து
உண்டானக் காலத்திலே
நேரினிலே அண்ணாவிடம்
நிதிகேட்டுப் பெற்றவர்! - ஊர்
வீடும்இன்றி வேதனையில்
வீதியிலே நின்றஅவர்
வந்தநிதியை வீடுகட்ட
வாரித்தந்த பாரிஅவர்! - ஊர்
சரியாய் இளமையிலே
தன்பயணம் தொடங்கினார்
பெரியார் ஆனைமுத்து
தொண்டராய் விளங்கினார்! - ஊர்
தாழ்த்தப்பட்ட மக்களிடம்
தயங்காது பழகினார்
சுயநலக் காரரிடம்
மயங்கிடாது விலகினார்! - ஊர்
மா.பெ.பொ. கட்சியிலே
மாவட்டச் செயலாளர்
மாநாடு கூட்டம்போட
நிதிதிரட்டும் செயல்வீரர்! - ஊர்
ஊர்ப்பணி செய்துகொண்டே
நாட்டுப்பணி தொடர்ந்தார்
தொண்டுசெய்யத் துடிக்குமவர்
தொண்ணூறு அகவைகடந்தார்! - ஊர்
வரகூர் மக்களெல்லாம்
வாழ்த்தும் தலைவராவார்
நாராயணசாமி மட்டும்
நாட்டுமக்கள் தொண்டராவார்! - ஊர்
- கவிஞர் அறிவுமழை