29-01-09 வியாழக்கிழமை நண்பகல் நேரம், நண்பர் ஒருவரைக் காண ஒரு இதழ் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். தகவல் தந்து காத்திருந்தபோது, நண்பர் உள்ளே இல்லை என்று தகவல் வந்தது. வரவேற்பில் இருந்த பெண்மணி அவர் எங்கோ வெளியில் சென்றிருப்பதாகக் கூறி அவரோடு தொலைபேசி தொடர்பு கொண்டு கேட்டதில் நண்பர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சென்றிருப்பதாகச் சொன்னார்.
சரி என்று புறப்பட்டவன் வெளியே வந்து மருத்துவமனை என்பதால் யாருக்கோ உடல்நலம் சரியில்லை போல, மரியாதை நிமித்தம் விசாரித்து விடலாம் என்று தொலைபேச, சாலைப் போக்குவரத்து இரைச்சலில் நண்பர் பேசியது சரியாய் காதில் விழாமல் ஒலி விட்டு விட்டு வர யாரோ இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்று மட்டும் அறிய முடிந்தது. யாராவது நண்பர்கள், உறவினர்களாக இருக்கலாம், “பாவம், என்னே இந்தக் காலத்து இளைஞர்கள். இப்படியெல்லாம் இளம் வயதிலேயே உயிரை மாய்த்துக் கொள்கிறார்களே” என்று நாட்டில் நடக்கும் எத்தனையோ நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்பதாகக் கருதி பிற பணிகளை முடித்துக் கொண்டு ஊர் திரும்பி விட்டேன்.
இரவு உணவுக்குப்பின் வழக்கம் போல தொலைக்காட்சியைத் திறந்து செய்தியைப் பார்க்க ஈழப் பிரச்சினைக்காக இளைஞர் தீக்குளிப்பு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மரணம் என்பதாக சுழல்நாடாச் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. “மதியம் கேள்விப்பட்ட செய்தி கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, இதுவும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, இரண்டும் ஒன்றேதானோ, மதியம் சரியாகக் காதில் விழாததால் நாம்தான் கவனிக்கத் தவறியிருப்போமோ” என்று நண்பருக்குத் தொலைபேசி போட்டு கேட்க இரண்டும் ஒன்றேதான் என்று அறிந்து மனது அதிர்ந்தது. அப்போது முதலில் “அடடா இளைஞர் உணர்ச்சி வயப்பட்டு இப்படி செய்துக் கொண்டு விட்டாரே என்ன கொடுமை” என்கிற ஆதங்கமும் பரிதாப உணர்ச்சியுமே ஏற்பட்டது.
பிறகு, நண்பர் சொன்ன தகவல்கள், மறுநாள் நாளேடுகளில் வந்துள்ள செய்திகள் ஆகியவற்றை அறிந்த போதுதான் இளைஞர் முத்துக்குமார் உணர்ச்சி வசப்பட்டெல்லாம் இந்த முடிவை எடுக்கவில்லை. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு மிகத் தெளிவாக திட்டமிட்டேதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பது தெரிந்தது.
அதாவது இப்படி ஒரு குரூர இனப் படுகொலை, தமிழர் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தில்லி அசைந்து கொடுக்காமல் இருக்கிறதே, அதற்கு தமிழகத்தில் எழுச்சிமிகு நடவடிக்கைகள் மேற்கொண்டு தில்லியை அச்சுறுத்தி வழிக்குக் கொண்டுவருமளவுக்கு தீரமிகு போராட்டங்கள் எதையும் நடத்தாமல் தமிழகத் தலைவர்கள் சும்மா இப்படி வெறும் சம்பிரதாயமான போராட்டங்களையே நடத்திக் கொண்டிருக்கிறார்களே, என்று மனம் குமைந்து குமைந்து இந்த நிலையை மாற்றி தமிழகத்தில் ஒரு உத்வேகத்தை புத்தெழுச்சியை உருவாக்க என்ன செய்யலாம் என்றெல்லாம் தீர யோசித்துத்தான் இந்த முடிவுக்கு தன் உடலையே தீக்கிரையாக்கிக் கொண்டு தமிழகத்தைக் கிளர்ந்தெழ வைக்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.
ஆனாலும் ஆத்திரம் கொப்பளிக்கும் அவரது இறுதிக் கடிதத்தில், “என் உடலை காவல் துறை அடக்கம் செய்து விட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைத் கைப்பற்றி, அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப் படுத்துங்கள்” என்று தெளிவாகக் குறிப்பிட்டு, அதாவது என்ன நடைபெற வேண்டும், எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாகத் திட்டமிட்டு, தமிழ்நாட்டில் ஒரு விளைவை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கோடு திட்டமிட்டுத்தான் தன் உயிரை ஈகம் செய்திருக்கிறார் முத்துக்குமார்.
பார்க்கப் போனால் அவரது இந்த முடிவுக்கு நாமனைவருமே காரண மானவர்கள்தான். குற்றவாளிகள்தான். என்று தோன்றுகிறது. சற்று யோசித்துப் பாருங்கள். சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து தமிழகத்தில் புது உத்வேகமும், எழுச்சியும் கொண்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கன் நாளும் பெருகி தமிழகத்தின் அனைத்து பிரிவு மக்களும் அவரவர் வாய்ப்புக்கும் சக்திக்கும் ஏற்ப எண்ணற்ற பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும், உணர்வாளர்களும் போராட்டங்கள் நடத்தியதுடன் தமிழக சட்ட மன்றமே ஒரு மனதாக இருமுறை தீர்மானம் நிறைவேற்றி போரை நிறுத்து என்று கோரியுள்ளன. இந்திய அரசு போரை நிறுத்தாததோடு மட்டுமல்ல, தொடர்ந்து இலங்கை ராணுவத்துக்கு தளவாடங்கள் அனுப்பி உதவி, போர்ப் பயிற்சிகளையும் படையாள்களையும் தந்து நேரடியாகவே தமிழின அழிப்புப் போரை நடத்தி வருகிறது என்றால், இதை மறைத்து தமிழர்களுக்கு சால்ஜாப்பு காட்டி வருகிறது என்றால், உணர்வுள்ள எந்த மனிதனுக்குத்தான் கோபம், வேகம், ஆத்திரம் வராது.
தில்லி அரசின் இந்த ஏமாற்று வேலைக்கு, எதேச்சாதிகாரத் தனத்துக்கு யார் காரணம் ? தில்லிக்கு காவடி தூக்கி, அவர்களுக்கு கங்காணி வேலை பார்த்து தமிழினத் துரோகம் செய்யும் ஒரு சில தமிழகத் தலைவர்கள்தானே. தமிழக மக்கள் மேல் குறை சொல்ல முடியுமா? அவர்கள் உணர்வோடும், எழுச்சி யோடும் தான் இருக்கிறார்கள். ஆனால் அந்த உணர்வையும், எழுச்சியையும் ஒருங்கிணைத்து அதற்கு ஓர் வடிவம் தந்து வழி நடத்தும் தலைவர்கள்தான் தமிழகத்தில் இல்லை. அவரவரும் அவர் சார்ந்த கூட்டணி அரசியலில் சிக்கி, அவரவர் வரம்புக்குட்பட்டு, அடக்க மாகவேதான் ஈழ ஆதரவுப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால்தான் இத்தனை போராட்டங்கள் நடத்தியும் தில்லி அரசு அசைந்து கொடுக்காமல் இருக்கிறது. இதுதான் முத்துக்குமாரை கோபமடைய, ஆவேசமடையச் செய்திருக்கிறது.
இந்த உணர்வு முத்துக்குமாருக்கு மட்டுமல்ல, ஈழம் பற்றிய அக்கறையோடு சிந்திக்கிற ஒவ்வொரு தமிழனுக்கும்தான் இருக்கிறது. மற்றவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் தவிப்பிலும், குமுறலிலும் இருந்திருக்கிறார்கள். ஆனால் முத்துக்குமார் இது குறித்து வேறு விதமாகச் சிந்தித்திருக்கிறார். தன்னை, தன் உயிரை, உடலை ஈகம் செய்தாவது தமிழகத்தில் ஓர் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். தமிழகத் தலைவர்களின் உணர்வுகளில் ஓர் உறுத்தலை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். அந்த முடிவுதான் தீக்குளிப்பாக வெளிப்பட்டிருக்கிறது.
நிகழ்வன்று காலை, மக்கள் திரண்டிருந்த சாஸ்திரி பவன் கட்டிடத்தின் எதிரே காலை 10-30 மணிவாக்கில் வந்த அவர், தன் இறுதி வேண்டுகோள் கடிதத்தின் ஒளிப்பட நகலை மக்களிடம் வினியோகிக்க, இது அவ்வப்போது இயக்க வாதிகளால் வழங்கப்படும் துண்டறிக்கைதானே என்று மக்கள் சாதாரணமாக அதை வாங்கி, ஈடுபாடின்றி புரட்ட, அப்புறம்தான் அவர்களுக்கு இதன் விபரீதம் புரிந்திருக்கிறது. துண்டறிக்கையைத் தந்த முத்துக்குமார் சட்டென்று யாரும் எதிர்பாராத விதமாக கையோடு கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடம்பிலே ஊற்றிக் கொண்டு உடனே தீயும் வைத்துக் கொண்டு, “ஈழ மக்களுக்கு தீர்வு காணவேண்டும். என் தமிழினம் இனியும் வதைபடக் கூடாது” என்று கதறியபடியே துடித்திருக்கிறார்.
சுற்றியிருந்த மக்கள் பதறி என்ன செய்வதென்று புரியாமல் திகைக்க, அரசு அலுவலக காவல் பணியாளர்களும், காவல் துறையும் தீயை அணைத்து அவரைக் காப்பாற்ற முயல முடியாமல் போகிறது. 90 விழுக்காட்டுத் தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விடுகிறார்.
நடந்த நிகழ்ச்சியின் விவரங்கள் அனைத்தும் நாளேடுகளிலும், வார ஏடுகளிலும் விரிவாக வெளி வந்துள்ளன. முத்துக்குமாரின் மறைவுக்குப் பிந்தைய நிகழ்வுகள் அவர் எந்த நோக்கோடு, தன் மரணம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என் று விரும்பினாரோ அதை நிறைவேற்றுவதாகவே அமைந்தது.
முத்துக்குமாரின் ஈகச் செய்தி அறிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தமிழின உணர்வாளர்களும், பெரியாரிய, மார்க்சிய, லெனினியச் சிந்தனையாளர்களும் அமைப்பு சார் தோழர்களும், அணி அணியாகத் திரண்டு வந்து முத்துக்குமார் ஈகத்துக்கு வீரவணக்கம் செலுத்தினர். 29ஆம் நாள் உயிர் பிரிந்த முத்துக்குமாரின் உடல் அவர் குடியிருந்த கொளத்தூர் குமரன் நகர் பகுதியில் 30ஆம் நாளும் 31ஆம் நாளும் வீர வணக்க அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 31ஆம் நாள் அங்கிருந்த 13 கி.மீ. தொலைவில் உள்ள மூலக் கொத்தளம் இடுகாட்டில், மொழிப்போர் ஈகியர் நடராசன், தாளமுத்து மற்றும் தர்மாம்பாள் ஆகியோர் நினைவிடம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
பிற்பகல் 3 மணியளவில் தொடங்கிய இறுதி ஊர்வலம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வந்திருந்த பல்வேறு கட்சி, அமைப்பு சார்ந்த மக்களும் பல்லாயிரக் கணக்கில் கலந்து கொள்ள எழுச்சியோடு புறப்பட்டது. வழி நெடுகிலும் தெருக்களில், முத்துக் குமாரின் உடலைக் காணப் பொதுமக்கள் வீட்டு முகப்புகளிலும், மாடி முகப்புகளிலும் மொட்டை மாடிகளிலுமாக திரண்டிருந்தனர். சில இல்லங்களில் மெழுகுவர்த்தியைக் கொளுத்தை வைத்து காத்திருந்தனர். இறுதி ஊர்வலம் மிக மெதுவாக நகர்ந்தது. மணிக் கணக்கில் காத்திருந்த மக்கள் ஆங்காங்கே முத்துக் குமாரின் உடலை நிறுத்தி அஞ்சலி செலுத்த ஊர்வலம் இரவு 11 மணிவாக்கிலேயே மூலக் கொத்தளத்தை அடைய முடிந்தது.
இதற்கிடையில் ஈழச் சிக்கலினால் தமிழகத்தில் கொந்தளித்து எழுந்த மாணவர் போராட்டத்தைச் சிதைக்க தமிழக அரசு, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து விடுதிகளையும் மூடிவிட உத்தரவிட்ட செய்தி ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த மாணவர்களுக்குத் தெரிய வர, மாணவர்கள் முத்துக்குமாரின் சடலத்தை பேசின் மேம்பாலத்திலேயே வைத்து, தமிழக அரசு உத்தரவை திரும்பப் பெறாதவரை, முத்துக் குமாரின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம், யாரும் அடக்கம் செய்யவும் விடமாட்டோம் என்று மறியலில் இறங்கத் தலைவர்கள் பெரும் பாடுபட்டு அவர்களைக் கட்டுப்படுத்திய பிறகே, ஒருவாறு பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்து, எரியூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊரே உறங்கும் நள்ளிரவில், ஈடுபாடும், எழுச்சியும் மிக்க மக்கள் உணர்ச்சிப் பெருக்கோடு “வீரவணக்கம், வீரவணக்கம், முத்துக்குமாருக்கு வீரவணக்கம்” என ஏகோபித்த குரலில் விண்ணதிர முழக்கமிட்டு வீர அஞ்சலி செலுத்த அவரது வாழ்க்கைப் பயணம் நிறைவுற்றது. அர்ப்பணிப்பு மிக்க அவரது வாழ்க்கைப் பயணம், இத்துடன் நிறை வுற்றதாகக் கொண்டாலும், அது இன்னொரு பயணத்தில் தொடக்கமாகவே அமைந்தது.
முதல் நாள் முத்துக்குமாரின் மறைவுச் செய்தி கேள்விப்பட்ட உடனேயே ஒரு பகுதி உணர்வாளர்கள் கொளத்தூர் நோக்கித் திரள, மறுநாள் பத்திரிகையில் வந்த அவரது புகைப்படத்தை வைத்து பல்வேறு பகுதி மக்களும் ஆங்காங்கே மாலை அணிவித்தும், வீர வணக்கத் துண்டறிக்கைகள் போட்டு வினியோகித் தும், சுவரொட்டி அடித்து ஒட்டியும், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். தமிழ் உணர்வாளர்களுக்கு உயில் போன்ற அவரது இறுதிக் கடிதத்தை பல்வேறு அமைப்புகளும், உணர்வாளர்களும் ஒளியச்சு செய்தும் நகல் எடுத்தும், குறு வெளியீடாகவும் அடுத்த நாள் இறுதி ஊர்வலத்தின் போதே வெளியிட்டு, வந் திருந்தவர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்கினர். அடுத்தடுத்து பலராலும் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியால் இக்குறு வெளியீடு மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டு வெளியாகியிருக்கும் என்று கருதலாம். இது முத்துக் குமாரின் நோக்கம். அன்னாரின் இறுதி இலட்சியம் ஈடேறுகிற திசையில் பயணம் தொடரும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது.
என்றாலும், இன்னொரு கருத்தையும் இத்துடன் சொல்ல வேண்டி யிருக்கிறது. ஈழ மக்களுக்கு ஆதரவாக உள்ள கட்சிகள் தமிழகத்தில் தனித் தனியாக போராடிக் கொண்டிருக்கின்றனவே என்கிற ஆதங்கம் தமிழக மக்களுக்கு நீண்ட காலமாக உண்டு. இந்த உணர்வுகளை ‘மண்மொழி’ இத ழிலும் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம். இந்த திசையில் ஒரு முயற்சி மேற் கொள்ளப் பட்டு முத்துக்குமாரின் மறைவுக்கு முன்தினம் 28-01-09 அன்று ஒரு கூட்டணிக்கான வித்து ஊன்றப்பட்டது. அது சென்னை தியாகராயர் அரங்கில் 31-01-09 அன்று முற்பகல் போராட்ட அறிவிப்புக் கூட்டம் நடத்தி முடித்தே, பிற்பகல் முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது.
ஆனால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான இந்தக் கூட்டமைப்பு “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்” என்கிற பெயரைத் தாங்கி 4-2-09 முழு அடைப்பு, 7-2-09 அன்று கருப்புக் கொடி ஊர்வலம் என்று நடத்தி முடித்து, 10-2-09 அன்று சென்னை அமைந்தகரைப் பகுதியிலும் ஒரு எழுச்சிக் கூட்டத்தை நடத்தி முடித்தது.
தற்போது 17-2-09 அன்று கன்னியாகுமரி முதல் சென்னை வரை மனித சங்கிலி, பிரச்சார இயக்கம், பொதுக் கூட்டம் என்று ஏற்கெனவே நடத்தி முடித்த பழைய போராட்ட வடிவங்களையே கைக்கொண்டு தன் வேலைத் திட்டங்களை அறிவித்துள்ளது. இதற்கிடையில் இ.த.பா.இ. போராட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள அவற்றைத் தணிக்க அல்லது திசை திருப்ப தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அனைவரும் அறிந்தவை.
இந்நிலையில் நமக்குத் தோன்றுவது, நாம் இதுவரை கடைப்பிடித்த போராட்ட வடிவங்களைச் சற்று ஒதுக்கி வைத்து, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பில் உள்ள கட்சிகளும், அணிகளும், உணர்வாளர்களும் ஆதரவாளர்களும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவுக்கு வருவோம்.
நாமனைவரும் நமது கட்சி அமைப்புகளுடன் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் ஈழ மக்களது ஆதரவான போராட்டத்திற்கு ஒருவரை அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்து, குறைந்தபட்சம் ஒரு ஐந்து லட்சம் பேரை அணி திரட்டி, சென்னை அண்ணாசாலை சந்திப்பிலோ, கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலோ, சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் பகுதியிலோ திரண்டு, ‘தில்லி அரசே எங்கள் கோரிக்கைக்கு ஒரு பதில் சொல்லாத வரை, உரிய நடவடிக்கை மேற்கொள்ளாதவரை இந்த இடத்தை விட்டு அசையமாட்டோம் என்று இரண்டு நாளோ மூன்று நாளோ ஒரு வாரமோ, பத்து நாளோ எத்தனை நாளானாலும் சரி இந்த இடத்தைவிட்டு அசைய மாட்டோம் என ஒரு முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுப்போம். இப்படி ஒரு முடிவெடுத்து, இரண்டு நாள் முற்றுகை யிட்டால் போதும். பிரச்சினை ஓரளவுக்கு ஒரு முடிவுக்கு வர வாய்ப்பிருக்கும்.
இப்படி முற்றுகையிட்டால் அரசு சும்மாயிருக்குமா, அடக்குமுறைகளை ஏவாதா என்று சிலர் நினைக்கலாம். நியாயம். திரண்டிருக்கும் மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தட்டும், குதிரைப் படையை ஏவியும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் கலைக்க முயலட்டும். துப்பாக்கிச்சூடே நடத்தினாலும் நடத்தட்டும். இப்படி நடந்தால், ஆட்சியாளர்கள் தங்கள் தன்னலத்துக்காக தங்கள் சதித்திட்டங்களை மூடி மறைத்து புனைவு வேடமிட்டு மக்களை மயக்கித் திரியும் பல சேதிகள் அம்பலத்துக்கு வரும்.
முதலாவதாக உண்மையாக ஈழ மக்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள் யார், போலிகள் யார் என்பது மெய்ப்பிக்கப் படும். இப்படி அடக்கு முறையை ஏவினால் தமிழக ஆட்சியாளர்களின், தி.மு.க.வின் ஈழ ஆதரவு அரிதார முகம் கலைக்கப்பட்டு அவர்களின் உண்மை முகம் வெளிப்படும். அவர்களின் எதிh நிலைத் தயாரிப்பான இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவைபின் போலிக் கவசமும் கிழிபடும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க அமைப்பிலேயே எத்தனை பேர் உறுதியாக நிற்கிறார்கள் எத்தனை பேர் நழுவிகிறார்கள்என்பதும் தெரியவரும்.
இப்படி ஏதாவது ஒரு சோதனைமிகு களப்போராட்டம் நடந்தால்தான் உண்மை எது, போலி எது என்பது தெரியவரும். ஈழச் சிக்கலுக்கும் ஒரு விடிவு கிட்டும். இது ஈழச் சிக்கலுக்கு மட்டுமல்ல, தமிழகச் சிக்கலுக்கும்தான்.
இப்படி ஒரு போராட்டம் நடந்தால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதற்கான எதிர்வினை வெளிப்படும். மக்கள் எதிரிகள் யார், போலிகள் யார், பம்மாத்துக்காரர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தக்கப் பாடம் புகட்டுவார்கள். தேர்தல் அரசியலில் நின்றே இதை சாதிக்கமுடியும். தமிழகத் தலைவர்கள் இதுகுறித்து சிந்திப்பார்களா?
- இராசேந்திர சோழன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
தோழர் முத்துக்குமார் - கொதிப்பில் விளைந்த ஈகம்
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: கட்டுரைகள்