‘இலங்கை இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம்’ உருவானால் - அது ஈழப் பிரச்சினையில் சமரசத்தைக் குலைப்பதே ஆகும்! எப்படி? தமிழர்களின் சிந்தனைக்கு இதோ, சில முக்கிய தகவல்கள்.

1) ஈழத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு - இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே, சமரசப் பேச்சு வார்த்தைகளைத் துவக்கிடும் முயற்சியில் ஈடுபட்ட நாடு நார்வே. பேச்சு வார்த்தைகள் தடைபட்டாலும்கூட, போர் நிறுத்தம் நீடிக்கிறது. நார்வே நாடு - சமரச முயற்சிகளில் ஈடுபட்ட போது, இந்தப் பிரச்சினையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், கண்களை இறுக மூடிக் கொண்டு, ஒதுங்கி நின்ற நாடு இந்தியா.

2) சமரசப் பேச்சு வார்த்தைக்குத் தயார் என்று முன்வந்த விடுதலைப் புலிகள் தாமாகவே முன் வந்து, முதலில் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். அதற்குப் பிறகு, சமரசப் பேச்சு வார்த்தைகள் துவங்கின.

3) ரணில் விக்கிரமசிங்கே அரசு சமரச முயற்சியில் தீவிரம் காட்டியது. ஆனால் அதிபராக இருந்த சந்திரிகா, சமரச முயற்சிக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் - நாடாளுமன்றத்தையே கலைத்தார். முப்படைகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். மீண்டும் தேர்தலை திணித்தார்; ரணில் ஆட்சி தோற்றது; சிங்கள தீவிரவாதிகள் ஆதரவுடன் சந்திரிகா பிரதமர் ஆனார்.

4) சமரசத் திட்டம் உருவாக்கப்பட்டால் - ஈழத் தமிழர் பகுதியில் விடுதலைப்புலிகள் அதிகாரப் பூர்வமாக ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்பதால், சமரசத் திட்டத்தையே குலைக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த இந்தியாவின் பார்ப்பன அதிகாரவர்க்கமும், பார்ப்பன ஏடுகளும், அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தன.

5) சந்திரிகா மீண்டும் பதவிக்கு வந்தவுடன், இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் துவங்கின. அதாவது - இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதம் - ராணுவ உதவிகளை வழங்குவது தான் இந்த ஒப்பந்தம். இந்திய ஆளும் பார்ப்பன அதிகாரவர்க்கம் பச்சைக் கொடி காட்டியது. சந்திரிகாவும் இந்தியாவுக்கு வந்து போனார்.

6) இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை சந்தித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. இந்தப் புதிய ஒப்பந்தம் சமரச முயற்சிகளை சீர்குலைத்து, மீண்டும் போர்ச் சூழலை உருவாக்கிவிடும் என்று எடுத்துரைத்தார்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் ஈடுபாடுள்ள தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகளும், இந்த ஒப்பந்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தன. மூவரும் அப்படி ஒரு ஒப்பந்தம் வராது என்று உறுதி அளித்தனர். ஆனாலும் உறுதி மொழிக்கு மாறாக இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் சியாம்சரண் அண்மையில் இலங்கைக்குச் சென்று, சந்திரிகாவையும், அதிகாரிகளையும் சந்தித்து ஒப்பந்தம் குறித்துப் பேசினார். “இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்பு” என்று பேட்டி அளித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமானத் தளத்தை “இந்தியா தனது செலவில் புதுப்பித்துத் தரும்” என்றார்.

7) பலாலி; அது விமானத்தளம் மட்டுமல்ல, இலங்கையின் முக்கியமான ராணுவத் தளம்! பலாலி விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட விமானப் படை விமானங்கள், தமிழர்கள் வாழும் பகுதிகளில் குண்டுகளை வீசி, சாகடித்த ரத்தக்கறை படிந்த வரலாறுகளை எவருமே மறக்க முடியாது. அதே பலாலியை தனது செலவில் புதுப்பித்துத் தரப் போகிறதாம், இந்திய அரசு.

8) இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2004-2005-ம் ஆண்டுக்கான அறிக்கையில் - விடுதலைப்புலிகள் தமிழகத்தில் ஊடுருவி, ஆபத்துகளை உருவாக்கி வருவதாக கூறுகிறது. அதற்கு முன்பு வாஜ்பாய் ஆட்சியில் வெளியிடப்பட்ட இதே உள்துறை அமைச்சக அறிக்கையில், விடுதலைப் புலிகள் பற்றிய குறிப்பே இல்லை. அப்படியானால், மன்மோகன்சிங் ஆட்சிக்கு வந்த பிறகு, விடுதலைப் புலிகளால் ஆபத்து வந்து விட்டதா? அப்படி ஒரு கற்பனைக் கதையை தயாரிக்கிறது, பார்ப்பன அதிகார வர்க்கம். தமிழக முதல்வர் ஜெயலலிதா, உள் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் உண்மையில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

9) பார்ப்பனர் சுப்ரமணியசாமி - ‘இந்து’ ஆசிரியர் பார்ப்பனர் ராம் மற்றும் சிங்கள அமைச்சர்கள் சேர்ந்து கொண்டு டெல்லியில் மாநாடு போட்டு, விடுதலைப்புலிகளுடன் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது என்று மத்திய அரசை மிரட்டினர்.

10) ஒப்பந்தம் எதையும் போட மாட்டோம் என்று உறுதியளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங், ஜூன் 10 ம் தேதி கொழும்பு நகரில் அளித்த பேட்டியில் திடீரென தனது குரலை மாற்றிக் கொண்டு, இலங்கை-இந்திய இராணுவ ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்று வருகிறது என்று கூறியிருக்கிறார்.

11) விடுதலைப் புலிகளிடம் இரண்டு விமானங்கள் இருக்கிறது என்று, பார்ப்பன ஊடகங்கள் மிகைப்படுத்தி எழுதுகின்றன. இதனால், இந்தியாவை விடுதலைப்புலிகள் தாக்கும் என்று வாய் கூசாமல் பொய் பேசுகிறார்கள். ஆனால் 1998 ம் ஆண்டிலேயே புலிகள் - விமான எதிர்ப்புப் படையணியை உருவாக்கி, அதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்கள்.

1995-ல் தமிழர்கள் மீது குண்டு வீசிய இரண்டு ‘வ்ரோ’ விமானங்களை, விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியதும், 1998 இல் போரில் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவிடங்களில் விமானம் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தியதையும், விடுதலைப்புலிகள் தங்கள் வானொலி வழியாகவும், இணையத் தளங்கள் வழியாகவும் உலகுக்கு பறைசாற்றினர். கடந்த 7 ஆண்டுகளாக விமானங்களை வைத்திருக்கும் விடுதலைப்புலிகள், இலங்கை அரசு மீதோ, இந்தியா மீதோ, விமானத் தாக்குதல் நடத்தினார்களா? இல்லையே!

12) விடுதலைப்புலிகள் ‘கொரில்லா படை’ என்ற நிலையிலிருந்து மாறி மரபுவழி ராணுவத்தை உருவாக்கி விட்டார்கள். எனவே அவர்களிடம், கப்பல் படை, விமானப்படை அணிகள் இருக்கின்றன. சம ராணுவ பலம் கொண்ட மரபு வழி ராணுவத்தை விடுதலைப்புலிகள் உருவாக்கியதால்தான், அவர்களுடன் சமநிலையில் அமர்ந்து பேசுவதற்கு இலங்கை அரசு முன் வந்தது. இப்போது அமுலில் உள்ள போர் நிறுத்தத்துக்கு அடிப்படைக் காரணமே விடுதலைப்புலிகள், மரபு வழி ராணுவத்தை உருவாக்கி, இலங்கை ராணுவத்தோடு சம நிலையில் இருப்பதுதான்.

13) இந்த ராணுவச் சமநிலையை சீர் குலைத்துவிட்டால், பேச்சுவார்த்தையும் சீர்குலைந்து, மீண்டும் போர் வெடிக்கும் ஆபத்துகள் உருவாகிவிடும். சந்திரிகாவும் - இந்தியாவின் பார்ப்பன ஆளும் வர்க்கமும் அதைத்தான் எதிர்பார்க்கின்றன. ராணுவச் சமநிலையைக் குலைப்பதற்காக, இலங்கை ராணுவத்துக்கு கூடுதலாக ராணுவ வலிமையைக் கொண்டு வந்து சேர்ப்பதுதான், இந்திய-இலங்கை ராணுவ ஒப்பந்தம்.

14) ஆறு இருக்கைகள் கொண்ட இரண்டு விமானங்கள் விடுதலைப் புலிகளிடம் இருப்பதைப் படமெடுத்துள்ளதாக, இலங்கை விமானப்படை அதிகாரிகளே கூறுகிறார்கள். இந்த விமானங்களைக் கொண்டுதான், இந்தியா மீது, விடுதலைப்புலிகள் தாக்கப் போவதாக, பார்ப்பன ஏடுகள் எழுதுகின்றன. என்ன கேலிக் கூத்து? அதுவும் சந்திரிகா இந்தியாவுக்கு வந்துள்ள நேரம் பார்த்து, ‘இந்தியா டுடே’ உட்பட பல பார்ப்பன ஏடுகள், விடுதலைப்புலிகள் விமானப்படை புதிதாக உருவாக்கியிருப்பதாகவும், எந்த நேரத்திலும், இந்தியாவை தாக்கலாம் என்பது போலவும், பீதியைக் கிளப்பும் செய்திகளைத் திட்டமிட்டு பரப்பின. இலங்கையோடு ராணுவ ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கான அழுத்தங்களை உருவாக்குவதே, இந்த ‘கற்பனை’ செய்திகளின் நோக்கம்!

15) சமரச முயற்சிகளுக்கு உதவ வேண்டிய இந்தியா, சமரச முயற்சிகளைக் குலைப்பதற்கு துணைப் போகலாமா? விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தைக்கு உடன்பட மறுக்கிறார்கள் என்று தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்த இந்திய அரசும், பார்ப்பன சக்திகளும், சமரச முயற்சிக்கு உதவிட முன்வரும் விடுதலைப்புலிகள் மீது மீண்டும் போரைத் திணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாமா? சிந்தியுங்கள்!

ஈழத் தமிழர்களின் அமைதியான வாழ்வுரிமையைவிட - விடுதலைப் புலிகள் அதிகாரம் பெற்று விடாமல், அவர்களை அழித்தொழிப்பதிலேயே இவர்கள் துடிப்பு காட்டுகிறார்கள். ஆசியாவின் மிகப்பெரும் நாடுகளில் ஒன்றான இந்தியா, இப்படிப்பட்ட ஒரு மோசமான அணுகுமுறையைப் பின்பற்றலாமா?

இந்திய-இலங்கை ஒப்பந்தம் சமரச முயற்சிகளுக்கு வைக்கப்படும் வேட்டு.

ஈழத் தமிழர்கள் மீது மீண்டும் போரைத் தணிக்கத் துடிக்கும் சிங்கள வெறியர்களும், பார்ப்பன அதிகார வர்க்கமும் இணைந்து நடந்தும் சதி.

இந்தத் துரோக ஒப்பந்தத்தைத் தடுத்து நிறுத்த தமிழர்களே! திரண்டெழுவீர்!

குறிப்பு: 28.6.2005 அன்று சென்னையில் தொல். திருமாவளவன், மருத்துவர் இராமதாசு தலைமையில் நடந்த ‘உண்ணாவிரத’ கிளர்ச்சியில் கழக சார்பில் வழங்கப்பட்ட துண்டறிக்கை இது

Pin It