கோவை ஆவராம்பாளையத்தில் கழகத்தின் சார்பில் பெரியாரின் 131வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 17.9.2009 அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசியதாவது:

இலங்கையில் சித்திரவதை முகாம்களில் அடைபட்டு உணவின்றி, மருத்துவ மற்றும் கல்வி இன்றி வாடும் மூன்றரை லட்சம் தமிழ் மக்களை விடுவிக்க தமிழக முழுமையும் ஒன்று திரண்டு ஒரே குரலில் போராட வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டது, 1951 இல். அது தந்தை பெரியாரால் இட ஒதுக்கீடு சம்பந்தமாக கொண்டு வரப்பட்டது. அப்போது பெரியார் எந்த அரசியல் பதவிகளிலும் இல்லை. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்காரர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள். இரண்டே கம்யூனிஸ்டுகள் தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்களும் சிறையில் இருந்தார்கள். அப்போது இடஒதுக்கீட்டிற்கு எதிரான உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக பெரியார் தமிழகத்தையே தட்டி எழுப்பினார். டெல்லி ஆடியது. முதல் அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

தற்போது நாற்பதும் நாங்கள்தான்; மத்தியிலும் நாங்கள்தான்; மாநிலத்திலும் நாங்கள்தான் என்பவர்களால் இலங்கையில் சித்திரவதை முகாம்களில் வாடும் தமிழர்களை விடுவிக்க ஒன்றும் செய்ய முடியவில்லை. அதைப் பற்றி பேசுகிறவர்களைத்தான் சிறையில் தள்ளுகிறார்கள். பேசுகிறவர்களைக் கண்டு அஞ்சுகிற அரசாக தற்போதைய அரசுகள் மாறிவிட்டன. எலின் சாண்டர் என்ற அமெரிக்கப் பெண்மணி. அவர், யூத இனத்தைச் சேர்ந்தவர். அவர் இலங்கையில் சுனாமி தாக்கப்பட்ட போதும் புயல் தாக்கப்பட்டபோதும், ராஜபக்சே அரசு தமிழர்களை கொன்று குவித்தபோதும் அங்கிருந்து மீட்புப் பணிகளை செய்தவர். அவர் இலங்கையில் நடைபெறுவது யுத்தம் அல்ல, தீவிரவாத ஒழிப்பு அல்ல, இன அழிப்பு. கடந்த ஐம்பதாண்டுகளாக இலங்கையில் இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ் பெண்களின் கர்ப்பப் பைகள் அகற்றப்படுகின்றன. இந்தியா இந்த இன அழிப்புக்கு உதவிய குற்றவாளி என்று குற்றம் சாட்டுகிறார்.

அவர் இந்தியா வந்து தமிழ் மக்களைச் சந்தித்து இந்தக் கொடுமைகளை, தான் நேரில் கண்டவற்றை எடுத்துச் சொல்ல விசா கேட்டார். இந்தியா அவருக்கான விசாவை வழங்க மறுத்துவிட்டது. இலங்கையின் ஒரு பத்திரிகை ஆசிரியர் திசநாயகம். அவர் இலங்கையில் நடப்பது புத்த வழியும் அல்ல; மனித வழியும் அல்ல என்று தலையங்கம் எழுதினார். அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை இலங்கை அரசு வழங்கியுள்ளது. தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தால் எழுதினால் சிறையுண்டு என்றால் பொங்கி எழ வேண்டாமா? பெரியாரின் சொத்துக்காக சிலர் பிறந்திருக்கிறார்கள், பெரியாரின் கொள்கைக்காக சிலர் பிறந்திருக்கிறார்கள், பெரியாரின் கொள்கை வாரிசுகளும் நாமும் இணைந்து நிற்கவில்லை என்றால் சமூகத்தில் மூட நம்பிக்கையை ஒழிக்க முடியாது, நாம் இருவருமே பதவிக்காக பணிகிறவர்களும் அல்ல; சிறைக்காக அஞ்சுகிறவர்களும் அல்ல.

சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களில் டாக்டர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களைக்கூட தமிழர்களுக்கு உதவி செய்யவிடாமல் ராஜ பக்சே அரசு தடுக்கிறது. அடுத்த தேர்தலுக்கு எது கூட்டணி என்று கணக்குப் போட்டுக் கொண்டு இருந்தால் அடுத்த தலைமுறை நம்மை மன்னிக்காது. கறிச் சோறுக்கும் கால் ரூபாய்க்கும் காலில் விழும் மக்களாக, மக்களை மாற்ற முயற்சிக்கும் செயலை முறியடிக்க வேண்டும். அறிவு விழிப்பை ஏற்படுத்த நாம் கடுமையாக போராடவேண்டும். இவ்வாறு தா. பாண்டியன் பேசினார்.

இந்தக் கூட்டத்திற்கு நா.விஜயகுமார் தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம், துணைச் செயலாளர் சு.பழனிச்சாமி, ஏ.சி. செல்வராஜ், பி. முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Pin It