அலுவலக பாரங்களுக்கிடையே
வீட்டின் மூலையொடுங்கிய
வேளை - சிரிப்பை
நுழைவுச்சீட்டாகக் காட்டி
பிரவேசிக்கிறான் - என் மகன்

இமைக்கும் நொடியின்
இருட்டில் - சட்டைப் பேனா
மூடியைப் பிடுங்கி
வாய்க்கு லாவகமாக்கி
ஊதி ஊதி
இசைஞனின் தோரணை காட்டி
மகிழ்கிறான்..

விவாதிக்கப்பட வேண்டிய
அறிக்கைக் காகிதங்களில்
துடுப்பில்லா படகு செய்து
மடிக்கணினியில் தோன்றும்
திரைக் கடலில் - கப்பலோட்ட
மாலுமியாய் புறப்பட்டு
நிற்கிறான்..

கைபேசிக்கு உயிரூட்டி
தொடுதிரைக் கோலமிட்டு
வலைத்தளத்தின் கதவு திறந்து
ஓவிய உயிரி -
டோராவின் நிழல் பிடித்து
சுயாதீனப் பயணியாய்
நடக்கிறான்..

பயணக் களைப்பின்
அமர்தலில் - சூடில்லை
என ஒதுக்கப்பட்ட காப்பியை
தேனுண்ணும் ரசனையோடு
ருசித்து உறுஞ்சிவிட்டு
இரட்டைக் கை டாட்டாக்களோடு
சிறகடித்துப் பறக்கிறான்..

டிஜிட்டல் பண வேட்டைக்கு -
தூர மின்னலின் வெளிச்சத்தை
நம்பிப் பயணிக்கும்
குடும்பத் தலைவர்களின்
காலடியை சுற்றும்
மின்மினி வெளிச்சம்
மழலைகளின் - இந்த
மின்னல் விளையாட்டு..

- த. கமல் யாழி

Pin It