எது பற்றியும் கவலை இல்லாதது ஒரு காலம்
கிழமைகளற்று திரிந்ததெல்லாம்
தவமின்றி கிடைத்த வரம்
ஒரு நேர்கொண்ட வளைவில்
பார்த்து பார்த்து பெற்றோர்கள் செய்த கதவுகள்
அவனை திறந்து விட்டு விடுகின்றன
அல்லது உடைத்துக்கொண்டு வெளியேறி விடுகிறான்
வெறி கொண்டு வெளியேறிய அவன்
சுற்றும் வரை சுற்றித் திரிகிறான்
எல்லாம் சரியாக இருக்கிறதாக நம்புகிறான்
உலகமே தனக்காக சுழல்வதாக
சத்தியம் செய்கிறான்
உள்ளபடியே எல்லா மனிதர்களைப் போலவே
ஒரு புள்ளியில் தனித்தும் போகிறான்
அவன் சொல்லொணா மொழியில் பிறகு
தன்னையே தன்னிடமிருந்து ஒதுக்கிக் கொள்கிறான்
ஒரு கட்டத்தில் நின்று நிதானித்து
வேறு வழியின்றி எங்கு ஆரம்பித்தானோ
அங்கேயே அவன் மீண்டும் கூடடைய விரும்புகிறான்
ஆனால் காலம் கண்ணி வைத்திருக்கிறது
அவனே கூட்டின் கதவாக ஆகிறான்
அதன் பிறகு வாழ்வென்னும் சக்கரத்தின் வழியே
அவன் ஓர் இயந்திரமாகிறான்
அதுதான் நிரந்தரமும் என்கிறான்
மூடப்பட்ட பெருங்கதவுக்கு பின்
உலகம் வழக்கம் போல அவனையும்
ராட்டினம் சுற்றுகிறது
- கவிஜி