ஒவ்வொரு மாதமும்
ஒரு குறிப்பிட்ட நாட்கள்
காளபம் செய்கின்றன என் கருக்கூட்டுடன்..
உதிரங்களை வெளியேற்றும் சாக்கில்
என் உயிரைப் பிடுங்கி எறிகின்றன
முதுகுத் தண்டின் எலும்புகள்
முட்களைப் போல் குத்துகின்றன என்
கால்களின் நரம்புகள் இழுத்துக்கொண்டு
தரையில் ஊன்ற முடியாமல்
தள்ளாட்டம் போடுகின்றன
கண்ணீரை மென்றபடி
கலங்கியிருந்த அக்கணத்தில்
சூலத்தால் குத்தியது போல்
சுருக்கென்று வலி கொடுத்து
அடிவயிறும் அங்கே
தாகம் தீர்த்துக் கொண்டது
தன் பங்கிற்காய்...
பூப்படைந்ததாய்
அன்று
பூரிப்படைந்த நான்
புளங்காகிதம் அடைகிறேன்
என் நாட்காட்டி அட்டவணையும்
நகராமல் இருக்காதோ என்ற
நட்பாசையும் வருவதுண்டு
என்னதான் நடந்தாலும்
அடுக்களையும் அலுவலகமும்
அங்கீகரிக்கப் போவதில்லை
என் வலிகளை..
என்னுளிருந்து வெளியேறும்
உதிரங்கள் எனக்கு உத்திரவாதம் கொடுப்பதில்லை
உடை தொடாமல் கறை கொடாமல்
கடீரத்தைக் கடந்து செல்வேன் என்று
பார்த்தெவரேனும் பரிகாசம் செய்து விட்டால்??
நூற்றுக்கணக்கில் மாதங்கள் எனை இப்படித்தான்
நுகர்ந்து செல்கின்றன
இதோ!
ஏளனம் பார்வைகளை
மென்றபடி
என் கருப்பையின்
ஓய்வு நாளுக்காய்
களைப்புடன் காத்திருக்கிறேன்
நான்.....

- எஸ்தர்

Pin It