modi with cow

மனுநீதி சோழனின் ஆட்சியில்
மக்கள் மெலிந்து கிடக்கிறார்கள்
மாடுகள் செழித்துக் கிடக்கின்றன

மாடுகள்
திகட்டத் தின்றுவிட்டு
தினவெடுத்துத் திரிகின்றன வீதிகளில்

மக்களோ
தின்க சோறின்றி
தங்களுக்குள் அடித்து சாகக் கிடக்கிறார்கள்

மனிதர்கள் பூட்டிய ரதமேறி
மாடுகளின் நலன் பேண
நகர்வலம் போகிறான்
மனுநீதி சோழன்

மனிதர்களை மறந்து
மாடுகளின் தீனிக்காக
மடிப்பிச்சை ஏந்தி
உலக நாடுகளை
உலா வருகிறான்
மனுநீதி சோழன்

மேய்ச்சல் நிலத்து
தீனிகள் போதாதென்று
மேய விடப்படுகின்றன மாடுகள்
விளைநிலங்களிலும்

வேளாண்மையை விட்டு
விரட்டப்பட்டவனுக்கென்றே
காத்திருக்கிறது
நகர்புறத்து வளரும் கட்டிடங்கள்
மேஸ்த்திரியாய், கொத்தாளாக,
சித்தாளாக, காவலனாக மாறி
வயிறு கழுவிக் கொள்வதற்கு

மேய்ந்து அழித்தது போதாதென
மனிதர்களின் சதை மீது
மையல் கொள்கின்றன மாடுகள்

மனுநீதி சோழனும்
மனம் உவந்து
மனித உயிர்களை
மாடுகளுக்குப் பரிசளிக்கிறான்

மாடுகளின் ஏப்பத்தில்
மனிதர்களின் கூச்சல்கள்
மறைந்து போகின்றன

மாடுகளின் தயவில்
கன்னக்கோலில்
மனித இரத்தம் தோய்த்த
செங்கோல் கொண்டு
சிறப்போடு ஆளுகின்றான்
மனுநீதி சோழன்....

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.