Gita Press And The Making of Hindu India (2015) Akshaya Mukul.

Publisher - Harper collins

தமிழ்நாட்டில், புத்தகக்கண்காட்சிகள், தேர்ந்தெடுத்த சில உணவு விடுதிகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் ஆகியவற்றில் குறைந்த விலையில் விற்கப்படும் இந்துசமய நூல்கள் தற்போது கிடைக்கின்றன. நூலின் பக்க அளவும் தரமான அட்டைக்கட்டும் விலையுடன் தொடர்பின்றிக் காட்சி தருகின்றன.

akshaya mukul 291இந்நூல்களில் பிரம்மாண்டமான அளவில் இடம் பெறுவது உரையுடன் கூடிய ‘ஸ்ரீமத் பகவத்கீதை’. இது தமிழிலும் வெளிவந்துள்ளது. இதையடுத்து இந்து சமயம் சார்ந்த இலக்கியங்கள், புராணங்கள் ஆகியன இடம் பெறுகின்றன. இந்நூல் வரிசையில் இடம்பெறும் நூல்களை கோரக்பூர் நகரில் உள்ள ‘கீதா அச்சகம்’ என்ற பெயரிலான நிறுவனம் வெளியிடுகிறது. ‘கல்யாண்’ என்ற இதழையும் இந்நிறுவனம் வெளியிடுகிறது. இவ்விதழ் இந்திமொழியில் இரண்டு லட்சம் படிகளும், ஆங்கில மொழியில் ஒரு லட்சம் படிகளும் அச்சிடப்படுகிறது.

ஏப்ரல் 1955 ஆம் ஆண்டில் அப்போதைய இந்திய குடியரசுத்தலைவர் இராஜேந்திரபிரசாத், கீதா அச்சகத்திற்கு வருகை தந்தார். அவரது வருகையை ஒட்டி கீதா அச்சகம், தனது முப்பதாண்டு சாதனைகளைக் குறிப்பிடும் வகையில் துண்டுவெளியீடு ஒன்றை வெளியிட்டது. அதில் அவர்கள் வெளியிட்ட நூல்களின் விற்பனை தொடர்பான செய்திகள் இடம் பெற்றிருந்தன அது வருமாறு:

1.     கீதை         6.157 மில்லியன் படிகள்

2.     இராமாயணம்  2.08 மில்லியன் படிகள்

3.     இதர நூற்கள்  27.08 மில்லியன் படிகள்

                      (ஒரு மில்லியன் = 10 லட்சம்)

2014 பிப்ரவரியில் வெளியிட்ட குறிப்பில் 71.9 மில்லியன் படிகள் கீதை விற்பனையாகியுள்ளது. துளசிதாசரின் நூல்கள் 70 மில்லியன் படிகளும், புராணங்கள், உபநிசத்துகள், பழமையான நூற் படிகள், புனித நூல்கள் 19 மில்லியன் படிகளும் விற்பனையாகியுள்ளன. இலட்சிய இந்துப்பெண்கள், குழந்தைகளின் கடமைகள் குறித்து குறுநூல்களும், துண்டுவெளியீடுகளும் 94.8 மில்லியன் படிகள் இதுவரை விற்பனை ஆகியுள்ளன. இந்தியப் புராணங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கதைகள், சாதுக்களின் வாழ்க்கை வரலாறு, பக்தி பாடல்கள் என்பன 65 மில்லியன் படிகள் விற்பனையாகியுள்ளன.

இவ்வெளியீடுகளில் 739 தலைப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். இவையாவும் இந்தி சமஸ்கிருத மொழியில் வெளியாகி உள்ளன. இம்மொழிகளைத்தவிர தெலுங்கு, ஒரியா, ஆங்கிலம், வங்காளி, மராத்தி, கன்னடம், அஸ்ஸாமி, மலையாளம், பஞ்சாபி, உருது, நேப்பாளி மொழி வெளியீடுகள் 1990 இல் தொடங்கின. இன்றுவரை இரண்டு தலைப்புகளில்தான் இம்மொழியில் நூல்கள் வெளியாகியுள்ளன.

கீதை, இராமாயணம், மகாபாரதம், புராணங்கள், உபநிஷத்துக்கள் என்பனவற்றை வெளியிடுவதில் ஆர்வம்காட்டும் கீதா அச்சகம் வேதங்களை அச்சிடலைப் புறக்கணித்துள்ளது. வேதங்களின் மூலத்தையோ மொழிபெயர்ப்புகளையோ அச்சிட்டதில்லை. வேத வல்லுநர்கள் இல்லாமையே இதற்குக்காரணம் என்பது இதன் நிறுவனரின் கூற்றாகும்.

1983 வரை 5.7 மில்லியன் படிகள் ‘இராமசரித்திரமானஸ்’ என்ற பெயரிலான துளசிதாசரின் இராமாயணத்தை கீதா அச்சகம் அச்சிட்டுள்ளது. இதே ஆண்டில் இருமுறை ஒரு பதிப்புக்கு ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் இந்நூலை வெளியிட்டுள்ளது.

இந்து சமயம் சார்ந்த நூற்களை அச்சிட்டு வெளியிடும் நிறுவனமே கீதா அச்சகம் என்பதை இதுவரை பார்த்த செய்திகள் உணர்த்துகின்றன. எல்லா நிறுவனங்களுக்கும் ஒரு வரலாறு உண்டு என்பதன் அடிப்படையில் கீதா அச்சகத்துக்கும் ஒரு வரலாறு உண்டுதான். ஆனால் ‘மதம் அரசியலாகவும் அரசியல் மதமாகவும்’ மாறிப்போன இந்தியச் சூழலில் இந்நிறுவனத்தின் வரலாறு மதவாத அரசியலுடன் இணைந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் வரலாறு அரசியல் முக்கியத்துவம் உடையதாய் உள்ளது.

கீதா அச்சகத்தின் வரலாறையும், அதன் நிறுவனரின் வரலாறையும் ஆய்வுத் தலைப்புகளாகக் கொண்டு கோரக்பூர், அலகாபாத், காசி பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. இந்திய மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள் கீதா அச்சகத்தை ஆய்வுப் பொருளாகக் கொண்டு ஆய்வு நூல்கள் எழுதியுள்ளனர். இப்படைப்புகள் குறித்து உடன்பாடான முறையிலும் எதிர்மறையான முறையிலும் சில சுருக்கமான விமர்ச்சனங்களை முன்வைத்துவிட்டு இந்நூலாசிரியர் அக்சய முகல் இந்நூலை எழுதியுள்ளார். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டில் பத்திரிக்கையாளராகப் பணிபுரியும் இவர் பின்னைக்காலனிய இலக்கியத்தில் பயிற்சி உடையவர்.

வரலாற்றறிஞர்கள் வெண்டிடோனகர், ரோகித்அமின் ஆகியோரின் ஊக்குவிப்புடனும் ஆலோசனைகளுடனும் ‘நியூ இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பின் நிதிநல்கையுடனும் இந்நூலை நூலாசிரியர் எழுதியுள்ளார். கீதா அச்சக ஆவணங்கள் அதனுடன் தொடர்பு கொண்டிருந்தோர், பணியாற்றியோர் ஆகியோருடன் நடத்திய உரையாடல்கள், சில தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், காவல்துறை ஆவணக்காப்பகம், தேசிய ஆவணக்காப்பகம், ஜவஹர்லால்நேரு நினைவு அருங்காட்சியகம் ஆகியவற்றில் சேகரித்த தரவுகள் இவற்றின் துணையுடன் இந்நூலை எழுதியுள்ளார்.

வரலாற்றுப் பின்புலம்

கீதா அச்சகம் 1923 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1926இல் ‘இந்து கல்யாண்’ என்ற பெயரிலான இந்தி இதழ் இங்கிருந்து வெளியாகத் தொடங்கியது. கீதா அச்சகத்தின் தோற்றம் திடீரென்று நிகழ்ந்துவிடவில்லை. அதன் தோற்றத்திற்குப் பின்னால் சில வரலாற்றுக்காரணிகள் உள்ளன.

1.     இந்திமொழிப்பற்று

2.     மார்வாரி சமூகம்

3.     அரசியல் வகுப்புவாதம்

என்ற மூன்றையும் முக்கிய வரலாற்றுக் காரணிகளாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

இந்திமொழிப்பற்று வடஇந்தியாவில் பரவலாக அறிமுகமாகியிருந்தது. உருது இந்துஸ்தானி, பொசியன் என்ற மூன்று மொழிகளுக்கு எதிராக இந்தியை நிலைநிறுத்தும் போராட்டம் 20ஆம் நூற்றாண்டின் கால்பகுதியில் தொடங்கியது.

பாரத்தேந்து ஹரிச்சந்திரா என்ற இந்திமொழிக்கவிஞர், எழுத்தாளராகவும் நூல் வெளியீட்டாளராகவும் திகழ்ந்தவர். நவீன இந்தி இலக்கியத்தின் தந்தையாக இவரைக் கருதுகின்றனர். காசியைச் சேர்ந்த இவர் இந்திவெறியை அரசியலுடன் இணைத்தார். 1877 இல் அலகாபாத் நகரில் நிகழ்ந்த ‘இந்திவர்த்தினி சபா’வின் தொடக்கவிழாவில் இந்திமொழி இயக்கத்தின் தலைவராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். 1871இல் உருது எழுத்தாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் உருது எதிர்ப்பாளரானார்.

இந்திமொழிப் பயன்பாட்டையும் தேவநாகரி எழுத்து வடிவையும் பரப்பும் நோக்கத்துடன் ‘நகரி பிரச்சாரினி சபா’ என்ற அமைப்பு 1893 இல் காசியில் தொடங்கப்பட்டது. இதே நோக்கத்துடன் ‘இந்தி சாகித்ய சம்மேளன்’ என்ற அமைப்பு அலகாபாத்தில் தொடங்கப்பட்டது.

நகரி வரிவடிவத்தைப் பரவலாக அறிமுகப்படுத்தும் நோக்கில் ‘நகரி பிரச்சாரினி சபா’ ‘நகரி பிரச்சாரினி பத்திரிகா’ என்ற இதழ் வாயிலாகவும் சரஸ்வதி என்ற இலக்கிய இதழ் வாயிலாகவும் முயன்றது. மதன் மோகன் மாளவியா 1897 இல் எடுத்த முயற்சியின் விளைவால் 1900 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் நாகரி எழுத்து வடிவம் நுழைந்து உருதுவை ஓரங்கட்டியது. அன்று ஓரங்கட்டப்பட்ட உருது இன்று வரை மீளவில்லை. இந்துக்களுக்கு இந்தி, இஸ்லாமியர்களுக்கு உருது என்ற பிரிவினை உணர்வு உருவாகிவிட்டது.

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் (இருபதுகளில்) இந்திமொழியின் இதயப்பகுதி என்று அழைக்கப்படும், உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், சட்டிஷ்கர், ராஜஸ்தான், தில்லி, ஹரியானா, இமாச்சலபிரதேஷ் ஆகிய பகுதிகளில் முக்கியத்துவம் பெற்ற மொழியாக இந்திமொழி வலுவாகக் காலூன்றியது.

பெர்சியமொழி, உருது என்ற இருமொழிகளின் கலப்பற்ற இந்திமொழியை வலியுறுத்தும் போக்கு உருவானது. பல இந்தி இதழ்கள் புதிதாகத் தொடங்கப்பட்டன. விற்பனையிலும் இவை உயர்ந்த எண்ணிக்கையைத் தொட்டன. முக்கிய நூல் வெளியீட்டாளர்கள் இந்திப் பத்திரிக்கைகளை வெளியிடத் தொடங்கினர். குறிப்பிட்ட தலைப்புகளில் சிறப்பிதழ்களை வெளிடுவதும் நிகழ்ந்தது. இந்தி மொழியின் மீதான பற்றுதல், அச்சாக்கத்திற்கு வலுவூட்டும் கருவியாயிற்று. இவை எல்லாம் தேசியம் பேசின. ஆனால் இவை இந்து தேசியத்தையே பேசின. (தமிழ்நாட்டிலும் தமிழ்தேசியம் சைவத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் பெரியாரின் தாக்கம் சைவ ஆளுமைகளின் பிடிக்குள் தமிழ் செல்லாமல் பாதுகாத்தது.)

இக்காலத்தில் தேசிய அடையாளமாக இந்தி மாறியது. மொழி - அடையாளம் - தேசியம் என்ற மூன்றின் கலவையாக இக்காலம் விளங்கியது. சமஸ்கிருதச் சொற்கள் இந்தியில் இணைக்கப்பட்டு இந்திமொழிக்கு அழகூட்டப்பட்டது. (இவ்வுண்மையை அறியத் தவறியதால்தான் வாஜ்பாயின் இந்தியைப் பாராட்டி நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையில் அண்ணா பேசியுள்ளார்).

மார்வாரிகள்

ஆங்கிலக் காலனி ஆட்சியின் விளைவாக இராஜஸ்தான் பகுதிக் கிராமப்புறங்களில் வாழ்ந்து வந்த மார்வாரி சமூகத்தினர் வியாபார சமூகமாக மாறத்தொடங்கினர். வணிகசமூகம் என்ற நிலையை அடைந்ததும் கல்வி, சமூகத்தகுதி என்ற இரண்டையும் அடையும் முயற்சியில் ஈடுபடலாயினர்.

19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியிலும் மார்வாரிகளை மையமாகக் கொண்டு ஒன்றுக்கொன்று நேர் எதிரான இரு கருத்தாக்கங்கள் வெளிப்பட்டன. பலரின் பொறாமைக்கும் கேலிக்கும் உரியவர்களாக மார்வாரிகள் விளங்கினர். ஐரோப்பாவின் யூதர்களைப் போன்று கேலிக்கும் கண்டனத்திற்கும் ஆளாயினர்.

மற்றொருபக்கம் ஒருவகையான அடையாளச் சிக்கலுக்கு மார்வாரிகள் ஆளாயினர். பொருளாதார நிலையில் வலுப்பெற்றிருந்த இச்சமூகம் சமூக உயர்நிலையை பெறாது இருந்தது. அவர்களது எளிமையான வாழ்க்கைமுறையும் இதற்கு ஒரு காரணம்.

நிலப்பிரபுக்களின் மறைவு வடஇந்தியாவில் நிகழ்ந்து வந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் மார்வாரிகள் மேல்நிலையை அடையத்தொடங்கினர். வைசியர்களான இவர்கள் புதிய சத்திரியர்களாக மாறினர். கிராமங்களை உரிமையாகக் கொண்டதுடன் ‘ராஜா’ போன்ற பட்டங்களைப் பெற்றனர். வங்கித்தொழில் நடத்தி வந்த ராஜகோகுல்தாஸ் என்பவர் 158 கிராமங்களின் உரிமையாளராக விளங்கினார். இவற்றுள் பெரும்பாலானவை வரி பாக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து வற்புறுத்தி வாங்கப்பட்டவையாகும். இப்புதிய மேல்நிலை பெற்ற மார்வாரிகள், சமயம் மற்றும் சமூக நலன் சார்ந்தவற்றிற்குத் தாராளமாக நன்கொடை வழங்கினர்.

மார்வாரிகளைப் போன்றே அகிர்யாதவர்களும் குர்மிகளும் சமூக உயர்நிலைக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இம்முயற்சியின் முக்கிய அங்கமாக சத்திரியர் என்ற அடையாளத்தைப் பெற விரும்பினர். பூணூல் அணிந்ததுடன் சாதி அமைப்புகளை உருவாக்கினர். ராமன் கிருஷ்ணன் ஆகியோரின் வழித்தோன்றல்களாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டனர். (தமிழ்நாட்டிலும் இதே போக்கு சில சாதியினரிடம் உருவானது).

சமயம் சார்ந்து உருப்பெற்ற சாதிஅமைப்புகள் பசு பாதுகாப்பை மையமாகக்கொண்ட இயக்கங்களை உருவாக்கின. பசுவை வழிபடும் மரபினர் என்பதால் யாதவர்கள் பசு பாதுகாப்பு இயக்கத்தில் முன்நின்றனர்.

வகுப்புமோதலை உருவாக்குவதில் பசு ஒரு முக்கிய பங்கை வகித்தது. பல்வேறு இந்து சனாதன அமைப்புகள் இறைச்சிக்காகப் பசுவைக் கொல்வதைத் தடைசெய்யக் கூறின. இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் இந்திய தேசிய அரசியலில் நுழைந்தன.

தேசியமும் சமய உணர்வும் ஒருசேர 1870 தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரை பசுவை மையமாகக் கொண்ட வகுப்புக் கலவரங்கள் நிகழ்ந்தன. இவை இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் எதிர் எதிர் அணியில் நிறுத்தின.

தம் பொருளாதார வளர்ச்சி நிலையின் அடிப்படையில் பசு பாதுகாப்பு இயக்கத்தின் முன்னணியில் மார்வாரிகள் நின்றனர். கலவரங்களின் போது யாதவர்கள் தாக்குதலில் முன்நின்றனர். பசு பாதுகாப்பு இயக்கத்தில் முக்கிய பங்காற்றியதன் அடிப்படையில் மார்வாரிகளுக்கான சமூக அடையாளத்தைப் பெற்றனர். இத்துடன் நின்றுவிடாமல் கோவில், சத்திரங்கள் கட்டுதல், பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுதல், ‘இராமசரித்திரமானஸ்’ என்ற இராமகாதையை ஓதுதல் என்பவற்றிற்கு நிதி வழங்கினர்.

இவ்வாறு புதிய வணிகவர்க்கமாக வளர்ச்சி பெற்ற மார்வாரிகள். இந்திய தேசிய இயக்கத்துடன் இணைந்து வளர்ந்த அமைப்புகளுடனும் இயக்கங்களுடனும் தம்மை இணைத்துக்கொண்டு தம் இருப்பை நிலைநாட்டிக் கொண்டார்கள்.

அரசியல் வகுப்புவாதம்

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் அடிக்கடி கலவரங்கள் நிகழந்தன. இது மட்டுமின்றி இந்தி, உருது மொழியை முன் வைத்தும் பசுவதை, பள்ளிவாசல் முன்பாக வாத்தியம் வாசித்தல் என்பனவற்றைக் காரணமாகக்கொண்டும் இக்கலகங்கள் நிகழ்ந்தன. இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கமும்கூட பசு பாதுகாப்பு இயக்கத்தில் இருந்து விலகி நிற்கவில்லை. சேத்கோவிந்ததாஸ், ஜெகத்நாராயணன்லால் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் இவ்வியக்கத்துடன் இணைந்திருந்தனர்.

மதன்மோகன் மாளவியா, இராஜேந்திர பிரசாத் போன்ற பழமைவாதிகள் காங்கிரஸ் இயக்கத்தில் வலுவாகக் காலூன்றிவிட்டார்கள். 1932 தொடங்கி 1937 வரை காங்கிரசின் ஆண்டுக் கூட்டத்துடன் இந்து மகாசபையின் கூட்டமும் நிகழ்ந்தது. இத்தகைய சமூகப் பின்புலத்தில்தான் கீதா அச்சகமும், கல்யாண் பத்திரிக்கையும் வெளிவந்தன. இவற்றைத் தோற்றுவித்தவர்கள் ஜெயதாள்கோயண்ட்கா, அனுமான்பிரசாத் போதார் என்ற மார்வாரி வணிகர்கள்.

அனுமன்பிரசாத் போதார் (1892-1971)

மார்வாரி சமூத்தில் பிறந்த அனுமன் பிரசாத்தின் குடும்பப்பெயரே போதார் என்பதாகும். போர்டார் என்ற பாரசீக சொல்லின் திரிபே போதார் ஆகும். போர் என்ற பாரசீக மொழிச்சொல் கருவூலத்தைக் குறிக்கும்; ‘டார்’ என்பது அதன் பாதுகாவலரைக் குறிக்கும். இவ்வகையில் போதார் என்பது ஒரு பதவிப்பெயராகும்.

பீமராஜ் போதார் என்பவரது மகனாக 17 செப்டம்பர் 1892-இல் அனுமன்பிரசாத் போதார் பிறந்தார். இவரது குடும்பத்தினர் கிழக்குப்பகுதி பிரிட்டிஷ் ராணுவத்துக்கு உணவுப்பொருள் விநியோகிக்கும் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர். இது அவர்களுக்கு நல்ல ஆதாயத்தை வழங்கியது.

1896இல் அஸ்ஸாம் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கம் இவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களது உயிரைப் பறித்ததுடன் வாணிபத்தையும் பறித்தது. தந்தை கல்கத்தாவுக்கு இடம் பெயர, போதார் மட்டும் பாட்டியுடன் விடப்பட்டார். பின் தமது ஏழாவது வயதில் ரத்தனிகர் சென்றார். பயிற்சி மொழியாக உருதுமொழியைக் கொண்ட பள்ளியில் அவரைச் சேர்த்தனர். தம் ஏழாவது வயதிலேயே இந்துப் பண்பாட்டிற்கும், சடங்காச்சாரங்களுக்கும் தான் பிறந்த குடும்பத்திற்கும் தனது மார்வாரி சமூகத்திற்கும் இது எதிரானது என்று உணர்ந்தார். தம் எட்டாவது வயதிலேயே கீதையைப் படித்து சுலோகங்களை மனனம் செய்தார். இவருக்கும் பூணூல் அணிவிக்கும் சடங்கு நடந்து முடிந்தது. இவரது 12ஆவது வயதில் (1904) திருமணம் நடந்தது. பின் தம் மனைவியுடன் தந்தையின் துணி வியாபாரத்தைக் கவனிக்க கல்கத்தா சென்றார்.

கல்கத்தா வாழ்க்கையில் வியாபாரி, கடவுளைத்தேடும் பக்தன், இலக்கிய நாட்டம், புரட்சிவாதி எனப் பல்வேறு வாழ்க்கை நிலைகளில் திரிந்தார்.

பயங்கரவாதப் புரட்சி இயக்கத்துடன் கொண்டிருந்த தொடர்பினால் கைது செய்யப்பட்டு, நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு ஆளானார். மார்வாரி சமூகப்பிரமுகரும் தொழில் அதிபரும், காந்தியின் புரவலர்களில் ஒருவருமான கமன்லால் பஜாஜ்ஜிடம் இருந்து, மும்பை வரும்படி போதாருக்கு அழைப்பு வந்தது. அவரும் அதை ஏற்று மும்பை சென்றார். இங்கு மார்வாரி வட்டாரத்தில் பல புதிய நண்பர்கள் கிடைத்தனர்.

அகில இந்திய மார்வாரி அகர்வால் மகாசபை என்ற அமைப்பை 1919இல் மார்வாரிகள் தொடங்கினர். 1920இல் போதார் இதன் வட்டாரச் செயலாளரானார். கீதை வகுப்புகள், சாதுக்கள் தொடர்பு என ஆன்மீக உலகத்தொடர்பும் இங்கு அவருக்குக் கிட்டியது.

கமன்லால் பஜாஜ் வாயிலாக காந்தியுடன் அவருக்கு உறவு ஏற்பட்டது. காந்தியின் குடும்பத்துடன் இவருக்கு நெருக்கம் இருந்தாலும். அவரது கோவில் நுழைவுப் போராட்டம் குறித்து எதிர்மறையான கருத்தே கொண்டிருந்தார். காங்கிரசில் இருந்த பழமைவாதிகளான மதன்மோகன் மாளவியா, கே.எம்.முன்ஷி, சம்பூரணாந் ஆகியோருடன் போதாருக்கு நல்ல உறவு இருந்தது.

ஜெயதயாள் கோயந்தகா (1885-1965)

ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தமது 15ஆவது வயதில் அனுமன் தரிசனம் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சூரியன், சிவன், இராமன் ஆகிய தெய்வங்களை வழிபட்ட இவர் இம்மூன்று கடவுளர்களும் தமக்குக் காட்சியளித்ததாகவும் மகாவிஷ்ணு மந்திரஆற்றல் வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இவரது சிறுவயது நண்பனுக்கு சிபிலிஸ் (பரங்கிப்புண்) என்ற பால்வினை நோயை இவர் ஏற்றுக்கொண்டதாக(!) இவரது வாழ்கை வரலாற்றை எழுதியவர்கள் குறிப்பிடுகிறார்கள். நல்ல வணிகராகவும் சமய நூல்களைக் கற்றறிந்து விவாதிப்பவராகவும் ஒருசேர விளங்கினார். அவர் மேற்கொண்டிருந்த பருத்தி, மண்எண்ணெய், துணிகள், வீட்டு உபயோகப் பாத்திரங்கள் தொடர்பான வாணிபம் அவருக்கு நல்ல ஆதாயத்தை ஈட்டித்தந்தது. தம் வாணிபத்தின் பொருட்டு வடஇந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் வாய்ப்பை அவர் பெற்றிருந்தார்.

தம் கணக்குப் புத்தகங்களைப் பார்வையிடாத நேரங்களில், கீதையைப் படிப்பதிலும், படித்ததை விவாதிப்பதிலும் செலவிட்டார். இவரைப்போன்ற சமயஆர்வம் கொண்டவர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கல்கத்தா நகரில் கோயந்தகாவின் வீட்டில் இத்தகைய விவாதங்கள் தொடக்கத்தில் நடைபெற்றன. அடுத்து ஏதன் தோட்டத்தின் அருகில் உள்ள கோட்டையின் அருகில் உள்ள திறந்தவெளியில் நடைபெறத் தொடங்கியது. இந்த இடம் போதாமையால் பன்ஸ்தாலா தெருவில் உள்ள ஓர் இடத்தை 1922ல் வாடகைக்கு எடுத்து அதற்கு ‘கோவிந்த பவனம்’ என்று பெயரிட்டனர்.

கோவிந்த பவனம் 11,000 படிகள் கீதையை அச்சிட்டு வெளியிட்டது. ஆனால் இவ்வெளியீடு சிறப்பாக அமையவில்லை.

இதனால் தமக்கெனச் சொந்தமாக ஓர் அச்சகத்தை நிறுவவேண்டும் என்ற முடிவுக்கு கோவிந்தபவனம் குழுவினர் வந்தனர்.

கீதா அச்சகம் (1923)

இம்முடிவின்படி 1923இல் கோவிந்தபவனின் துணை அங்கமாக 1860ஆம் ஆண்டு நிறுவனப்பதிவு விதிகளின்படி கீதா அச்சகம் பதிவு செய்யப்பட்டது. ‘உருது பஜார்’ என்ற பகுதியில் வாடகைக் கட்டடத்தில் இது இயங்கத் தொடங்கியது. கீதா அச்சகத்தின் வெளியீடுகளின் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படலாயிற்று. அச்சகத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் புதிய கட்டடம் கட்ட பத்தாயிரம் விலையில் 1926 ஜூலையில் நிலம் வாங்கப்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில் அச்சாக்கப்பணிகள் விரிவடைந்தமையாலும், கல்யாண் என்ற பத்திரிக்கை இங்கிருந்து வெளிவரத் தொடங்கியமையாலும் இந்த இடமும் போதாமல் போயிற்று.

இதைப் போக்கும் வழிமுறையாகக் கல்கத்தாவில் இருந்து கோரக்பூருக்கு இடம் மாறியது. இதன் பின்னர் இது வளர்ச்சியுற்றது.

இதற்கு இணையாக விவிலியம் அச்சிடும் பணியை மேற்கொண்டுள்ள ‘விவிலியக்கழகம்’ என்ற கிறித்தவ அமைப்பைத்தான் குறிப்பிடமுடியும். ‘இந்தியாவில் எந்த ஒரு புத்தக விற்பனை நிறுவனமும் இந்த அளவுக்கு சமயத்தை வெற்றிகரமாகச் சந்தைப்படுத்தவில்லை’ என்பது இந்நூலாசிரியரின் மதிப்பீடாகும் (பக்கம் 430).

கல்யாண் (1926)

சனாதன இந்துதர்ம சபையின் கருத்துக்களைப் பரப்பவேண்டும் என்ற நோக்கத்துடன் உருவான பத்திரிகையே ‘கல்யாண்.’

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்அதிபர் ஜி.டி.பிர்லா, ‘மார்வாரி அகர்வால் மகாசபை’ என்ற அமைப்பின் சார்பில், மார்வாரி சமூகப் பிரச்சினைகள் இல்லாத, ‘இந்து சமயம் சார்ந்த ஒரு பத்திரிகை’ வேண்டும் என்று விரும்பினார்.

அவ்வாறு தொடங்கும் இதழுக்கு, ஆசிரியராக போதாரின் பெயர் முன்மொழியப்பட்டது. வற்புறுத்தலின் காரணமாக இப்பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டார். புதிதாகத் தொடங்கவுள்ள இதழுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது ‘கல்யாண்’ என்ற பெயரை இடலாம் என்று போதார் கூற, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் இதழை ‘அக்ட்சய திருதியை’ என்ற நன்னாளில் வெளியிடுவது என்றும் கீதா அச்சகத்தில் இதை அச்சிடுவதென்றும் முடிவு செய்தனர். இதழின் மொழி இந்தி ஆகும்.

1926 ஆகஸ்ட்டில் கல்யாண் இதழின் முதல் இதழ் மும்பையில் இருந்து வெளியானது. இதில் இவ்விதழின் விதிமுறைகளாக ஒன்பது விதிமுறைகளை அறிவித்தது. அவற்றுள் சில வருமாறு:

·     ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண ஏகாதசியன்று இதழ் வெளிவரும்.

·     வணிக விளம்பரங்கள் எதையும் ஏற்றுக்கொள்ளாது.

·     பக்தி தொடர்பானவை தெய்வீகஆற்றல், கடவுளரின் கதைகள் என்பன மட்டுமே இதழில் இடம்பெறும்.

இதழ் தொடங்கப்பட்டு முதல் ஆண்டு முடிவுறும் போது மூவாயிரம் படிகள் விற்பனையாகத் தொடங்கியிருந்தது. இதழின் ஒரு படியைப் பலரும் படிக்கும் வழக்கம் உண்டு என்பதன் அடிப்படையில் நோக்கினால் இதை அய்ந்து அல்லது ஆறால் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

1927இல் மும்பையில் இருந்து கோரக்பூருக்கு கல்யாண் அச்சிடுதல் இடம் மாறியது. மார்வாரி வணிகர்கள் சிலர் கூடுதலான படிகளை விலைக்கு வாங்கி ஆதரவு நல்கினர். ஒரு குறிப்பிட்ட சமயம் தொடர்பான சமய இதழ் என்ற அடையாளத்துடன் தொடங்கிய ‘கல்யாண்’ இதழ் இந்து அடிப்படைவாதம், மதச்சார்பின்மை எதிர்ப்பு, இந்து முஸ்லிம் ஒற்றுமையையும், தலித்துகளின் கோவில் நுழைவையும் ஏற்காமை, பசு இறைச்சி எதிர்ப்பு என்பன தொடர்பான கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட ஆரம்பித்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இந்துசமய சனாதனிகளுடனும், அதன் பொறுப்பாளரான போதாருக்கு நெருக்கமான தொடர்பிருந்தது. இந்திய தேசியத்தை இந்து தேசியமாகவே பார்க்கும் கருத்துநிலையை இவ்இதழ் உருவாக்கி வந்தது.

கல்யாண் - கல்பதரு (1934)

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்காகவும் அய்ரோப்பியர்களுக்காகவும் ‘கல்யாண் - கல்பதரு’ என்ற பெயரில் ஆங்கில இதழ் ஒன்றையும் கீதா அச்சகம் 1934இல் வெளியிட ஆரம்பித்தது. இந்தியாவிலும் இதற்கு வாசகர்கள் உருவாயினர்.

இவ்இதழின் தாக்கத்தால் திருவனந்தபுரத்தில் உள்ள ‘ஸ்ரீ சித்திரா இந்துசமய நூலகம்’ ‘சித்திரபிரபா’ என்ற காலாண்டு இதழை வெளியிட்டதுடன், ‘கல்யாண் - கல்பதரு’ இதழில் வெளிவரும் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட அனுமதியும் கேட்டது.

மகாபாரதம் (1955)

சமஸ்கிருத மொழியில் உள்ள மகாபாரதத்தை இந்திமொழியில் மொழிபெயர்த்து, உரையுடன் வெளியிடும் நோக்கத்திற்காகவே இவ்விதழ் தொடங்கப்பட்டது. இதன் ஆண்டுச்சந்தா ரூ.20 ஆகும். இது அக்காலத்தில் குறைந்த தொகையாகும். மூன்று ஆண்டுகளில் பாரதம் வெளிவந்து முடிவுற்றதும் இதழ் நிறுத்தப்பட்டுவிட்டது.

கீதா அச்சகத்தின் ஊழியர்கள்

கீதா அச்சகத்தின் ஊழியர்களை (வீ) ஆசிரியர் குழுவினர் (வீவீ) இதர பணிகளில் ஈடுபடுவோர் என இரண்டாகப் பகுக்கலாம்.

கல்யாண் இதழின் ஆசிரியர் குழுவினரும், கீதா அச்சகத்தின் ஆசிரியர் குழுவினரும் ஒரு குடும்பம் போன்றே வாழ்ந்தனர். இவர்களுக்குக் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டது. அத்துடன் துறவற வாழ்க்கையை வாழவேண்டியதிருந்தது. காலை ஆறு மணிக்கு, கீர்த்தனையுடன் அவர்களது அன்றைய வாழ்க்கை தொடங்கும். சிமன்லால் கோஸ்வாமி என்பவர் சமய நூல்களில் இருந்து சில பகுதிகளை உரக்கப்படிப்பார். போதாருடன் சிறிய விவாதத்துடன் பணிதொடங்கும். குறைந்த அளவே பேசி, கடவுள் நாமத்தை உச்சரித்து வேலைநேரத்தில் அவர்கள் பணியாற்ற வேண்டும்.

பணியாற்றுபவர்களுக்காகப் பொதுச்சமையலறை இருந்தது. சனாதன இந்து தர்மத்தைப் பரப்புவதை இலட்சியமாகக் கொண்டு கீதா அச்சகம் இயங்குவதால் இங்கு பணியாற்ற வருபவர்கள். சமயம் என்ற இலட்சியத்துக்காக, தனிப்பட்ட விருப்பங்கள், குடும்பப்பொறுப்புகளைப் பொருட்படுத்தக்கூடாது என்பது கீதா அச்சக நிறுவனர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

மற்றொரு பக்கம் கீதா அச்சகத்தின் பணத்தேவையை நிறைவு செய்ய அதிக ஆதாயம் தரும் செய்தித்தாள் அச்சிடும் பணியை மேற்கொண்டது. மேலும் கதர்த்துணிகள், பூணூல், சோப்பு, கண்ணாடி வளையல்கள், தோல் பயன்படுத்தப்படாத செருப்புகள், நெய், ஆயுர்வேத மருந்துகள் ஆகியவற்றைத் தயாரித்து விற்பனை செய்யவும் திட்டமிட்டது.

இத்தகைய சூழலில் 1932 ஆம் ஆண்டில் அச்சக நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வேலை நிறுத்தம் நிகழ்ந்தது. போதாரின் தலையீட்டால் சமரசம் ஏற்பட்டது.

அடுத்த ஆண்டில் 100க்கு 15ரூபாய் என்ற விகிதத்தில் ஊதியக்குறைப்பு செய்யும் முடிவை அச்சக நிர்வாகம் எடுத்தது. மீண்டும் போதார் தலையிட்டு இதைத் தடுத்தார். இப்பிரச்சினையில் நிர்வாகத்திடம் போதார் முன்வைத்த கருத்துக்கள் ஊழியர்களின் பணிமுறை குறித்த சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. அவற்றை இவ்வாறு வரிசைப்படுத்தலாம்:

1.     மற்ற அச்சக ஊழியர்களைப்போன்று கீதா அச்சக ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரமோ விடுமுறையோ கிடையாது.

2.     வேலை நடக்கும்போது, காலை ஆறுமணியில் இருந்து இரவு 11மணிவரை அச்சகத்தில் உள்ளார்கள்.

3.     கீதா அச்சகம் தரும் ஊதியத்தைக்கொண்டே குடும்பம் நடத்தும் ஊழியர்கள் உள்ளனர்.

1920களிலும் 30களிலும் தொழிற்சங்க உணர்வு மேலோங்கி வந்தது. இம்மாறுதலை போதார் புரிந்து கொண்டார். கீதா அச்சகத்தின் மூத்த நிர்வாக அதிகாரியான கங்காபிரசாத் என்பவருக்கு இது குறித்து எழுதிய கடிதத்தில் இதைப் புரிந்துகொள்ளும்படிக் கூறியதுடன், தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசி, இயன்றவரை சில வசதிகளைச் செய்து தரும்படி அறிவுறுத்தியுள்ளார்.

1936இல் நடந்த வேலைநிறுத்தத்தில் போதார் தலையிட்டு அதை நிறுத்தினார் என்றாலும் ஊழியர்களில் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

1937இல் வருங்கால வைப்புநிதி வேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. தொழில்துறை இதுகுறித்து அறிவிக்கையன்றை 3 ஏப்ரல் 1939இல் அச்சக நிர்வாகத்துக்கு அனுப்பியது. அதன் பின்னர் வருங்கால வைப்புநிதிக்கணக்கு அச்சக ஊழியர்களுக்குத் தொடங்கப்பட்டது.

1945இல் ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர். அவர்களின் வேண்டுகோள்களில் ஒருபகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும் வேலைநிறுத்தம் தொடங்கியது. அச்சக நிர்வாகம் கதவடைப்பு செய்தது. இது ஒன்றரை மாத கால அளவுக்கு நீடித்தது. 1948இல் மீண்டும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக சில செய்திகளையும் கீதா அச்சகத்தின் பொருளாதார நிலையையும் நூலாசிரியர் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

எதிர்கால இந்தியா

கீதையைக் குறித்த விவாதங்களில் ஈடுபட்ட மார்வாரி வணிகர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட ‘கோவிந்தபவன்’ என்ற அமைப்பின் விரிவாக்கமே கீதா அச்சகமும், கல்யாண் இந்திப்பதிப்பும் ஆங்கிலப்பதிப்பும் என்று கண்டோம். இவற்றின் அரசியல் குறித்தும் புரிந்துகொண்டோம். அவர்களின் அரசியலை மேலும் அறிந்துகொள்ளும் வகையில் 1947 ஜூலையில் போதார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இடம் பெற்றுள்ள பன்னிரண்டு கருத்துக்கள் உள்ளன. அவை வருமாறு:

1.     இந்துஸ்தான் அல்லது ஆரியவர்த்தா என்று இந்தியா அழைக்கப்பட வேண்டும்.

2.     அது முற்றிலும் இந்து நாடாகவும், இந்துப்பண்பாட்டின்படி ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். தேசியக்கொடியானது காவிக் கொடியாகவும், வந்தேமாதரம் நாட்டுப்பண்ணாகவும் இருக்க வேண்டும்.

3.     பசுவதை தடைசெய்யப்படவேண்டும் என்பதே அடிப்படை விதிமுறையாக இருக்கவேண்டும்.

4.     ஆட்சிமொழியாக, தூய்மையான இந்தியும் (தூய்மையற்ற இந்துஸ்தானி அல்ல), அதன் வரிவடிவமாக தேவநாகரி வரிவடிவமும் இருக்க வேண்டும்.

5.     இராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆயுதச்சட்டம் திருத்தப்பட வேண்டும்.

6.     இந்திய ராணுவம் இந்துக்களைக் கொண்டதாகவே இருக்க வேண்டும். எனவே விடுதலைக்கு முன்பாகவே இந்திய ராணுவம் பிரிக்கப்படவேண்டும்.

7.     எந்த உயர்பதவியிலும் இஸ்லாமியர்களை நியமிக்கக் கூடாது.

8.     மக்கள்தொகை விழுக்காட்டிற்கு ஏற்பவே அரசுப்பணிகளில் இஸ்லாமியரை நியமிக்க வேண்டும். பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அங்கு அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டால்தான் இதை மேற்கொள்ள வேண்டும்.

9.     சமூகசீர்திருத்தம் என்ற பெயரில் எந்த சமயத்தை மையமாகக்கொண்டும் சட்டம் இயற்றக்கூடாது.

விடுதலைபெறும் இந்தியாவுக்கான அவரது இத்திட்டங்கள் மத அடிப்படைவாதச் சிந்தனையின் வெளிப்பாடாக உள்ளன.

பெண்கள் குறித்த அணுகுமுறை

அரசியலில் மட்டுமின்றி, சமூகம் குறித்த சிந்தனைகளிலும் கீதா அச்சகக் குழுவினரின் சனாதனப் போக்கு வெளிப்படுகிறது.

டிசம்பர் 1949 கல்யாண் இதழில், கணவனை இழந்த இளம்பெண் ஒருத்தியின் கடிதம் வெளியாகி உள்ளது. அக்கடிதத்தில், ‘மறுமணம் செய்து கொள்ளும்படி தன் குடும்பத்தார் தன்னைத் தூண்டுவதாகவும் ஆனால் தனக்கு அதில் உடன்பாடில்லை என்றும் விதவை மறுமணம் குறித்து கல்யாண் இதழின் கருத்து என்ன’ என்றும் வினவியிருந்தாள்.

விதவை மறுமணத்தை ஏற்க மறுக்கும் அப்பெண்ணின் உயரிய எண்ணத்தைப் பாராட்டுவதாகவும், சீதா சாவித்திரி மரபில் வந்தவரென்றும் கூறி, குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டாம் என்றும் போதார் விடையளித்துள்ளார். மறுமண ஆதரவாளர்கள் பெரிய பாவிகள் என்றும் குறிப்பிட்டிருந்தார். ‘விதவை தர்மம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய விதவைகளுக்கான விதிமுறைகளில், உடன்கட்டை ஏறுதலை வரவேற்றுவிட்டு, தற்போது சட்டபடி குற்றம் என்று வருந்துகிறார். கடவுளையே கணவனாகக் கொண்டு விதவைகள் வாழவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். அவர் வலியுறுத்தும் பிற விதிமுறைகள் வருமாறு:

·     உலக இன்பங்களில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ளவேண்டும்.

·     கீதை, இராமாயணம் போன்ற நூல்களைப் படிக்க வேண்டும்.

·     விழாக்களில் பங்குகொள்ளக் கூடாது.

·     இளம்பெண்களுடனும் திருமணமான பெண்களுடனும் உரையாடக்கூடாது.

·     அணிகலன்கள் அணியக் கூடாது.

·     தலை சீவக்கூடாது.

·     வெற்றிலை போடக்கூடாது.

·     அவருடைய நிழலும் கூடத் தீமை பயக்கும்.

·     தரையில் படுத்துறங்க வேண்டும்.

·     மென்மையான படுக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.

·     முரட்டு நூலால் செய்த சேலையைத்தான் உடுத்த வேண்டும். வண்ண ஆடைகளை உடுத்தக் கூடாது.

·     தண்ணீர் பருகாது, உணவு உண்ணாது கைம்மை நோன்பு நோற்க வேண்டும்.

·     மரக்கறி உணவையே உண்ணவேண்டும். பால், நெய், இனிப்பு, மசாலாப்பொருட்களைத்

              தவிர்க்க வேண்டும்.

இது போன்ற சனாதனச் சிந்தனைகளை நூலாசிரியர் ஆங்காங்கே சுட்டிக்காட்டியுள்ளார். கல்யாண் இதழின் ஆண்டுமலர், சிறப்புமலர் என்பன குறித்தும் அவற்றின் உள்ளடக்கம் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.

செய்ய வேண்டியதென்ன?

அனுமன் பிரசாத்போதார், ஜெயதயாள் கோயந்தகா என்ற இரு தனிமனிதர்களின் இந்துசமய உணர்வும், கடின உழைப்பும், மார்வாரி வணிகர்கள் தொழில் அதிபர்கள், மதவாத அரசியல்வாதிகள், ஆகியோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கீதா அச்சகம் இன்று மிகப்பெரிய நிறுவனமாக வேரூன்றி வளர உதவியுள்ளது. மத அடிப்படைவாதத்தை வளர்க்கும் பணியை கீதா அச்சகம் செய்து வருகிறது. சென்ற ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 2014 ஏப்ரல் கல்யாண் இதழில் ‘யாருக்கு வாக்களிக்க வேண்டும்’ என்ற தலைப்பில் அதன் ஆசிரியர் குறிப்பொன்றை எழுதியுள்ளார். அதில் சமயப்பணி செய்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதுடன் ‘பசுவதையைத் தடைசெய்யும் சட்டத்தை இயற்றுவேன்’ என்ற உறுதிமொழியை அரசியல் தலைவர்களிடம் பெறவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில், தீண்டாமை ஆதரவு, இராமஜென்மபூமி, கிருஷ்ணஜென்ம பூமியை மீட்கும் இயக்கங்கள், பாபர்மசூதி தகர்ப்பு, பசுவதைத் தடைச்சட்டம், சேது சமுத்திர திட்டம் எதிர்ப்பு என்ற நிலைப்பாடுகளைக் கல்யாண் இதழ் எடுத்துள்ளதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

(‘கீதையானது மனுதர்மத்தின் சாரமே’. ‘முன்னர் பிராமண சத்ரியர் கூட்டு தற்போது பிராமணவைசியர் கூட்டு’ என்ற அம்பேத்கரின் கூற்றுகளை மனதில் கொண்டு இதுவரை நாம் படித்தறிந்த செய்திகளை ஆராயவேண்டும்).

கீதா அச்சகம் வெறும் அச்சகம் அல்ல. அது ஒரு சித்தாந்தத்தைப் பரப்ப உருவான ஓர் அமைப்பு. இதன் தோற்றம், வளர்ச்சி குறித்து கால அடிப்படையில் மட்டும் ஆராயாமல் அது சார்ந்திருந்த அல்லது வெளிப்படுத்திய சித்தாந்தம் குறித்தும் ஆசிரியர் ஆங்காங்கே ஆராய்ந்துள்ளார். பல வரலாற்று நிகழ்வுகளையும் ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்கிறார். சான்றாக பசுவதைத்தடைச் சட்டம் வேண்டி 1966 ஆம் ஆண்டில் டில்லியில் ஊர்வலமாகச் சென்ற இந்துத்துவ அமைப்பினர் டில்லியில் காமராஜர் தங்கியிருந்த வீட்டை முற்றுகை இட்டதையும் அவரது உதவியாளரைத் தாக்கியதைப் பதிவு செய்துள்ளதைக் கூறலாம். (இத்தாக்குதலில் வீட்டின் திரைச் சீலைகளுக்குத் தீயிடப்பட்ட நிலையில் பின்புறமாக ஓடி காமராசர் உயிர் தப்பினார்.)

கீதா அச்சகம் பரப்பும் சனாதனச் சிந்தனைகளை எதிர்கொள்ள, பெரியாரிய, அம்பேத்கரிய மார்க்சியச் சிந்தனையாளர்கள் ஓரணியில் திரள்வது அவசியம். இக்கருத்துப் போராட்டத்திற்கு, தமிழ்நாட்டின் வணிகர்களோ, தொழில் அதிபர்களோ உதவப்போவதில்லை. அப்படியானால் உதவப்போவது யார்? இதற்கு விடையாக தம் கட்டுரை ஒன்றில் சங்கீத வித்வான்களுக்கு, பாரதியார் கூறிய பின்வரும் அறிவுரையைக் கொள்ளலாம்.

“இப்போது உலக முழுவதிலும் ராஜாக்களையும், பிரபுக்களையும் நம்பி வித்தை பழகும் காலம் போய்விட்டது. பொதுஜனங்களை நம்ப வேண்டும். இனிமேல் கலைகளுக்கெல்லாம் போஷனையும் ஆதரவும் பொது ஜனங்களிடமிருந்து கிடைக்கும். அவர்களுக்கு உண்மையான அபிருசி உண்டாக்கிக் கொடுப்பது வித்வான்களுடைய கடமை. பிறகு நல்ல போஷனை கிடைக்கும்.

ஒரு பிரபு மாதம் ரூபாய் 100 கொடுப்பான். ஊர் சேர்ந்தால் தலைக்குக் கால் ரூபாயாக வசூல்பண்ணி மாதம் 1000 ரூபாய் கொடுக்கும். ஊரையே எஜமானாகக் கொள்ளவேண்டும். ஊர்தான் ராஜா.”

Pin It