மார்க்சியம் போன்ற நவீனத்துவ தத்துவத்திற்கு மாற்றாக மார்க்சியத்தை விட முற்போக்கானதாக தன்னை காட்டிக்கொள்ளும் பின் நவீனத்துவம் எப்படி முதலாளித்துவத்தின் நலனையே பிரதிபலிக்கிறது என்பதை விரிவாக சொல்லும் நூல் இது.

pavel sakthi bookமக்களுக்கான அமைப்புகள் போல செயல்படும் பின் நவீனத்துவத்தின் நோக்கம் மக்களை பிளவுபடுத்துவதிலும், உண்மையான மக்களுக்கான இயக்கங்களை சிதைத்து ஒழிப்பதிலும் முன்னணியில் இருக்கும்  பின் நவீனத்துவத்தை எளிமையாக புரிய வைக்கிறது இந்நூல்.

1950 களில் அமெரிக்காவின் பொருளாதார எழுச்சியின் போது அமெரிக்க சமூகத்தில் உருவான பின்நவீனத்துவம், பத்தாண்டுகளுக்கு பின்னர் பிரான்சில் ஏற்பட்ட தொழிலாளர் இயக்கங்களின் பின்னடைவின் பின்னர் ஏற்ப்பட்ட வெற்றிடத்தை கைப்பற்றிய கதையையும், பின்னர் பூக்கோ, தெரிதா , லியோதர்த் போன்ற தத்துவவாதிகளால் வளர்த்தெடுக்கப்பட்டு உலகாவிய வகையில் பரவிய விதத்தையும், பின்னர் இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகளில் வளர்ச்சியுற்ற விதத்தையும் அதற்கு கணிப்பொறி ஆற்றிய பங்களிப்பை குறித்தும் விரிவாக பேசுகிறது இந்தூல்.

கதம்பம் போல கலவையான குழப்பமான வகையில் இருக்கும் பின் நவீனத்துவம் சாராம்சத்தில் மார்க்சிய எதிர்ப்பிலும், மார்க்சியத்தை திரிப்பதிலும் முழுவீச்சில் செயல்படுவதை மேற்கண்ட பின்நவீனத்துவ தத்துவாதிகளான பூக்கோ, தெரிதா, லியோதர்த் ஆகியோரின் கருத்துகள் எப்படி மார்க்சியத்துக்கு முரணான வகையில் இருக்கிறது என்பதை விரிவாக பேசுகிறது இந்த நூல்.

பெரும்பாலான பின்நவீனத்துவ வாதிகள் மார்க்சியத்திலிருந்து வெளியேறியவர்கள் என்பதும் , இன்றும் கூட தங்களை மார்க்சியவாதிகளாக காட்டிக்கொண்டு மார்க்சியத்திற்கு எதிரான கருத்துகளை உருவாக்குவதில் முனைப்புடையவர்கள் என்பதை இந்த நூல் சுட்டிக்காட்ட தவறவில்லை.

இந்தியாவில் உருவான1991 பிந்தைய தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் போன்றவற்றின் பின்னணியில் பின் நவீனத்துவம் வளர்ந்த விதத்தையும், அது சமூக அமைப்புகள், குடிமை உரிமை அமைப்புகள் போன்றவற்றின் பெயர்களில் வேரூன்றிய விதத்தையும் பேசுகிறது இந்தூல்.

முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்ற சொற்களுக்கு மாற்றாக மேல்தட்டு சமூகம், கீழ்தட்டு சமூகம், விளிம்பு நிலை மக்கள் என்ற சொற்பதங்கள், சர்வதேசியவாதத்திற்கு மாற்றாக குறுங்குழு வாதம்,அடையாள அரசியல், மதவாதம் என பின் நவீனத்துவம் ஏற்படுத்தும் குழப்பத்தையும் தெளிவாக விளக்கிறது இந்தூல்.

மார்க்சிய சிந்தனையாளர் அய்ஜாஸ் அகமதுவின் எழுத்துகளை யாரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் மொழியாக்கம் செய்து இருக்கிறார் தோழர் பாவெல் சக்தி, வாழ்த்துக்கள் தோழர்.

சமூக அக்கறை கொண்டோர் அவசியம் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.

நூலின் பெயர் - பின்நவீனத்துவமும் அடையாள அரசியலும் முதலாளித்துவத்தின் புறவழிப் பாதை
வெளியீடு- பொன்னுலகம் பதிப்பகம்
ஆசிரியர் - அய்ஜாஸ் அகமது
தமிழில் -தோழர் பாவெல் சக்தி

- வீர பாண்டி

Pin It