காவிரிப் படுகையில் நிலத்தடி நீரையும் சுற்றுச்சூழலையும் கெடுத்துக் கொண்டிருக்கும் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் செய்தித்தாள்களில் "டெல்டா மாவட்டங்களில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டம் இல்லை" என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்கவில்லை என்றும், பராமரிப்பு வேலை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறுகிறது.
கடந்த இரண்டு மாத காலமாக, குத்தாலம் ராஜகோபாலபுரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மக்கள் எதிர்ப்பை மீறி நடத்தும் எரிவாயுக் கிணறுகள் வேலைகள் செப்டம்பர் 30 அன்று தடுத்து நிறுத்தப்பட்டன. இது குறித்து 7.10.2018 அன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பணிகள் ஏன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புச் சான்றுகளுடன் முன்வைத்தது. ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படும் இடங்களிலெல்லாம் நிலத்தடி நீர் கெட்டுப்போய் உள்ளது என்பதற்கும், நிலத்தடி நீரில் பென்சீன் கலந்துள்ளது என்பதற்கும், முறையான சோதனைச்சாலை நீர் ஆய்வு அறிக்கைச் சான்றுகளை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சமர்ப்பித்தது.
ஓஎன்ஜிசி எண்ணெய்-எரிவாயுக் கிணறுகள் செயல்படும் இடங்களிலெல்லாம் புற்றுநோய் அதிகரித்து வருவதற்கான செய்தித்தாள் அறிக்கைகளை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு அளித்தது. மேலும், அப்பகுதியைச் சேர்ந்த புற்றுநோயாளிகள் 15 பேர் பேச்சுவார்த்தை நடந்த அன்று கோட்டாட்சியரைச் சந்திக்க 5 மணி நேரம் காத்திருந்தார்கள். அவர்களைச் சந்திக்கக் கோட்டாட்சியர் மறுத்துவிட்டார். எங்கெல்லாம், எப்போதெல்லாம் ஓஎன்ஜிசி எண்ணெய்-எரிவாயுக் கிணறுகளில் கசிவு, உடைப்பு, விபத்துகள் ஏற்பட்டுள்ளன என்பதற்கும் கடந்த கால செய்திப் பதிவுகள் சான்றுகளாக அளிக்கப்பட்டன. இந்தியாவில் பல மாநிலங்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் விதிமுறை மீறல்களுக்காகவும் நிலத்தடி நீரைப் பாழ்படுத்தியதற்காகவும் ஓ.என்.ஜி.சி.-க்குப் பல கோடி அபராதத் தொகை விதித்ததற்கான செய்தித்தாள் பதிவுகளும் அளிக்கப்பட்டன.
ஆனால் இதற்கு ஓ.என்.ஜி.சி.-யும், கோட்டாட்சியரும் வாய் திறக்கவில்லை. குறைந்தபட்சமாக ஒரு நீராய்வு கூட செய்யாமல் அவசரமாகப் போலீஸ் படையை இறக்கி, மக்களை அச்சுறுத்தி, ஓஎன்ஜிசி-யின் வேலைகளை மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு முன்வைத்த கேள்விகளுக்கு என்ன பதில்? எழுத்துப்பூர்வமான மனுக்களிலும் அக்டோபர் 7 அன்று நடந்த பேச்சுவார்த்தையிலும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பும் குத்தாலம் பகுதி மக்களும் முன்வைத்த கேள்விகளுக்கு ஓஎன்ஜிசியும், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகமும் இன்றுவரை பதிலளிக்கவில்லை.
தமிழ்நாடு வேளாண் மண்டல பாதுகாப்பு மேம்பாட்டுச் சட்டம்-2020, சில விவசாயம் சாராத தொழில்களால் காவிரிப்படுகைப் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டங்கள் தடை செய்யப்படுவதாகவும் அது அறிவித்திருக்கிறது. காவிரிப்படுகையை ஓஎன்ஜிசி பாழாக்கியுள்ளதற்குப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் - 2020 வாக்குமூலம் அளித்திருக்கிறது.
காவிரிப் படுகையில் மூன்று கிலோமீட்டருக்குக் குறையாத ஆழத்தில் எண்ணெய்-எரிவாயுக் கிணறுகளை அமைத்து, நிலத்தின் மேல்மட்ட நன்னீர் தொகுப்புக்கும் நிலத்தடியில் உள்ள உப்பு நீர் தொகுப்புகளுக்கும் இடையிலான பாறை தடுப்புகளை எல்லாம் ஓ.என்.ஜி.சி உடைத்தறிந்துவிட்டது. மேல்மட்ட நல்ல நீரும், மிகுந்த ஆழத்தில் உள்ள உப்பு நீரும் இப்போது கலந்து போய் ஒட்டுமொத்த நீரும் பாழாகிவிட்டது.
வேளாண் மண்டலப் பாதுகாப்புச் சட்டம்-2020 புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் தடை செய்கிறது. ஆனால் பழைய திட்டங்களைச் செயல்பட அனுமதித்திருக்கிறது. இவை சிறிது காலத்தில் முடிவுக்கு வந்துவிடும் என்று தமிழ்நாடு அரசு அப்போது விளக்கம் கூறியது. தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் எண்ணெய்-எரிவாயுக் கிணறுகளில் பராமரிப்பு செய்வது என்பதைத் தவிர்க்க முடியாது என்றாலும், ஓஎன்ஜிசி மேற்கொள்வது சாதாரண பராமரிப்பு அல்ல. அதனுடைய செயல்பாடுகள் "விரிவாக்கம்", "நவீனமயமாக்கல்", "புதிய செயல்பாடுகள்" ஆகியவற்றில் அடங்கும். இவற்றில் எதைச் செய்தாலும் தமிழ்நாடு அரசிடம் புதிய சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற வேண்டும். அத்தகைய அனுமதியைப் பெறாமலே ஓஎன்ஜிசி நிறுவனம் இப்பணிகளைச் செய்து வருகிறது.
கச்சா எண்ணெய் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதற்காகப் பழைய கிணறுகளில் பராமரிப்பை மீறிய விரிவான வேலைகளை ஓஎன்ஜிசி செய்கிறது. பழைய எண்ணெய் கிணறுகளில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இவற்றுக்கெல்லாம் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அது அனுமதி பெற்றதே இல்லை. புதிய கிணறுகள் அமைக்க வழியில்லாமல் போனதால் பழைய எண்ணெய்-எரிவாயுக் கிணறுக்குள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நிலத்தடி களிப்பாறையில் நொறுக்குதலைச் செய்ய சக்திவாய்ந்த வெடிப்புகளை நடத்தி, அதிகப்படியான இரசாயனத்தைச் செலுத்தி, உற்பத்தியை அதிகரிக்க முயற்சிக்கிறது. ஓஎன்ஜிசியின் செயல்பாடுகள் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை.
எங்கள் கேள்விகளுக்கு என்ன பதில்?
ஓஎன்ஜிசி செய்வது பராமரிப்புதான் என்றால், ஆயிரக்கணக்கான இரும்புக் குழாய்கள் எதற்கு கொண்டு வரப்படுகின்றன? கொண்டு வரப்படும் குழாய்கள் பூமிக்குள் செலுத்தப்படுகின்றன. அவை எங்கே போகின்றன?
சாதாரணமாக ஒரு பராமரிப்பு என்பதற்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் போதும். ஆனால் இரண்டு மாதங்களுக்குக் குறையாமல் ஒவ்வொரு எண்ணெய்-எரிவாயுக் கிணறிலும் ஓஎன்ஜிசி விரிவான பணிகளைச் செய்கிறது. இது எப்படி பராமரிப்பாகும்?
2024-ல் ஓஎன்ஜிசியின் சட்டவிரோதப் பணியை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டுபிடித்து அம்பலப்படுத்தியது. பழைய எண்ணெய் கிணறுகளுக்குள் 1500 மீட்டர் ஆழத்தில் ஜன்னல் அமைத்து, அவற்றின் வழியாகப் பக்கவாட்டுக் கிணறுகளை 3 கிலோமீட்டர் ஆழத்திற்குச் சாய்வாக அமைப்பது 'சைடு ட்ராக்கிங்' எனப்படும். பழைய எண்ணெய்-எரிவாயுக் கிணறுகளுக்குள் இப்படிப் பக்கவாட்டுக் கிணறுகள் அமைத்து, அபாயகரமான ஹைட்ராலிக் பிராக்சரிங் முறையில் நிலத்தடி களிப்பாறைகளை நொறுக்கி, பிளவுகளை உருவாக்கி, நீண்ட தூரம் வரை ஹைட்ரோகார்பன் வளத்தை உறிஞ்சி எடுக்கும் திட்டம் இது. புதிய எண்ணெய் கிணறு அமைப்பதற்கும், பழைய எண்ணெய் கிணறுக்குள் பக்கவாட்டுக் கிணறுகள் அமைப்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. எங்களுக்கு அந்தத் திட்டம் கிடையாது என்று ஓஎன்ஜிசி மறுத்தால் அது உண்மைக்குப் புறம்பானது.
அன்றைய மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அவர்கள் தமிழ்நாடு அரசு 'சைடு ட்ராக்கிங்' எனப்படும் பக்கவாட்டுக் கிணறு அமைப்பதை அனுமதிக்கவில்லை என்று கூறி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி வேலைகளைத் தடுத்து நிறுத்தினார். இப்போது ஓஎன்ஜிசி நிறுவனம் அதே வேலைகளை எந்தத் தடையும் இன்றி நடத்த முயற்சிக்கிறது.
இத்தகைய பணிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு விதிமுறைகள்-2006-ன் படியும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம்-2020-ன் படியும், இது "விரிவாக்கம்" என்றும் "புதிய செயல்பாடு" என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் புதிதாகத் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். அதை ஓஎன்ஜிசி பெறாமலே செய்வதால் இது சட்டவிரோதப் பணி ஆகும். இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் போலீஸ் பாதுகாப்பு கொடுத்து, இப்பணி நடப்பதற்குத் துணையாக நிற்கிறது.
ஓஎன்ஜிசியின் எரிவாயுக் கிணறுகள் முன்னமே மூன்று கிலோமீட்டர் ஆழத்திற்குச் சென்று விட்டதால், அதற்கும் கீழே கடினப் பாறைகள் இருப்பதால் மேலும் ஆழப்படுத்த முடியாத நிலையில், மேலிருந்து கீழாக வெவ்வேறு நிலஅடுக்குகளில் உள்ள புதிய ஹைட்ரோகார்பன் மண்டலங்களில் உள்ள வளங்களைப் 'பெர்பொரேஷன்' முறையில் நீண்ட துளைகளை உருவாக்கி, உறிஞ்சி எடுப்பது ஆகியவற்றுக்கு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டப்படி அவை "புதிய செயல்பாடுகள்" (New Activity) என்பதால் சுற்றுச்சூழல் துறையின் புதிய அனுமதிகள் பெற வேண்டும். இந்த அனுமதியை ஓஎன்ஜிசி பெறாத காரணத்தால் ஓ.என்.ஜி.சி.-யின் பணிகள் சட்டவிரோதப் பணிகள் ஆகும். இவற்றை பராமரிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தி ஓஎன்ஜிசி மூடி மறைக்கிறது.
மூன்று கிணறுகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி இருக்கிறதா?
குத்தாலம் ராஜகோபாலபுரம் ஓஎன்ஜிசி எரிவாயு கிணறுகள் வளாகத்தில் மூன்று எரிவாயுக் கிணறுகள் உள்ளன. இவை வெவ்வேறு ஆண்டுகளில், வெவ்வேறு ஆழத்திற்கு அமைக்கப்பட்டவை. 2000ஆம் ஆண்டு "கே.யூ.டி-9" என்ற கிணறு அமைக்கப்பட்டது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி இருக்கிறதா? மற்ற இரண்டு கிணறுகள் அமைப்பதற்குச் சுற்றுச்சூழல் அனுமதி அல்லது அந்த அனுமதியில் கூடுதல் திருத்தங்கள் பெறப்பட்டுள்ளனவா? என்ற கேள்வியை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பும், குத்தாலம் மக்களும் முன்வைத்தார்கள். ஆனால், இதற்கு ஓஎன்ஜிசியும் மாவட்ட நிர்வாகமும் பதில் தரவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி இருக்கிறதா என்ற கேள்வி தொழில்நுட்ப ரகசியம் அல்ல. இதைக்கூட ஓ.என்.ஜி.சி.-யால் காட்ட முடியவில்லை. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மௌனம் காக்கிறது.
"எங்களுக்கு டெல்டா மாவட்டங்களில் புதிய எண்ணெய்க் கிணறுகள் அமைக்கத் திட்டம் இல்லை" என்று அறிக்கை வெளியிடுவதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட கிணறுகளின் சுற்றுச்சூழல் அனுமதியை ஓஎன்ஜிசி காட்டியிருக்கலாமே! குத்தாலம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. புதிய கிணறுகள் அமைக்கவில்லை. ஆனால் பழைய கிணறுகளில் பராமரிப்பு என்ற பெயரில் புதிய கிணறுகளுக்கு இணையான வேலைகளைச் செய்கிறது என்பதே குற்றச்சாட்டு.
அனுமதிக்கப்படாத வேலைகளைத் தமிழ்நாடு அரசிடம் புதிய சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறாமல் செய்வதால், ஓ.என்.ஜி.சி.-யின் இப்பணி சட்டவிரோதப் பணி என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகிறது.
2000-ஆம் ஆண்டு, எரிவாயுக் கிணறு அமைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட நீர் தர ஆய்வுச் சான்று மற்றும் இப்போது 2026-ல் அதே இடத்தில் எடுக்கப்பட்ட நீர் தர ஆய்வுச் சான்று ஆகியவற்றை அளிக்குமாறு மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு, ஓ.என்.ஜி.சி.-யிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் இருந்து பதில் இல்லை. இதையெல்லாம் "தொழில்நுட்ப ரகசியங்கள்" என்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் கூறி மக்களை வியப்பில் ஆழ்த்துகிறார். காவல்துறையை வைத்துக்கொண்டு ஓஎன்ஜிசி பணிகளை நடத்துவதற்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.
காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தொடருமா?
ஓஎன்ஜிசி எண்ணெய்-எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்பட்ட பிறகு நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கலந்துவிட்டது. நிலத்தடி நீரில் புற்றுநோயை உருவாக்கும் பென்சீன் கலந்திருக்கிறது. இதற்கான முறையான நீர் ஆய்வுச் சான்றுகளை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த பிறகும் மாவட்ட நிர்வாகம் மௌனம் காக்கிறது.
ஓஎன்ஜிசி புதிய கிணறுகள் அமைக்கவில்லை என்று கூறுகிறது. ஆனால் புதிய கிணறுகளுக்கு நிகரான வேலைகளைச் சட்டவிரோதமாக நடத்துகிறது. காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தொடருமா என்று சந்தேகம் எழுகிறது. தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் உயிர்ப்போடு இருக்க வேண்டும். காவிரிப் படுகையின் நிலத்தடி நீர் இதற்கு மேல் கச்சா எண்ணெய்-பென்சீன் கலக்காமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கு, ஓஎன்ஜிசியின் வேலைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
காவிரிப் படுகை நீர் முற்றிலுமாகப் பாழாவதற்கு முன், காவிரிப்படுகை மக்கள் ஒட்டுமொத்தமாகப் புற்றுநோயாளிகளாக மாறுவதற்கு முன், மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் இதில் அக்கறை காட்ட வேண்டும்.
- பேராசிரியர் த. செயராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு