இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 ஒன்றியப் பகுதிகளும் உள்ளன. இந்தியா ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்று அழைக்கப்படுகிறது. அத்தனை மாநிலங்களும் தில்லியில் இருந்து இயங்கும் ஒன்றிய அரசின் அடிமைகளே. அனைத்து அதிகாரங்களையும் மையத்தில் குவித்து வைத்துக் கொண்டு, மாநிலங்களுக்குச் சொற்ப அதிகாரங்களை மட்டுமே அரசியல் சட்டம் வழங்குகிறது. ஒன்றிய அரசின் தயவு இல்லாமல் மாநிலங்கள் இயங்கவே முடியாது என்ற நிலை இந்தியாவில் நிலை பெற்றிருக்கிறது. இந்தியாவில் கூட்டாட்சி இருப்பதாகவும், அரசியலமைப்புச் சட்டம் அதைப் பாதுகாப்பதாகவும் தலைவர்கள் எல்லாம் பேசி வருகிறார்கள். ஆனால் எந்த மாநிலத்தின் நிலப்பரப்பும், மாநில உரிமையும், மாநிலத் தகுதியும் கூட இந்தியாவில் பத்திரமாக இல்லை.
நேற்றைய காஷ்மீர் மாநிலம் இன்று யூனியன் பிரதேசங்கள் ஆகிவிட்டன. கூட்டாட்சிக் கோட்பாடு என்ன ஆனது? அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு எங்கே போனது? மாநிலங்களின் எந்த உரிமையையும் எப்போது வேண்டுமானாலும் ஒன்றிய அரசு களவாடிக் கொள்ளலாம். இந்திய அரசு முறையில் கூட்டாட்சி சாயல்தான் உள்ளது. உண்மையில் கூட்டாட்சி நடைமுறையில் இல்லை. இது ஓர் ‘அரைகுறைக் கூட்டாட்சி’. அதுவும் கூட ஒன்றிய அரசு அனுமதிக்கும் வரையில்தான்.
இந்திய அரசியல் சட்டம் எழுதும்போதே, தேசிய இனப் பகுதிகளை மாநிலங்களாகச் சுருக்கி, சொற்ப அதிகாரங்களைக் கொடுத்து, அதையும் எப்போது வேண்டுமானாலும் ஒன்றிய அரசு பறித்துக் கொள்வதற்குச் சட்டப்பூர்வ வழிமுறைகளையும் ஏற்படுத்தி, அனைத்திற்கும் மேலாக மாநிலங்களை நிரந்தரமாகக் கண்காணிப்பிலேயே வைத்திருக்கும் வகையில், அந்த மாநிலத்திற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத, எந்தத் தேர்தலிலும் தேர்ந்தெடுக்கப்படாத, 35 வயது ஆன இந்தியக் குடிமகன் என்ற ஒற்றைத் தகுதியை மட்டுமே கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர்கள் மாநிலங்கள் அடிமைப்பட்டவைதான் என்பதற்கான அடையாளச் சின்னங்கள்.
ஆளுநர் என்ற இந்த அடையாளச் சின்னம் அகற்றப்பட வேண்டும். தேசிய இனங்களின் தன்னாட்சி, உரிமை அரசியலின் முதல் முழக்கம் இதுவே ஆகும்.
அறிஞர் அண்ணா "ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்கு கவர்னர்" என்று கூறினார். ஆளுநர் பதவி தேவையற்ற ஒன்று என்பதை அண்ணா இவ்வாறு கூறினார். ஆனால் ஆட்டுக்குத் தாடி குடைச்சல் கொடுப்பதில்லை. ஆனால் ஆளுநர்கள் மாநிலங்களுக்குக் குடைச்சலைக் கொடுக்கிறார்கள். மாநில அரசுகளின் செயல்பாடுகளை முடக்குகிறார்கள். சட்டமன்றம் இயற்றும் சட்டங்களைக் கிடப்பில் போட்டு மாநில நிர்வாகத்தை நகர விடாமல் மயக்க நிலையில் வைக்கிறார்கள். மனிதனை முடக்கிப் போடும் முடக்கு வாத நோயைப் போல, மாநிலங்களுக்கு வாய்த்த நோய் ஆளுநர்கள்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிறோம், இந்திய ஜனநாயகம் தில்லியில் இருந்து வரும் ஒரு கண்காணிப்பால் மாநிலங்கள் கவனமாகக் கண்காணிக்கப்படுகின்றன. எந்த அசைவும் தில்லி எஜமானர்களுக்கு உடனடியாகச் சொல்லப்படுகிறது. தில்லி எஜமானர்களின் சார்பில் ஆளுநர்கள் மாநில அரசுகளை மிரட்டுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளை மக்களுக்கே தொடர்பற்ற, எவராலும் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் கலைத்திடும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு ஆளுநராக வாய்த்திருக்கும் சனாதன ஆர்.என்.ரவி மட்டுமே கோளாறானவர் வேறு எவராவது வந்தால் நிலைமை சீரடைந்து விடும் என்று எவரும் கருத முடியாது. ஒவ்வொரு மாநிலமும் கடந்த காலத்திலும், இப்போதும் ஆளுநர்களின் அடாவடித்தனத்தால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ஆளுநர் பதவி
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் உருவாக்கிய பெருமாகாணங்கள் (Presidencies) கவர்னர்கள் என்ற ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்டன. 1773-இல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை ஒழுங்குபடுத்த இங்கிலாந்து நாடாளுமன்றம் இயற்றிய ஒழுங்குமுறைச் சட்டம் கல்கத்தாவில் இருந்த வங்காள கவர்னர் இனி கவர்னர் ஜெனரல் எனப் பொறுப்பு வகிப்பார் என்றும், சென்னைப் பெருமாகாண ஆளுநரும், பம்பாய் பெருமாகாண ஆளுநரும் அவருக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றும் கூறியது. 1833 - பட்டயச் சட்டம் வங்காள கவர்னர் ஜெனரலை ‘இந்தியாவின் கவர்னர் ஜெனரல்’ எனப் பெயர் மாற்றம் செய்து, பொறுப்பும் அளித்தது.
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனியின் இயக்குநர்கள் குழுவுக்கு (Board of Directors) அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டவர். 1857-இல் நிகழ்ந்த சிப்பாய்க் கலகத்திற்குப் பின், கம்பெனி நிர்வாகம் முடிவுக்கு வந்தது. இந்திய நிர்வாகத்தை இங்கிலாந்து விக்டோரியா மகாராணியார் நேரடியாக ஏற்றார். இந்திய கவர்னர் ஜெனரல் இங்கிலாந்து மணிமுடியின் பிரதிநிதி என்று பொருள்படும் வைஸ்ராய் (Viceroy) எனப் பொறுப்பு வழங்கப்பட்டார். வைஸ்ராயின் கீழ் ஆளுநர்கள் பெருமாகாணங்களை நிர்வகித்தனர். 1858-இல் ஐந்து மாகாணங்கள் இங்கிலாந்து மணிமுடியின் நேரடி ஆட்சியில் இருந்தன. இம்மாகாணங்களின் ஆளுநர்கள் இங்கிலாந்து மணிமுடியின் முகவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு முழுமையான மாகாண நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. 1947-இல் பிரித்தானிய இந்தியாவில் 17 மாகாணங்கள் இருந்தன. இவை அனைத்தும் ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்டன. அவர்கள் கவர்னர் ஜெனரல் அல்லது வைஸ்ராயின் நிர்வாகத்தின் கீழ் இருந்தனர். 1919 - மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் மாகாணத்தில் ஒரு சட்டமன்றத்தை உருவாக்கியது; நிர்வாகத்தில் இந்தியர்கள் பங்கேற்க வழி செய்தது. தேர்தலில் நின்று வெற்றி பெறும் கட்சியின் அமைச்சர்கள் அவர்களுக்கு என்று தரப்பட்ட அதிகாரங்களைச் (Transferred Subjects) பயன்படுத்தி நிர்வாகம் செய்வார்கள். ஆனால், உண்மையான அதிகாரங்கள் (Reserved subjects) ஆளுநர் மற்றும் அவருடைய கவுன்சிலிடம் இருக்கும். ஆளுநர், மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை நிராகரிக்கும் வீட்டோ அதிகாரத்தைப் பெற்றிருந்தார்.
1935-இல் இந்திய அரசுச் சட்டம் மாகாண ஆட்சி வழங்கியது. ஆனால், ஆளுநரின் விருப்புரிமை (discretionary powers) அவருக்கு வழங்கப்பட்டன. அதைப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இயற்றும் மசோதாக்களை veto செய்யலாம். அம்மசோதாக்களுக்குத் தன் ஒப்புதலை நிறுத்தி வைக்கலாம். இவையெல்லாம் மாகாண ஆளுநருக்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள். அந்நியர்கள் ஆட்சிக் காலத்தில் அத்தகைய அதிகாரங்கள் ஆளுநர்களுக்குத் தேவைப்பட்டன. இந்தியா காலனிய ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடந்த காலம் அது.
1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பிறகு, இந்தியத் தற்காலிக அரசியலமைப்பு ஆணை வெளியடப்பட்டது. அதில் ‘ஆளுநரது விருப்பப்படி’ என்ற சொல்லாடல் நீக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்ட அவை (Constituent Assembly of India) இந்தியாவுக்கான அரசியல் சட்டத்தை உருவாக்கம் செய்தது. 1946 திசம்பர் 9 முதல் 1949 நவம்பர் 26 வரை, இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாட்கள், இந்திய அரசியல் சட்ட அவை செயல்பட்டு இந்திய அரசியல் சட்டத்தை வரைவு செய்தது. அந்த அரசமைப்புச் சட்டம் சுதந்திர இந்தியக் குடியரசுக்கானது.
ஆங்கிலேயர்கள் காலத்தில், மாகாணத்தில் சர்வ அதிகாரங்களையும் கொண்டிருந்த ஆளுநர்கள் என்ற பதவி, சுதந்திர இந்தியாவிற்குத் தேவையில்லை. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளாகப் பிரிந்து விட்ட நிலையில், எந்த மாகாணமும் பிரிந்து போய் விடக் கூடாது என்று கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காகவே ஆளுநர் என்ற பதவியைத் தக்க வைத்தார்கள். இதன் விளைவாக, ஆங்கிலேயர்கள் காலத்தில் எப்படி மாகாணங்கள் கவர்னரின் கட்டுப்பாட்டில் இருந்தனவோ அது போல விடுதலை பெற்ற இந்தியாவிலும் கவர்னர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சூழல் ஏற்பட்டது.
இந்திய அரசியலமைப்பை எழுதிய அவைக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை எப்படித் தெரிவு செய்வது என்பதைத் தீர்மானிப்பதே மிக முக்கிய பணியாக இருந்தது. Provincial Constitution Committee மற்றும் Constituent Assembly ஆகியவை ஆளுநரின் தேர்வு மற்றும் அதிகாரங்கள் குறித்து 1947 - 1948 ஆகிய ஆண்டுகளில் விரிவாக விவாதித்து முடிவு செய்தன.
இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழு (The Drafting Committee) ஆளுநர் குறித்த முடிவுகளைத் தங்களுடைய வரைவு அரசியலமைப்பில் சேர்த்துக் கொண்டது.
மாகாண அரசியலமைப்புக் குழு 1947 (Provincial Constitution Committee - 1947) சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில், மாகாணத்திற்கான ஒரு அரசியலமைப்பைப் பரிந்துரை செய்யப் பொறுப்பேற்றது. தொடக்கத்தில், வயது வந்த வாக்காளர்களால் (adult franchise) நேரடியாகத் தேர்தலில் ஓர் ஆளுநரைத் தேர்ந்தெடுப்பது என்ற முறையை இது பரிந்துரை செய்தது.
இதன்பிறகு, அரசியலமைப்பு ஆலோசகர் பி.என்.ராவ் தொடக்கநிலை வரைவு ஒன்றை தயாரித்தார். அதில் மாகாண ஆளுநர் மாகாண சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவது என்ற முறையைச் சேர்த்திருந்தார்.
1947-ஆம் ஆண்டு சூன் 7 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒரு 'சிறப்புத் தேர்தல்குழு' மூலம் ஆளுநரை அந்தந்த மாநில அரசு நியமிக்க வேண்டும் என முடிவானது. இந்த அரசியல் சட்ட வரைவானது அரசியல் நிர்ணய சபைத் தலைவரிடம் வழங்கப்பட்டது. அப்போதும், இது சரியாக இருக்குமா என யோசனை எழுந்ததையடுத்து, ஆளுநர் தேர்வு குறித்து மீண்டும் விவாதம் நடந்தது.
1948-இல் அரசியல் அமைப்பு வரைவுக் குழு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் தலைமையில் பி.என். ராவ் அளித்த முன்வரைவைப் பரிசீலித்தது. அதன் பிறகு வரைவு அரசியலமைப்பை (Draft Constitution) பிப்ரவரி 1948-இல் அளித்தது. இதில் ஆளுநரைத் தெரிவு செய்ய ஒரு மாற்று முறையைப் பரிந்துரைத்திருந்தது. மாகாண சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு பெயர்களை அளிக்க வேண்டும் என்றும், அதில் ஒருவரைக் குடியரசுத் தலைவர் ஆளுநராக நியமிப்பார் என்றும் அதில் பேசப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்கும் முதலமைச்சர் இருக்கும் போது, ஆளுநரும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தால், அவர்களிடையே முரண்பாடுகள் வந்து விடும் என்பதால், சட்டமன்றம் நான்கு பேரைத் தெரிவு செய்யவும், அதில் ஒருவரைக் குடியரசுத் தலைவர் ஆளுநராக நியமிப்பார் என்றும் கூறப்பட்டது.
"இதில் எந்த முறையில் வேண்டுமானாலும் ஆளுநரை நியமித்துக் கொள்ளுங்கள், ஆனால் மூன்றில் இரு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதன் மூலம் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய முடியும்" என்று வரைவுச் சட்டம் கூறியது. இதனைப் பரிசீலிக்க சிறப்புக் குழு ஒன்றை அரசியல் நிர்ணய சபைத் தலைவர் நியமித்தார். இந்தச் சிறப்புக் குழுவானது, ஆளுநரைக் குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிக்கலாம் என்று 1948-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாளன்று கூறியது. மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிப்பதன் மூலம் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்யலாம் என்பது கைவிடப்பட்டது.
1949-இல் அரசியல் சட்ட அவையில் ஆளுநரைத் தெரிவு செய்வதற்கான வெவ்வேறு முறைகள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக 1949 மே மாதத்தில், இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஆளுநர் முதலமைச்சருடன் உரசலில் ஈடுபடக் கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாகாணத்தில் இணையான இன்னொரு 'அதிகார மையம்' உருவாகவும் வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டது.
இறுதியாக அரசியல் அமைப்பு நிர்ணய அவையில் முக்கிய உறுப்பினர்களான ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்றோர் மாகாண ஆளுநர் கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டும் என்றும், அவர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் பாரபட்சமற்ற தன்மை, மற்றும் மைய அரசு - மாகாணங்கள் இவற்றிற்கிடையே ஓர் இணைப்பு ஆகியவை கிடைக்கும் என்றும் கூறினர்.
1949-ஆம் ஆண்டு மே 30-ஆம் நாள் அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட பிரதமர் நேரு பேசும்போது, "மாநில அரசு ஒப்புக் கொள்ளக் கூடிய பொதுவான ஒருவரை ஆளுநராக நியமிப்பது நல்லது. அரசியலில் நேரடியாகப் பங்கு கொள்ளாத, வெளி மாநிலத்தைச் சேர்ந்த, திறமையுள்ள ஆளுநராக நியமிப்பது மிகச் சிறந்தது. கல்வித்துறை அல்லது வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டால், அவர்கள் அரசுடன் முழுமையாக ஒத்துழைத்து, அரசின் கொள்கைத் திட்டங்களைச் செயல்படுத்த எல்லா வகையிலும் உதவியிருப்பார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருப்பார்கள்" என்று கூறினார்.
ஆளுநரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் முன்பு, மாநில முதலமைச்சரின் ஒப்புதலைப் பெறுவது தேவையா என்ற நேருவின் கருத்தை டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் ஆகியோரும் வலியுறுத்திப் பேசினர்.
இதுகுறித்த திருத்தத்தை இறுதியாகக் கொண்டு வந்தவர் பிரேஸ் செவர் பிரசாத். "மத்திய அரசின் அதிகாரம் அனைத்து மாகாணங்களிலும் நிலை நாட்டப்பட வேண்டும். இது அவசியமானது" என்பது அவர் கருத்து. இல்லாவிட்டால் மாநிலங்கள் பிரிந்து போய் விடக் கூடும் என்று அஞ்சினார்கள்.
நிறைவாக 1949 மே 31 அன்று "குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர்" என்ற முடிவு எட்டப்பட்டது. இதுவே இந்திய அரசியல் சட்டம் கூறு - 155-இல் பேசப்பட்டிருக்கிறது.
இந்திய ஒருமைப்பாட்டைக் காக்க ஒன்றிய அரசின் நியமன ஆளுநர் என்ற முறை ஏற்கப்பட்டது. ஆளுநரின் ஒத்துழைப்புடன் இணக்கமான நிர்வாகம் மாநிலங்களில் நடைபெறும் என்ற அரசியல் சட்ட அவையின் எதிர்பார்ப்பு, நோக்கம், முயற்சி அனைத்தும் இப்போது குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டன. ஒன்றியத்தில் அதிகாரம் செலுத்தும் பாஜக திட்டமிட்டே மாநிலங்களின் நிர்வாகத்தை முடக்குவதற்காக, தங்கள் ஆட்களை ஆளுநர்களாக நியமிக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆர். என். ரவி செய்வதைப் பிற மாநிலங்களிலும் ஆளுநர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆளுநரால் தொல்லையுறும் மாநிலங்கள்
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் ஆளுநர்களால் உருவாக்கப்படும் தடைகளைக் கடந்து செயல்பட வேண்டியுள்ளது. காஷ்மீர், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் ஆளுநர்களே வன்முறைகளை உற்பத்தி செய்தார்கள். இந்திய அரசியல் சட்டம் வரைவு செய்த போது தலைவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக இன்று மையத்தில் உள்ள ஒன்றிய அரசின் விருப்பப்படி மாநில அரசைக் கண்காணிக்கும் கண்காணிகளாகவும், மாநில நிர்வாகத்தைத் தங்களுடைய விருப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி முடக்கும் முட்டுக்கட்டைகளாகவும் ஆளுநர்கள் விளங்குகின்றனர்.
இத்தகைய ஆளுநர்களை என்ன செய்வது என்பது மாநிலங்களால் தீர்மானிக்க முடியாத மிகப்பெரிய பிரச்சனை. ஒரு மாநிலம் சட்டம் இயற்றி ஓர் ஆளுநரை நீக்க முடியாது. ஒரு மாநிலம் சட்டமன்றத்தின் மூலமோ, அமைச்சரவையின் மூலமோ ஆளுநர்களின் அதிகாரத்தைச் சுருக்கவும் வழியில்லை. ஆங்கிலேயர்கள் காலத்தில் மாகாண ஆளுநர்களுக்கு இருந்த விருப்பு அதிகாரத்தை, இந்தியா விடுதலை பெற்ற பிறகு மாகாணங்களின் நிர்வாகத் தலைவராகக் கருதப்படும் ஆளுநருக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கி இருக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கவர்னர்களுக்குக் கூடுதல் பொறுப்பும் கடமையும் அதிகாரமும் இருந்தன. ஆனால் இப்போது கடமையும் பொறுப்பும் ஆளுநர்களுக்கு இல்லை; ஆனால் அதிகாரம் மட்டும் இருக்கிறது. இதைப் பயன்படுத்தி எவ்வளவு தொல்லைகளைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு தொல்லைகளை மாநில அரசுகளுக்குக் கொடுத்து வருகிறார்கள். மாநிலங்களில் இருக்கும் ஆளுநர் மாளிகைகள் சதியாலோசனை மண்டபங்களாக மாறியிருக்கின்றன. பிரமிக்க வைக்கும் அளவிற்கு மிகப் பெரும் தொகையை ஆளுநர்களுக்கும் ஆளுநர் வாழ்விடத்திற்கும் மாநில அரசு செலவு செய்ய வேண்டி இருக்கிறது.
இதை மாநில அரசு குறைத்து விடவும் முடியாது. ஏனெனில் இந்திய அரசியல் சட்ட கூறு 158-இன் படி ஆளுநருக்கான ஊதியம், சலுகைகள் நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன. அதை மாநில அரசு கொடுக்க வேண்டும். மாநில அரசின் செலவில் வாழ்ந்து கொண்டு, அந்த மாநில அரசுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் தொல்லை கொடுக்க முடியும் என்று ஆளுநர் சிந்தித்துக் கொண்டிருப்பார்.
மாநில அரசால் எதுவுமே செய்ய முடியாது. ஆளுநரை நீக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு மேல் வேண்டுகோள் குடியரசுத் தலைவரிடம் அளித்துவிட்டு காத்துக் கிடப்பதும், உச்ச நீதிமன்ற கதவைத் தட்டுவதுமாக மாநிலங்கள் இருக்கின்றன.
ஒன்றிய அரசில் காங்கிரஸ் கட்சி அதிகாரம் செலுத்திய போதும் ஆளுநர்கள் மூலம் மாநிலங்களுக்குத் தொல்லை கொடுக்கப்பட்டது. நரேந்திர மோடி பிரதமராக ஆன பின், அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் ஓர் இணை அரசாங்கத்தை நடத்துவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளது. பாஜக ஒன்றிய அரசு எல்லா மாநிலங்களிலும் ஆளுநர்களைப் பயன்படுத்தி மாநில நிர்வாகத்தை முடக்குகிறது.
ஆளுநர்களின் அடாவடிகள்
2015-ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் ஆளுநர் ஜே.பி. ராஜ்கோவா தானே சட்டமன்றத்தைக் கூட்டினார். காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்று அவரே அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை வெளியில் இழுத்து ஒரு பொம்மை அரசையும் அவரே உருவாக்கினார். உச்ச நீதிமன்றம் இதைக் கண்டனம் செய்தது. அந்தப் பொம்மை அரசை நீக்கியது.
உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சியில் ஹரிஷ் ராவத் முதல்வர். காங்கிரஸ் கட்சியில் 69 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியாளர்களாக முதலமைச்சருக்கு எதிராக இருந்தனர். இதைப் பயன்படுத்தி ஆளுநர் கே.கே.பால் அந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார். சட்டமன்றத்தில் தன்னுடைய பெரும்பான்மையைக் காட்டுவதற்கு ஹரிஷ் ராவத்திற்கு வாய்ப்பே தரப்படவில்லை. இதை உச்ச நீதிமன்றம் கண்டனம் செய்தது.
2017-இல் கோவா, மணிப்பூர், பீகார் ஆகிய மாநிலங்களில் ஆளுநர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜக ஆட்சியை நிறுவினார். டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜகவினால் களம் இறக்கப்பட்ட கிரண்பேடி படுதோல்வியைச் சந்தித்தார், அவர் உடனடியாகப் புதுச்சேரியில் ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்குக் குடைச்சல் கொடுப்பதையே தம் ஆளுநர் பணியாகக் கிரண் பேடி செய்து வந்தார். அதிகாரிகளை நேரடியாக அழைத்துக் கலந்தாய்வு நடத்துவது, அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடுவது என்று போட்டி அரசாங்கத்தையே நடத்தினார்.
2017-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் கோவையில் அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளை அழைத்து மாவட்ட நிர்வாகப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். கோவையில் நடைபெற்ற திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். சில உத்தரவுகளையும் பிறப்பித்தார். இவ்வாறு தமிழக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் நேரடியாகத் தலையீடு செய்தார். இதைத் தொடர்ந்து, வேறு சில மாவட்டங்களிலும் இதே வேலையைச் செய்தார். தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஆளுநர்கள் இவ்வாறு தலையிட்டார்கள்.
ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கலைப்பது என்பது கடந்த காலத்தில் ஒன்றிய அரசின் ஒரு தொடர் நடவடிக்கையாகவே இருந்து வந்தது. 1970-கள் மற்றும் 1980-களில் இந்திரா காந்தி மாநில அரசுகளைக் கலைத்தார். அடுத்து வந்த மொரார்ஜி தேசாய் 1977-இல் காங்கிரஸ் அரசுகளைக் கலைத்தார். மொரார்ஜி தேசாய்த் தலைமையிலான ஜனதா கட்சி அரசு, 1977-இல் இந்திரா காந்திக்குப் பிறகு பதவிக்கு வந்தபோது, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த ஒன்பது மாநிலங்களின் சட்டமன்றங்களைக் கலைத்து, புதிய தேர்தல்களை நடத்தியது. பீகார், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள்.
தமிழ்நாட்டிலும் நான்கு முறை ஆட்சிக் கலைப்பு நடந்திருக்கிறது. திமுக அரசு இரண்டு முறையும் அதிமுக அரசு இரண்டு முறையும் கலைக்கப்பட்டு இருக்கின்றன.
1971-இல், தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி மீது பேரன்பு கொண்டவர் ஆளுநர் கே.கே. ஷா. ஆனால் அவரிடம் கட்டாயமாக ஆட்சி கலைப்புக்கான அறிக்கையைப் பெற்று இந்திரா காந்தி கலைஞர் கருணாநிதி அரசை 1976-இல் கலைத்தார். 1991-இல் திமுக ஆட்சியில் இருந்தது. அகாளி தளத் தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். காங்கிரஸ் கட்சி சந்திரசேகருக்கு ஆதரவு கொடுத்து அவரைப் பிரதமர் ஆக்கியது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைக் கலைக்கும்படி சந்திரசேகரை காங்கிரஸ் வற்புறுத்தியது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் திமுக ஆட்சியைக் கலைப்பதற்காக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் அறிக்கை கேட்ட நிலையில், அறிக்கை தர மறுத்து, பர்னாலா தன் பதவியைத் துறந்தார்.
2021-இல் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், 2018-இல் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் ஆளுநர் மாளிகையின் வாயிலில் தர்ணா நடத்திய நிகழ்வுகள் நடந்தேறின.
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அத்துமீறல்கள்!
தமிழ்நாட்டில் 2021-இல் ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் செய்யப்பட்டார். அவர் தமிழ்நாட்டில் நேரடியாக நிர்வாகத்தில் ஈடுபட்டு ஒரு போட்டி அரசையே நடத்தத் தொடங்கினார். சட்டம் ஒழுங்கு உளவுத்துறை - டிஜிபி சுப்ரமணியை அழைத்துப் பேசினார். தமிழ்நாடு தலைமைச் செயலரைத் தனக்கு நேரடியாக அறிக்கை அளிக்கும்படி கூறினார். இந்த அத்துமீறல்கள் மட்டுமின்றி, ஓர் ஆளுநராக நடந்து கொள்வதை விட்டு, சனாதன இந்துத்துவ சித்தாந்தங்களைப் பிரச்சாரம் செய்து வருகிறார். சென்னை ஆளுநர் மாளிகை சாமியார்களின் கூடாரமாக விளங்குகிறது. பாஜக நியமனம் செய்யும் ஆளுநர்கள் அந்தந்த மாநிலங்களில் இந்துராஷ்ட்ரா உருவாக்கத்திற்கான முன்னோடிகளாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். 2022 நவம்பர் மாதம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகக் குடியரசுத் தலைவரைப் பார்த்து, ஆளுநரை நீக்கக் கோரி மனு அளித்தனர். 'மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்' என்று தம் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். ஆனாலும் ஆர். என். ரவி மாற்றப்படவில்லை. அவர் மீது எவ்வித நடவடிக்கையும் வரவில்லை. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே புதிய கல்விக் கொள்கையை நிராகரித்து விட்டன. ஆனால், 2025 ஏப்ரல் 25-26 ஆகிய நாட்களில், ஆர்.என். இரவி துணைவேந்தர்கள் மாநாட்டை நீலகிரியில் கூட்டி, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு கூறினார்.
சட்டமன்ற மரபுகளை உடைத்தெறிந்த ஆளுநர் ரவி
சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தில் படிக்கப்படும் ஆளுநர் உரை என்பது அரசால் தயாரிக்கப்படும்; படிப்பது மட்டுமே ஆளுநர்; தன் சொந்த விருப்பப்படி சேர்க்கவோ அல்லது அதில் உள்ள பகுதிகளை நீக்கவோ கூடாது. இதுதான் மரபு.
2023 சனவரி மாதம், சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை அப்படியே படிக்க வேண்டிய ஆளுநர் சில பகுதிகளை நீக்கிவிட்டுப் படித்தார். பெரியார், அண்ணா, அம்பேத்கர், கலைஞர் கருணாநிதி, திராவிட மாடல், காமராஜர், தமிழ்நாடு உள்ளிட்ட சொற்களைக் கொண்ட பகுதியை நீக்கிவிட்டுப் படித்தார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து, தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே பாதியிலேயே வெளியேறினார். வரலாற்றில் முதல்முறையாக சட்டமன்றத்தில் இருந்து ஒரு ஆளுநரே வெளிநடப்பு செய்தார். அரசு அச்சடித்து வழங்கிய ஆளுநர் உரையையே அவைக் குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆளுநர் ஆர்.என்.இரவி தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்றும், தமிழகம் என்றே சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்திக் கருத்து தெரிவித்தார். தமிழ்நாடு என்ற சொல்லையே வெறுக்கும் ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கிறார்.
2025 சனவரி 6 ஆம் நாள், திமுக அரசு பதவி ஏறிய நான்காவது ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு ஆளுநர் உரையைப் படிக்க எழுந்தார். அதிமுக உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஆளுநர் உரையில் இல்லாதவற்றைச் சேர்த்து ஆளுநர் படித்தார். திடீரென்று அவையிலிருந்து வெளியேறினார். தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடாததால் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. ஆளுநர் வெளியேறிய பிறகு ஆளுநர் உரையைப் பேரவைத் தலைவர் அப்பாவு தமிழில் படித்தார். இவ்வாறு ஆளுநர் உரையாற்றாமல் வெளியேறுவதும் 2025 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது.
இதுபோன்றுதான் ஆர்எஸ்எஸ் ஆளுநர்கள் பாஜக ஆளாத மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறார்கள். 2021-ஆம் ஆண்டு, மம்தா பானர்ஜியுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் வங்காளத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது என்று நேரில் கள ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினார். ஓர் ஆளுநருக்கு இது மரபு அல்ல என்று மம்தா பானர்ஜி விமர்சனம் செய்திருந்தார். என்னைத் துப்பாக்கியால் சுட்டாலும் நெஞ்சில் தாங்குவேன் என்று வீர வசனம் ஆளுநர் ஜெகதீப் தன்கர் பேசினார். எந்த கோப்பிலும் கையெழுத்திட மாட்டேன் என்று கோப்புகளை நிலுவையில் வைத்திருந்தார், தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டப்பேரவையை முடக்கப் போவதாக அறிவித்தார். வங்காளத்தில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்குமான மோதல் பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.
ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த பதில்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட 22 மசோதாக்களின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் ஆர்.என்.இரவி நிலுவையில் வைத்திருந்தார். பல்கலைக்கழகம் தொடர்பான பத்து மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.இரவி கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பி அனுப்பினார். இதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்குத் தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. ஆனால் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தது.
8.4.2025 அன்று நீதிபதி ஜே.பி. பார்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநர், அரசியலமைப்புச் சட்டம் 200-இன் படி, மசோதாக்களைத் திருப்பி அனுப்பவோ அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஒதுக்கவோ மட்டுமே முடியும்; அவற்றைக் காலவரையின்றி நிலுவையில் வைக்க முடியாது என்று தெளிவுபடுத்தியது.
சட்டப்பேரவையில் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் போது, அதைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது என்பது பொது விதியாக உள்ளதையும் தீர்ப்பில் சுட்டிக்காட்டிக் குறிப்பிட்டனர்.
ஆளுநர் மசோதாக்களைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பியதை நீதிமன்றம் சட்டவிரோதமானது என்று கூறி, அந்த 10 மசோதாக்களுக்கும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி (சரத்து 142-இன் கீழ்) ஒப்புதல் அளித்தது.
இந்தத் தீர்ப்பின் மூலம், ஆளுநர்கள் மசோதாக்களைக் கிடப்பில் போடுவதற்கான அதிகாரம் இல்லை என்பது உறுதியானது. இது, ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்த நீண்டகால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்தத் தீர்ப்பு ஆளுநர்களின் அதிகார வரம்பு குறித்து மற்ற மாநிலங்களுக்கும், குறிப்பாக கேரளாவிற்கும், ஒரு வழிகாட்டுதலை வழங்கியது. மேலும் ஆளுநர் ஒரு மாதத்திற்குள்ளும் குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள்ளும் முடிவெடுக்க வேண்டும் என்று வரையறுத்தது.
13 மே 2025 அன்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அரசியல் சட்ட பிரிவு 143-இன் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை எழுப்பி இருந்தார். பி.ஆர்.கவாய் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு 10 நாட்கள் விசாரணையை நடத்தி, 20 நவம்பர் 2025 அன்று திரௌபதி முர்மு அவர்களுக்குப் பதிலை வழங்கியது.
ஒரு மசோதாவை ஆளுநர் ஏற்காவிட்டால் அந்த மசோதாவைத் திருப்பி அனுப்ப வேண்டும். அதைக் கிடப்பில் போட முடியாது என்றும், பிரிவு 200-இன் படி விருப்புரிமை ஆளுநருக்கு உண்டு என்றும், அதன்படி மசோதாவை அவர் திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்யலாம் என்றும், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு ஒப்புதல் தர காலக்கெடு விதிக்க முடியாது என்றும், ஆனால் குறைந்த அளவிற்கு நீதிமன்றம் குறுக்கிடலாம் என்றும் விளக்கம் அளித்தது.
மாநிலச் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், எந்த பதிலும் அளிக்காமலும் ஆளுநர்கள் கிடப்பில் போட அதிகாரம் இல்லை. மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல், நிராகரித்தல் அல்லது குடியரபெற்றிருக்கிறார். ஜனநாயக நாட்டில், ஆளுநர்களுக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இடையூறு அளிப்பதுபோல செயல்பட முடியாது.
ஆட்சிக் கலைப்புகளும் ஆளுநர்களின் அதிகாரங்களும்
இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அரசியல் சட்ட கூறு 356-ஐப் பயன்படுத்தி இதுவரை 136 முறைகள் ஒன்றிய அரசு கலைத்திருக்கிறது. இவ்வாறு கலைப்பதற்கு ஆளுநரிடம் அறிக்கை பெற்றே அல்லது அறிக்கை பெறாமலோ கலைக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்துவிட்டு நிர்வாகம் செய்ய நியமன ஆளுநர்களுக்கு அதிகாரம் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? அவ்வாறு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை ஜனநாயக விரோதமானது.
இந்திய ஜனநாயகம் ஆளுநர்களின் செயல்பாட்டால் கேலிக்கூத்தாகி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களை 6.28 கோடி வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இத்தனை கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து நிறைவேற்றும் மசோதாவை, எந்தத் தகுதியும் இல்லாத நியமன ஆளுநர் காலவரம்பின்றி முடக்கிப் போடுகிறார். நீதிமன்றமும் அவரை நீக்குவதற்கு உத்தரவிட முடியாது; சட்டமன்றமும் அவரை நீக்க அதிகாரம் படைத்ததல்ல; மக்களும் அவரை நீக்குவதற்குச் சட்டபூர்வ வழிமுறைகள் ஏதும் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஒரு மாநிலத்தின் நிலை என்ன? மாநில அரசு ஒவ்வொரு மசோதாவுக்கும் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்ட வேண்டிய தேவை இருக்கிறது.
ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ளது விருப்பு அதிகாரம் Серவாதிகாரத் தன்மை கொண்டது. ஆளுநரின் விருப்பு அதிகாரம் (Discretionary Powers) என்பது அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல், அரசியலமைப்பின் கீழ் தனியாக முடிவெடுக்கும் அதிகாரமாகும். இதில், தொங்கு சட்டமன்றத்தில் முதல்வர் நியமனம், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது தடை செய்வது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மசோதாக்களை நிறுத்தி வைப்பது, குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்வது போன்றவை அடங்கும். அரசியலமைப்புச் சட்டம் கூறு 163-இன் படி, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே இந்த அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும். விருப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த காலத்தில் காலவரையறை இல்லாமல் மசோதாக்களைக் கிடப்பில் போட்டுப் பல மாநில நிர்வாகங்களை ஆளுநர்கள் முடக்கி வந்துள்ளனர்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்ட கூறு 159 (1)-இன் படி ஆளுநர் கீழ்க்காணும் உறுதிமொழியை ஏற்கிறார்:
"...ஆகிய நான் தமிழ்நாடு மாநிலத்தின் ஆளுநராக உண்மையுடன் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் என் திறமையைப் பயன்படுத்திப் பாடுபடுவேன் என்றும், இந்த தமிழ்நாடு மாநிலத்தின் மக்களுக்காகவும் அவர்களுடைய நலம் கருதியும் பணியாற்றுவேன் என்றும் உறுதி எடுத்துக் கொள்கிறேன்."
ஆளுநர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு அவர்கள் உண்மையாக இருந்திருக்கிறார்களா?
அரசமைப்புச் சட்டத்தைக் காக்க வேண்டிய ஆளுநர் ஆர். என். ரவி இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்திருக்கிறார். 2024 செப்டம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஊரில் 'வித்யாமூஜன்' பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் அரசியலமைப்பு பற்றி கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். மதச்சார்பின்மை என்ற சொல் அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின் செருகப்பட்டது என்று அந்தச் சொல்லுக்கும், கருத்தியலுக்கும் எதிராகப் பேசுகிறார். அதாவது அச்சொல் தேவையற்றது என்பது அவருடைய கருத்து. அரசியலமைப்பின் மீது உறுதிமொழி எடுத்த ஆளுநர் அந்த அரசியல் அமைப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை விமர்சிப்பதும், மதச்சார்பின்மை தேவை இல்லை என்று பேசுவதும், அந்நியமானது என்று விமர்சிப்பதும், அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயலாகாதா? மதச்சார்பின்மை மீது ஆளுநர் ரவி வெறுப்பை வளர்க்கிறார். அவருடைய கன்னியாகுமரி பேச்சு அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். கலவரத்தைத் தூண்டக்கூடியதாகும். அரசியல் சட்ட கூறு - 159-இன் படி, அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பதாக, பின்பற்றுவதாக, நிலைநாட்டுவதாக, மக்களுக்குச் சேவை செய்வதாக, மக்கள் நலனுக்கு அர்ப்பணிப்பதாக உறுதிமொழி எடுத்துவிட்டு, அரசியல் சட்டத்தையே விமர்சனம் செய்வது எப்படி நியாயமாகும்?
இந்துத்துவ பிரச்சாரம் செய்யும் ஆளுநர்!
இந்து தர்மம்தான் பாரத நாட்டை உருவாக்கியது; பாரதமும் இந்து தர்மமும் பிரிக்க முடியாதவை என்கிறார். முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் சனாதன தர்மத்தை அழிக்க முயன்றனர் என்றும், சுதந்திரத்திற்குப் பின் சனாதன தர்மம் எழுச்சி பெறும் என்று நினைத்ததாகவும், வெள்ளைக்காரர்கள் சென்ற பிறகு பல ஏமாற்று வேலைகள் இங்கு நடந்தன என்றும், தவறான கோட்பாடுகள் நமக்குச் சொல்லப்பட்டன என்றும், அதில் முக்கியமானது மதச்சார்பின்மை என்றும் கூறியிருக்கிறார். சில சமூகங்களைச் சேர்ந்தவர்களைத் திருப்திப்படுத்த அந்த வார்த்தை சேர்க்கப்பட்டது என்றும் ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள எந்தச் சொல்லையும் எதிர்க்க ஓர் ஆளுநருக்கு உரிமையில்லை. ஆளுநர் ரவி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை ஆளுநர் பதவியில் இருந்து குடியரசுத் தலைவர் நீக்க வேண்டும். ஆனால் கோளாறு செய்வதற்காகவே அனுப்பப்பட்டிருக்கக்கூடிய ஆளுநர் ரவி எது பேசினாலும் எது செய்தாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் வராது.
ஆளுநர் ரவியின் அடாவடி நடவடிக்கைகளையும், தமிழ்நாட்டுக்கு எதிரான அவருடைய வேலைகளையும் கண்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். கடந்த 2025 ஆகஸ்ட் 13 அன்று, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜீன் ஜோசப் என்ற மாணவி ஆளுநர் கையால் பட்டத்தைப் பெற மறுத்து, துணைவேந்தர் கையால் பட்டத்தைப் பெற்றுச் சென்றார். அதற்குக் காரணமாக, "ஆளுநர் தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் எதிராகச் செயல்படுவதால் அவர் கையால் பட்டத்தைப் பெறவில்லை" என்று அவர் கூறினார். அவரைத் தண்டித்து விட முடியுமா என்ற முயற்சியில் சங்கிகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆளுநர் என்ற பதவியே ஒழிக்கப்பட வேண்டும்!
ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் மகாராஷ்டிராவின் ஆளுநராகச் சிறிது காலம் இருந்து பதவியைத் துறந்தார். "ஆளுநர் பதவியே பயனற்றது. அரசமைப்புச் சட்டத்தில் இருந்தே ஆளுநர் பதவி நீக்கப்பட வேண்டும்" என்று அவர் கருத்து தெரிவித்தார்.
இந்தியக் குடியரசு அரசியல் சட்டம் செயல்பாட்டில் இருந்து வந்திருக்கும் கடந்த 75 ஆண்டுகள் அரசியல் அனுபவத்திலிருந்து, மாநிலங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆளுநர் என்ற பதவி மாநிலங்களைத் துன்புறுத்தப் பயன்பட்டிருக்கிறதேயொழிய எந்த வகையிலும் நிர்வாகத்திற்கு உதவியாக இருந்ததில்லை. ஆளுநர் செய்து கொண்டிருக்கும் வேலையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே செய்துவிடலாம். அல்லது மாநில அளவில் வேறு ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். ஆளுநர் என்ற பதவி தொடர்ந்து இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. ஒன்றிய அரசின் ஏஜென்சியாக இருந்து, சுங்கானியாக இருந்து, மாநிலங்களை ஒடுக்குவதற்குத்தான் ஆளுநர்கள் இருக்கிறார்களேயொழிய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாக அவர்கள் இருந்ததில்லை. மேலும், இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது அதில் பங்கேற்ற அறிஞர்களும் தலைவர்களும் கனவு கண்டவாறு அறிஞர்கள், தகுதியானவர்கள், அரசியல் தொடர்பற்றவர்கள் ஆளுநர்களாக நியமனம் செய்யப்படவில்லை. ஆளுநர் என்ற பதவி நாட்டுக்குத் தேவையில்லை என்று அறிஞர் அண்ணா கூறியிருக்கிறார். அத்தகைய கருத்தைப் பல அறிஞர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
நியமனப் பதவியில் உள்ள ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நோக்கிச் சட்டையைச் சொடுக்குவது அவமானகரமானது. அரசின் அதிகாரங்களில் தலையிடுவது அடாவடித்தனமானது. மாநில நிர்வாகத்திற்கு ஓர் அலங்காரத் தலைவரைத் தெரிவு செய்யும் பொறுப்பையும் அவ்வாறு தெரிவு செய்யும் முறையையும் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். இறையாண்மை பறிக்கப்பட்டு மாநிலங்களாகச் சிறுத்துக் கிடக்கும் தேசிய இனங்களை அடக்கி வைப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கும் ஆளுநர் என்பவர் தேசிய இன அடிமைத்தனத்தின் அடையாளச் சின்னம்!
அந்தப் பதவி உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்! இது குறித்த தெளிவு அத்தனை அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் தேவை!
- பேராசிரியர் த.செயராமன், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்